Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | அகாரிகஸ் - பூஞ்சை

தாவரவியல் - அகாரிகஸ் - பூஞ்சை | 11th Botany : Chapter 1 : Living World

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்

அகாரிகஸ் - பூஞ்சை

அகாரிகஸ் மரக்கட்டைகள், உரக்குவியல்கள், மக்காதக் குப்பைகள், மேய்ச்சல் நிலங்கள் போன்ற பல இடங்களில் காணக்கூடிய ஒரு மட்குண்ணிப் பூஞ்சையாகும்.

அகாரிகஸ்

வகுப்பு - பசிடியோமைசீட்ஸ்

துறை – அகாரிகேல்ஸ்

குடும்பம் – அகாரிகேஸி

பேரினம் - அகாரிகஸ்

அகாரிகஸ் மரக்கட்டைகள், உரக்குவியல்கள், மக்காதக் குப்பைகள், மேய்ச்சல் நிலங்கள் போன்ற பல இடங்களில் காணக்கூடிய ஒரு மட்குண்ணிப் பூஞ்சையாகும். இப்பூஞ்சையின் கனியுறுப்புகள் மட்டுமே கண்களுக்குப் புலப்படுகின்றன. அகாரிகஸ் ஆர்வென்சிஸ், அகாரிகஸ் டேபுலாரிஸ் போன்ற சிற்றினங்கள் வாழிடங்களில் வளையங்களாகக் காணப்படுகின்றன. ஆகவே இவைகள் ’தேவதை வளையங்கள்’ என அழைக்கப்படுகின்றன. அகாரிகஸ் கேம்பெஸ்ட்ரிஸ் பொதுவான ’களக் காளான்’ ஆகும்.


உடல் அமைப்பு


உடலம் கிளைத்த ஹைஃபாக்களால் ஆனது. அதிக எண்ணிக்கையிலான ஹைஃபாக்கள் சேர்ந்து மைசீலியத்தை உருவாக்குகின்றன. முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மைசீலியம் என மூன்று வகை மைசீலியங்கள் காணப்படுகின்றன. பசிடியவித்துகள் முளைத்து முதல்நிலை மைசீலியம் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த மைசீலியம் தடுப்புச்சுவர் கொண்டு, ஒற்றைமடிய நிலையிலுள்ள ஒரு உட்கருவை பெற்று ஒரு உட்கரு மைசீலியம் என அழைக்கப்படுகிறது. இரண்டு எதிரெதிர் ரக (+ மற்றும் -) முதல் நிலை மைசீலியங்கள் இணைந்து இரண்டாம் நிலை மைசீலியம் அல்லது இரட்டை உட்கரு மைசீலியத்தை உருவாக்குகிறது. இரட்டை உட்கரு மைசீலியம் வளர்ந்து, திரண்டு கயிறு போன்ற வேருருவை உண்டாக்குகிறது. இது மண்ணில் ஊடுருவி நீண்ட காலம் வாழ்கிறது. மூன்றாம் நிலை மைசீலியம் பசிடியகனியுறுப்பில் காணப்படுகிறது. ஹைஃபாக்களின் செல்கள் கைட்டினால் ஆன செல் சுவரையும். மேலும் செல் நுண்ணுறுப்புகளான மைட்டோகாண்ட்ரியங்கள், கோல்கை உறுப்புகள், எண்டோபிளாச வலை போன்றவைகளையும் கொண்டுள்ளன.


பாலிலா இனப்பெருக்கம்

அகாரிகஸ் பாலிலா இனப்பெருக்கத்தின்போது கிளாமிட வித்துக்களை உருவாக்குகின்றன. சாதகமான சூழ்நிலையில் கிளாமிட வித்துகள் முளைத்து, மைசீலியமாக வளர்கிறது.


பாலினப்பெருக்கம்

பாலினப்பெருக்கத்தின் மூலம் இனப்பெருக்கம் செய்தாலும் அகாரிகஸில் பாலுறுப்புகள் காணப்படுவதில்லை. பெரும்பான்மையான

சிற்றினங்கள் மாற்று உடலத்தன்மை கொண்டவை. இருப்பினும் அகாரிகஸ் பைஸ்போரஸ் ஒத்த உடலத்தன்மை உடையது. இரு எதிரெதிர் ரக மைசீலியங்கள் ஒன்றோடொன்று இணைவதன் மூலம் (உடல இணைவு) இரட்டை உட்கரு கொண்ட இரண்டாம் நிலை மைசீலியம் தோற்றுவிக்கப்படுகிறது. பசிடியத்தினுள் உட்கரு இணைந்து குன்றல் பகுப்பிற்குட்பட்டு நான்கு ஒற்றைமடிய பசிடியவித்துகள் தோற்றுவிக்கப்படுகின்றன. பசிடியவித்துகள் சிறு காம்பின் (Sterigma) மீது தோன்றுகின்றன. பூமியில் புதைந்து காணக்கூடிய வேருருக்கள் இரட்டை உட்கருக்களைக் கொண்ட ஹைஃபாக்களாலான முடிச்சுகளை உருவாக்கி, பசிடியகனியுறுப்பு வளர்ச்சியடைகின்றன.


பசிடியகனியுறுப்பு (Basidiocarp)

நன்கு வளர்ச்சியடைந்த பசிடியகனியுறுப்பு குடை வடிவில் காணப்படுகிறது. இது காம்பு, பைலியஸ், நுண்தட்டுகள் என மூன்று பகுதிகளாகப் பிரித்தறியப்படுகிறது. காம்பு தடித்து, சதைப்பற்றுடன் உருளை வடிவில் காணக்கூடிய அமைப்பாகும். காம்பின் மேற்பகுதியில் காணக்கூடிய சவ்வு போன்ற பகுதி அன்னுலஸ் என அழைக்கப்படுகிறது. பசிடியகனியுறுப்பின் குவிந்து காணக்கூடிய மேற்பகுதி பைலியஸ் எனப்படும். இது வெண்மை அல்லது கிரீம் நிறத்தில் காணப்படுகிறது (படம் 1.24). பைலியஸின் உட்புறத்தில் ஆரப்போக்கில் குறுக்காக அமைந்த நுண்தட்டுகள் அல்லது லேமெல்லாக்கள் காணப்படுகின்றன. இவை நீளத்தில் வேறுபட்டுக் காணப்படும். நுண்தட்டின் இரண்டு பக்கங்களிலும் ஹைமீனியம் என்ற வளமான அடுக்கு காணப்படுகிறது. காம்பின் மையப்பகுதி உள்ளீடற்று இடைவெளியுடன் அமைந்த ஹைஃபாக்களால் ஆனது. வெளிப்புறப்பகுதி நெருக்கமாக அமைந்த ஹைஃபாக்களால் நிரப்பப்பட்டிருப்பதோடு போலியான பாரங்கைமா திசுவையும் உண்டாக்குகிறது.


நுண்தட்டு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரு ஹைமீனியம் அடுக்குகளுக்கிடையே காணப்படுகின்ற நுண்தட்டின் மையப்பகுதி ட்ராமா (படம் 1.25) எனப்படும். துணை ஹைமீனியம் அடுக்குகள் நெருக்கமாக இடைவெளியின்றி அமைந்த திசுக்களால் ஆனது. இவற்றுள் ஹைமீனியம் வளமான அடுக்காகும். இதில் குண்டாந்தடி வடிவ பசிடியங்கள் காணப்படுகின்றன. பசிடியங்களுக்கு இடையிடையே காணக்கூடிய மலட்டு ஹைஃபாக்கள் பாராஃபைசிஸ் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பசிடியமும் நான்கு பசிடியவித்துகளைத் தாங்கியுள்ளன. இவற்றுள் இரண்டு வித்துகள் நேர் (+) ரகமாகவும் மற்ற இரண்டும் எதிர் (-) ரகமாகவும் இருக்கும். பசிடியவித்துகள் சிறுகாம்புகள் எனும் அமைப்பின் மீது தோன்றுகின்றன. பசிடியவித்துகள் முளைத்து ஒற்றை உட்கரு கொண்ட முதல்நிலை மைசீலியத்தை உருவாக்குகின்றன.


இவ்வாறாக அகாரிகஸின் வாழ்க்கை சுழற்சியில் மிகக் குறுகிய இரட்டைமடிய நிலையும், ஒற்றைமடிய நிலையும் மற்றும் நீண்ட இரட்டை உட்கரு நிலையும் காணப்படுகிறது (படம் 1.26).


Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 1 : Living World : Agaricus - Fungi in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம் : அகாரிகஸ் - பூஞ்சை - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்