மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - குழந்தைகளின் பாதுகாப்பு | 3rd Social Science : Term 3 Unit 3 : Child Safety
அலகு
குழந்தைகளின் பாதுகாப்பு
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
* சிறார் உதவி மைய எண்ணின் முக்கியத்துவம் பற்றி விவரிப்பர்.
* குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிப் அறிந்து கொள்வர்.
* பாதுகாப்பு தொடுதலுக்கும், பாதுகாப்பற்ற தொடுதலுக்கும் இடையேயான வேறுபாடுகளை விவரிப்பர்.
தந்தை செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கிறார்.
மகனும், மகளும் செய்தித்தாளை எட்டிப் பார்த்து, 'சிறார் உதவி மைய எண்-1098' விளம்பரத்தைக் காண்கின்றனர்.
மகன்: தந்தையே, இந்த சிறார் உதவி மைய எண் எதைக் குறிக்கின்றது?
தந்தை: சிறார் உதவி மைய எண் பதினெட்டு வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு உதவும் ஒரு உதவி மைய எண் ஆகும்.
மகள்: ஓ! அவர்கள் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் எழுத உதவுகிறார்களா?
தந்தை: ஹாஹா! இல்லை, செல்லமே. இது உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவுகிறது. -
மகன்: இதைப் பற்றி எனக்குத் தெரியாது.
தந்தை: சிறார் உதவி மைய எண் முதன்முதலில் ஒரு திட்டமாக 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பின்னர் 1998-99 க்கு இடையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்தியா முழுவதும் சிறார் உதவி மைய எண் நிறுவப்பட்டது.
மகன்: அது மிக நீண்ட காலமாகவே நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
தந்தை: ஆம்! மே 2013 இல், அகமதாபாத் நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த 16 குழந்தைகள் சிறார் உதவி மைய எண் மூலம் மீட்கப்பட்டனர் (Rescue). இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறை என்பது சட்டத்திற்குப் புறம்பானது ஆகும்.
மகள்: ஓ.அப்படியா அப்பா.
தந்தை: சிறார் உதவி மையம்
* குழந்தைத் தொழிலாளர்கள் (Child Labour)
* பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் .
* சிறப்புத் தேவையுடைய குழந்தைகள்
* தெருக்களில் வாழும் குழந்தைகள்
போன்ற குழந்தைகளுக்கு உதவுகிறது.
மகன்: குழந்தைகளுக்கு எங்கு, எப்படி உதவி தேவை என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?
நாம் அறிந்து கொள்வோம்.
ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) இந்திய அரசின் நிதியுதவித் திட்டமாகும். இது இளங் குழவிப்பருவக் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.
செயல்பாடு
நாம் செய்வோம்.
பாதுகாப்பான பயண வழிமுறை எது? கட்டத்தில் (✔) அல்லது (✖) குறியிடுக.
தந்தை : சிறார் உதவி மைய எண் 1098. ஒருவர் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு உதவி கேட்கலாம். அல்லது உதவி தேவைப்படும் குழந்தைகளைக் கண்டால் தெரிவிக்கலாம்.
குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்விற்குத் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டங்கள் (National Child Labour Projects) உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றால் அடையாளம் காணப்பட்ட குழந்தைகள் ஆபத்தான தொழில்களிலிருந்து மீட்கப் பட்டுச் சிறப்புப்பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.
மகன்: ஓ! இப்பொழுது எனக்குப்புரிகிறது. குழந்தையின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
தந்தை : சரியாகக் கூறினாய், மகனே. குழந்தைகளைப் பாதுகாக்க அரசாங்கத்தில் பல சட்டங்கள் உள்ளன.
மகள்: அவை என்னென்ன?
தந்தை : நம்மிடம், குழந்தைகளை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உதவி மையங்கள் மற்றும் சட்டங்கள் உள்ளன. ஆனால், குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் கற்பிப்பது மிகவும் முக்கியமாகும். மேலும், அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் குழந்தைகள் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.
செயல்பாடு
நாம் செய்வோம்.
எது பாதுகாப்பான தொடுதல் / பாதுகாப்பற்ற தொடுதல்?
மகன்: ஓ! தெரிந்து கொள்வது நல்லது.
மகள்: அப்பா, என்ன கற்பிக்கப் போகிறீர்கள்?
தந்தை: பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிக் கற்பிக்கப் போகிறேன்.
மகன்: இதைப் பற்றி மேலும் கூறுங்கள்.
தந்தை : குடும்ப நபர்கள் கட்டித்தழுவுதல் அல்லது உங்கள் நண்பர்களுடன் கைகோத்தல் போன்றவை பாதுகாப்பான தொடுதல் ஆகும்.
மகள்: பாதுகாப்பற்ற தொடுதல் என்றால் என்ன, அப்பா ?
தந்தை : யாரேனும் ஒருவர் உங்கள் மார்பிலோ, தொடைகளுக்கு இடையிலோ அல்லது உதடுகளையோ தொடும் போது அல்லது அவற்றைத் தொடும்படி கேட்கும்போது அது பாதுகாப்பற்ற தொடுதல் ஆகும்.
மகன்: நான் உடல்நிலை சரியில்லாமல், மருத்துவரிடம் செல்லும்போது, அவர் என்னைச் சோதனை செய்கிறாரே அப்போது என்ன செய்வது?
தந்தை : இது ஒரு நல்ல கேள்வி, மகனே. பெற்றோர்கள் முன்னிலையில் மருத்துவர்கள் உங்களைப் பரிசோதிப்பது பாதுகாப்பான தொடுதல் ஆகும்.
மகள்: சரி, அப்பா ,
தந்தை : யாரேனும் ஒருவர் உங்களுக்குப் பாதுகாப்பற்ற தொடுதலை அளித்து, அதை இரகசியமாக வைத்திருக்கும்படி உங்களை பயமுறுத்தலாம். மேலும், அவர் உங்களுக்குப் பரிசுகளைக் கொடுக்கலாம். இதனால், நீங்கள் யாரிடமும் தெரிவிக்காமல் இருப்பீர்கள். ஆனால் செல்லமே, அதைப் பற்றி நீங்கள் எப்போதும் எனக்கு அல்லது உங்கள் தாய்க்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்.
மகன்: ஆம், நாங்கள் நிச்சயமாக உங்களுக்கு அல்லது அம்மாவுக்கு தெரிவிப்போம்.
நாம் அறிந்து கொள்வோம்.
இந்தியத் தண்டனைச் சட்டம் 1860, குழந்தைகளைக் கடத்தும் நபர்களைத் தண்டிக்கிறது. குழந்தைத் திருமணத் தடை சட்டம் குழந்தைத் திருமணங்களைத் தடை செய்கிறது. (Prohibition)
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை - வரைவு செய்துள்ளது. இது அனைத்துக் குழந்தைகளும் பாதுகாப்பான சூழல் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
தந்தை : உங்களுக்கு நன்குத் தெரிந்த நபர் அல்லது குடும்பத்திலுள்ள யாரேனும் ஒருவர் உங்கள் உடலின் ஒரு தனிப்பட்ட பகுதியை தொட்டால், நீங்கள் மற்றொரு குடும்ப உறுப்பினரிடமோ அல்லது உங்கள் ஆசிரியரிடமோ தெரிவிக்க வேண்டும்.
மகன் மற்றும் மகள்: நிச்சயமாக, அப்பா, இதுபோன்று ஏதாவது நடந்தால் நாங்கள் நிச்சயமாகத் தெரிவிப்போம். இது குறித்து எங்களுடன் பேசியதற்கு நன்றி.
தந்தை : எனக்கு நன்றி சொல்ல வேண்டா. ஏனெனில், இந்த விஷயங்களைப் பற்றிக் குழந்தைகளுடன் பேசுவது ஒவ்வொரு பெற்றோரின் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். இது அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் மகிம்ச்சியாகவும் இருக்க உதவும்.
கலைச்சொற்கள் :
Labour : கடின உடல் உழைப்பு
Prohibition : தடை செய்தல்
Rescue : மீட்பு
மீள்பார்வை
* சிறார் உதவி மையம், உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவுகிறது.
* சிறார் உதவி மைய எண் முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் ஒரு திட்டமாக நிறுவப்பட்டது.
* தொழிலாளர்களாகப் பணிபுரியும் பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறார் உதவி மையம் உதவுகிறது.
* குடும்ப நபர்கள் கட்டித்தழுவுதல் அல்லது நண்பர்களுடன் கைகோத்தல் போன்றவை பாதுகாப்பான தொடுதல் ஆகும்.
* மார்பிலோ, தொடைகளுக்கு இடையிலோ அல்லது உதடுகளையோ யாரேனும் ஒருவர் தொட்டால் அது பாதுகாப்பற்ற தொடுதல் ஆகும்.