மைல்கற்கள், பொதுப்பண்புகள், இனப்பெருக்க முறைகள், வகைப்பாடு, பொருளாதாரப் பயன்கள் - பூஞ்சைகள் | 11th Botany : Chapter 1 : Living World

   Posted On :  05.07.2022 02:01 am

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்

பூஞ்சைகள்

"பூஞ்சை" என்ற சொல் லத்தீன் மொழி வழிவந்த சொல்லாகும். இதற்கு ‘காளான்’ என்று பொருள்.

பூஞ்சைகள்

 

இரண்டாம் உலகப்போரும் பெனிசிலினும்

வரலாற்றில் பூஞ்சை

1928 ஆம் ஆண்டு பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவ உலகில் ஒரு தற்செயல் நிகழ்வாகும். இரண்டாம் உலகப் போர் வரலாற்று நிகழ்வின் போது போர் வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பெனிசிலினை மஞ்சள் நிறப் பொடியாகப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று குறிப்புள்ளது. இந்த வியப்புமிக்க உயிர்எதிர்ப்பொருளை கண்டுபிடித்ததற்காக அலெக்சாண்டர் ஃபிளமிங்க்கு 1945-ஆம் ஆண்டு எர்னஸ்ட் போரிஸ் மற்றும் சர் ஹோலார்ட் வால்ட்டர் ஃபுளோரே ஆகியோருடன் நோபெல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.


 

பூஞ்சையியலின் மைல்கற்கள்

• 1729 P.A. மைச்சிலி வித்து வளர்ப்பு சோதனை செய்தார்.

• 1767 பாண்டானா பூஞ்சைகள் தாவரங்களில் நோய் ஏற்படுத்தும் என்பதை நிரூபித்தார்.

• 1873 C.H.ப்பிளாக்கிலி மனிதர்களில் பூஞ்சைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதை நிரூபித்தார்.

• 1904 A.F.ப்ளாக்ஸ்லி பூஞ்சைகளின் மாற்று உடலத்தன்மையை கண்டறிந்தார்.

• 1952 பான்டிகோர்வோவும் ரோப்பரும் இணைந்து பாலினை ஒத்தத்தன்மையை கண்டறிந்தனர். 

"பூஞ்சை" என்ற சொல் லத்தீன் மொழி வழிவந்த சொல்லாகும். இதற்கு ‘காளான்’ என்று பொருள். பூஞ்சைகள் எங்கும் பரவிக் காணப்படுகின்ற, மெய்யுட்கரு கொண்ட பச்சையமற்ற, பிறசார்பூட்ட உயிரிகளாகும். இவை ஒரு செல் அல்லது பல செல்களால் ஆனவை. பூஞ்சைகள் பற்றிய படிப்பானது 'பூஞ்சையியல்' என அறியப்படுகிறது. (கிரேக்கம் - மைக்கஸ் = காளான், லோகோஸ் = படிப்பு). P.A.மைச்சிலி என்பவர் பூஞ்சையியலைத் தோற்றுவித்தவராகக் கருதப்படுகிறார். ஆர்தர் H.R. புல்லர், ஜான் வெப்ஸ்டர், ஹாக்ஸ்வொர்த், எய்ன்ஸ்வொர்த், B.B.முண்ட்குர், K.C. மேத்தா, C.V. சுப்ரமண்யன், T.S. சதாசிவன் ஆகியோர் சில புகழ்பெற்ற பூஞ்சையியல் வல்லுநர்கள் ஆவார்கள்.

E.J. பட்லர் (1874-1943)


இந்தியப் பூஞ்சையியலின் தந்தை ஆவார். பீகாரில் உள்ள பூசா என்ற இடத்தில் இம்ப்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். இதுவே பிறகு புதுதில்லிக்கு மாற்றப்பட்டு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம் (IARI) என்ற பெயரில் அறியப்படுகிறது. இவர் 1918 ஆம் ஆண்டு இந்திய தாவர நோய்களைத் தொகுத்துப் "பூஞ்சை மற்றும் தாவர நோய்கள்" என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டார்... 

 

பொதுப்பண்புகள்

பெரும்பாலான பூஞ்சைகளின் உடலம் கிளைத்த இழை போன்ற ஹைஃபாக்களால் ஆனது. எண்ணற்ற ஹைஃபாக்கள் இணைந்து மைசீலியத்தை உருவாக்குகின்றன. பூஞ்சைகளின் செல்சுவர் கைட்டின் எனும் பாலிசாக்கரைட்களாலும் (N- அசிட்டைல் குளுக்கோஸமைனின் பல்படி) மற்றும் பூஞ்சை செல்லுலோஸால் ஆனது.

தடுப்புச்சுவர் காணப்படுவதன் அடிப்படையில் மைசீலியங்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன (படம் 1.18). கீழ்நிலை பூஞ்சைகளில் ஹைஃபாக்கள் தடுப்புச்சுவரற்றும், எண்ணற்ற உட்கருக்களைக் கொண்டும் காணப்படுவது பல் உட்கரு மைசீலியம் என்று அறியப்படுகிறது. எடுத்துக்காட்டு: அல்புகோ. மேம்பாடடைந்த வகுப்புப் பூஞ்சைகளில் ஹைஃபாக்களின் செல்களுக்கிடையே தடுப்புச்சுவர் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஃபியுசேரியம்.


மைசீலியத்தில் காணக்கூடிய ஹைஃபாக்கள் நெருக்கமின்றியோ அல்லது நெருக்கமாகவோ பிணைந்து பூஞ்சை திசுக்களை உருவாக்குகிறது. இது பிளக்டங்கைமா என்று அழைக்கப்படுகிறது.

பிளக்டங்கைமா இரண்டு வகைப்படும். அவை புரோசங்கைமா, போலியான பாரங்கைமா ஆகும். புரோசங்கைமாவில் ஹைஃபாக்கள் நெருக்கமின்றியும், ஒன்றோடொன்று இணைப்போக்கான அமைப்பிலும் உள்ளன. போலியான பாரங்கைமாவில் ஹைஃபாக்கள் நெருக்கமாக அமைவதோடு மட்டுமின்றி தனித்தத்தன்மையை இழந்தும் காணப்படுகின்றன.

முழுகனி உறுப்புடைய பூஞ்சையில் முழு உடலமும் இனப்பெருக்க அமைப்பாக மாறுகிறது. ஆனால் உண்மைக்கனி உறுப்பு வகையின் உடலத்தில் சில பகுதிகள் மட்டும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு மற்ற பகுதிகள் தழை உடல் நிலையிலேயே உள்ளன. பூஞ்சைகள் பாலிலா, பாலினப்பெருக்க முறைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. பூஞ்சையின் பாலிலா நிலையானது பாலிலிநிலை (Anamorph) என்றும், பாலினநிலை பால்நிலை (Teleomorph) என்றும் அழைக்கப்படுகின்றன. இரு நிலைகள் காணப்படும் பூஞ்சைகள் முழு உடலி (Holomorph) என்றும் கூறலாம்.

பொதுவாகப் பூஞ்சைகளின் பாலினப் பெருக்கத்தில் மூன்று படிநிலைகள் உள்ளன.

1. இரண்டு செல்களின் சைட்டோபிளாச இணைவு 2. உட்கரு இணைவு 3. குன்றல் பகுப்பு வழி ஒற்றைமடியவித்துகள் உண்டாதல்.

 

படம் 1.19: பூஞ்சையில் நடைபெறும் இனப்பெருக்க முறைகள்

 

பூஞ்சையில் நடைபெறும் இனப்பெருக்க முறைகள்

பூஞ்சையில் நடைபெறும் இனப்பெருக்க முறைகளுக்கான படம் 1.19-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

பாலிலா இனப்பெருக்கம்

1. இயங்குவித்துகள் (Zoospores). இவை இயங்கு வித்தகங்களில் தோற்றுவிக்கப்படும் கசையிழையுடைய அமைப்புகளாகும். (எடுத்துக்காட்டு: கைட்ரிடுகள்)

2. கொனிடியங்கள் (Conidia): கொனிடியத் தாங்கிகளின் மீது உருவாகும் வித்துகள். (எடுத்துக்காட்டு: ஆஸ்பெர்ஜில்லஸ்).

3. ஆய்டிய வித்துகள் (Oidia) / உடலவித்துகள் (Thallospores) / கணுவித்துகள் (Arthrospores): ஹைஃபாக்கள் பிளவுற்றுத் தோன்றும் வித்துகள் ஆய்டிய வித்துகள் என அழைக்கப்படுகின்றன. (எடுத்துக்காட்டு: எரிசைஃபி ).

4. பிளவுறுதல் (Fission): உடலச் செல் பிளவுற்று இரண்டு சேய்செல்களைத் தருகிறது. (எடுத்துக்காட்டு: சைசோசாக்கரோமைசிஸ் - ஈஸ்ட்)

5. மொட்டுவிடுதல் (Budding): பெற்றோர் செல்லிருந்து சிறிய மொட்டு போன்ற வளர்ச்சி தோன்றி அவை பிரிந்துச்சென்று தனித்து வாழ்கின்றன. (எடுத்துக்காட்டு: சாக்கரோமைசிஸ் - ஈஸ்ட்)

6. கிளாமிடவித்துகள் (Chlamydospores): தடித்த சுவருடைய ஓய்வுநிலை வித்துகளாகும், (எடுத்துக்காட்டு: ஃபியுசேரியம்) 

பாலினப்பெருக்கம்

1. இயக்கக் கேமீட்களின் இணைவு: (Planogametic copulation)

நகரும் தன்மையுடைய கேமீட்களின் இணைவிற்கு இயக்க கேமீட்களின் இணைவு என்று பெயர். இது மூன்று வகைப்படும்.

அ. ஒத்தகேமீட் இணைவு (Isogamy) - புற அமைப்பு, செயலியலில் ஒத்த கேமீட்களின் இணைவாகும். (எடுத்துக்காட்டு: சின்கைட்ரியம்).

ஆ. சமமற்ற கேமீட் இணைவு (Anisogamy) - புற அமைப்பு அல்லது செயலியலில் வேறுபட்ட கேமீடுகளின் இணைவாகும். (எடுத்துக்காட்டு : அல்லோமைசிஸ்).

இ. முட்டை கருவுறுதல் (Oogamy) - புற அமைப்பிலும், செயலியலிலும் வேறுபட்ட இரு கேமீட்களின் இணைவாகும். எடுத்துக்காட்டு: மோனோபிளாபாரிஸ்).

2. கேமீட்டகத்தொடர்பு (Gametangial contact); பாலினப்பெருக்கத்தின் போது ஆந்தரிடியம், ஊகோணியம் இடையே தொடர்பு ஏற்படுதல். (எடுத்துக்காட்டு: அல்புகோ).

3. கேமீட்டக இணைவு (Gametangial copulation): கேமீட்டகங்கள் இணைந்து உறக்கக் கருமுட்டை (Zygospore) உருவாதல். (எடுத்துக்காட்டு: மியூக்கர், ரைசோபஸ்).

4. ஸ்பெர்மேஷிய இணைவு (Spermatisation): இம்முறையில் ஒரு உட்கரு கொண்ட பிக்னியவித்து நுண்கொனிடியம் ஏற்பு ஹைஃபாக்களுக்குக் கடத்தப்படுகிறது (எடுத்துக்காட்டு : பக்சினியா, நியுரோஸ்போரா).

5. உடலசெல் இணைவு (Somatogamy): இரண்டு ஹைஃபாக்களின் உடலசெல்களின் இணைவாகும் (எடுத்துக்காட்டு: அகாரிகஸ்). 

 

பூஞ்சைகளின் வகைப்பாடு

பூஞ்சைகளை அவைகளின் உடல், இனப்பெருக்கப் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்த பல பூஞ்சையியல் வல்லுநர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். மரபுசார் வகைப்பாடுகளில் பூஞ்சைகள் ஃபைக்கோமைசீட்ஸ், ஆஸ்கோமைசீட்ஸ், பசிடியோமைசீட்ஸ், டியூட்டிரோமைசீட்ஸ் என நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஃபைக்கோமைசீட்ஸ் வகுப்பில் ஊமைசீட்ஸ், கைட்ரிடியோமைசீட்ஸ், சைகோமைசீட்ஸ் பூஞ்சைகள் அடங்கும். மேலும் இவ்வகுப்பு பூஞ்சைகள் பின்தங்கியதாகவும், பாசிகளிலிருந்து தோன்றியதாகவும் கருதப்படுகிறது.

கான்ஸ்டான்டின் J. அலெக்சோபோலஸ் மற்றும் சார்லஸ் W. மிம்ஸ் ஆகியோர் 1979 ஆம் ஆண்டில் "Introductory Mycology" என்ற நூலில் பூஞ்சைகளின் வகைப்பாட்டை வெளியிட்டனர். இதில் பூஞ்சைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஜிம்னோமைக்கோட்டா, மாஸ்டிகோமைக்கோட்டா, ஏமாஸ்டிகோமைக்கோட்டா ஆகும். இவற்றுள் 8 துணைப்பிரிவுகள், 11 வகுப்புகள், 1 வடிவ வகுப்பு மற்றும் 3 வடிவத் துணை வகுப்புகள் உள்ளன.


 

பெரும்பிரிவு: மைசீட்டே (பூஞ்சைகள்)

இவை ஒரு செல் அல்லது பல செல் அமைப்புடைய (மைசீலியம்), கைட்டினாலான செல் சுவரைக் கொண்ட பச்சையமற்ற, சாற்றுண்ணி அல்லது ஒட்டுண்ணிகளாகும். ஸ்லைம் மோல்டுகளைத் தவிர மற்றவை உறிஞ்சுதல் ஊட்டமுறையைக் கொண்டுள்ளன. பாலிலா மற்றும் பாலினப்பெருக்க முறைகளில் இனப்பெருக்கம் நடைபெறுகின்றன.

பிரிவு - I ஜிம்னோமைக்கோட்டா

விழுங்குதல் ஊட்டமுறை காணப்படுகிறது. இக்குழுவைச் சார்ந்த பூஞ்சைகளில் செல்சுவர் காணப்படுவதில்லை. எடுத்துக்காட்டு: டிக்டியோஸ்டீலியம்

பிரிவு – II மாஸ்டிகோமைக்கோட்டா

கசையிழைகளைக் கொண்ட செல்கள் (கேமீட் / இயங்குவித்து) காணப்படுகின்றன. உறிஞ்சுதல் வகை ஊட்டமுறை, பல்லுட்கரு கொண்ட மைசீலியம் போன்றவை இவற்றின் பண்புகளாகும்.

எடுத்துக்காட்டு: அல்புகோ

பிரிவு – III ஏமாஸ்டிகோமைக்கோட்டா

ஒரு செல் மற்றும் பல செல் அமைப்புடைய பூஞ்சைகளைக் கொண்டுள்ளன. தடுப்புச்சுவர் கொண்ட மைசீலியம் காணப்படுகிறது. மொட்டுவிடுதல், துண்டாதல், வித்தகவித்துகள், கொனிடியங்கள் மூலம் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகிறது. கருமுட்டையில் குன்றல் பகுப்பு நடைபெறுகிறது.  எடுத்துக்காட்டு: பெசைசா.

அண்மைக்காலத்தில் மூலக்கூறு நுட்பத்தின் அடிப்படையில் மிக்சோமைசீட்ஸ், ஊமைசீட்ஸ் போன்றவை மறுவகைப்பாடு செய்யப்பட்டு, குரோமிஸ்டாவின் கீழ்ச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஊமைசீட்ஸ், சைகோமைசீட்ஸ், ஆஸ்கோமைசீட்ஸ் பெசீடியோமைசீட்ஸ் மற்றும் வடிவ வகுப்பு டியூட்ரோமைசீட்ஸ் ஆகியவற்றின் சிறப்புப்பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

ஊமைசீட்ஸ்

பல்உட்கரு மைசீலியம் காணப்படுகிறது. செல்சுவரில் குளுக்கான், செல்லுலோஸ் உள்ளன. இயங்குவித்து வழியாகப் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகிறது. இயங்குவித்துகள் சாட்டை ஒத்த ஒரு கசையிழையையும், குறுநா தகடொத்த ஒரு கசையிழையையும் பெற்றுள்ளன. முட்டை கருவுறுதல் முறையில் பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது. (எடுத்துக்காட்டு: அல்புகோ). 

பூஞ்சைகளின் வகைப்பாட்டின் உருவரை கீழேகொடுக்கப்பட்டுள்ளது.

சைகோமைசீட்ஸ்

• பெரும்பாலான சிற்றினங்கள் மட்குண்ணிகளாக மண்ணில் உள்ள அழுகிய தாவர, விலங்கின உடல்களின் மீது வாழ்கின்றன. சில ஒட்டுண்ணி வகையைச் சார்ந்தவை. (வீட்டு ஈக்களில் வாழும் எண்டமஃப்தோரா).

• ரொட்டி மீது வளரக்கூடியவை (மியூக்கர், ரைசோபஸ்), சாணத்தில் வாழ்பவை எடுத்துக்காட்டு: பைலோபோலஸ் இந்தத் தொகுப்பைச் சார்ந்தவைகளாகும் (படம் 1.20).

• மைசீலியம் கிளைத்து பல்உட்கரு நிலையைப் பெற்றுள்ளது

• பாலிலா இனப்பெருக்கம் வித்தகங்களில் வித்துகளைத் தோற்றுவிப்பதன் மூலம் நடைபெறுகிறது.

• பாலினப்பெருக்கத்தின்போது கேமீட்டகங்கள் இணைந்து தடித்த சுவருடைய உறக்ககருமுட்டை தோற்றுவிக்கின்றன. இவை நீண்ட காலம் ஒய்வு நிலையில் இருந்து குன்றல் பகுப்பிற்குப் பிறகு வித்துகளைத் தோற்றுவிக்கின்றன.

ஆஸ்கோமைசீட்ஸ்

• ஆஸ்கோமைசீட்ஸ் என்பவை ஈஸ்ட்கள், மாவொத்தப் பூசணங்கள், கிண்ணப்பூஞ்சைகள், மோரல்கள் போன்றவைகளைக் கொண்ட தொகுப்பாகும் (படம் 1.21).


• பெரும்பாலான சிற்றினங்கள் நிலத்தில் வாழ்பவையாக இருப்பினும் சில நன்னீர் மற்றும் கடல் நீரிலும் வாழ்கின்றன.

• மைசீலியம் கிளைத்து, நன்கு வளர்ச்சியடைந்து எளிய தடுப்புச்சுவரைப் பெற்றுள்ளது.

• பெரும்பாலானவை சாற்றுண்ணிகளாகவும், சில ஒட்டுண்ணிகளாகவும் அறியப்படுகின்றன (எடுத்துக்காட்டு : மாவொத்த பூசணங்கள் - எரிசைஃபி).

• பாலிலா இனப்பெருக்கம் பிளவுறுதல், மொட்டுவிடுதல், ஆய்டிய வித்துகள், கொனிடியங்கள், கிளாமிடவித்துகள் வழி நடைபெறுகிறது.

• இரண்டு ஒத்த உட்கருக்கள் இணைவதன் வழி பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது.

• சைட்டோபிளாச இணைவைத் தொடர்ந்து உட்கரு இணைவு உடனே நடைபெறுவதில்லை. பதிலாக இரட்டை உட்கருநிலையிலேயே நீண்ட காலம் ஹைஃபாக்கள் காணப்படுகின்றன.

• ஆஸ்கஸ் உருவாக்கச் சிறப்பு ஹைஃபாக்கள் தோன்றுகின்றன.

• ஆஸ்கஸ் உருவாக்க ஹைஃபாக்களின் நுனி பின்புறமாக வளைந்து கொக்கி போன்ற அமைப்புடைய செல்லினைத் தோற்றுவிக்கிறது. இதற்குக் கொக்கி செல் என்று பெயர். நுனி அடி அமைசெல்லில் உள்ள இரண்டு உட்கருக்கள் ஒன்றாக இணைந்து இரட்டைமடியுட்கரு உருவாகிறது. இந்தச் செல் இளம் ஆஸ்கஸாக உருவாகிறது.

• இரட்டைமடிய உட்கரு குன்றல் பகுப்படைதலுக்குப் பிறகு நான்கு ஒற்றைமடிய உட்கருக்களைத் தருகிறது. இவை மேலும் குன்றலில்லா பகுப்பிற்குப் பின் எட்டு உட்கருக்களைத் தருகிறது. இவை ஒருங்கிணைந்து எட்டு ஆஸ்கோ வித்துகளைத் தருகின்றன.

• ஆஸ்கோவித்துக்கள் ஆஸ்கஸ் எனும் பை போன்ற அமைப்பினுள் காணப்படுவதால் இந்தக் குழுமப் பூஞ்சைகள் 'பை பூஞ்சைகள்’ எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

• ஆஸ்கஸ்களை மலட்டு ஹைஃபாக்கள் சூழ்ந்து ஆஸ்கோகனியுருப்பு உருவாகிறது.

• நான்கு வகையான ஆஸ்கோகனியுருப்புகள் உள்ளன. அவை கிளிஸ்டோதீசியம் (முழுமையாக மூடியது), பெரிதீசியம் (குடுவை வடிவம் ஆஸ்டியோல் எனும் துளையுடன்,) அப்போதீசியம் (கோப்பை வடிவம் திறந்த வகை), சூடோதீசியம் (பொய் கனி உடலம்) ஆகும்.

பசிடியோமைசீட்ஸ்

இதில் ஊதல் காளான் (Puff ball), தவளை இருக்கை பூஞ்சை (Toad Stool), பறவைகூடு பூஞ்சை (Birds nest fungus), அடைப்புக்குறி பூஞ்சை (Bracket fungus), துர்நாற்றக் கொம்புப் பூஞ்சைகள் (Stink horns), துரு (Rust) மற்றும் கருப்பூட்டை (Smut) பூஞ்சைகள் இப்பிரிவைச் சார்ந்தவை.

• இவ்வகுப்பு பூஞ்சைகள் சாற்றுண்ணிகளாகவோ, ஒட்டுண்ணிகளாகவோ நிலத்தில் வாழ்கின்றன (படம் 1.22).


• நன்கு வளர்ச்சியடைந்த, மத்தளத் துளைத் தடுப்பு சுவருடைய மைசீலியம் காணப்படுகிறது. மூன்று வகையான மைசீலியங்கள் உள்ளன அவை முதல் நிலை (ஒரு உட்கரு நிலை), இரண்டாம் நிலை (இரட்டை உட்கரு நிலை), மூன்றாம் நிலை என்று அறியப்படுகிறது.

• இரட்டை உட்கரு நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் பிடிப்பு இணைப்பு தோற்றுவிக்கப்படுகிறது.

• பாலிலா இனப்பெருக்கம் கொனிடியங்கள், ஆய்டிய வித்துகள், மொட்டுவிடுதல் வழி நடைபெறுகிறது.

• பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது, ஆயினும் பாலுறுப்புகள் காணப்படுவதில்லை. உடலசெல் இணைவு அல்லது ஸ்பெர்மேஷிய இணைவு வழி சைட்டோபிளாச இணைவு நடைபெறுகிறது. உட்கரு இணைவு தாமதமடைந்து நீண்ட இரட்டைஉட்கரு நிலையில் ஹைஃபாக்கள் உள்ளன. பசிடியத்தில் உட்கரு இணைவு நடைபெற்று உடனடியாகக் குன்றல் பகுப்படைதல் நடைபெறுகிறது.

இவ்வாறு உருவாகும் நான்கு பசிடிய வித்துகள் பசிடியத்தின் வெளிப்புறத்தில் சிறுகாம்பு எனும் அமைப்பின் மீது காணப்படுகின்றன. குண்டாந்தடி வடிவ ஒவ்வொரு பசிடியமும் நான்கு பசிடியோவித்துகளைப் பெற்றுள்ளன. இவை பிரபலமாக 'கிளப் பூஞ்சைகள்’ என்று அறியப்படுகின்றன. இதன் கனியுறுப்பு பசிடியகனியுறுப்பு எனவும் அழைக்கப்படுகிறது.

டியூட்டிரோமைசீட்ஸ் அல்லது முழுமைப்பெறா பூஞ்சைகள்

இவ்வகை பூஞ்சைகளில் பாலினப்பெருக்கம் காணப்படுவதில்லை. எனவே இவை முழுமைபெறாப் பூஞ்சைகள் (Fungi imperfecti) எனவும் அழைக்கப்படுகின்றன. எண்ணற்ற சிற்றினங்கள் மண்ணில் சாற்றுண்ணிகளாகவும் பல தாவர மற்றும் விலங்குகளில் ஒட்டுண்ணிகளாகவும் வாழ்கின்றன. கொனிடியங்கள், கிளாமிட வித்துகள், மொட்டுவிடுதல், ஆய்டியவித்துகள் போன்றவைகளைத் தோற்றுவித்துப் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன. கொனிடியங்கள் சிறப்பு அமைப்புகளான பிக்னிடியம், கொத்துக்கனியுறுப்பு (Acervulus), வித்துத்தண்டு (Sporodochium), கொனிடிய தாங்கித்தூண் (Synnema) போன்ற அமைப்புகளில் தோற்றுவிக்கப் படுகின்றன (படம் 1.23) இப்பூஞ்சைகளில் பாலிணையொத்தத்தன்மை சுழற்சி (Parasexual cycle) நடைபெறுகிறது. இது மரபணு சார்ந்த வேறுபாடுகளைக் கொண்டுவருகிறது.

 பொருளாதாரப் பயன்கள்

பூஞ்சைகள் சுவைமிகுந்த, ஊட்டம் நிறைந்த உணவான காளான்களைத் தருகின்றன. குப்பைகளைச் சிதைத்துத் தாதுப்பொருட்களை மறுசுழற்சி செய்து மண்ணின் வளத்தன்மையை அதிகரிக்க பூஞ்சைகள்  உதவுகின்றன. பால் சார்ந்த தொழிற்சாலைகள் ஒருசெல் பூஞ்சையான ஈஸ்ட்டை சார்ந்துள்ளன. பூஞ்சைகள் மரக்கட்டைகளைச் சேதப்படுத்துவதோடு மட்டுமின்றி நச்சுப்பொருட்களைச் சுரப்பதன் மூலம் உணவுப்பொருட்களை நச்சாக்குகின்றன. பூஞ்சைகளின் நன்மை, தீமை செயல்கள் கீழே விவாதிக்கப்பட்டுள்ளது.

நன்மை தரும் செயல்கள்

உணவு

லென்டினஸ் எடோடஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ், வால்வேரியெல்லா வால்வேசியே போன்றவை ஊட்ட மதிப்புடையதால் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஈஸ்ட்கள் வைட்டமின்  B-யையும் எரிமோதீசியம் ஆஷ்பியி வைட்டமின் B12-யையும் தருகின்றன.

மருத்துவம்

பூஞ்சைகள் பாக்டீரியங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் அல்லது அழிக்கும் உயிர் எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன. பூஞ்சைகள் உற்பத்தி செய்யும் உயிர் எதிர்ப்பொருட்களில் பெனிசிலின் (பெனிசிலியம் நொட்டேட்டம்), செபலோஸ்போரின்கள் (அக்ரிமோனியம் கிரைசோஜீனம்), கிரைசியோ பல்வின் (பெனிசிலியம் கிரைசோபல்வம்) போன்றவை அடங்கும். கிளாவிசெப்ஸ் பர்ப்பூரியா உற்பத்தி செய்யும் எர்காட் ஆல்கலாய்டு (எர்காட்டமைன்) இரத்தக்குழாயினைச் சுருங்க வைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

தொழிற்சாலை கரிம அமில உற்பத்தி

கரிம அமிலங்களை வணிகரீதியில் உற்பத்தி செய்வதற்கு தொழிற்சாலைகளில் பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிட்ரிக் அமிலம், குளுக்கோனிக் அமிலம் தயாரிக்க ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர் என்ற பூஞ்சையும், இட்டகோனிக் அமிலம் தயாரிக்க ஆஸ்பெர்ஜில்லஸ் டெரியஸ், கோஜிக் அமிலம் தயாரிக்க ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசே பூஞ்சையும் பயன்படுத்தப்படுகின்றன.

அடுமனை மற்றும் மதுவடித்தல் (Bakery and Brewing)

சக்காரோமைசிஸ் செரிவிசியே என்ற ஈஸ்ட் நொதித்தல் மூலம் சர்க்கரையை ஆல்கஹாலாக மாற்ற உதவுகிறது. அடுமனையில் பெறப்படும் பொருட்களான ரொட்டி, பன், ரோல் போன்றவை தயாரிக்க ஈஸ்ட் பயன்படுத்துகின்றனர். பெனிசிலியம் ராக்குவிபோர்ட்டை, பெனிசிலியம் கேமம்பர்ட்டை ஆகியவை பாலாடைக்கட்டி உற்பத்தி செய்வதில் உபயோகப்படுத்தப்படுகின்றன.

நொதிகளின் உற்பத்தி

ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசே மற்றும் ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர் போன்றவை அமைலேஸ், புரோட்டியேஸ், லாக்டேஸ் போன்ற நொதிகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பாலாடைக்கட்டி தயாரித்தலில் பால் உறைதலுக்குத் தேவையான ‘ரென்னட்' மியூக்கர் சிற்றினங்களைப் பயன்படுத்திப் பெறப்படுகிறது.

வேளாண்மை

பூஞ்சை வேரிகளை (Mycorrhizae) உருவாக்கும் ரைசோக்டோனியா, ஃபாலஸ், ஸ்கிளிரோடெர்மா போன்ற பூஞ்சைகள், தாவரங்கள் நீர், கனிமப்பொருட்களை உறிஞ்ச உதவுகின்றன.

பியுவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனைசோபிளியா போன்றவை வேளாண்மை பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க உதவுகின்றன. ஜிப்பெரெல்லா ஃபுயுஜிகுரை என்ற பூஞ்சை உற்பத்தி செய்யும் ஜிப்ரெல்லின் என்ற தாவர வளர்ச்சி சீராக்கிப்பொருள் தாவரங்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தீய விளைவுகள்

அமானிட்டா ஃபேலாய்ட்ஸ், அமானிட்டா வெர்னா, போலிட்டஸ் சடானஸ் போன்றவை அதிக நச்சுத்தன்மையுடைய காளான்களாகும். இவை பொதுவாக ‘தவளை இருக்கை பூஞ்சைகள்' என்ற பெயரில் அறியப்படுகின்றன. அஸ்பெர்ஜில்லஸ், ரைசோபஸ், மியூக்கர், பெனிசிலியம் போன்றவை உணவுப் பொருட்கள் கெட்டுப்போவதற்குக் காரணமாகின்றன. அஸ்பெர்ஜில்லஸ் பிளாவஸ் பூஞ்சை உலர்ந்த உணவுப்பொருட்களில் புற்றுநோயைத் தூண்டும் ‘அப்ளாடாக்சின்’ நச்சுப்பொருளை உண்டாக்குகிறது. பாட்டுலின், ஆக்ராடாக்சின் A போன்றவை பூஞ்சைகள் உற்பத்தி செய்யும் சில நச்சுப்பொருட்களாகும். பூஞ்சைகள் மனிதர்களிலும் தாவரங்களிலும் நோய்களை உண்டாக்குகின்றன (அட்டவணை 1.11).


உங்களுக்குத் தெரியுமா?

டெர்மோபைட்கள் என்பவை தோலில் நோய்த்தொற்றுதல்  ஏற்படுத்தக்கூடிய பூஞ்சைகளாகும்.

எடுத்துக்காட்டு : டிரைகோஃபைட்டான், - டினியா, மைக்ரோஸ்போரம், எபிடெர்மோபைட்டான்.

உருளைக்கிழங்கில் பைட்டோப்தோரா இன்பெஸ்டன்ஸ் என்ற பூஞ்சையால் ஏற்பட்ட தாமதித்த வெப்பு நோய் (Late blight of potato) காரணமாக அயர்லாந்தில் 1843 - 1845 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தினால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர், ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறினர். அதேபோல் நெல்லில் ஹெல்மிந்தோஸ்போரியம் ஒரைசே எனும் பூஞ்சை ஏற்படுத்திய வெப்பு நோய் வங்காளத்தில் 1942 - 1943 ஆம் ஆண்டு எற்பட்ட பெரும் பஞ்சத்திற்கு (Bengal famine) ஒரு காரணமாகும். 

செயல்பாடு 1.4

ஒரு மொட்டுக் காளானை எடுத்து அதன் கனியுறுப்பை படம் வரையவும். பின்னர் அதை நீள்வாக்கில் மெல்லிய சீவல்களாக வெட்டி எடுத்து நுண்ணோக்கியில் வைத்து உற்றுநோக்கி காண்பனவற்றைப் பதிவு செய்யவும்.

செயல்பாடு 1.5

பெட்ரித்தட்டில் ஒரு ரொட்டித்துண்டை வைத்து அதன்மேல் சிறிது நீரைத் தெளிக்கவும். மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வைக்கவும். பின்னர் ரொட்டித் துண்டின் மேற்பரப்பில் வளர்ந்துள்ள பூஞ்சையின் ஒரு பகுதியை ஊசியினைப் பயன்படுத்திப் பிரித்தெடுக்கவும். மைசீலியத்தை கண்ணாடித்துண்டத்தில் வைத்து லாக்டோபீனால் நீலம் சாயமேற்றி அவற்றை நுண்ணோக்கியில் வைத்து உற்றுநோக்கவும். நீங்கள் காணும் பூஞ்சையின் மைசீலியம் மற்றும் வித்தக அமைப்பைக் கொண்டு அவை எப்பிரிவைச் சார்ந்தவை எனக் கண்டறியவும்.


அகாரிகஸ்

வகுப்பு - பசிடியோமைசீட்ஸ்

துறை – அகாரிகேல்ஸ்

குடும்பம் – அகாரிகேஸி

பேரினம் - அகாரிகஸ்

அகாரிகஸ் மரக்கட்டைகள், உரக்குவியல்கள், மக்காதக் குப்பைகள், மேய்ச்சல் நிலங்கள் போன்ற பல இடங்களில் காணக்கூடிய ஒரு மட்குண்ணிப் பூஞ்சையாகும். இப்பூஞ்சையின் கனியுறுப்புகள் மட்டுமே கண்களுக்குப் புலப்படுகின்றன. அகாரிகஸ் ஆர்வென்சிஸ், அகாரிகஸ் டேபுலாரிஸ் போன்ற சிற்றினங்கள் வாழிடங்களில் வளையங்களாகக் காணப்படுகின்றன. ஆகவே இவைகள் ’தேவதை வளையங்கள்’ என அழைக்கப்படுகின்றன. அகாரிகஸ் கேம்பெஸ்ட்ரிஸ் பொதுவான ’களக் காளான்’ ஆகும்.

உடல் அமைப்பு

உடலம் கிளைத்த ஹைஃபாக்களால் ஆனது. அதிக எண்ணிக்கையிலான ஹைஃபாக்கள் சேர்ந்து மைசீலியத்தை உருவாக்குகின்றன. முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மைசீலியம் என மூன்று வகை மைசீலியங்கள் காணப்படுகின்றன. பசிடியவித்துகள் முளைத்து முதல்நிலை மைசீலியம் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த மைசீலியம் தடுப்புச்சுவர் கொண்டு, ஒற்றைமடிய நிலையிலுள்ள ஒரு உட்கருவை பெற்று ஒரு உட்கரு மைசீலியம் என அழைக்கப்படுகிறது. இரண்டு எதிரெதிர் ரக (+ மற்றும் -) முதல் நிலை மைசீலியங்கள் இணைந்து இரண்டாம் நிலை மைசீலியம் அல்லது இரட்டை உட்கரு மைசீலியத்தை உருவாக்குகிறது. இரட்டை உட்கரு மைசீலியம் வளர்ந்து, திரண்டு கயிறு போன்ற வேருருவை உண்டாக்குகிறது. இது மண்ணில் ஊடுருவி நீண்ட காலம் வாழ்கிறது. மூன்றாம் நிலை மைசீலியம் பசிடியகனியுறுப்பில் காணப்படுகிறது. ஹைஃபாக்களின் செல்கள் கைட்டினால் ஆன செல் சுவரையும். மேலும் செல் நுண்ணுறுப்புகளான மைட்டோகாண்ட்ரியங்கள், கோல்கை உறுப்புகள், எண்டோபிளாச வலை போன்றவைகளையும் கொண்டுள்ளன.

பாலிலா இனப்பெருக்கம்

அகாரிகஸ் பாலிலா இனப்பெருக்கத்தின்போது கிளாமிட வித்துக்களை உருவாக்குகின்றன. சாதகமான சூழ்நிலையில் கிளாமிட வித்துகள் முளைத்து, மைசீலியமாக வளர்கிறது.

பாலினப்பெருக்கம்

பாலினப்பெருக்கத்தின் மூலம் இனப்பெருக்கம் செய்தாலும் அகாரிகஸில் பாலுறுப்புகள் காணப்படுவதில்லை. பெரும்பான்மையான

சிற்றினங்கள் மாற்று உடலத்தன்மை கொண்டவை. இருப்பினும் அகாரிகஸ் பைஸ்போரஸ் ஒத்த உடலத்தன்மை உடையது. இரு எதிரெதிர் ரக மைசீலியங்கள் ஒன்றோடொன்று இணைவதன் மூலம் (உடல இணைவு) இரட்டை உட்கரு கொண்ட இரண்டாம் நிலை மைசீலியம் தோற்றுவிக்கப்படுகிறது. பசிடியத்தினுள் உட்கரு இணைந்து குன்றல் பகுப்பிற்குட்பட்டு நான்கு ஒற்றைமடிய பசிடியவித்துகள் தோற்றுவிக்கப்படுகின்றன. பசிடியவித்துகள் சிறு காம்பின் (Sterigma) மீது தோன்றுகின்றன. பூமியில் புதைந்து காணக்கூடிய வேருருக்கள் இரட்டை உட்கருக்களைக் கொண்ட ஹைஃபாக்களாலான முடிச்சுகளை உருவாக்கி, பசிடியகனியுறுப்பு வளர்ச்சியடைகின்றன.

பசிடியகனியுறுப்பு (Basidiocarp)

நன்கு வளர்ச்சியடைந்த பசிடியகனியுறுப்பு குடை வடிவில் காணப்படுகிறது. இது காம்பு, பைலியஸ், நுண்தட்டுகள் என மூன்று பகுதிகளாகப் பிரித்தறியப்படுகிறது. காம்பு தடித்து, சதைப்பற்றுடன் உருளை வடிவில் காணக்கூடிய அமைப்பாகும். காம்பின் மேற்பகுதியில் காணக்கூடிய சவ்வு போன்ற பகுதி அன்னுலஸ் என அழைக்கப்படுகிறது. பசிடியகனியுறுப்பின் குவிந்து காணக்கூடிய மேற்பகுதி பைலியஸ் எனப்படும். இது வெண்மை அல்லது கிரீம் நிறத்தில் காணப்படுகிறது (படம் 1.24). பைலியஸின் உட்புறத்தில் ஆரப்போக்கில் குறுக்காக அமைந்த நுண்தட்டுகள் அல்லது லேமெல்லாக்கள் காணப்படுகின்றன. இவை நீளத்தில் வேறுபட்டுக் காணப்படும். நுண்தட்டின் இரண்டு பக்கங்களிலும் ஹைமீனியம் என்ற வளமான அடுக்கு காணப்படுகிறது. காம்பின் மையப்பகுதி உள்ளீடற்று இடைவெளியுடன் அமைந்த ஹைஃபாக்களால் ஆனது. வெளிப்புறப்பகுதி நெருக்கமாக அமைந்த ஹைஃபாக்களால் நிரப்பப்பட்டிருப்பதோடு போலியான பாரங்கைமா திசுவையும் உண்டாக்குகிறது.நுண்தட்டு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரு ஹைமீனியம் அடுக்குகளுக்கிடையே காணப்படுகின்ற நுண்தட்டின் மையப்பகுதி ட்ராமா (படம் 1.25) எனப்படும். துணை ஹைமீனியம் அடுக்குகள் நெருக்கமாக இடைவெளியின்றி அமைந்த திசுக்களால் ஆனது. இவற்றுள் ஹைமீனியம் வளமான அடுக்காகும். இதில் குண்டாந்தடி வடிவ பசிடியங்கள் காணப்படுகின்றன. பசிடியங்களுக்கு இடையிடையே காணக்கூடிய மலட்டு ஹைஃபாக்கள் பாராஃபைசிஸ் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பசிடியமும் நான்கு பசிடியவித்துகளைத் தாங்கியுள்ளன. இவற்றுள் இரண்டு வித்துகள் நேர் (+) ரகமாகவும் மற்ற இரண்டும் எதிர் (-) ரகமாகவும் இருக்கும். பசிடியவித்துகள் சிறுகாம்புகள் எனும் அமைப்பின் மீது தோன்றுகின்றன. பசிடியவித்துகள் முளைத்து ஒற்றை உட்கரு கொண்ட முதல்நிலை மைசீலியத்தை உருவாக்குகின்றன.


இவ்வாறாக அகாரிகஸின் வாழ்க்கை சுழற்சியில் மிகக் குறுகிய இரட்டைமடிய நிலையும், ஒற்றைமடிய நிலையும் மற்றும் நீண்ட இரட்டை உட்கரு நிலையும் காணப்படுகிறது (படம் 1.26). 

பூஞ்சைவேரிகள் (Mycorrhizae)

பூஞ்சைகளின் மைசீலியங்கள் மற்றும் தாவர வேர்களுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி வாழ்க்கை அமைப்பிற்கு பூஞ்சைவேரிகள் என்று பெயர். இந்தத் தொடர்பில் பூஞ்சைகள் வேரிலிருந்து ஊட்டத்தை உறிஞ்சுகின்றன. அதற்குப் பதிலாகப் பூஞ்சைகளின் ஹைஃபா வலைப்பின்னல் அமைப்பு தாவரங்கள் மண்ணிலிருந்து நீர், கனிம ஊட்டங்களை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன பூஞ்சைவேரிகள் மூன்று வகைப்படும் (படம் 1.24)அட்டவணை 1.12.

 

பூஞ்சைவேரிகளின் முக்கியத்துவம்

• இவை மட்குண்ணி வகையைச் சார்ந்த பூக்கும் தாவரமான மோனோட்ரோப்பா தாவரத்தில் ஊட்டத்தினை எடுத்துக்கொள்ள உதவுகின்றன.

• தாவரங்களுக்குக் கனிமப்பொருட்கள் மற்றும் நீர் அதிகளவில் கிடைக்கப் பூஞ்சைவேரிகள் உதவுகின்றன.

• தாவரங்களுக்கு வறட்சியைத் தாங்கும் திறனைத் தருகிறது

• மேம்பாடடைந்த தாவரங்களின் வேர்களைத் தாவர நோய்க்காரணிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது. 

லைக்கென்கள் (Lichens)

பாசிகள் மற்றம் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி அமைப்பிற்கு லைக்கென்கள் என்று பெயர். இதில் பாசி உறுப்பினர் பாசி உயிரி அல்லது ஒளி உயிரி என்றும், பூஞ்சை உறுப்பினர் பூஞ்சை உயிரி என்றும் அழைக்கப்படுகின்றன. பாசி உயிரி பூஞ்சைக்கு ஊட்டத்தைத் தருகிறது. பூஞ்சை உயிரி பாசிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன் உடலத்தைத் தளப்பொருள் மீது நிலைப்படுத்த ரைசினே என்ற அமைப்பை ஏற்படுத்த உதவுகின்றது. பாலிலா இனப்பெருக்கம் துண்டாதல், சொரீடியங்கள் (Soredia), ஐசிடியங்கள் மூலம் நடைபெறுகின்றன. பாசி உயிரி உறக்க நகராவித்துகள், ஹார்மோகோனியங்கள், நகராவித்துகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. பூஞ்சை உயிரி பாலினப்பெருக்கத்தில் ஈடுபட்டு ஆஸ்கோ கனி உடலங்களை உருவாக்குகின்றன.


அட்டவணை 1.12: பூஞ்சைவேரிகளின் வகைகள்

புறபூஞ்சைவேரிகள்

பூஞ்சைகளின் மைசீலியம் வேரினைச் சூழ்ந்து அடர்த்தியான உறையினைத் தோற்றுவிக்கிறது. இது மேலுறை (Mantle) என அறியப்படுகிறது. ஹைஃபா வலைபின்னல்கள் செல் இடைவெளியில் ஊடுருவிப் புறத்தோல் மற்றும் புறணிப் பகுதியைச் சென்றடைந்து, ‘ஹார்டிக் வலையை ' (Hartig net) உருவாக்குகிறது.

எடுத்துக்காட்டு: பைசோலித்தஸ் டிங்டோரியஸ் 

அகபூஞ்சைவேரிகள்

ஹைஃபாக்கள் வேரின் வெளிப்புறப் புறணி செல்களை ஊடுருவிச் சென்று, உட்பகுதியில் வளர்கின்றன. மைசீலியத்தின் சிறிய பகுதி வேரின் வெளிப்பகுதியில் காணப்படுகிறது. இவை குமிழ் பை (vesicle) , ஹைஃபா பை (arbuscules), போன்ற உறிஞ்சு உறுப்புகளை உருவாக்குவதால் இவ்வகை பூஞ்சைகள் வெசிக்குலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா (VAM) பூஞ்சைகள் என அறியப்படுகின்றன.

1. ஆர்பஸ்குலர் பூஞ்சைவேரிகள் (VAM)

எடுத்துக்காட்டு: ஜிகாஸ்போரா

2. எரிகாய்டு பூஞ்சைவேரிகள்

எடுத்துக்காட்டு: ஆய்டியோ டென்டிரான்

3. ஆர்க்கிட் பூஞ்சைவேரிகள்

எடுத்துக்காட்டு: ரைசோக்டானியா 

புறஅக பூஞ்சைவேரிகள்

இவ்வகையைச் சேர்ந்த பூஞ்சைவேரிகள் உறையைப் போன்று வேரைச் சூழ்ந்தும் புறணிச் செல்களை ஊடுருவியும் காணப்படுகின்றன.

வகைப்பாடு

• லைக்கென்களில் காணப்படும் வாழிடத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் வகைகள் உள்ளன. கார்ட்டிகோலஸ் (மரப்பட்டை மீது காணப்படுபவை), லிக்னிகோலஸ் (கட்டை மீது வாழ்பவை), சாக்ஸிகோலஸ் (பாறை மீது வாழ்பவை) டெர்ரிகோலஸ் (நிலத்தில் வாழ்பவை), கடலில் வாழ்பவை (கடலில் உள்ள சிலிக்கா பாறை மீது வாழ்பவை), நன்னீர் வகை (நன்னீரில் உள்ள சிலிக்கா பாறை மீது வாழ்பவை) என்பன ஆகும்.

• உடலப் புற அமைப்பின் அடிப்படையில் இவை லெப்ரோஸ் (வரையறுக்கப்பட்ட பூஞ்சை அடுக்கு காணப்படுவதில்லை), கிரஸ்டோஸ் (ஓடு போன்ற அமைப்பு), ஃபோலியோஸ் (இலை ஒத்த வகை), புருட்டிகோஸ் (கிளைத்த புதர் போன்ற தொங்கும் அமைப்பு ) (படம் 1.25) என வகைப்படுத்தப்படுகின்றன.


• லைக்கென் உடலத்தில் பாசிசெல்கள் பரவலின் அடிப்படையில் ஹோமியோமிரஸ் (பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல்), ஹெட்டிரோமிரஸ் (வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல்) என வேறுபட்டுள்ளன.

• லைக்கென் உடலத்தில் உள்ள பூஞ்சை உயிரி ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவையாக இருப்பின் ஆஸ்கோலைக்கென் என்றும், அவை பசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை எனில் பசிடியோலைக்கென் என்றும் அறியப்படுகின்றன.

• லைக்கென்கள் பாறைகள் மீது படிந்து வாழும்பொழுது ஆக்சாலிக் அமிலம் போன்ற கரிம அமிலங்களைச் சுரப்பதால் பாறைகளின் தளம் அரிக்கப்பட்டு மண் உருவாக உதவுகிறது. ஆகையால் இவை சீரோசீர் எனும் வறள் நிலத் தாவர வழிமுறை வளர்ச்சியில் முன்னோடி உயிரினங்களாகத் திகழ்கின்றன.

• லைக்கென்களில் இருந்து பெறப்படும் அஸ்னிக் அமிலம் உயிர் எதிர்ப்பொருள் தன்மையைப் பெற்றுள்ளது. லைக்கென்கள் காற்று மாசுக்காரணியை (குறிப்பாகக் கந்தக டைஆக்ஸைடு) எளிதில் உணரக்கூடியவை என்பதால், இவை மாசு சுட்டிக்காட்டிகளாக கருதப்படுகின்றன சோதனைக்கூடங்களில் அமில கார குறியீடாகப் பயன்படுத்தப்படும் லிட்மஸ் காகிதத்திற்குத் தேவையான சாயம் ரோசெல்லா மாண்டாக்னே என்ற லைக்கெனிலிருந்துப் பெறப்படுகிறது. கிளாடோனியா ரான்ஜிஃபெரினா (ரெயின்டீர் மாஸ்) துருவப் பிரதேசத்தில் வாழும் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.


Tags : Milestones in Mycology, Characteristic features, Methods of Reproduction, Classification, Economic importance மைல்கற்கள், பொதுப்பண்புகள், இனப்பெருக்க முறைகள், வகைப்பாடு, பொருளாதாரப் பயன்கள்.
11th Botany : Chapter 1 : Living World : Fungi Milestones in Mycology, Characteristic features, Methods of Reproduction, Classification, Economic importance in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம் : பூஞ்சைகள் - மைல்கற்கள், பொதுப்பண்புகள், இனப்பெருக்க முறைகள், வகைப்பாடு, பொருளாதாரப் பயன்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்