Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | கேம்பிய வேறுபாடுகள் - (இயல்பற்ற இரண்டாம் நிலை வளர்ச்சி)
   Posted On :  04.07.2022 12:30 pm

11 வது தாவரவியல் : அலகு 10 : இரண்டாம் நிலை வளர்ச்சி

கேம்பிய வேறுபாடுகள் - (இயல்பற்ற இரண்டாம் நிலை வளர்ச்சி)

கேம்பிய வேறுபாடுகள் முதன்முதலில் இயல்பற்ற இரண்டாம் நிலை வளர்ச்சி என விவரிக்கப்பட்டது, தற்பொழுது கேம்பிய வேறுபாடுகள் என அழைப்படுகின்றன.

கேம்பிய வேறுபாடுகள் - Cambial variants (இயல்பற்ற இரண்டாம் நிலை வளர்ச்சி - Anomalous secondary growth)

கேம்பிய வேறுபாடுகள் முதன்முதலில் இயல்பற்ற இரண்டாம் நிலை வளர்ச்சி என விவரிக்கப்பட்டது, தற்பொழுது கேம்பிய வேறுபாடுகள் என அழைப்படுகின்றன. எனினும் இந்தப் புத்தகத்தில் நாம் இயல்பற்ற இரண்டாம் நிலை வளர்ச்சி என்பதையே பயன்படுத்தி இருக்கிறோம். இயல்பற்ற இரண்டாம் நிலை வளர்ச்சி என்பது இரண்டாம் வளர்ச்சியின் போது உருவாகும் இரண்டாம் நிலை வாஸ்குல மற்றும் வாஸ்குல அல்லாத திசுகளின் மாறுபட்ட உருவாக்கத்தைக் குறிக்கிறது. இயல்பான கேம்பியத்தின் இயல்புக்கு மாறான செயல்பாடு, கூடுதல் கேம்பியங்கள், அல்லது அசாதாரண அமைவு கேம்பியங்களின் இயல்பான செயல்பாடு ஆகியன இயல்பற்ற இரண்டாம் நிலை வளர்ச்சியை உண்டாக்கும். இயல்பற்ற இரண்டாம் நிலை வளர்ச்சிகளின் வகைகள் கீழே பட்டியலிடப்படுகிறது.


1. வாஸ்குலக் கேம்பியத்தின் இயல்பற்ற அமைவிடம் (Anomalous position of vascular cambium)

இயல்புக்கு மாறான கேம்பிய அமைவிடத்தால் இயல்புக்கு மாறான தண்டின் அமைப்பை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டு. தினோவியா ஸ்கேடன்ஸ், செர்ஜானியா இத்தியோக்டோனா, பாகினியா லாங்ஸ்டோர்ஃபியானா

 



2. இயல்பான கேம்பியத்தின் இயல்புக்கு மாறான செயல்பாடு (Abnormal behavior of normal cambium)

கேம்பியத்தின் சில பகுதிகள் இரண்டாம் நிலை சைலத்தை உருவாக்குவதில்லை. ஆனால் அதே சமயத்தில் வெளிப்பகுதியில் இரண்டாம் நிலை ஃபுளோயத்தை தோற்றுவிக்கின்றன. மீதமுள்ள கேம்பிய பகுதிகள் இயல்பான செயலைச் செய்கிறது. இதன் விளைவாக மேடு மற்றும் பள்ளமான அமைப்புகள் தோன்றுகிறது. எடுத்துக்காட்டு. பிக்னோனியா.



3. பல வட்டக் கேம்பியம் (Successive cambium)

அவிசினியா, சைகஸ், நீட்டம் போன்ற தாவரங்களில் பல கேம்பிய வளையங்கள் அடுத்தடுத்துத் தோன்றி முழுமையான இரண்டாம் நிலை திசுக்களைப் பல வட்டங்களில் தோற்றுவிக்கின்றது.



4. சைலயிடைப் ஃபுளோயம் (அ) உள்ளடங்கிய ஃபுளோயம் (Interxylary or Included Phloem)

கேம்பியத்தின் அசாதாரணச் செயல்பாட்டால் இரண்டாம் நிலை ஃபுளோயத் தொகுப்புகள் (தீவுகள்) இரண்டாம் நிலை சைலத்தில் பொதிந்து காணப்படுகின்றன. இதற்குச் சைலயிடைப் ஃபுளோயம் அல்லது உள்ளடங்கிய ஃபுளோயம் என்று பெயர். 

எடுத்துக்காட்டு. எட்டி (Srychnos). காம்பிரிட்டம், சால்வடோரா




5. இயல்பான கேம்பிய செயல்பாட்டுடன் கூடிய மெடுல்லரி கற்றைகள் (Presence of medullary bundles along with normal cambial activity)




இவ்வகை அமைப்பில், இயல்பான வாஸ்குலக் கேம்பிய வளையத்தின் செயல்பாட்டினால் இயல்பான வளைய வடிவில் வாஸ்குலக் கற்றைகள் உருவாகின்றன. கூடுதலாகப் ெமடுல்லாபகுதியில் வாஸ்குலக் கற்றைகள் வளையமாகவோ அல்லது சிதறியோ காணப்படுகின்றன. இதற்கு மெடுல்லரி வாஸ்குலக் கற்றைகள் என்று பெயர். எடுத்துக்காட்டு. போயர்ஹாவியா



6. இயல்பான கேம்பிய செயல்பாட்டுடன் கூடிய புறணி வாஸ்குலக் கற்றைகள் (Presence of cortical bundles along with normal cambial activity)

இவ்வகையான அமைப்பில் இயல்பான கேம்பிய வளையத்தின் செயல்பாட்டினால், இயல்பான வளைய வடிவில் வாஸ்குலக் கற்றைகள் உருவாகின்றன. கூடுதலாக, புறணிப் பகுதியில் கூடுதல் வாஸ்குலக் கற்றைகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு. நிக்டாந்தஸ்



7. சைலத்திற்குள்ளேயுள்ள (அ) அகப்ஃபுளோயம் (Intraxylary or Internal Phloem)



வழக்கமாகக் கேம்பியத்தின் வெளிப்பகுதியில் முதல் நிலை ஃபுளோயம் உருவாகிறது. சில தாவரங்களில் முதல் நிலை ஃபுளோயம் உள் பகுதியில் சைலத்துடன் சேர்ந்து பித்தை நோக்கி உருவாகிறது. இதற்குச் சைலத்திற்குள்ளேயுள்ள அல்லது அகப்ஃபுளோயம் என்று பெயர். எடுத்துக்காட்டு. சொலானம் டியூபரோசம் (உருளைக்கிழங்கு)


8. ஒருவிதையிலைத் தாவரத்தில் இரண்டாம் நிலை வளர்ச்சி (Secondary Growth in Monocot)

ஒருவிதையிலைத் தாவரங்கள் சிலவற்றில் இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுகிறது. எடுத்துக்காட்டு. டிரசினா. இதில் இரண்டாம் நிலை தடித்தல் ஆக்குத்திசு (STM) வாஸ்குலக் கற்றைக்கு வெளியே காணப்படக்கூடிய அடிப்படைத் திசுவிலிருந்து தோன்றுகிறது. STM உள்நோக்கிய பகுதியில் செல்களை உருவாக்குகிறது. இதன் விளைவாக வாஸ்குலக் கற்றைகளுக்கிடையேயுள்ள பாரங்கைமா செல்களுடன் கூடுதலான வாஸ்குலக் கற்றைகள் தோன்றுகின்றன. இயல்பான வாஸ்குலக் கேம்பியம் போன்று அல்லாமல் STM ஒரே வகையான செல் வகைகளைக் கொண்டுள்ளது. STM உள்பகுதியில் தொடர்ச்சியான சைலத்தை உருவாக்குவதில்லை. ஆனால் சைலம், ஃபுளோயத்துடன் கூடிய வாஸ்குலக் கற்றைகளை உருவாக்குகிறது. மேலும், வெளிப்பகுதியில் ஃபுளோயம் ஏதும் உருவாக்கப்படுவதில்லை.



9. இயல்பற்ற முதல் நிலை வளர்ச்சி (Anomalous primary growth)

I) சைலக்குழாய் இல்லாத சைலம் (Absence of vessels in the xylem)

வழக்கமாக ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் சைலத்தில் சைலக் குழாய்கள் காணப்படும். சில தாவரங்களின் சைலத்தில் சைலக் குழாய்கள் காணப்படுவதில்லை. எடுத்துக்காட்டு. ஹைட்ரில்லா, Winteraceae குடும்பத்தாவரங்கள்.

II) இருவிதையிலைத் தாவரத்தில் கேம்பிய செயல்பாட்டுடன் கூடிய சிதறிய வால்குலக் கற்றைகள் (Scattered Vascular bundles along with cambial activity in dicots)

பொதுவாக இருவிதையிலை தாவரங்களில் வாஸ்குலக் கற்றைகள் வளையமாகக் காணப்படும். சில இருவிதையிலைத் தாவரத் தண்டுகளில் வாஸ்குலக் கற்றைகள், புறணிப் பகுதியில் சிதறிக் காணப்படும். (ஒரு விதையிலைத் தாவரத் தண்டு போன்று). எடுத்துக்காட்டு. பெப்பரோமியா, பைப்பர்



 

11th Botany : Chapter 10 : Secondary Growth : Cambial variants (Anomalous Secondary Growth) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 10 : இரண்டாம் நிலை வளர்ச்சி : கேம்பிய வேறுபாடுகள் - (இயல்பற்ற இரண்டாம் நிலை வளர்ச்சி) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 10 : இரண்டாம் நிலை வளர்ச்சி