கண்டங்களை ஆராய்தல் | அலகு 7 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - ஆப்பிரிக்கா | 8th Social Science : Geography : Chapter 7 : Exploring Continents: Africa, Australia and Antarctica
ஆப்பிரிக்கா
அமைவிடம் மற்றும் பரப்பளவு
ஆப்பிரிக்கா,
ஆசியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மற்றும் இரண்டாவது அதிக மக்கட் தொகையைக்
கொண்ட கண்டமாகும். இது 37°21 வட அட்சம் முதல் 34°51 தென்அட்சம் வரையிலும், 17°33 மேற்கு
தீர்க்கம் முதல் 51° 27 கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது. இதன் பரப்பளவு சுமார்
30.36 மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும்.
(உலகின்
மொத்த நிலப்பரப்பில் 20.2 சதவீதம்). புவிநடுக்கோடு ஆப்பிரிக்காவை இரு சம பாகங்களாகப்
பிரிக்கிறது. கடகரேகை, புவி நடுக்கோடு மற்றும் மகரரேகை போன்ற முக்கிய அட்சங்கள் கடந்து
செல்லும் ஒரே கண்டம் இதுவாகும். இது வடக்கு தெற்காக 7623 கிலோ மீட்டர் நீளமும், கிழக்கு
மேற்காக 7260 கிலோமீட்டர் நீளமும் உடையது. முதன்மை தீர்க்க ரேகையான (0) (Prime
Meridian) இக்கண்டத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள கானா நாட்டின் தலைநகரான அக்ராவின்
அருகில் செல்கிறது. ஆப்பிரிக்க கண்டம் புவியின் நான்கு கோளங்களிலும் பரவியுள்ளது.
சிறந்த
கடற்பயண ஆய்வாளர்களான டேவிட் லிவிங்ஸ்டோன் மற்றும் எச்.எம். ஸ்டான்லி ஆகியோர் இக்கண்டத்தின்
உட்பகுதிகளை முதன் முதலில் ஆராய்ந்தவர்களாவர். ஆப்பிரிக்காவில் மனிதனின் மூதாதையர்கள்
5 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்ததாக ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது. புவியில்
மனித இனங்கள் வாழ்ந்த பழமையான கண்டம் என்பதால் ஆப்பிரிக்காவானது 'தாய் கண்டம்' எனப்
புனைப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
ஆப்பிரிக்க கண்டத்தின் உட்பகுதிகள் குறித்து பெரும்பாலானோர் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. எனவே ஆப்பிரிக்கா ஒரு 'இருண்ட கண்டம்' என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பியக் கடற்பயண ஆய்வாளர் ஹென்றி எம். ஸ்டான்லி என்பவர் இருண்ட கண்டம் (1878) என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தினார்.
அரசியல் பிரிவுகள்
இக்கண்டத்தில்
நிலவும் பல்வகை புவியியல் சூழல்கள் பல்வேறு மனித இனக்குழுக்களுக்கும் பன்முக கலாச்சாரத்திற்கும்
முதன்மையான காரணமாக உள்ளன.
ஆப்பிரிக்க
கண்டம் 54 நாடுகளை உள்ளடக்கியது. புவியியல் அமைவிட அடிப்படையில் ஆப்பிரிக்க நாடுகள்
(அ) மேற்கு ஆப்பிரிக்கா (ஆ) வட ஆப்பிரிக்கா (இ) மத்திய ஆப்பிரிக்கா (ஈ) கிழக்கு ஆப்பிரிக்கா
(உ) தென் ஆப்பிரிக்கா எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
வட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மொராக்கோ, தெரியுமா? அல்ஜீரியா, லிபியா,
மோரிடானியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகளின் குழு 'மேக் ரெப்' (Maghreb) என்று அழைக்கப்படுகிறது.
அரபு மொழியில் இதன் பொருள் 'மேற்கு என்பதாகும்.
இயற்கை அமைப்பு பிரிவுகள்
ஆப்பிரிக்க வானது மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் ஆகிய நிலத்தோற்றங்களை உள்ளடக்கியது.
ஆப்பிரிக்காவின்
இயற்கை அமைப்பை 8 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஆப்பிரிக்காவின் முக்கிய தீவு மடகாஸ்கர்
ஆகும்.
1. சகாரா (Sahara)
ஆப்பிரிக்காவின்
வட பகுதியில் உலகப் புகழ்ப்பெற்ற சகாரா பாலைவனம் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய
வெப்ப மண்டல பாலைவனமாகும். இது 9.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
சகாராவின் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், கிழக்கில் செங்கடலும், வடக்கில் மத்திய
தரைக்கடலும் தெற்கில் சாஹேல் ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இப்பாலைவனம் அல்ஜீரியா,
சாட், எகிப்து, லிபியா, மாலி, மோரிடானியா, மொராக்கோ, நைஜர், மேற்கு சஹாரா, சூடான் மற்றும்
துனிசியா ஆகிய 11 நாடுகளில் பரவியுள்ளது.
சகாரா பாலைவனம் மலைகள், பீடபூமிகள், எர்க்ஸ், பாலைவனச்சோலை, மணல் மற்றும் சரளை மூடிய சமவெளிகள், உப்பு ஏரி, ஆற்றுக் கொப்பரைகள் மற்றும் ஊதுபள்ளங்கள் போன்ற பல்வேறு நிலத்தோற்றங்களை உள்ளடக்கியுள்ளது. சாட் நாட்டில் அமைந்துள்ள செயலிழந்த எரிமலையான மௌண்ட் கௌசி சிகரம் (3445 மீட்டர்) சகாரா பாலைவன பகுதியின் மிக உயரமானதாகும். எகிப்தில் அமைந்துள்ள கட்டாரா ஊதுபள்ளம் சகாராவின் ஆழமான பகுதியாகும். (கடல் மட்டத்திற்குக் கீழ் 133 மீட்டர்) நைல் மற்றும் நைஜர் ஆறுகள் சஹாரா பாலைவனத்தின் வழியாகப் பாய்கின்றன.
அட்லஸ்மலை
ஆப்பிரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
இது மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலைச் சகாரா பாலைவனத்தில் இருந்து
பிரிக்கிறது. இதன் உயர்ந்த சிகரம் டோப்கல் (4167 மீட்டர்) ஆகும்.
2. சாஹேல் (Sahel)
சாஹேல்
என்றால் 'எல்லை அல்லது விளிம்பு என்று பொருள்படும். சாஹேல் என்பது ஒரு அரை வறண்ட, வெப்ப
மண்டல சவானா பகுதியாகும். இது வடக்கில் அமைந்துள்ள சஹாரா பாலைவனத்திற்கும் தெற்கில்
உள்ள சவானா புல்வெளிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது கிழக்கு மேற்காக 4,000 கிலோ மீட்டர்
தொலைவிற்கு நீண்டு 3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இப்பகுதி
தரிசு மற்றும் மணற்பாங்கான பாறைகளுடன் கூடிய அரை வறண்ட பிரதேசமாகும். இப்பகுதி தெற்கேயுள்ள
வளம் மிகுந்த வெப்ப மண்டலப் பகுதி மற்றும் வடக்கேயுள்ள பாலைவனம் ஆகிய இரண்டு பகுதிகளுக்கும்
இடையில் இயற்கை மற்றும் கலாச்சார மாறுபாடுகள் கொண்ட பகுதியாக உள்ளது.
3. சவானா (Savanna)
பரவலான
மரங்களைக் கொண்ட வெப்பமண்டல வறண்ட புல்வெளிகள் சவானா என்று அழைக்கப்படுகிறது. இப்புல்வெளிகள்
ஆப்பிரிக்காவின் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் காணப்படுகிறது. இப்புல்வெளி நிலநடுக்கோட்டிற்கு
அருகில் அமைந்துள்ள மலைக்காடுகளுக்கு வடக்கு மற்றும் தெற்கு என இரு பகுதிகளிலும் காணப்படுகின்றன.
சவானாவின் ஒரு சில பகுதிகளில் மரங்களும் மற்ற பகுதிகளில் உயரமான புற்களும் காணப்படுகின்றன.
இப்பகுதி பல்வேறு வன விலங்குகளின் மேய்ச்சல் நிலங்களாக உள்ளன. செரன்கேட்டி சமவெளியானது
சவானா பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய சமவெளிகளில் ஒன்றாகும். இச்சமவெளிகள் 'திறந்தவெளி
மிருகக்காட்சி சாலை என அழைக்கப்படுகின்றது.
4. பெரிய பிளவு பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின்
பெரிய ஏரிகள் (Great Rift Valley and Great Lakes of Africa)
பிளவு
பள்ளத்தாக்கு என்பது புவியின் உட்பகுதியில், மேற்பரப்பிற்கு அருகில் நிலவியல் தட்டுகளின்
நகர்வுகளால் உருவாகும் ஒரு பெரிய பிளவு ஆகும். இப்பிளவுப் பள்ளத்தாக்கு ஆப்பிரிக்காவின்
ஒரு முக்கிய புவியியல் மற்றும் நிலவியல் அம்சங்களில் ஒன்றாகும். இது ஆசியாவின் வடக்கு
சிரியாவிலிருந்து ஆப்பிரிக்காவின் மத்திய மொசாம்பிக் வரை 6,400 கிலோ மீட்டர் நீளத்தைக்
கொண்டது. இது கிழக்கு ஆப்பிரிக்கா வழியாக நீண்டு பல ஏரிகளைக் கொண்டுள்ளது.
செயல்பாடு
புவிப்பட புத்தகத்தின் (அட்லஸ்) உதவியுடன் பெரிய பிளவு பள்ளத்தாக்குகள்
மற்றும் அதில் அமைந்துள்ள ஏரிகளைக் கண்டறிந்து ஆப்பிரிக்க வரைபடத்தில் குறிக்கவும்.
ஆப்பிரிக்காவின்
பெரிய ஏரிகள் பிளவு பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. புவியில்
காணப்படும் உறையாத மேற்பரப்பு நன்னீரில் 25% ஆப்பிரிக்காவின் பெரிய ஏரிகளில் காணப்படுகிறது.
இப்பிரதேசத்தில் 7 பெரிய ஏரிகள் காணப்படுகின்றன.
இப்பகுதியில்
அமைந்துள்ள விக்டோரியா ஏரி ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகவும், அமெரிக்க
ஐக்கிய நாட்டின் சுப்பீரியர் ஏரிக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய ஏரியாகவும் உள்ளது.
இது நைல் நதியின் பிறப்பிடமாக உள்ளது. இப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள டாங்கானிக்கா ஏரியானது
உலகின் ஆழமான மற்றும் அதிக நீளம் கொண்ட நன்னீர் ஏரி ஆகும். ஆல்பர்ட், எட்வர்ட், கிவ்,
மாலாவி மற்றும் துர்கானா ஏரிகள் ஆப்பிரிக்காவில் காணப்படும் பிற முக்கிய ஏரிகளாகும்.
உங்களுக்குத் தெரியுமா
கிளிமஞ்சாரோவின் மலை உச்சியிலுள்ள பனிப்படிவுகள் இருபதாம் நூற்றாண்டிலிருந்து
மறைந்து வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் 2025 ஆம் ஆண்டிற்குள் இப்பகுதியில் பனிப்படிவுகள்
இல்லாத நிலை உருவாகும்.
5. கிழக்கு ஆப்பிரிக்க உயர் நிலங்கள்
(East African Highlands)
ஆப்பிரிக்காவில்
அமைந்துள்ள பெரும்பாலான மலைகள் இவ்வுயர் நிலங்களில் காணப்படுகின்றன. இந்த உயர் நிலங்கள்
எத்தியோப்பியாவிலிருந்து நன்னம்பிக்கை முனை வரை நீண்டுள்ளது. கிளிமஞ்சாரோவானது
(5895 மீட்டர்) இந்த உயர்நிலப்பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரமாகும். கென்ய
மற்றும் ருவான்சோரி மலைத்தொடர்கள் இங்கு அமைந்துள்ள பிற முக்கிய மலைத்தொடர்களாகும்.
இப்பகுதி குறைவான மக்கட்தொகையுடன், வளமான புல்வெளிகள், காடுகள், நீரோடைகள் மற்றும்
நீர் வீழ்ச்சிகள் போன்ற இயற்கை காட்சிகளைக் கொண்டுள்ளது. இம்மலைப் பகுதிகளில் காணப்படும்
பனி சூழ்ந்த காலைப்பொழுதும், மலைத் தென்றலும் உலகின் பிற பகுதிகளிலிருந்து சுற்றுலா
பயணிகளை ஈர்க்கிறது.
6. சுவாலி கடற்கரை (Swahili Coast)
கிழக்கு
ஆப்பிரிக்க கடற்கரை நெடுகிலும் சுவாலி கடற்கரை அமைந்துள்ளது. இக்கடற்கரை சோமாலியா முதல்
மொசாம்பிக் வரை இந்திய பெருங்கடலை ஒட்டி சுமார் 1610 கிலோ மீட்டர் நீளத்தைக் கொண்டுள்ளது.
இப்பகுதி ஆப்பிரிக்க மற்றும் அரேபிய மக்களின் இணைவால் உருவான தனித்துவமான சுவாலி கலாச்சாரத்தைக்
கொண்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வாழும் மக்கள் சுவாலிகள் என அழைக்கப்படுகிறார்கள்.
7. காங்கோ வடிநிலம் / ஜையர் வடிநிலம்
(Gango Basin/ Zaire Basin)
காங்கோ
வடிநிலம் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் புவிநடுக்கோட்டின் இருபுறங்களிலும் அமைந்துள்ளது.
இது 3.4 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டு அடர்ந்த பசுமை
மாறா மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. இது 7.5 மில்லியன் மக்களுக்கு உணவு, மருந்துப்
பொருட்கள், நீர், வனப் பொருட்கள் மற்றும் உறைவிடத்தை அளிக்கிறது. இது அமேசான் ஆற்று
வடிநிலத்தை அடுத்து உலகின் இரண்டாவது பெரிய ஆற்று வடிநிலமாகும்.
8. தென் ஆப்பிரிக்கா (Southern Africa)
தென்
ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி பீடபூமிகளால் ஆனது. ட்ராகன்ஸ் பெர்க் மலைத்தொடரானது வன்சரிவுடைய
கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது வட கிழக்கிலிருந்து தென்மேற்காக 1125 கிலோ மீட்டர்
நீண்டுள்ளது. இதன் உயர்ந்த சிகரம் தபனாநிட் லியானா (3482 மீட்டர்) ஆகும். இந்தப் பகுதி
'வெல்டு' எனப்படும் புல்வெளிகளால் சூழப்பட்டுள்ளது. கலகாரி பாலைவனம் தென் ஆப்பிரிக்காவின்
தென் பகுதியிலும் நமீப்பாலைவனம் ஆப்பிரிக்காவின் தென்மேற்கு கடற்கரைப் பகுதியிலும்
அமைந்துள்ளன. இப்பிரதேசத்தில் காணப்படும் கலகாரி பாலைவனம் உண்மையில் ஒரு பாலைவனம் அல்ல
மாறாக ஆரஞ்சு மற்றும் ஜாம்பசி நதிகளுக்கு இடையே அமைந்துள்ள ஒரு வறண்ட முட்புதர் நிலமாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
தென் ஆப்பிரிக்காவின் அரை வறண்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் செம்மறி
ஆடு வளர்ப்பு காரூஸ்' என்று அழைக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் வடிகாலமைப்பு
1. நைல் நதி (River Nile)
நைல்
நதி 6650 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிக நீளமான நதி ஆகும். இது இரண்டு முக்கிய
துணை ஆறுகளைக் கொண்டுள்ளது. அவைகள் புருண்டியில் உற்பத்தியாகும் வெள்ளை நைல் மற்றும்
எத்தியோப்பியாவில் உற்பத்தியாகும் நீல நைல் ஆகியனவாகும். இவ்விரு துணை ஆறுகளும் சூடானில்
உள்ள கார்ட்டும் என்ற இடத்தில் இணைந்து நைல் நதியைத் தோற்றுவிக்கின்றன. இது வடக்கு
நோக்கி பாய்ந்து மத்தியத்தரைக் கடலில் கலக்கிறது. நைல் நதி 'ஆப்பிரிக்க ஆறுகளின் தந்தை என அழைக்கப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
நைல் நதி எகிப்தின் – வாழ்வாதாரமாக விளங்குவதால் இந்நதி எகிப்தின் நன்கொடை"
என அழைக்கப்படுகிறது. நைல் நதி எகிப்தில் இல்லையெனில் இந்நாடு பாலைவனமாக இருந்திருக்கும்.
செயல்பாடு
ஆப்பிரிக்க வரைபடத்தில் முக்கிய நதிகளை வரைந்து அதன் பெயர்களை எழுதவும்.
2. காங்கோ ஆறு (River Gango) அல்லது ஜையர்
ஆறு
காங்கோ
ஆறு நைல் நதியை அடுத்து ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய ஆறு ஆகும். இதன் நீளம் சுமார்
4,700 கிலோ மீட்டர் ஆகும். இந்த ஆறு ஜாம்பியாவின் வட கிழக்கு உயர் நிலங்களில் அமைந்துள்ள
டாங்கானிகா மற்றும் நையாசா ஏரிகளுக்கு இடையே உற்பத்தியாகிறது. இது மேற்கு மத்திய ஆப்பிரிக்காவின்
வழியாக அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.
3. நைஜர் ஆறு (River Niger)
மேற்கு
ஆப்பிரிக்காவின் முக்கிய நதிகளில் ஒன்றான நைஜர், கினியாவின் உயர் நிலங்களில் உற்பத்தியாகிறது.
இது சுமார் 4184 கிலோமீட்டர் நீளம் பாய்ந்து இறுதியாக அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள
கினியா வளைகுடாவில் கலக்கிறது.
4. சாம்பசி ஆறு (River Zambezi)
ஜாம்பசி
ஆறு ஆப்பிரிக்காவின் நான்காவது நீளமான ஆறு ஆகும். இது வடமேற்கு ஜாம்பியாவில் உற்பத்தியாகிறது.
இது சுமார் 2574 கிலோ மீட்டர் பாய்ந்து பின் இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. உலகப்
புகழ்ப்பெற்ற (108 மீட்டர்) உயரமுள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி இந்நதியினால் உருவாக்கப்பட்டதாகும்.
இது தென் ஆப்பிரிக்காவின் 'வாழ்வாதார நதி' என அழைக்கப்படுகிறது. லிம்போபோ மற்றும் ஆரஞ்சு
ஆறுகள் ஆப்பிரிக்காவின் மற்ற முக்கிய ஆறுகளாகும்.
காலநிலை
ஆப்பிரிக்க
கண்டமானது ஆறு முக்கிய காலநிலை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. வறண்ட மற்றும் அரை வறண்ட காலநிலை: வட மற்றும்
தென் ஆப்பிரிக்க பகுதிகளில் இக்கால நிலை நிலவுகிறது. இப்பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்து
காணப்படுகிறது.
2. வெப்ப மண்டல சவானா காலநிலை: இக்காலநிலை
புவி நடுக்கோட்டின் இருபுறமும் 100 முதல் 20° அட்சத்திற்கு இடைப்பட்ட பகுதிகளில் நிலவுகிறது.
இது ஒரு வெப்பமண்டல ஈர மற்றும் வறண்ட காலநிலை கொண்டது.
3. புவி நடுக்கோட்டு காலநிலை: காங்கோ
வடிநிலம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க உயர்நிலங்களில் உள்ள புவி நடுக்கோட்டு மண்டலத்தில்
ஆண்டு முழுவதும் வெப்பம் மற்றும் மழைப் பொழிவு இரண்டும் மிகுந்து காணப்படுகிறது.
4. மித வெப்ப மண்டல காலநிலை: இக்காலநிலை
தென் ஆப்பிரிக்காவின் தென் பகுதிகளில் நிலவுகிறது. இது கடலோரப் பகுதியில் அமைந்துள்ளதால்
சமச்சீர்கால நிலையைக் கொண்டுள்ளது.
5. மத்திய தரைக்கடல் காலநிலை: இக்காலநிலை
ஆப்பிரிக்காவின் வட மற்றும் தென்மேற்கு முனைப்பகுதிகளில் நிலவுகிறது. இப்பகுதி குளிர்காலத்தில்
மழைப்பொழிவை பெற்று கோடைக்காலத்தில் வெப்பம் மிகுந்து வறண்டும் காணப்படுகிறது.
6. வெப்பமண்டல பருவக்காற்று காலநிலை: இவ்வகை
காலநிலை ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் நிலவுகிறது. இங்கு கோடைக்காலம்
வெப்பமாகவும் பருவக்காற்றின் மூலம் அதிக மழைப்பொழிவையும், குளிர்காலம் வெப்பம் குறைந்தும்
காணப்படுகிறது.
தகவல் பேழை
வெப்பப் பாலைவனங்கள் கண்டங்களின்
மேற்கு விளிம்புகளில் புவிநடுக்கோட்டின் வடக்கு மற்றும் தென் பகுதிகளில் (20° முதல்
30°) அட்சங்கள் வரை அமைந்துள்ளன. இப்பாலைவனங்கள் வியாபாரக் காற்று வீசும் மண்டலத்தில்
அமைந்துள்ளன. இவ்வியாபாரக் காற்றுகள் வட கோளத்தில் வடகிழக்கில் இருந்தும் தென் கோளத்தில்
தென்கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றானது பொதுவாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
வீசுகிறது. இக்காற்று கண்டங்களின் கிழக்கு விளிம்புங்களில் அதிக மழைப் பொழிவை ஏற்படுத்தி
மேற்கு பகுதியை அடையும் பொழுது ஈரப்பதத்தை இழந்து வறண்ட காற்றாகவும் வீசுகின்றது. எனவே
கண்டங்களின் மேற்கு பகுதிகள் பாலைவனங்களாக உள்ளன.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் (Flora and
Fauna)
ஆப்பிரிக்காவின் தாவர வகைகள் ஓரிடத்திலுள்ள மழைப்பொழிவின் அளவு,
வெப்பநிலை, நிலத்தோற்றம், மண்ணின் தன்மை போன்றவற்றிற்கேற்ப உருவாகியுள்ளன. இக்கண்டத்தின்
மொத்த நிலப்பரப்பில் சுமார் 20% காடுகளால் சூழப்பட்டுள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில்
காணப்படும் தாவர மற்றும் விலங்கினங்கள் கோண்டுவானா காலத்தில் கண்டங்கள் பிரிந்த போது
இருந்த தாவர மற்றும் விலங்கினங்களிலிருந்து தோன்றியவையாகும். பாபோ, பீவர் மரம் மற்றும்
சவ்சேச் ஆகியன ஆப்பிரிக்காவின் முக்கிய மர வகைகளாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
• சகாரா பாலைவனத்தில் இருந்து - கினியா கடற்கரையை நோக்கி வீசும் வறண்டவெப்ப புழுதி தலக்காற்று 'ஹார்மாட்டான்'
என்று அழைக்கப்படுகிறது.
• சகாரா பாலைவனத்திலிருந்து மத்திய தரைக்கடல்
நோக்கி வீசும் வெப்ப தலக் காற்று சிராக்கோ என்று அழைக்கப்படுகிறது.
• வெப்பமண்டல மழைக் காடுகள் புவியின் அணிகலன்
என்றும் உலகின் பெரும் மருந்தகம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் ஒரு மில்லியனுக்கும்
அதிகமான விலங்கின வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் புவியின் மிகப் பெரிய (யானைகள்)
மற்றும் உயரமான (ஒட்டகச்சிவிங்கி) நிலவாழ் விலங்கினங்களும் அடங்கும். வெள்ளை காண்டாமிருகம்,
வெஸ்டர்ன் கிரீன் மாம்பா, வரிக்குதிரை, ஆப்பிரிக்க யானை, மனித குரங்கு, காட்டெருமை,
நீர் யானை மற்றும் ஒட்டகச்சிவிங்கி போன்றவை இங்கு முக்கிய விலங்கினங்களாகும். போன போ
(குரங்கு வகை), காட்டு நாய்கள், கழுதை புலி மற்றும் லெமூர் (நரி போன்ற முகம் கொண்டவை)
ஆகிய விலங்குகள் ஆப்பிரிக்க கண்டத்திற்கு உரித்தான சில விலங்கினங்களாகும்.
வேளாண்மை
வேளாண்மை
ஆப்பிரிக்க கண்டத்தின் முக்கிய பொருளாதார நட வடிக்கையாகும். கோதுமையானது மிதவெப்ப மண்டல
புல்வெளிகள், மத்தியதரைக்கடல் பகுதிகள் மற்றும் நைல் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
கினியா கடற்கரை, மொசாம்பிக் , மடகாஸ்கர் மற்றும் நைல் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல்
பயிரிடப்படுகிறது. மக்காச்சோளம் மற்றும் தினை வகை பயிர்கள் அனைத்து பீடபூமி பகுதிகளிலும்
பயிரிடப்படுகிறது. பருத்தி ஆப்பிரிக்காவின் முக்கிய பணப் பயிராகும். எகிப்து மற்றும்
சூடானில் உலகத்தரம் வாய்ந்த நீண்ட இழைப் பருத்தி பயிரிடப்படுகின்றது. காபி எத்தியோப்பியாவில்
பயிரிடப்படுகிறது. கானா நாடு கோக்கோவின் முதன்மை உற்பத்தியாளராக திகழ்கிறது. எண்ணெய்
பனை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயிரிடப்படுகிறது. கரும்பு, இரப்பர், சணல், புகையிலை
ஆகியவை ஆப்பிரிக்காவின் மற்ற முக்கிய பயிர்களாகும். இவை பெரும்பாலும் கிழக்கு ஆப்பிரிக்க
நாடுகளில் பயிரிடப்படுகின்றன.
கனிமங்கள்
ஆப்பிரிக்கா,
சில கனிம வளங்களை அதிகம் கொண்டுள்ளது. சகாராவின் தென்பகுதி மற்றும் பீடபூமி பகுதிகள்
ஆகியன முக்கிய கனிமவளங்கள் நிறைந்த பிரதேசங்களாகும். தென் ஆப்பிரிக்கா, காங்கோ , போஸ்ட்வானா,
சியராலியோன் மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளில் வைர சுரங்கங்கள் காணப்படுகின்றன. தென்
ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி ஆப்பிரிக்காவின் முக்கியமான வைர உற்பத்தி மையமாகும்.
அங்கோலா, நைஜீரியா, காபன் மற்றும் காங்கோ நாடுகள் அதிக எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ளன.
தென் ஆப்பிரிக்கா, நமிபியா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் கானா நாடுகளில் தங்கம் காணப்படுகிறது.
குரோமியம், கோபால்ட், தாமிரம், இரும்பு தாது, மக்னீசியம், துத்தநாகம் மற்றும் நிக்கல்
ஆகியவை ஆப்பிரிக்க கண்டத்தில் பரவலாக காணப்படுகின்றன.
போக்குவரத்து
போக்குவரத்து
ஒரு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கிறது. பாதகமான இயற்கை
நிலத்தோற்ற அமைப்பும் மந்த பொருளாதார வளர்ச்சியும் ஆப்பிரிக்க நாடுகளின் போக்குவரத்து
வளர்ச்சியைப் பாதிப்படையச் செய்கின்றன.
1. நிலவழிப் போக்குவரத்து
ஆப்பிரிக்காவின்
சாலை மற்றும் இரயில் போக்குவரத்து அமைப்பானது பல்வேறு தடைகள் காரணமாக குறைவான வளர்ச்சியைப்
பெற்றுள்ளது. பாலைவனம் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சாலைகள் மற்றும் இருப்பு
பாதைகள் அமைப்பது மிகவும் கடினமானதாகும். தென் ஆப்பிரிக்கா, கென்யா, எகிப்து, லிபியா,
மொராக்கோ, மற்றும் நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் ஓரளவிற்குச் சாலை மற்றும் இருப்புப்
பாதை போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளன.
2. நீர்வழிப் போக்குவரத்து
ஆப்பிரிக்காவின்
கடல் வர்த்தக பாதைகள் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு கிழக்குப் பகுதியிலும் ஐரோப்பாவிற்கு
வடக்கு பகுதியிலும், அமெரிக்காவிற்கு மேற்கு பகுதியிலும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடலில்
டர்பன், தர் - இ-சலாம், மொஹாபு, மத்தியத்தரைகடலில் போர்ட்சைடு மற்றும் அலெக்சாந்திரியா,
அட்லாண்டிக் பெருங்கடலில் கேப்டவுன், அல்ஜியஸ் மற்றும் அபிட்ஜன் ஆகியவை முக்கிய துறைமுகங்களாகும்.
3. வான்வழிப் போக்குவரத்து
வான்வழி
போக்குவரத்து ஆப்பிரிக்காவின் முக்கிய தலைநகரங்களையும் உலகின் பிற பகுதிகளையும் இணைக்கிறது.
கெய்ரோ, ஜோகன்னஸ் பர்க், நைரோபி, டாக்கா, அடிஸ்அபாபா,காஸாபிளாங்கா, டர்பன், டௌலாமற்றும்
லோகோஸ் இக்கண்டத்தில் அமைந்துள்ள முக்கிய பன்னாட்டு விமான நிலையங்களாகும்.
மக்கள்தொகை
ஆப்பிரிக்கா
உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட கண்டமாகும். ஐக்கிய நாட்டு சபை மதிப்பீட்டின்படி
(2019) ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை 131 கோடிகளாகும். இயற்கை நிலத்தோற்ற தடைகள் காரணமாக
மக்கள் தொகை பரவல் சமச்சீரற்று காணப்படுகிறது. ஆப்பிரிக்காவின் சராசரி மக்களடர்த்தி
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 45 நபர்களாகும். கண்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 41% நகர்ப்புறத்திலும்,
59% சதவீத மக்கள் கிராமப்புறத்திலும் வசிக்கின்றனர். நைல் டெல்டா பகுதி மற்றும் தென்
ஆப்பிரிக்கா ஆப்பிரிக்காவின் மக்களடர்த்தி மிகுந்த பகுதிகளாகும். ஆப்பிரிக்காவின் அதிக
மக்கள் தொகை கொண்ட நாடாக நைஜீரியாவும் அதனைத் தொடர்ந்து எத்தியோப்பியாவும் உள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?