Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்: பாடச் சுருக்கம்

தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்: பாடச் சுருக்கம் | 12th Botany : Chapter 3 : Chromosomal Basis of Inheritance

   Posted On :  18.12.2022 03:45 pm

12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்

குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்: பாடச் சுருக்கம்

மெண்டலிய காரணிகள் (மரபணுக்கள்) குரோமோசோமில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றிருப்பதோடு ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பண்புகள் கடத்தப்படுகிறது என்பதைக் குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியக் கோட்பாடு கூறுகிறது.

பாடச் சுருக்கம்

மெண்டலிய காரணிகள் (மரபணுக்கள்) குரோமோசோமில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றிருப்பதோடு ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பண்புகள் கடத்தப்படுகிறது என்பதைக் குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியக் கோட்பாடு கூறுகிறது. ஒரே குரோமோசோமில் காணப்படும் அருகமைந்த மரபணுக்கள் ஒன்றாகவே பாரம்பரியமாவது பிணைப்புற்ற மரபணுக்கள் எனப்படுகிறது. இந்த ஒருங்கமைந்த தன்மைக்குப் பிணைப்பு என்று அழைக்கப்படும். இருவகையான பிணைப்புகள் உள்ளது. அவை முழுமையான பிணைப்பு மற்றும் முழுமையற்ற பிணைப்பு என்பனவாகும். ஒரு குரோமோசோமில் நீள் வரிசையில் அமைந்துள்ள பிணைப்புற்ற மரபணுக்களின் தொகுப்பிற்குப் பிணைப்புத் தொகுதிகள் என்று அழைக்கப்படுகிறது. ஒத்திசைவு குரோமோசோம் இணைகளின் சகோதரி அல்லாத குரோமாட்டிட்களுக்கிடையே இணையான துண்டங்கள் பரிமாற்றப்பட்டுப் புதிய மரபணுச் சேர்க்கை தோன்றும் உயிரிய நிகழ்விற்குக் குறுக்கேற்றம் என்று பெயர். இந்நிகழ்வில் DNA வின் துண்டங்கள் உடைந்து மறுகூட்டிணைவு கொண்ட புதிய அல்லீல்கள் சேர்க்கை உருவாகின்றன. இந்தச் செயல்முறை மறுகூட்டிணைவு என்று அழைக்கப்படுகிறது. மரபணுக்களின் அமைவிடம் மற்றும் அருகருகே உள்ள மரபணுக்களுக்கு இடையேயுள்ள தொலைவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வரைபடமே மரபணு வரைபடம் எனப்படுகிறது. ஒரு இணை ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒரு மரபணுவின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல்கள் ஒரே அமைவிடத்தில் அமைந்திருப்பது பல்கூட்டு அல்லீல்கள் என அழைக்கப்படுகிறது. அவை m, M1 மற்றும் M2. தனித்த மரபணுவுக்குள் ஏற்படும் சடுதிமாற்ற நிகழ்வு மரபணு சடுதிமாற்றம் அல்லது புள்ளி சடுதிமாற்றம் என அழைக்கப்படும். அதே போல், குரோமோசோம்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படின் அவை குரோமோசோம் சடுதிமாற்றம் எனப்படும். சடுதிமாற்றத்திற்கு காரணமான ஊக்கிகளைச் சடுதிமாற்றிகள் என அழைக்கப்படுகிறது.

DNA வளர்சிதை மாற்றம் என்பது அதன் இரட்டிப்பு , பழுது நீக்கம் மற்றும் மறுசேர்க்கையடைதல் ஆகிய மூன்றையும் குறிக்கிறது. மெய்யுட்கரு உயிர்களின் புரதச் சேர்க்கை தனித்துவம் பெற்றது. ஏனெனில் இச்செயிலின் போது, படியெடுக்கப்படும் mRNA - வில் தொப்பியிடல், வால் இணைத்தல் மற்றும் இயைத்தல் என்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

புரதச்சேர்க்கையின் இரு முதன்மைச் செயல்களில் படியெடுத்தல் செயல் உட்கருவினுள்ளும், மரபுத்தகவல் பெயர்வு சைட்டோபிளாசத்திலும் நிகழ்கின்றன. AUG மெத்தியோனைக் குறிக்கிறது. மேலும் யூகேரியோட்களில் மோனோசிஸ்டானிக்கைக் புரதச்சேர்க்கை நடைபெறுகிறது. மாற்று முறை RNA இயைத்தல் நிகழ்வு, தாவரங்களில் சுற்றுச்சூழலினால் ஏற்படும் அழுத்தங்களைச் சமாளிக்க உதவுகிறது. தாவரங்களில் RNA திருத்தம் என்ற நிகழ்வு பசுங்கணிகங்களிலும் மைட்டோகாண்ட்ரியங்களிலும் காணப்படுகிறது. இது பரிணாமத் தோற்ற வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. தாவும் மரபணுக்கள் என்ற கட்டுப்படுத்தும் கூறுகளின் கண்டுபிடிப்பு, மரபணு ஆக்கத்திற்கான ஆய்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி, DNA நிலைத்தன்மை பெற்ற ஒன்று அல்ல, மாறாக நெகிழ்வுத் தன்மை பெற்ற ஒன்று என்பதை நிரூபித்தது. மரபணு தொகையம் முழுவதும் படித்தறியப்பட்ட பூக்கும் தாவரமாக உள்ள அராபிடாப்சிஸ் தாவரம், மரபியல் ஆய்விற்கு உகந்ததாக விளங்கி, தாவரம் ஒன்றின் புத்தாக்கம், வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் ஆகியவற்றை நன்கு படித்தறிய உதவுகிறது.

கலைச்சொல் அகராதி

• எதிர் உணர் இழை: இதற்கு வார்ப்பு இழை என்று பெயர், RNA படியெடுத்தலுக்கு இவ்விழை வார்ப்பாகச் செயல்படுகிறது.

• கிளை இடப்பெயர்வு: ஒத்திசைவு இழைகளின் கார இணைகள் பரிமாற்றம் அடைந்து ஹாலிடே சந்திப்பில் DNA தொடர்வரிசை மேலோ அல்லது கிழோ நகரும் கிளைப்பகுதி.

• சிஸ் அமைவு: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணைகளின் ஓங்கு அல்லீல்களை ஒரு குரோமோசோமிலும் மற்றும் ஒத்திசைவான குரோமோசோமில் ஒடுங்கு அல்லீல்களையும் பெற்றிருப்பது.

• எக்ஸான்கள்: DNA வின் ஒரு பகுதி RNA வைப் படியெடுத்தல் மற்றும் மரபுச் செய்தி பெயர்த்து புரதத்தை உற்பத்திச் செய்கிறது.

• ஆணாக மாறுதல் மற்றும் பெண்ணாக மாறுதல்: ஆணில் பெண் பண்புகளைத் தூண்டுவது, பெண்ணில் ஆண் தன்மையைத் தூண்டுவது.

• வேற்றமைந்த ஈரிழை: பல்வேறு மூலங்களிலிருந்து உண்டாகும் மரபிய மறுகூட்டிணைவால் தோன்றிய நியூக்ளிக் அமிலத்தின் ஒரு ஈரிழை முலக்கூறு.

• இண்ட்ரான்கள்: மெய்யுட்கரு உயிரிகளில் அமினோ அமிலத்தை உருவாக்காத தொடர் வரிசை மரபுக்குறியன்களை கொண்டிருப்பது

• மானோசிஸ்ட்ரோனிக்: ஒரு மரபணுவில் இருந்து மெய்யுட்கரு உயிரி mRNA வில் அமினோ அமில குறியீட்டு செய்திகள் உருவாவது

• ஓகாசகி துண்டங்கள்: தொடர்பிலா இழை இரட்டிப்பால் DNA வின் சிறிய துண்டு உருவாகிறது. 5’ 3’ திசைக்கு சற்று தூரத்தில் இரட்டிப்பாதல் நீட்சியடைகிறது.

• பிரைமேஸ்: இது RNA பாலிமரேஸின் ஒரு வகை நொதி. ரைபோநியூக்ளியோடைடுகளின் பல்படியாக்கத்தினால் RNA வாக ஒடுக்கமடைகிறது. இது DNA உற்பத்தியின் பிரைமரை உருவாக்குகிறது.

• முன்னியக்கி: குறிப்பிட்ட நியூக்ளியோடைடு வரிசையில் RNA பாலிமரேஸானது ஒரு மரபணுவிலிருந்து mRNA வின் படியாக்கத்தை துவக்குகிறது.

• சுயபொருந்தாத்தன்மை: தன் கருவுறுதலை தடுத்தும் வெளியினக் கலப்பை ஊக்குவிக்கும் ஒரு மரபிய செயல்நுட்பம்

• இணை சேர்தல்: குன்றல் பகுப்பின் போது நடைபெறும் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களின் இணைதல்

• கதிர்குஞ்ச விதை: கதிர்குஞ்சம் பெண் தன்மை அடைவது

• முடிவுறுதல்: குன்றல் பகுப்பின் போது இணை குரோமோசோம்களுக்கு இடையே உள்ள கிடைமட்ட பிணைப்புகளின் தொடக்கத்திலிருந்து குரோமோசோமின் நுனி பகுதியை நோக்கி நகர்வது

• முடிவு மரபுக்குறியன்: ஒரு நிறுத்து மரபுக்குறியன்

• ட்ரான்ஸ் அமைவு: ஒரு இணை மரபணுக்களின் ஓங்கு அல்லீல் மற்றும் மற்ற இணையின் ஒடுங்கு அல்லீல் அதே குரோமோசோமில் அமைந்திருப்பதாகும்.

• படியாக்கம்: DNA வானது RNA வாக படியெடுக்கின்றது என்றும் அந்த RNA படியெடுப்பன் என்று அழைக்கப்படுகிறது.

• மாற்று எஸ்டராக்குதல் வினை: ஒரு வினையின் ஒருங்கிணைந்த மாற்றத்தின் பொழுது வேதிப்பிணைப்பு பிளவுறுதல் மற்றும் உருவாதல் நிகழ்கிறது. இந்த மாற்றத்திற்கு ஆற்றல் தேவைப்படுவதில்லை.

• இடம்பெயரும் கட்டுப்படுத்திக்கூறுகள்: மரபணுதொகையத்தில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் DNA தொடர் வரிசைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

• எச்ச உறுப்புகள்: பரிணாம வளர்ச்சியின் காலப்போக்கில் உடலின் முதிர்ச்சிபெறா உறுப்பு செயலற்று போகின்றன.

Tags : Botany தாவரவியல்.
12th Botany : Chapter 3 : Chromosomal Basis of Inheritance : Chromosomal Basis of Inheritance: Summary Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்: பாடச் சுருக்கம் - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்