தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் | அறிவியல் - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 16 : Plant and Animal Hormones
தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு --------------------.
அ) மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது
ஆ) குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
இ) வேர் உருவாதலை ஊக்குவிப்பது
ஈ) இளம் இலைகள் மஞ்சளாவது
2. நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும்
ஹார்மோன்
அ) சைட்டோகைனின்
ஆ) ஆக்சின்
இ) ஜிப்ரல்லின்
ஈ) எத்திலின்
3. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக
தாவரங்களில் காணப்படவில்லை?
அ) 2, 4D
ஆ) GA 3
இ) ஜிப்ரல்லின்
ஈ) IAA
4. அவினா முளைக்குருத்து உறை ஆய்வு -------------------- என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
அ) டார்வின்
ஆ) N ஸ்மித்
இ) பால்
ஈ) F.W. வெண்ட்
5. கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை
அதிகரிக்க அவற்றின் மீது -------------------- தெளிக்கப்படுகிறது.
அ) ஆக்சின்
ஆ) சைட்டோகைனின்
இ) ஜிப்ரல்லின்கள்
ஈ) எத்திலின்
6. LH ஐ சுரப்பது --------------------.
அ) அட்ரினல் சுரப்பி
ஆ) தைராய்டு சுரப்பி
இ) பியூட்டரியின் முன் கதுப்பு
ஈ) ஹைபோதலாமஸ்
7. கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பி என அடையாளம்
காணவும்.
அ) பிட்யூட்டரி சுரப்பி
ஆ) அட்ரினல் சுரப்பி
இ) உமிழ்நீர் சுரப்பி
ஈ) தைராய்டு சுரப்பி
8. கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும்,
நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
அ) கணையம்
ஆ) சிறுநீரகம்
இ) கல்லீரல்
ஈ) நுரையீரல்
9. தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?
அ) பினியல் சுரப்பி
ஆ) பிட்யூட்டரி சுரப்பி
இ) தைராய்டு சுரப்பி
ஈ) அட்ரினல் சுரப்பி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. செல் நீட்சியடைதல், நுனி
ஆதிக்கம் ஆகியவற்றை உருவாக்குவதும், உதிர்தலை தடை செய்வதும் ஆக்சின் ஹார்மோன் ஆகும்.
2. தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை
துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் எத்திலின் ஆகும்.
3. இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் அப்சிசிக் அமிலம்
4. ஜிப்ரல்லின் நெல் தாவரங்களில் தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.
5. நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட
ஹார்மோன் சைட்டோகைனின்கள் ஆகும்.
6. உடலில் கால்சியத்தின் வளர்சிதை மற்றும் பணிகளை பாராதார்மோன் கட்டுப்படுத்துகிறது.
7. லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் இன்சுலின் ஐச் சுரக்கிறது.
8. தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மாற்றம் பணிகளை தைராய்டைத்
தூண்டும் ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.
9. குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான
சுரப்பின் காரணமாக கிரிட்டினிசம் உண்டாகிறது.
III. சரியா தவறா? தவறு எனில்
கூற்றினை திருத்துக.
1. செல்பகுப்பைத் தூண்டி கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியை
ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன் சைட்டோகைனின் ஆகும்.
சரி
2. ஜிப்ரல்லின்கள் தக்காளியில் கருவுறாக் கனிகளை
உருவாக்குகின்றன.
சரி
3. எத்திலின் இலைகள், மலர்கள்
மற்றும் கனிகள் மூப்படைவதைத் தடை செய்கின்றது.
தவறு
எத்திலின் இலைகள், மலர்கள்
மற்றும் கனிகள் மூப்படைவதை விரைவு செய்கின்றது.
4. எக்சாப்தல்மிக் காய்டர், தைராக்சின்
மிகைச் சுரப்பின் காரணமாக ஏற்படுகிறது.
சரி
5. பிட்யூட்டரி சுரப்பி நான்கு கதுப்புகளாக
பிரிந்துள்ளது.
தவறு
பிட்யூட்டரி சுரப்பி இரண்டு கதுப்புகளாகப் பிரிந்துள்ளது.
6. கார்பஸ் லூட்டியம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச்
சுரக்கிறது.
தவறு
கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோனைச் சுரக்கிறது.
IV. பொருத்துக:
i) பகுதி I : பகுதி II : பகுதி III
1) ஆக்சின் - ஜிப்ரில்லா
பியூஜிகுராய் - உதிர்தல்
2) எத்திலின் – தேங்காயின் இளநீர் - கணுவிடைப்பகுதி
நீட்சி
3) அப்சிசிக் அமிலம் – முளைக்குருத்து உறை - நுனி
ஆதிக்கம்
4) சைட்டோகைனின் - பசுங்கணிகம் -
பழுத்தல்
5) ஜிப்ரல்லின்கள் - கனிகள் - செல்
பகுப்பு
விடை:
பகுதி I : பகுதி II : பகுதி III
1) ஆக்சின் : முளைக்குருத்து உறை : நுனி
ஆதிக்கம்
2) எத்திலின் : கனிகள் : பழுத்தல்
3) அப்சிசிக் அமிலம் : பசுங்கணிகம் : உதிர்தல்
4) சைட்டோகைனின் : தேங்காயின் இளநீர் : செல்
பகுப்பு
5) ஜிப்ரல்லின்கள் : ஜிப்ரில்லா பியூஜிகுராய் :
கணுவிடைப்பகுதி நீட்சி
ii)
1) தைராக்சின் - அக்ரோமேகலி
2) இன்சுலின் - டெட்டனி
3) பாராதார்மோன் - எளியகாய்டர்
4) வளர்ச்சி ஹார்மோன் - டயாபடிஸ் இன்சிபிடஸ்
5) ADH - டயாபடிஸ் மெல்லிடஸ்
விடை:
1) தைராக்சின் - எளியகாய்டர்
2) இன்சுலின் - டயாபடிஸ் மெல்லிடஸ்
3) பாராதார்மோன் - டெட்டனி
4) வளர்ச்சி ஹார்மோன் - அக்ரோமேகலி
5) ADH - டயாபடிஸ் இன்சிபிடஸ்
V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள்.
பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும்
அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு
வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான
சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
1. கூற்று (A): சந்தைப்படுத்தப்படும்
காய்கறிகளில் சைட்டோகைனினைத் தெளிப்பது அவை பல நாட்கள் கெடாமல் இருக்கச்
செய்யவும்.
காரணம் (R): சைட்டோகைனின்கள் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியினால் இலைகள் மற்றும் ஏனைய
உறுப்புகள் முதுமையடைவதைத் தாமதப்படுத்துகின்றன.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும்
சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
2. கூற்று (A): பிட்யூட்டரி
சுரப்பி “தலைமை சுரப்பி” என்று அழைக்கப்படுகிறது.
காரணம் (R): இது பிற நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுபடுத்துகிறது.
விடை: அ) கூற்று மற்றும் காரணம்
இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
3. கூற்று (A); டயாபடிஸ்
மெல்லிடஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
காரணம் (R); இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே
சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளி:
1. வெள்ளரியில் ஆண்மலர்கள் உற்பத்தியாவதைத் தூண்டும்
ஹார்மோன் எது?
• வெள்ளரியில் ஆண்மலர்கள் உற்பத்தியாவதைத் தூண்டும்
ஹார்மோன் ஜிப்ரல்லின்கள் ஆகும்.
2. செயற்கை ஹார்மோன் ஒன்றின் பெயரினை எழுதுக.
• 2, 4 D - 2, 4 டைகுளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம்.
3. தக்காளியில் கருவுறாக் கனியைத் தூண்டும் ஹார்மோன்
எது?
• தக்காளியில் கருவுறாக் கனியைத் தூண்டும் ஹார்மோன்
ஜிப்ரல்லின்கள் ஆகும்.
4. குழந்தைப் பேற்றிற்குப்பின் பால் சுரக்க காரணமான
ஹார்மோன் எது?
• புரோலாக்டின் என்னும் லாக்டோஜனிக் ஹார்மோன்
குழந்தைப்பேறு காலத்தில் பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் குழந்தை பேற்றிற்கு
பின் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.
5. மனிதரில் நீர் மற்றும் தாது உப்புக்களின்
வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனின் பெயரைக் கூறு.
• வளர்ச்சிஹார்மோன், தைராய்டு
ஹார்மோன், பாராதார்மோன், குளுக்கோகார்டிகாய்டுகள்
6. மனிதர்களில் அவசர கால நிலைகளை எதிர்கொள்ள
சுரக்கும் ஹார்மோன் எது?
அ) எபிநெஃப்ரின் (அட்ரினலின்)
ஆ) நார் எபிநெஃப்ரின் (நார் அட்ரினலின்)
இவ்விரண்டு ஹார்மோன்களும் மனிதர்களின் அவசர காலத்தில் சுரப்பதால் இவை
அவசரகால ஹார்மோன்கள் என்றழைக்கப்படுகின்றன.
7. செரித்தலுக்குரிய நொதிகளையும், ஹார்மோன்களையும் எந்த சுரப்பி சுரக்கிறது?
கணையம்
8. சிறுநீரகத்தோடு தொடர்புடைய பணிகளைச் செய்யும்
ஹார்மோன்களின் பெயர்களைக் கூறு.
பிட்யூட்டரியின் பின்கதுப்பு (நியூரோஹைப்போபைஸிஸ்) சுரக்கும் ஹார்மோன்கள்
i) வாசோபிரஸ்ஸின்
ii) ஆக்ஸிடோசின்
VII. குறு வினாக்கள் :
1. செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா தருக.
ஆக்சின்களை ஒத்த பண்புகளைக் கொண்ட செயற்கையாகத் தயாரிக்கப்படும்
ஆக்சின்கள் செயற்கை ஆக்சின்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: 2, 4 D (2, 4 டைகுளோரோ பீனாக்சி
அசிட்டிக் அமிலம்)
2. “போல்டிங்” என்றால் என்ன? அதை
எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்?
விடை:
i) போல்டிங் என்பது தாவரங்களில் பூக்கும் தண்டினை
உற்பத்தி செய்தல் ஆகும்.
ii) நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது
ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது திடீரென தண்டு நீட்சி அடைவதும் அதன்
தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் என்று பெயர்,
3. அப்சிசிக் அமிலத்தின் ஏதேனும் இரண்டு வாழ்வியல்
விளைவுகளைத் தருக.
விடை:
i) ABA உதிர்தல் நிகழ்வை (இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவை கிளைகளிலிருந்து தனித்து உதிர்ந்து
விடுவது) ஊக்குவிக்கிறது.
ii) நீர் இறுக்கம் மற்றும் வறட்சிக் காலங்களில் ABA
இலைத்துளையை மூடச் செய்கிறது.
4. தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடை
செய்ய நீ என்ன செய்வாய்? தகுந்த காரணங்களுடன் கூறுக.
• தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடை செய்ய ஆக்சினைத்
தெளிக்க வேண்டும் ஏனெனில் ஆக்சின்கள் உதிர்தல் அடுக்கு உருவாதலைத் தடை செய்கின்றன.
5. வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?
• செய்தி பரிமாற்றத்திற்கு உதவும் சேர்மம் வேதியியல் தூதுவர்கள் என அழைக்கப்படுகின்றன.
ஹார்மோன்கள் வேதியியல் தூதுவர்களாக செயல்புரிகின்றன. இவை சிறப்பான சுரப்பிகள்
(நாளமில்லா சுரப்பிகள்) மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
6. நாளமுள்ளச் சுரப்பிக்கும், நாளமில்லாச்
சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
• நாளமில்லா சுரப்பிகளின் சுரப்புகளான ஹார்மோன்கள் நேரடியாக
இரத்தத்தில் கலக்கின்றன. நாளமுள்ள சுரப்பிகள் சுரக்கும் பொருள் (எடுத்துக்காட்டாக, நொதிகள்) நாளங்கள் மூலம் இலக்கு திசுக்களைச்
சென்றடைகின்றது. எடுத்துக்காட்டாக உமிழ்நீர் சுரப்பி சுரக்கும் உமிழ்நீர்
சேகரிக்கும் நாளம் மூலமாக வாயைச் சென்றடைகின்றது.
7. பாராதார்மோனின் பணிகள் யாவை?
• மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை
ஒழுங்குபடுத்துகிறது. இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றில்
செயலாற்றுகிறது.
8. பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பில்
சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவை எந்த திசுக்களின் மேல்
செயல்படுகின்றன?
அ) வாசோபிரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரிட்டிக்
ஹார்மோன் (ADH):
சிறுநீரக குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலை அதிகரிக்கிறது.
ஆ) ஆக்ஸிடோசின்:
பெண்களின் குழந்தைப் பேற்றின் போது கருப்பையை சுருக்கியும், விரிவடையவும் செய்கிறது.
9. தைராய்டு ஹார்மோன்கள் ஏன் “ஆளுமை ஹார்மோன்கள்”
என்று அழைக்கப்படுகின்றன?
உடல், மனம் மற்றும் ஆளுமை
வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் இன்றியமையாதது. அதனால் இது “ஆளுமை ஹார்மோன்” என்று
அழைக்கப்படுகிறது.
10. எந்த ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின்
அவசியமாகிறது? நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக
இருப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
• தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியாமாகிறது.
• நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக இருந்தால் எளிய காய்டர் ஏற்படும்.
VIII. நெடு வினாக்கள் :
1. அ. வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எது?
தாவரங்களில் அதன் மூன்று செயல்பாடுகளை எழுதுக.
ஆ. தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன் என்று
அழைக்கப்படுவது எது? ஏன்?
அ. i) வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எத்திலீன் ஆகும்
ii) எத்திலீனின் செயல்பாடுகள்
• எத்திலீன் கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது.
• எத்திலீன் இருவித்திலைத் தாவரங்களில் வேர் மற்றும் தண்டு நீட்சி
அடைவதைத் தடை செய்கிறது.
• எத்திலின் இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை விரைவுபடுத்துகிறது.
ஆ.
தாவரங்களின் இறுக்கநிலை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது அப்சிசிக் அமிலம் ஆகும்.
இது பல்வேறு வகையான இறுக்க நிலைகளுக்கு எதிராக தாவரங்களின் சகிப்புத் தன்மையை
அதிகரிக்கிறது. எனவே இது “இறுக்கநிலை ஹார்மோன்" என அழைக்கப்படுகிறது.
2. வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் முளைக்குருத்து
உறையின் நுனியில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விளக்கும் ஆய்வினை விவரி.
விடை :
• ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட் (1903 - 1990) என்ற டச்சு நாட்டு உயிரியல் அறிஞர் தாவரங்களில் ஆக்சின் இருப்பதையும்,
அதன் விளைவுகளையும் விளக்கினார். அவர் அவினா முளைக்குருத்து உறையில்
வரிசைக்கிரமமான பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
• இவர் தனது முதல் ஆய்வில் அவினா தாவரத்தின் முளைக்குருத்து உறையின் நுனியை
நீக்கினார்.
• நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறை வளரவில்லை. இது வளர்ச்சிக்கு
தேவையான ஏதோ ஒரு பொருள் முளைக்குருத்து உறையின் நுனியிலிருந்து உருவாக்கப்பட்டது
என்பதைக் காட்டியது. அவர் தனது இரண்டாவது ஆய்வில் அகார் துண்டை நுனி நீக்கப்பட்ட
முளைக்குருத்து உறையின் மீது வைத்தார்.
• முளைக்குருத்து உறைநுனி எவ்வித பதில் விளைவையும் காட்டவில்லை.
• அவர் தனது அடுத்த ஆய்வில் முளைக்குருத்து உறையின் நுனியை வெட்டி
எடுத்து, அதனை அகார் துண்டத்தின் மீது வைத்தார்.
• அது நேராக வளர்ந்தது. இந்த ஆய்வானது முளைக்குருத்து உறையின்
நுனியில் இருந்து அகார் துண்டத்துள் ஊடுருவி சென்ற ஏதோ ஒரு வேதிப் பொருள் தான்
வளர்ச்சியைத் தூண்டியது என்பதைக் காட்டியது.
• தன்னுடைய ஆய்வுகளில் இருந்து முளைக்குருத்து உறையின் நுனியில் இருந்து
ஊடுருவிய வேதிப்பொருளே வளர்ச்சிக்குக் காரணம் என்று வெண்ட் முடிவு செய்தார். அந்த
வேதிப்பொருளுக்கு “ஆக்சின்” என்று பெயரிட்டார். அதன் பொருள் “வளர்ச்சி” என்பது
ஆகும்.
3. ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
விடை :
• தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது அது
கணுவிடைப்பகுதியின் அசாதாரண நீட்சியைத் தூண்டுகிறது. (எ.கா) மக்காச்சோளம் மற்றும்
பட்டாணி
• நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத்
தெளிக்கும் போது திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும்
நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் என்று பெயர்.
• ஜிப்ரல்லின்கள் இரு பாலிணைந்த தாவரங்களில் (ஓரில்லா தாவரங்களில்)
ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன. (வெள்ளரி)
• ஜிப்ரல்லின்கள் உருளைக் கிழங்கின் உறக்க நிலையை நீக்குகின்றன.
• விதைகளற்ற கனிகளைத் (கருவுறாக் கனிகள் - கருவுறுதல் நடைபெறாமலேயே
கனிகள் உருவாதல்) தூண்டுவதில் ஆக்சின்களை விட ஜிப்ரல்லின்கள் திறன்மிக்கவை எ.கா
தக்காளி
4. ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?
விடை :
• ஈஸ்ட்ரோஜன், வளர்ச்சியுறும்
அண்டத்தின் கிராஃபியன் செல்களினால் சுரக்கப்படுகின்றன.
ஈஸ்ட்ரோஜனின் பணிகள்:
• இது பருவமடைதலின் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
• அண்ட செல் உருவாக்கத்தைத் துவக்குகிறது.
• அண்டஃபாலிக்கிள் செல்கள் முதிர்வதைத் தூண்டுகிறது.
• இரண்டாம் நிலை பால்பண்புகள் (மார்பக வளர்ச்சி, குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சியடைவதை
ஊக்குவிக்கிறது.
5. ஆன்டிடையூரிட்ரிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது?
விடை :
• ADH குறைவாகச்
சுரப்பதால் டயாபடீஸ் இன்சிபிடஸ் ஏற்படுகிறது.
• இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் டயாபடீஸ் மெலிடஸ் ஏற்படுகிறது.
• ADH குறைவாகச்
சுரப்பதால் நீர் மீள உறிஞ்சப்படுவது குறைவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றும்
நிலை (பாலியூரியா) உண்டாகிறது.
• இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் சிறுநீரில் அதிகப்படியான
குளுக்கோஸ் வெளியேறுகிறது. (கிளைக்கோசூரியா).
IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள் : (HOTS)
1. பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என
எதிர்பார்கிறாய்?
அ) ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
ஆ) அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
இ) வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது
அ) ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்:
ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளிக்கும் போது, அது போல்டிங்கைத் தூண்டுகிறது. இது விதை
உற்பத்தியைத் தூண்டும் இயற்கை வழி முயற்சி ஆகும்.
ஆ) அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து
வைக்கப்பட்டால்
அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால், அழுகிய பழத்தில் இருந்து உற்பத்தியாகும் எத்திலின்
பழுக்காத பழத்தினை முதிர்ச்சி அடைய செய்து விரைவாகப் பழுக்கத் தூண்டும்.
இ) வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின்
சேர்க்கப்படாத போது:
வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது, செல்பகுப்பு, வளர்ச்சி
உருவத்தோற்றவியல் முதலியவற்றை காண இயலாது.
2. ஜப்பானில் நெற்பயிரானது ஜிப்ரல்லா பியூஜிகுராய்
என்னும் பூஞ்சையால் ஏற்பட்ட பக்கானே நோயினால் பாதிக்கப்பட்டது. அதற்கு காரணம்
இப்பூஞ்சை உற்பத்தி செய்த ஹார்மோன் என முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
தகவலின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.
அ) இந்த செயல்முறையில் சம்மந்தப்பட்ட ஹார்மோனை
அடையாளம் காண்க.
ஆ) இந்த ஹார்மோனின் எப்பண்பு இந்த நோயை
விளைவித்தது?
இ) இந்த ஹார்மோனின் இரண்டு பணிகளைக் கூறுக.
அ) இந்த செயல்முறையில் சம்மந்தப்பட்ட ஹார்மோனை
அடையாளம் காண்க.
ஜிப்ரல்லின்கள்
ஆ) இந்த ஹார்மோனின் எப்பண்பு இந்த நோயை
விளைவித்தது?
இந்த நோயை விளைவிக்கக் காரணமான செயல்திறன் வாய்ந்த பொருள்
ஜிப்ரல்லிக் அமிலம் என அடையாளம் காணப்பட்டது.
இ) இந்த ஹார்மோனின் இரண்டு பணிகளைக் கூறுக
• தாவரங்கள் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, அது கணுவிடைப்பகுதியின் அசாதாரண நீட்சியைத்
தூண்டுகிறது. எ.கா மக்காச்சோளம் மற்றும் பட்டாணி
• நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத்
தெளிக்கும் போது, திடீரென தண்டு
நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றது. இதற்கு போல்டிங் என்று
பெயர் ஆகும்.
3. செந்திலுக்கு அதிக இரத்த அழுத்தம், பிதுங்கிய கண்கள் மற்றும் அதிகமான உடல் வெப்பநிலை உள்ளது. இந்நிலைக்குக்
காரணமான நாளமில்லாச் சுரப்பியை அடையாளம் கண்டு அதில் சுரக்கும் எந்த ஹார்மோன்
இந்நிலைக்குக் காரணம் எனக் கண்டறிந்து எழுதுக.
இதற்குக் காரணமான நாளமில்லாச் சுரப்பி தைராய்டு சுரப்பி ஆகும்.
காரணமான ஹார்மோன் தைராய்டு ஹார்மோன் ஆகும். செந்திலின் நிலைக்கு காரணம் கிரேவின்
நோய் ஆகும். ஹைபர் தைராய்டிசம் நிலையில் தைராய்டு ஹார்மோன்களின் அதிகரித்த
சுரப்பின் காரணமாக கிரேவின் நோய் உண்டாகிறது.
4. சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான். தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான
வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு
ஏன் ஏற்படுகிறது?
இந்நிலை அவனுக்கு அட்ரினலின் சுரப்பதால் ஏற்படுகிறது. தேர்வு
பயத்தின் காரணமாக அட்ரினலின் சுரந்து அதிகப்படியான வியர்வை, அதிகரித்த இதயத்துடிப்பு, மூச்சுவீதம்
அதிகரித்தல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
5. சூசனின் தகப்பனார், மிகவும்
சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர்,
அவரது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க தினமும் ஊசி மூலம் மருந்து
செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணமென்ன?
இதனை தடுக்கும் வழி முறைகளைக் கூறுக.
அடிக்கடி சிறுநீர் கழித்தல் (பாலியூரியா) என்னும் அறிகுறி
இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு மிகவும் அதிகரிக்கும் போது ஏற்படும் டயாபடீஸ்
மெலிடஸ் என்னும் நோய் உள்ளவர்களிடம் காணப்படும்.
சீரான உடற்பயிற்சி, சிறந்த
உணவுக்கட்டுப்பாடு முதலியவற்றின் மூலம் டயாபடிஸ் மெலிடஸ் நோய் ஏற்படும் வாய்ப்பைக்
குறைக்கலாம்.