Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பாக்டீரிய செல்லின் நுண்ணமைப்பு

வரைபடத்துடன் - பாக்டீரிய செல்லின் நுண்ணமைப்பு | 11th Botany : Chapter 1 : Living World

   Posted On :  05.07.2022 01:36 am

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்

பாக்டீரிய செல்லின் நுண்ணமைப்பு

பாக்டீரிய செல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. (i) வெளியுறை அல்லது கிளைக்கோகேலிக்ஸ (ii) செல்சுவர் (iii) சைட்டோபிளாசம் (படம் 1.9)

பாக்டீரிய செல்லின் நுண்ணமைப்பு

பாக்டீரிய செல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

(i) வெளியுறை அல்லது கிளைக்கோகேலிக்ஸ (ii) செல்சுவர் (iii) சைட்டோபிளாசம் (படம் 1.9)


வெளியுறை அல்லது கிளைக்கோகேலிக்ஸ்

சில பாக்டீரியங்கள் வழவழப்பான தன்மை கொண்ட பாலிசாக்ரைட்கள் அல்லது பாலிபெப்டைட் அல்லது இரண்டினையும் கொண்ட படலத்தால் செல் சுவர் சூழப்பட்டுள்ளன. செல்சுவரோடு மிக நெருக்கமாக அமைந்த கிளைக்கோகேலிக்ஸினாலான அடுக்கு வெளியுறை என அழைக்கப்படுகிறது.

இவைகள் பாக்டீரியங்களை உலர்தலிலிருந்தும், உயிர் எதிர் பொருட்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு உதவுகின்றன. வெளியுறையின் ஒட்டும் தன்மை, பாக்டீரியங்களை தாவர வேரின் புறபரப்புகள், மனித பற்கள், திசுக்கள் மீது ஒட்டி வாழவும் உதவுகிறது. மேலும் இந்த அடுக்கு பாக்டீரியசெல் ஊட்டத்தினைத் தக்க வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

குடல் மற்றும் இரைப்பை புண்கள் ஹெலிகோபாக்டர் பைலோரி எனும் கிராம் எதிர் பாக்டீரியத்தால் ஏற்படுகிறது.

பேசில்லஸ் துரின்சியன்சிஸ் எனும் பாக்டீரியத்திலிருந்து பெறப்படும் Bt நச்சு, பயிர்களில் பூச்சி எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது (Bt பயிர்கள்).


செல்சுவர்

பாக்டீரியங்களின் செல்சுவர் கடினமானது. துகள் ஒத்த (Granular) தன்மை கொண்டது. இது செல்லிற்கு வடிவத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது. பாக்டீரியங்களின் செல்சுவர் மிகவும் சிக்கலான அமைப்புடையது. இவை பெப்டிடோகிளைக்கான் அல்லது மியூகோபெப்டைட்களால் ஆனது. (N அசிட்டைல் குளுகோஸமைன், N-அசிட்டைல் மியுராமிக் அமிலம், 4 அல்லது 5 அமினோ அமிலங்களைக் கொண்ட பெப்டைட் தொடரால் ஆனது). பாக்டீரியங்களின் செல்சுவரில் போரின் பாலிபெப்டைட்கள் மிகுந்து காணப்படுகின்றன. இவை கரைப்பொருட்கள் பரவிச் செல்வதற்கு உதவி புரிகின்றன.பிளாஸ்மாசவ்வு

பிளாஸ்மாசவ்வு லிப்போபுரதத்தால் ஆனது. இது சிறிய மூலக்கூறுகள், அயனிகள் உட்செல்வதையும், வெளியேறுவதையும் கட்டுப்படுத்துகிறது. சுவாசித்தல் நிகழ்ச்சியில் வளர்சிதை பொருளின் ஆக்ஸிஜனேற்றத்தில் (அதாவது சுவாசநிகழ்வு சங்கிலித்தொடரில்) பங்கு பெறும் நொதிகளும், ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் நொதிகளும் பிளாஸ்மாசவ்வில் அமைந்துள்ளன.


சைட்டோபிளாசம்

சைட்டோபிளாசம் அடர்த்தியானது. பகுதி ஒளிகடத்தும் தன்மையுடையது. இதில் ரிபோசோம்களும் இதர செல் உள்ளடக்கப் பொருட்களும் காணப்படுகின்றன. சைட்டோபிளாசத்தில்  உட்பொருட்களாக கிளைக்கோஜன், பாலி – b - ஹைட்ராக்ஸிபியுட்ரேட் துகள்கள், கந்தக துகள்கள், வளிம குமிழ்கள் (gas vesicles) போன்றவை காணப்படுகின்றன.


பாக்டீரியங்களின் குரோமோசோம்

பாக்டீரிய குரோமோசோம் வட்டவடிவ, இறுக்கமாக சுருண்ட DNA மூலக்கூறு ஆகும். இது மெய்யுட்கரு உயிரியில் உள்ளது போல் சவ்வினால் சூழப்பட்டு காணப்படுவதில்லை. இம்மரபியல் பொருள் உட்கரு ஒத்த அமைப்பு அல்லது மரபணுதாங்கி என்று அழைக்கப்படுகிறது. சுருளற்ற நிலையில் ஈ.கோலையின் DNA 1mm நீளமுடையதாக இருந்தாலும், அவ்வுயிரினத்திற்குத் தேவையான அனைத்து மரபியல் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. DNA ஹிஸ்டோன் புரதத்துடன் இணைந்து காணப்படுவதில்லை. தனிகுரோமோசோம் அல்லது வட்டவடிவிலுள்ள DNA மூலக்கூறின் ஒருமுனை பிளாஸ்மா சவ்வின் ஒரு பகுதியுடன் ஒட்டியிருப்பது DNA இரட்டிப்படைதலின்போது இரு குரோமோசோம்களாகப் பிரிவதற்கு உதவி புரிகிறது என நம்பப்படுகிறது.


பிளாஸ்மிட்

பாக்டீரியங்களில் காணக்கூடிய ஈரிழைகளாலான, வட்ட வடிவ, சுயமாக பெருக்கமடையும் தன்மை கொண்ட கூடுதல் குரோமோசோம்கள் பிளாஸ்மிட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை வளத்தன்மை, உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்தன்மை, வன்உலோகங்களைத் தாங்கும் தன்மை ஆகியவற்றிற்கான மரபணுக்களைப் பெற்றுள்ளன. பாக்டீரியத்தின் குரோமோசோமில் காணப்படாத பாக்டீரியோசின் மற்றும் நச்சுக்களையும் பிளாஸ்மிட்கள் உற்பத்திசெய்கின்றன. பிளாஸ்மிட்கள் 1-லிருந்து 500 கிலோ அடியிணைகள் வரையிலான அளவுகளில் வேறுபடுகின்றன. பாக்டீரியங்களில் காணப்படும் மொத்த DNAவில் பிளாஸ்மிட்கள் 0.5% முதல் 5.0% வரை உள்ளன. பாக்டீரியங்களின் செல்களில் காணப்படும் பிளாஸ்மிட்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. பிளாஸ்மிட்கள் அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. F (வளத்தன்மை) காரணி, R (எதிர்ப்புத்தன்மை) பிளாஸ்மிட்கள், Col (கோலிசின்) பிளாஸ்மிட்கள், Ri (வேரினைத் தூண்டும்) பிளாஸ்மிட்கள், Ti (கழலையைத் தூண்டும்) பிளாஸ்மிட்கள் என்பனவாகும்.


மீசோசோம்கள்

பிளாஸ்மாசவ்வு குறிப்பிட்ட சில இடங்களில் குமிழ்கள், சிறு குழல்கள், மென் அடுக்குகள் போன்ற வடிவங்களில் செல்லில் உள்நோக்கி சில மடிப்புகளை தோற்றுவிக்கின்றன. இவை ஒன்றாக திரண்டு மடிப்புகளை ஏற்படுத்தி தளப்பரப்பை அதிகரிக்கச் செய்து சுவாசித்தலுக்கும், இரு பிளவுறுதலுக்கும் உதவி செய்கின்றன.


பாலிசோம்கள் அல்லது பாலிரிபோசோம்கள்

ரிபோசோம்கள் புரதச்சேர்க்கை நடைபெறும மையங்களாகும். ஒரு செல்லில் ரிபோசோம் எண்ணிக்கை 10,000 முதல் 15,000 வரை வேறுபடுகிறது. ரிபோசோம்கள் 70S வகையை சார்ந்தது. இவைகள் இரண்டு துணை அலகுகளைப் பெற்றுள்ளன (50S மற்றும் 30S). ஏவல் RNA (mRNA) இழையின் மீது பல ரிபோசோம்கள் ஒன்று சேர்ந்து காணப்படுவது பாலிரிபோசோம்கள் அல்லது பாலிசோம்கள் எனப்படும்.


கசையிழை (Flagellum)

இடப்பெயர்ச்சி அடையும் சில பாக்டீரியங்களின் செல்சுவரிலிருந்து தோன்றுகின்ற வேறுபட்ட நீளமுடைய எண்ணற்ற மெல்லிய மயிரிழை போன்ற அமைப்புகள் கசையிழைகள் என அழைக்கப்படுகின்றன. இவை 20 - 30um விட்டமும், 15um நீளமும் உடையவை. மெய்யுட்கரு செல்களில் கசையிழைகள் 9 + 2 என்ற அமைப்பில் அமைந்த நுண்ணிழைகளால் ஆனவை. ஆனால் பாக்டீரியங்களில் ஒவ்வொரு கசையிழையும் ஒரே ஒரு நுண்ணிழையால் மட்டுமே ஆனது. கசையிழைகள் இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன. கசையிழைகளின் எண்ணிக்கை மற்றும் அமைவிடத்தின் அடிப்படையில் பல்வேறு வகையான பாக்டீரியங்கள் உள்ளன (படம் 1.8).
ஃபிம்ரியெ (Fimbriae) அல்லது நுண் சிலும்புகள் (Pili)

கிராம் எதிர்பாக்டீரியங்களின் (எடுத்துக்காட்டு: எண்டிரோபாக்டீரியம்) செல்சுவரின் மேற்புறத்தில் மயிரிழை போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன. இவை நுண் சிலும்புகள் அல்லது ஃபிம்ரியெ எனப்படும். இவை 0.2 முதல் 20 μm நீளத்தையும் 0.025  μm விட்டத்தையும் உடையன. இயல்பான நுண்சிலும்புகளைத் தவிர பாக்டீரியங்களின் இணைவிற்கு உதவி செய்யும் சிறப்புவகையான பாலியல் நுண்சிலும்புகளும் (Sex pili) காணப்படுகின்றன.

Tags : with diagram வரைபடத்துடன்.
11th Botany : Chapter 1 : Living World : Ultrastructure of a Bacterial cell with diagram in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம் : பாக்டீரிய செல்லின் நுண்ணமைப்பு - வரைபடத்துடன் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்