நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - கால - ஒழுங்கு மற்றும் கால - ஒழுங்கற்ற மாற்றம் | 7th Science : Term 2 Unit 3 : Changes Around Us
கால - ஒழுங்கு மற்றும் கால - ஒழுங்கற்ற மாற்றம்
மாற்றம் நிகழும் கால இடைவெளியின் அடிப்படையில், மாற்றங்களை கால ஒழுங்கு மாற்றம் அல்லது கால - ஒழுங்கற்ற மாற்றம் என்று வகைப்படுத்தலாம்.
கால ஒழுங்கு மாற்றங்கள்
குறிப்பிட்டகால இடைவெளியில் மாற்றங்களானது மீண்டும் நிகழ்ந்தால், அது கால ஒழுங்கு மாற்றங்கள் எனப்படும்.
பூமியின் சுழற்சி மற்றும் சுற்றுதல், இதயத்துடிப்பு, மணிக்கொரு முறை கடிகாரம் அடிக்கும் நிகழ்வு, கடிகாரத்தின் நொடி - முள் / நிமிட – முள் / மணி - முள்ளின் ஓட்டம் ஆகிய சில கால - ஒழுங்கு மாற்றங்களாகும்.
ஒவ்வொரு வருடமும் பருவங்கள் மாறுவது. மழைக்காலம் முதல் குளிர்காலம் வருவது மற்றும் குளிர்காலத்திலிருந்து கோடைக்காலம் வருவது போன்றவை. நாம் ஒவ்வொரு வருடமும் அனுபவிக்கும் மாற்றமாகும்
குளிர்காலத்தில் என்ன வகையான ஆடைகள் அணிகிறோம்? கையுறை, காலுறை, குளிர் கால தொப்பிகள், ஸ்வோட்டர்
கோடைக்காலத்தில் என்ன வகையான ஆடைகள் அணிகிறோம்? பருத்தி ஆடை
குளிர்காலத்திலிருந்து நாம் கோடைக்காலம் வந்தவுடன், நாம் உடுத்தும் உடையின் தன்மையும் மாறுகிறது. குளிர்காலத்தில் கம்பளியிலானஆடைகளையும், கோடைக்காலத்தில் பருத்தியிலான ஆடைகளையும் அணிகிறோம். ஏனெனில் குளிர்காலம் குளிர்ச்சியாகவும், கோடைக்காலம் வெப்பமாகவும் இருக்கும். குளிர்காலத்தில் இரவின் நீளம் கோடைக்காலத்தைவிட இருக்கும். கோடைக்காலத்தில் குளிர் பானங்களையும், குளிர்காலத்தில் சூடான தேநீர், காபி அல்லது பாலினை பருக விரும்புகிறோம். இம்மாற்றங்கள் பருவங்கள் மாறுவதால் ஏற்படும் சீதோஷணத்தைப் பொருத்தது.
பருவங்கள் மாறுவதும் அதைச் சார்ந்து வானிலை மாறுவதும் நிலையான அச்சில் சுழலும் பூமியின் சுழற்சியால் நிகழ்கிறது. இயற்கையில் பருவகால மாற்றங்கள் ஏற்படும் நிகழ்வு கால - ஒழுங்கு மாற்றமாகும்.
கால - ஒழுங்கற்ற மாற்றங்கள்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் நிகழாத மாற்றங்களும் சீரற்ற கால இடைவெளியில் நிகழும் மாற்றங்களும் கால - ஒழுங்கற்ற மாற்றங்களாகும். எரிமலை வெடித்தல், நிலநடுக்கம் ஏற்படுதல், இடியுடன் கூடிய மழைபொழிவின் பொழுது தோன்றும் மின்னல், கிரிக்கெட்டில் இரு புறமும் உள்ள ஸ்டம்புகளின் இடைப்பட்ட தொலைவில் ஓடும் ஆட்டக்காரரின் ஓட்டம், நடனம் ஆடுபவருடைய கால்களின் இயக்கம் ஆகிய சில நிகழ்வுகள் கால - ஒழுங்கற்ற மாற்றங்களாகும்.