Home | 3 ஆம் வகுப்பு | 3வது அறிவியல் | விலங்குகளின் வாழ்க்கை

மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - விலங்குகளின் வாழ்க்கை | 3rd Science : Term 3 Unit 2 : Animal Life

   Posted On :  28.05.2022 09:59 pm

3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : விலங்குகளின் வாழ்க்கை

விலங்குகளின் வாழ்க்கை

இப்பாட இறுதியில் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ விலங்குகளின் பல்வேறு வாழிடங்களை வேறுபடுத்தி அறிதல் ❖ விலங்குகள் உணவை எடுத்துக்கொள்ளும் விதம் பற்றி அறிதல் ❖ விலங்குகளின் சுற்றுப்புறத்தையும் அவற்றின் உணவு முறைகளையும் அறிதல் ❖ பறவைகள் மற்றும் பூச்சிகளின் மாறுபட்ட வாயுறுப்புகளை அறிதல் ❖ சுற்றுச்சூழலில் உணவு வலை மற்றும் உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை அறிதல்

அலகு 2

விலங்குகளின் வாழ்க்கை



கற்றல் நோக்கங்கள்

இப்பாட இறுதியில் மாணவர்கள் பெறும் திறன்களாவன: 

விலங்குகளின் பல்வேறு வாழிடங்களை வேறுபடுத்தி அறிதல் 

விலங்குகள் உணவை எடுத்துக்கொள்ளும் விதம் பற்றி அறிதல் 

விலங்குகளின் சுற்றுப்புறத்தையும் அவற்றின் உணவு முறைகளையும் அறிதல் 

பறவைகள் மற்றும் பூச்சிகளின் மாறுபட்ட வாயுறுப்புகளை அறிதல்

சுற்றுச்சூழலில் உணவு வலை மற்றும் உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை அறிதல்


ஆயத்தச் செயல்பாடு 

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி, விலங்குகளை அடையாளம் கண்டு, அவற்றின் பெயர்களை எழுதுக.



1. பல்வேறு சுற்றுச்சூழலில் வாழும் விலங்குகள்


இப்புவியானது இலட்சக்கணக்கான விலங்குகள் வாழ இடத்தை அளிக்கிறது. ஓர் உயிரினம் வாழும் இடமே அதன் வாழிடம் எனப்படும். ஓர் உயிரினம் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், இருப்பிடம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் போன்றவை அதன் வாழிடத்தில் காணப்படுகிறது.

வாழிடமானது மிகப்பெரிய காடாகவோ, சிறிய இலையாகவோ இருக்கலாம். ஒவ்வொரு விலங்கும் வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்கிறது. எடுத்துக்காட்டாக, திமிங்கலம் கடலிலும் (நீர் வாழிடம்), நரி காட்டிலும் (நில வாழிடம்) வாழ்கின்றன.


நில வாழிடம்

நிலத்தில் வாழும் விலங்குகள் நில வாழ்வன எனப்படும். எ.கா. எறும்பு, பூனை, சிங்கம். 

சில நில வாழிடங்கள் பின்வருமாறு: 

1. சமவெளி

2. காடு


1. சமவெளி

எலி, பசு, ஒட்டகம், கோழி போன்றவை சமவெளியை வாழிடமாக கொண்டுள்ளன.

2. காடு  

மான், நரி, கரடி, காட்டெருமை போன்றவை காடுகளை வாழிடமாக கொண்டுள்ளன.


நீர் வாழிடம் 

நீரில் வாழும் உயிரினங்கள் நீர் வாழ்வன எனப்படும். எ.கா. மீன், டால்பின், நண்டு. 

நீர் வாழிடம் இரு வகைப்படும்.

1. நன்னீர் வாழிடம்

2. உவர்நீர் வாழிடம்

உங்களுக்குத் தெரியுமா?

உலக விலங்குகள் தினம் அக்டோபர்-4 அன்று கொண்டாடப்படுகிறது.


1. நன்னீர் வாழிடம்

குளம், ஏரி, ஆறு போன்றவை நன்னீர் வாழிடங்கள் ஆகும். இவற்றில் பலவகையான மீன்கள், ஆமைகள், நன்னீர் மட்டிகள், நண்டுகள் போன்றவை வாழ்கின்றன.

2. உவர்நீர் வாழிடம்

கடல்களும், பெருங்கடல்களும் உவர்நீர் வாழிடங்களாகும். இவற்றில் சுறாமீன், ஜெல்லிமீன், கடற்பாம்புகள், நட்சத்திர மீன்கள் போன்றவை வாழ்கின்றன.

இணைப்போம்

நீர் வாழ்வன மற்றும் நில வாழ்வனவற்றின் பெயர்களை அவற்றிற்குரிய வாழிடத்துடன் இணைக்க.

(பன்றி) (நன்னீர் மட்டி) (மான்) நட்சத்திர மீன் ) (நாய்) திமிங்கலம் ) (தவளை) புலி)

 (குரங்கு) (நண்டு) (ஒட்டகம்) (குதிரை) (கடற்குதிரை) (சிங்கம்) (யானை) (காகம்)


உதவி செய்வோம் 

ஓர் ஊரில் இயங்கிவந்த உயிரியியல் பூங்காவைத் திடீரெனச் சில காரணங்களால் மூட முடிவு செய்தனர். எனவே, அங்கிருந்த விலங்குகளை அவற்றின் வாழிடத்தில் சேர்க்க முடிவு செய்தனர். அவர்கள் எந்த விலங்கை எந்த வாழிடத்தில் சேர்த்திருப்பர்? 

புலி, நண்டு, வான்கோழி, ஒட்டகச்சிவிங்கி, பூனை, மீன், கரடி, கழுதை, ஒட்டகம், காகம், வரிக்குதிரை, வாத்து, யானை, ஆமை, பன்றி, மயில், சிங்கம்.


சமவெளி : வான்கோழி, பூனை, கழுதை, ஒட்டகம், காகம், யானை, பன்றி, மயில்

காடு : புலி, ஒட்டகச்சிவிங்கி, கரடி, வரிக்குதிரை, யானை, சிங்கம்

குளம் : நண்டு, மீன், வாத்து, ஆமை

கண்டுபிடிப்போம் 

அ) வாழிடத்தின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றை வட்டமிடுக.

1. சிங்கம், யானை, குரங்கு, திமிங்கலம்

2 சுறாமீன், நாய், ஜெல்லிமீன், நட்சத்திரமீன் 

ஆ) கொடுக்கப்பட்ட குறிப்புகளுக்கு உரிய விலங்கின் பெயரை எடுத்து எழுதுக.

( பென்குயின், திமிங்கலம், ஆக்டோபஸ், வாத்து.)

  1. எட்டு கைகளைக் கொண்டவன்; கடலிலே வாழ்பவன்: ஆக்டோபஸ்

  2. பறக்க முடியாதவன்; ஆனால், நன்றாக நீந்துபவன் : பென்குயின் 

  3. கடலில் வாழ்வனவற்றில் மிகப் பெரியவன் : திமிங்கலம்

  4. நீர்ப் பறவை : வாத்து 


வண்ணமிடுவோம்

நீரில் வாழும் உயிரினங்களுக்கு மட்டும் வண்ணம் தீட்டுக.



மேலும் அறிவோம்



மரத்தில் வாழ்வான

குரங்கு, அணில் போன்ற விலங்குகள் மரங்களில் வாழ்கின்றன. எனேவ இவை மரத்தில் வாழ்வன எனப்படும்.

பறைவகள்

காகம், பருந்து  போன்றைவை  பறக்கக்கூடியைவை இவை  பறைவகள் எனப்படும்.

இருவாழ்விகள்

தேரை, தவளை போன்றைவ நீரிலும் நிலத்திலும் வாழ்கின்றன. எனேவ இவை  இருவாழ்விகள் எனப்படும்.

இணைப்போம்

விலங்குகளை அவற்றின் வாழிடத்துடன் இணைக்க.


இணைப்போம்

விலங்குகளை அவற்றின் வாழிடத்துடன் இணைக்க.




II. விலங்குகள் உணவை எடுத்துக்கொள்ளும் விதம்


பின்வரும் விலங்குகளின் உணவுகளை எடுத்து எழுதுக.

(கேரட், மான், புல், பால், தானியங்கள்.)


சிந்தித்து விடையளி: விலங்குகள் ஏன் உணவை உண்கின்றன?

விலங்குகளால் தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரிக்க முடியாது. அவை தமது உணவிற்குத் தாவரங்களையோ, தாவரங்களை உண்ணும் பிற விலங்குகளையோ சார்ந்து உள்ளன. விலங்குகள் உணவிற்காக இடம்விட்டு இடம் நகர்கின்றன.

பின்வரும் குறிப்புகளின் அடிப்படையில் யார் என்பதைக் கண்டறிந்து எழுதுக.


(மண்புழு, வண்ணத்துப்பூச்சி, கொசு, சிலந்தி, யானை, சிங்கம், கோழி.)

காட்டின் அரசன். மான், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்றவற்றை வேட்டையாடி உண்பேன்.

நான் யார்? சிங்கம்

விலங்குகளின் இரத்தம் குடிப்பேன் என் இன ஆண்கள் தாவரத்தின் சாற்றை மட்டும் குடிப்பார்கள்.

நான் யார்?. கொசு

பூவிலிருந்து தேனை உறிஞ்சிக் குடிப்பேன்.

நான் யார்? வண்ணத்துப்பூச்சி

என் வலையில் சிக்கும் சிறு பூச்சிகளை உண்பேன்.

நான் யார்? சிலந்தி

தானியங்கள், சிறு பூச்சிகள், மண்புழு போன்றவற்றை கொத்தி உண்பேன்.

நான் யார்? கோழி

தென்னை ஓலை, கரும்பு, வாழைப்பழம், தாவர இலைகளை தும்பிக்கையின் உதவியால் உண்பேன்

நான் யார்? யானை

மண்ணிலுள்ள கரிமக் கழிவுகள், நுண்ணுயிரிகளை உண்பேன்.

நான் யார்? மண்புழு

இணைப்போம்

கொடுக்கப்பட்ட விலங்குகளுக்கு அவற்றின் உணவைப் பெற வழிகாட்டுங்கள். ஒவ்வொரு விலங்கிற்கும் வெவ்வேறு வண்ணத்தைப் பயன்படுத்துக.

நிரப்புவோம்

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்திப் பணித்தாளை நிறைவு செய்க.

(புலி, பல்லி, மான், புறா, தேனீ, வண்ணத்துப்பூச்சி, ஆடு, நரி, அணில், மரங்கொத்தி.)

பணித்தாள்

பெயர் : __________

நாள் : __________

1. தானியங்களை உண்ணும் விலங்குகள் : புறா, அணில்

2. தாவரங்களை உண்ணும் விலங்குகள் : மான், ஆடு.

3. ஊன் (மாமிசம்) உண்ணும் விலங்குகள் : புலி, நரி.

4. தேன் குடிக்கும் விலங்குகள் : தேனீ, வண்ணத்துப்பூச்சி. 

5. பூச்சி உண்ணும் விலங்குகள் : பல்லி, மரங்கொத்தி.


III. உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் விலங்குகளின் வகைப்பாடு


அனைத்து விலங்குகளும் ஒரே மாதிரியான உணவை உண்கின்றனவா?  

• நீங்கள் எங்கேயாவது புல்லை உண்ணும் சிங்கத்தையோ, இறைச்சி  உண்ணும் ஆட்டையோ பார்த்ததுண்டா? 

• ஏன் விலங்குகள் அனைத்து வகை உணவையும் உண்பதில்லை? 

• ஏனெனில் வெவ்வேறு விலங்குகள் வெவ்வேறு உணவுப்பழக்கத்தைக் கொண்டவை.

தாவர உண்ணிகள்

தாவரங்களை மட்டும் உணவாக உண்ணும் விலங்குகள், 'தாவர உண்ணிகள்' எனப்படும். எ.கா. மான், ஒட்டகச்சிவிங்கி, பசு, ஆடு, யானை. இவை கூரான, நேரான விளிம்புடைய தட்டையான வெட்டுப்பற்களை முன்புறம் கொண்டுள்ளன. புற்கள், இலைகள் போன்றவற்றைக் கடித்து மென்று உண்ண இப்பற்கள் உதவுகின்றன.



சிந்திப்போம்

யானை ஒரு தாவர உண்ணி . ஆனால், அதன் முன் பற்கள் தட்டையாக இல்லை. அப்பற்கள் (வெட்டுப்பற்கள்) எங்கே உள்ளன?

ஊன் உண்ணிகள்

இறைச்சியை (மாமிசத்தை) மட்டும் உணவாக உண்ணும் விலங்குகள், 'ஊன் உண்ணிகள்’ எனப்படும். எ.கா. கழுதைப்புலி, புலி, சிங்கம், சிறுத்தை , நீர்நாய். இவை மிகக் கூரான கோரைப் பற்களைக் கொண்டுள்ளன. இக்கோரைப் பற்கள் உணவைக் கிழிக்க உதவுகின்றன.

காடு - வனவிலங்குகளின் இயற்கை வீடு

அனைத்துண்ணிகள்

தாவரத்தையும் மாமிசத்தையும் உணவாக உண்ணும் விலங்குகள், 'அனைத்துண்ணிகள்’ எனப்படும். எ.கா. கரடி, மனிதன், காகம், கோழி, நரி. இவை உணவை வெட்ட, கிழிக்க, அரைக்க ஏற்ற அனைத்து வகை பற்களையும் பெற்றுள்ளன.

சிந்தித்துக் கூறுக. 

நீ, உன் நண்பனை ஓர் அனைத்துண்ணி என்கிறாய். ஆனால் உன் நண்பனோ தான் ஒரு தாவர உண்ணி என்கிறான். உன் நண்பன் கூற்று சரியா? எப்படி எனக் கூறுக.

• என் நண்பன் கூற்று தவறு. 

• என் நண்பன் தாவரங்களையும் இறைச்சியையும் உண்ணுவதால் அவனை அனைத்துண்ணி என்கிறேன்.

மேலும் அறிவோம்

உணவிற்காகப் பிற உயிர்களைக் கொல்லும் விலங்குகள் 'வேட்டை விலங்குகள்' எனவும், கொல்லப்படும் விலங்குகள் ‘இரை’ எனவும் அழைக்கப்படும்.

இணைப்போம்

கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளை அவற்றிற்குரிய குடுவைகளுடன் கோடிட்டு இணைக்க.



உங்களுக்குத் தெரியுமா?

நன்கு வளர்ந்த ஒரு யானை ஒரு நாளைக்குச் சராசரியாக 136 கிலோகிராம் எடையளவு உணவினை உண்ணும். 

சிலர் வீட்டில் அழகிற்காக வண்ணமீன்களை சிறிய நீர்த்தொட்டியில் வளர்ப்பர். இத்தொட்டியை ‘மீன் வளர்ப்புத் தொட்டி’  (Aquarium) என்பர்.

கண்டுபிடிப்போம்

கொடுக்கப்பட்ட விலங்கிற்கான உணவை வட்டமிடுக. (ஒன்றிற்கு மேல் சரியான உணவு இருந்தால் அதையும் வட்டமிடவும்)


கண்டுபிடிப்போம்

உணவு உண்ணும் முறையின் அடிப்படையில் "ஆ" என்ற வட்டத்தைக் குறிக்கும் விலங்கு வகையைக் கண்டறிந்து, அவற்றிற்கு மூன்று எடுத்துக்காட்டு தருக.


அ) தாவரத்தை மட்டும் உண்பவை

ஆ) தாவரத்தையும் இறைச்சியையும் உண்பவை

இ) இறைச்சியை மட்டும் உண்பவை

எடுத்துக்காட்டு : காகம், மனிதன், கரடி.

விளையாடுவோம் 

இருவர் இருவராக இணைந்து விளையாடுக. முதலில் ஒருவர் ஒரு வனவிலங்கை மனதில் நினைத்துக் கொண்டு அதனைப் பற்றி மூன்று குறிப்புகள் வழங்க வேண்டும். அக்குறிப்புகளைக் கொண்டு அந்த விலங்கினை மற்றவர் கண்டறிய வேண்டும். விடையைக் கூறிய பின் ஒவ்வொருவராக விளையாட்டை இதேபோன்று தொடர்க.


IV. விலங்குகளின் வாயுறுப்புகள்


(ஆசிரியர், மாணவர்களுக்கிடையேயான உரையாடல்) 

ஆசிரியர் : உனது வாயில் என்னென்ன உறுப்புகள் உள்ளன?

பாண்டியன் : உதடு, நாக்கு, பற்கள்.

ஆசிரியர் : நன்று, இதில் பற்களின் பணி என்ன?

வெண்ணிலா : அவை உணவைக் கடித்து மென்று உண்ண உதவுகின்றன.

ஆசிரியர் : சரி. எல்லாப் பற்களும் ஒரே மாதிரி அளவிலும் வடிவத்திலும் உள்ளனவா?

வாசு :  இல்லை அம்மா. 

ஆசிரியர் : ஆம்! பற்கள் அவற்றின் பணிகளுக்கு ஏற்ற வடிவத்தைப் பெற்றுள்ளன. சில விலங்குகளின் வாயுறுப்பைப் பற்றிப் பார்ப்போம்


யானை உணவை எடுக்கவும் நீரை உறிஞ்சவும் தும்பிக்கையைப்  பயன்படுத்தும்.

நாய்களும் பூனைகளும் நீரை நாக்கின் மூலம் நக்கிக் குடிக்கும்.

கொசுவானது தனது ஊசி போன்ற வாயுறுப்பால் இரத்தத்தை உறிஞ்சும்.

வண்ணத்துப்பூச்சிகள் குழல் போன்ற உறுப்பால் பூவிலிருந்து தேனை உறிஞ்சும்.

தவளையும் பல்லியும் பூச்சிகளைப் பிடிப்பதற்கு ஏற்ற பசை போன்ற, ஒட்டக்கூடிய நாவினைப்  பெற்றிருக்கும்.

உற்றுநோக்கிக் கற்றல் 

உனது பள்ளி அல்லது வீட்டருகில் உள்ள பூச்செடிகளைப் பார். அச்செடிகளை வண்ணத்துப்பூச்சிகள் நாள்முழுவதும் நாடி வருகின்றனவா? அவை ஒரே மலரில் அசையாது அமர்ந்துள்ளனவா? அல்லது மலருக்கு மலர் தாவுகின்றனவா? என்பதை உற்றுநோக்கிக் கவனி.

சிந்தித்து விடையளிக்க

பறவைகளின் அலகுகள் பல்வேறு வடிவத்திலும் அளவிலும் உள்ளதை நினைத்து வியந்ததுண்டா?


பறவைகளின் அலகுகள்

கழுகு 


கழுகின் அலகானது இரையைப் பிடிக்கவும், அதன் தசையைக் கிழிக்கவும் ஏற்றவாறு உறுதியானதாகவும், கூராகவும், சற்று வளைந்தும் காணப்படுகிறது.

மீன்கொத்தி 

மீன்கொத்தியானது மீன்களைக் கொத்திப் பிடிப்பதற்கு ஏற்ற நீண்ட ஈட்டிபோன்ற அலகைப் பெற்றுள்ளது.

கிளி 

கிளியின் வளைந்த, கூரான அலகு தானியங்களைச் சேகரித்து உண்ண உதவுகிறது.

மரங்கொத்தி 

மரங்கொத்தியின் உறுதியான உளி போன்ற அலகு மரத்தில் துளையிட்டுச் சிறு பூச்சிகளைப் பிடிக்க உதவுகிறது.

குருவி 


குருவியின் சிறிய கூம்பு வடிவ அலகு கனி ஓடுகளை உடைத்து உள்ளிருக்கும் கொட்டை அல்லது விதைகளை உண்பதற்கு உதவுகிறது.

வாத்து 

வாத்தின் தட்டையான அலகு நீரிலிருந்து சிறு செடிகள் மற்றும் பூச்சிகளை வடிகட்டவும், இரை நழுவாமல் இறுக்கிப் பிடிக்கவும் உதவுகிறது.

வரைவோம்

  1. பின்வரும் செயலைச் செய்யும் பறவையின் அலகுகளை வரைக.


தானியங்கள் உண்ணும் பறவையின் அலகு

மாமிசம் உண்ணும் பறவையின் அலகு

  1. கிளியின் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.



கண்டறிவோம்

படத்தை உற்றுநோக்கி அதிலுள்ள விலங்குகளின் பெயர்களை எழுதுக.


1. சிங்கம் 

2. ஒட்டகச்சிவிங்கி

3. வரிக்குதிரை

4. யானை

5. புலி

6. மீன்



V. உணவுச் சங்கிலி


உன் சுற்றுப்புறத்தைக் கவனித்தால் நீ பின்வருவனவற்றைக் காணலாம். 

• மான் புல்லையும், புலி மானையும் உணவாக உண்கிறது. 

• வெட்டுக்கிளி தாவரத்தை உண்கிறது, பறவை வெட்டுக்கிளியை உண்கிறது. 

தாவரத்தை சில விலங்குகள் உண்பதையும், அவ்விலங்குகளை மேலும் சில விலங்குகள் உணவாக உண்பதையும் நாம் உணரலாம். 

பின்வரும் படத்தை உற்றுநோக்குக.


உணவிற்காக உயிரினங்கள் எவ்வாறு ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டுள்ளன என்பதை மேற்கண்ட உணவுச்சங்கிலி மூலம் அறியலாம். இங்கு மான் புல்லை உண்கிறது, புலி மானை உண்கிறது.

உணவுச் சங்கிலி, தாவரத்தில் தொடங்கி ஊன் உண்ணி அல்லது அனைத்துண்ணியில் நிறைவு பெறுகிறது.

மேலும் சில எடுத்துக்காட்டுகள் 

1. இலைகள்   வெட்டுக்கிளி கோழி பருந்து

2. புல்   வெட்டுக்கிளி எலி ஆந்தை

 

உணவு வலை

ஒவ்வோர் உயிரினமும் பல்வேறு பொருள்களை உணவாக எடுத்துக் கொள்ளும். எனவே, ஓர் உயிரி பல உணவுச் சங்கிலிகளின் பகுதியாக அமையும். பல உணவுச் சங்கிலிகள் ஒன்றாக இணைந்து உணவு வலையை உருவாக்கும்.

உணவு வலை என்பது, பல உணவுச் சங்கிலிகள் ஒன்றொடொன்று இணைக்கப்பட்டு தோன்றுவதாகும். இதன் மூலம், ஆற்றலானது பல்வேறு உயிரினங்களுக்கிடையே எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

உணவு வலைக்கு எடுத்துக்காட்டு



முயற்சிப்போம் 

1. இயற்கையில் காணப்படும் சரியான உணவுச் சங்கிலியை தேர்ந்தெடுக்க. 

அ. புல் கோதுமை வெட்டுக்கிளி தவளை பாம்பு 

ஆ. புல் முயல் நரி சிங்கம் 

இ. கோதுமை வெட்டுக்கிளி பாம்பு தவளை 

2. பின்வருவனவற்றைப் பயன்படுத்தி எதாவது இரண்டு உணவுச் சங்கிலிகளை அமைக்க.

புல், புலி, மான், டால்பின், மீன், பூச்சிகள், நத்தை, தாவரம், மீன்கொத்தி.

உணவுச் சங்கிலி 1 :

உணவுச் சங்கிலி 2 :

நிரப்புவோம்

உணவு வலையை நிறைவு செய்க.




Tags : Term 3 Chapter 2 | 3rd Science மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல்.
3rd Science : Term 3 Unit 2 : Animal Life : Animal Life Term 3 Chapter 2 | 3rd Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : விலங்குகளின் வாழ்க்கை : விலங்குகளின் வாழ்க்கை - மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : விலங்குகளின் வாழ்க்கை