கண்டங்களை ஆராய்தல் | அலகு 7 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - அண்டார்டிகா | 8th Social Science : Geography : Chapter 7 : Exploring Continents: Africa, Australia and Antarctica
அண்டார்டிகா
அமைவிடம் மற்றும் பரப்பளவு
அண்டார்டிகா
ஒரு தனித்துவம் வாய்ந்த கண்டமாகும். ஆனால் இக்கண்டம் பூர்வீக மக்களைக் கொண்டிருக்கவில்லை.
அண்டார்டிகாவில் எந்த ஒரு நாடும் இல்லை. இது தென்கோடியில் அமைந்துள்ள உலகின் ஐந்தாவது
பெரிய கண்டமாகவும், இது துருவப் பகுதியில் அமைந்துள்ளதால், இப்பகுதி நிரந்தர பனியுடன்
மிக குளிர்ந்த பிரதேசமாக உள்ளது. இக்கண்டமானது இந்திய, அட்லாண்டிக் மற்றும் பசிபிக்
பெருங்கடல்களின் தென்பகுதிகளால் புவியின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கப்படுகிறது.
இது 14 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்புடன், புவியின் மொத்த நிலப்பரப்பில் 9.3 சதவீதத்தைக்
கொண்டுள்ளது. இக்கண்டத்தின் நிலத்தோற்றம் சில மலைத்தொடர்கள், சிகரங்கள், பள்ளத்தாக்குகள்,
பனியாறுகள், பீடபூமிகள் மற்றும் எரிமலைகளை உள்ளடக்கியதாகும். 3200 கிலோ மீட்டர் நீளம்
கொண்ட டிரான்ஸ் அண்டார்டிக் மலைத்தொடர் இக்கண்டத்தை இரு பகுதிகளாக பிரிக்கின்றது.
1. மேற்கு
அண்டார்டிகா
2. கிழக்கு
அண்டார்டிகா
மேற்கு அண்டார்டிகா பகுதி பசிபிக் பெருங்கடலை நோக்கி அமைந்துள்ளது. தென் அமெரிக்காவை நோக்கியுள்ள அண்டார்டிக் தீபகற்பம் ஆண்டிஸ் மலைத்தொடரின் நீட்சி என்பதை உணர்த்துகிறது. கிழக்கு அண்டார்டிகா பகுதி, அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களை நோக்கி அமைந்துள்ளது. இப்பகுதியின் ரோஸ் தீவில் அமைந்துள்ள மவுண்ட் எரிபஸ் ஒரு செயல்படும் எரிமலை ஆகும். வெள்ளைக் கண்டம் என அழைக்கப்படும் ஒரே கண்டம் இதுவாகும். இக்கண்டத்தின் சில இடங்களில் பனிக்கட்டிகள் 4000 மீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
உலகின் எந்த ஒரு நாட்டின் அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் அண்டார்டிகாவில்
ஆய்வுகள் மேற்கொள்ளவும், தரவுகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே இக்கண்டம்
'அறிவியல் கண்டம்' என அழைக்கப்படுகிறது.
கால நிலை
புவிநடுக்கோட்டிற்கு
வெகு தொலைவில் அமைந்துள்ளதால் அண்டார்டிகாவின் காலநிலையானது உறைநிலைக் காலநிலையாக காணப்படுகிறது.
மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் (அண்டார்டிகாவின் குளிர்காலம்) சூரியன் ஒரு போதும்
இங்கு உதிப்பதில்லை . ஆகையால் தென் துருவத்தில் வெப்பநிலை சுமார் -90° செல்சியஸ் ஆக
இருக்கும். கோடை மாதங்களான டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சூரியன் ஒருபோதும்
மறைவதில்லை. என்பதால் தொடர்ந்து பகலாகவே இருக்கும். இங்கு கோடைகால வெப்ப நிலையானது
0° செல்சியஸ் ஆக உள்ளது இதனால் ஆண்டு முழுவதும் கடும் குளிரும் பனி புயல் காற்றும்
வீசுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
அண்டார்டிகா,புவியின் மேற்பரப்பில் காணப்படும் மிகப்பெரிய பனித் தொகுப்பு
ஆகும். புவியில் காணப்படும் நன்னீரில் 70% இக்கண்டத்தில் பனிக் குமிழ்களாக உள்ளது.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
இக்கண்டத்தில்
வெப்பநிலையானது ஆண்டு முழுவதும் உறை நிலைக்கு கீழே இருப்பதால் பெரிய தாவரங்கள் எதுவும்
காணப்படவில்லை . சிறிய வகை தாவரங்களான பாசிகள், படர் பாசிச்செடிகள், நுரைப் பாசிகள்,
மரப் பாசிகள், நுண்ணிய பூஞ்சைகள் போன்றவைகள் பனியை தாங்கி வளர்கின்றன. சில பாசி வகைகள்
பனிகளற்ற கடலோர பாறை நிலங்களில் காணப்படுகின்றன. பிளாங்டன், பாசிகள் மற்றும் மரப்பாசிகள்
அண்டார்டிகாவில் உள்ள நன்னீர் மற்றும் உவர் நீர் ஏரிகளில் காணப்படுகின்றன.
சிறியவகை
செம்மீன்களான கிரில்கள் பெரிய திரள்களாகக் காணப்படுகின்றன. இவை கடல் வாழ் உயிரினங்களுக்கு
உணவாகப் பயன்படுகின்றன. நீலத் திமிங்கலம், கடற்பசு, போன்ற கடல் விலங்கினங்கள், கடல்
பறவைகளான பென்குவின், அல்பட்ராஸ், போலார் ஸ்குவா மற்றும் ஸ்டவுட் ஆகியன இங்கு காணப்படுகின்றது.
மிகப்பெரிய கடல் வாழ் உயிரினமான நீலத்திமிங்கலம் பிளாங்டன்களை உணவாக உட்கொள்கிறது.
இங்குள்ள அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளும் குளிர்கால நிலையை எதிர்கொள்ள தங்கள்
உடலில் புளூபர் (Blubber) எனப்படும் அடர்த்தியான கொழுப்பு அடுக்கினை கொண்டுள்ளன. பென்குயின்
பறவைகளால் பறக்க இயலாது. இவைகளுக்கு இறக்கைகளுக்குப் பதிலாக நீந்துவதற்குப் பயன்படும்
பிலிப்பர் (Flipper) மற்றும் தோலிலைப் பொதியுடைய அகலமான பாதங்களைக் கொண்டுள்ளன. சிறிய
முதுகெலும்பற்ற உயிரினங்கள் இக்கண்டத்தின் நிலவாழ் விலங்கினங்களாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
அண்டார்டிகாவிலுள்ள உயரமான சிகரம் வின்சன் மாஸிப் (5140மீ) இது இக்கண்டத்தின் சென்டினல் மலைத்தொடரின் தென்பகுதியில்
- அமைந்துள்ளது. இக்கண்டத்திலுள்ள லாம்பர்ட் பனியாறு உலகின் மிகப்பெரிய பனியாறாகும்.
கனிமங்கள்
அண்டார்டிகா
கண்டத்தில், தங்கம், பிளாட்டினம், நிக்கல், தாமிரம் மற்றும் பெட்ரோலியம் நிறைந்து இருக்கலாம்
என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குரோமியம், ஈயம், மாலிப்டினம், தகரம், யுரேனியம்
மற்றும் துத்தநாகம் ஆகியவை இருப்பதற்கான தடயங்கள் காணப்படுகின்றன. மேலும் வெள்ளி, பிளாட்டினம்,
இரும்புத்தாது, கோபால்ட், மாங்கனீசு, டைட்டானியம் ஆகியவை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும்
உள்ளன. நிலக்கரி மற்றும் ஹைட்ரோகார்பன்கள் வாணிபத்திற்குப் பயன்படாத அளவு மிகக் குறைவாக
உள்ளது.
சர்வதேச
ஒப்பந்தத்தின்படி இக்கண்டத்தில் காணப்படும் கனிமங்கள் வெட்டி எடுக்க அனுமதி இல்லை என்பதால்
இங்கு கனிம வளங்களை வெட்டி எடுக்கும் பணி நடைபெறுவதில்லை .
அண்டார்டிகாவிற்கான பயணம்
1912
ஆம் ஆண்டு ஆங்கில மற்றும் நார்வே நாட்டுக் குழுவினர் தென்துருவத்தை அடைந்தனர். இந்தியாவின்
21 உறுப்பினர்களைக் கொண்ட பயணக் குழு டாக்டர் எஸ். இஸட் காசிம் அவர்களின் தலைமையில்
அண்டார்டிகாவிற்குப் பயணம் மேற்கொண்டனர். இக்குழு 1981 டிசம்பர் 6ஆம் நாள் கோவாவில்
இருந்து புறப்பட்டு 1982 ஜனவரி 9ஆம் நாள் அண்டார்டிகாவைச் சென்றடைந்தது. அங்கு இக்கண்டத்தின்
முதல் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் தட்சின் கங்கோத்ரி நிறுவப்பட்டது. மைத்ரேயி
மற்றும் பாரதி அண்டார்டிகாவில் உள்ள பிற இந்திய ஆராய்ச்சி நிலையங்களாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
1.அண்டார்டிகாவில் உள்ள மிகப்
பெரிய ஆராய்ச்சி நிலையமான மெக்முர்டோ ஆகும்.
இது அமெரிக்க ஐக்கிய நாடுகளால் அமைக்கப்பட்டுள்ளது.
2. அண்டார்டிகாவில் அமைக்கப்பெற்ற முதல் இந்திய அறிவியல் ஆராய்ச்சி
நிலையம் தட்சின் கங்கோத்ரி ஆகும்.
வட மற்றும்
தென் காந்த துருவங்களுக்கு அருகில் இயற்கையில் தோன்றும் பிரகாசமான இளஞ்சிவப்பு, சிவப்பு
நிற மற்றும் பச்சை நிற ஒளியின் கலவை அரோரா என்று அழைக்கப்படுகிறது. இவ்விளைவானது சூரியனிலிருந்து
வரும் மின்னூட்ட துகள்கள் வளிமண்டல மேலடுக்கிலுள்ள அணுக்களுடன் வினைப்புரிவதால் உண்டாகிறது.
இது தென் துருவத்தில் அரோரா ஆஸ்ட்ராலிஸ் அல்லது தென் துருவ ஜோதி எனவும் வட துருவத்தில்
அரோரா பொரியாலிஸ் அல்லது வடதுருவ ஜோதி எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறான வண்ண ஒளிக்கீற்றுகள்
குறிப்பாக உயர் அட்சங்களில் அமைந்துள்ள நாடுகளான வடக்கிலுள்ள அலாஸ்கா மற்றும் தென்
துருவத்தில் அமைந்துள்ள நியூசிலாந்தின் பாக்லாந்து தீவுப்பகுதிகளில் காணலாம்.