இரண்டாம் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | 7th Science : Term 2 Unit 3 : Changes Around Us
அலகு 3
நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
கற்றல் நோக்கங்கள்
* திண்மம், திரவம், வாயுக்களின் மீது வெப்பம் ஏற்படுத்தும் விளைவினையும், வெப்பத்தினால் துகள்களின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களையும் அறிதல்.
* துகள் கொள்கையின்படி இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களை வேறுபடுத்துதல்.
* காப்பர் சல்பேட்டினை படிகங்களாக்குதல், பனிக்கட்டியை உருக்குதல், நீரினை உறைய வைத்தல், கற்பூரத்தினை பதங்கமாக்குதல் போன்ற சோதனைகளில் ஈடுபடுதல்.
* பண்புகளின் அடிப்படையில் ஒரு நிகழ்வினை இயற்பியல் மாற்றம் அல்லது வேதியியல் மாற்றம் என அடையாளம் காணுதல்.
* துருப்பிடித்தல், காகிதம் எரிதல், பால் தயிராதல், சமையல் சோடாவுடன் எலுமிச்சை சாறுஏற்படுத்தும் வினை ஆகியவற்றில் தெளிவடைதல்.
* கால - ஒழுங்கு மாற்றங்களை கால - ஒழுங்கற்ற மாற்றங்களில் இருந்து வேறுபடுத்துதல்.
* எளிய செயல்பாடுகள் மூலம் வெப்ப ஏற்பு மற்றும் வெப்ப உமிழ் வினைகளை நிகழ்த்தி உணர்தல்.
அறிமுகம்
நம்மைச் சுற்றி எல்லா நேரங்களிலும் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மாற்றம் என்பது ஒரு பொருளின் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றமாகவோ அல்லது அப்பொருளின் வேதிப்பண்புகளில் இயைபில் ஏற்படும் மாற்றமாகவோ இருக்கும். எடுத்துக்காட்டாக, வெப்பப்படுத்தும் பொழுது பனிக்கட்டி உருகுகிறது; இதில் திண்ம நிலை பனிக்கட்டி திரவ நிலைக்கு மாறுகிறது. இம்மாற்றம் பொருளின் இயற்பியல் நிலையில் ஏற்படும் மாற்றமாகும். மற்றொரு எடுத்துக்காட்டினைக் காண்போம். அதாவது, இரும்பாலான பொருள்களை ஈரப்பதமான இடங்களில் வைக்கும்பொழுது, அப்பொருள்களின் மேல் புதிய செம்பழுப்பு நிற பொருள்கள் உருவாகியிருப்பதைக் காண்போம். இம்மாற்றத்தில் துரு என்ற புதிய பொருள் உருவானதால், இரும்பு பொருள்கள் நிறம், அமைப்பு மற்றும் நிலை ஆகியவற்றில் மாற்றம் அடைந்துள்ளது அல்லவா?
வேறு சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம். ஒரு குவளை நீரினையும், ஒரு தாளினையும் வெப்பப்படுத்தவும். நீரினை வெப்பப்படுத்தும் பொழுது அது மேலும் மேலும் சூடாகி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீராவியாக மாறுகிறது. எனினும், அது நீர் என்ற பொருளாகவே திரவ நிலையிலும், வாயு நிலையிலும் இருக்கின்றது. இவ்வாறாக புதிய பொருள் எதனையும் உருவாக்கமால், நீரின் பருமனில் மட்டும் மாற்றம் ஏற்படுவது இயற்பியல் மாற்றமாகும். ஆனால் எரிக்கும்பொழுது, காகிதம் கார்பன் டை ஆக்ஸைடாகவும் வேறு சில பொருள்களாகவும் மாறுகிறது. இனி அந்த காகிதத்தை மீண்டும் பெற இயலாது. இவ்வாறாக, பொருளின் வேதியியல் இயைபில் ஏற்படும் மாற்றம் வேதியியல் மாற்றமாகும்.
நீங்கள் நீரில் சிறதளவு சர்க்கரையைக் கரைத்தீர்கள் எனில், அது இயற்பியல் மாற்றமா? அல்லது வேதியியல் மாற்றமா?
பின்வரும் பட்டியலைக் காண்க. அதில் குறிப்பிட்டுள்ளவை இயற்பியல் மாற்றமா அல்லது வேதியியல் மாற்றமா என இனங்கண்டு அவற்றை கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் நிரப்புக.
(இரும்பு துருப்பிடித்தல், உணவு செரித்தல், முட்டை வேகவைத்தல், வாழைப்பழம் அழுகுதல், மணலினையும் நீரினையும் கலத்தல், மரக்கட்டையினை வெட்டுதல், தகரம் நசுங்குதல், வண்ண பட்டன்கள், கட்டை எரிதல்).
இயற்பியல் நிலையின் அடிப்படையில் பருப்பொருள்கள் திண்மம், திரவம் மற்றும் வாயு என மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதை நாம் ஆறாம் வகுப்பில் படித்தது நினைவிலிருக்கலாம். பருப்பொருள்கள் சிறு துகள்களால் ஆனது என்றும், துகள்கள் தொடர்ச்சியாக ஒழுங்கற்ற இயக்கத்தில் ஈடுபட்டு வரும் என்பதையும் நாம் அறிவோம். திண்மம், திரவம் மற்றும் வாயுக்களின் பண்புகளை தற்போது சுருக்கமாகப் பார்ப்போமா?
அழுத்தம் கொடுத்தல், வெப்பப்படுத்துதல் போன்ற காரணங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ ஒரு பொருளில் அமைந்துள்ள துகள்களின் அமைப்பு மாறுபடுவது என்பது அந்தப் பொருள் இயற்பியல் மாற்றம் அடைவதாகும். பொருள்களை வெப்பப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை தற்போது பார்ப்போம்.