Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | கிழக்குப் பகுதிகளுக்கான புதிய கடல்வழித்தடங்களை கண்டுபிடித்தல்

நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு - கிழக்குப் பகுதிகளுக்கான புதிய கடல்வழித்தடங்களை கண்டுபிடித்தல் | 12th History : Chapter 10 : Modern World: The Age of Reason

   Posted On :  10.07.2022 01:51 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

கிழக்குப் பகுதிகளுக்கான புதிய கடல்வழித்தடங்களை கண்டுபிடித்தல்

இந்த முயற்சிகள் மூலம் புதிய புவியியல் கண்டுபிடிப்புகளையும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் புதிய உலகம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஐரோப்பியர்கள் அறியவந்தனர்.

கிழக்குப் பகுதிகளுக்கான புதிய கடல்வழித்தடங்களை கண்டுபிடித்தல்

துருக்கிய வெற்றிகளும் கான் ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் ஐரோப்பிய கடல்சார் கண்டுபிடிப்பு நாடுகளை கிழக்கத்திய நாடுகளுக்கு புதிய கடல்வழிகளைக் கண்டுபிடிக்க உத்வேகத்தையளித்தது. எனவே, அந்நாடுகள் உதுமானியர்களால் (ஆட்டோமன்கள்) கட்டுப்படுத்தப்பட்ட பழைய கடல் வழித்தடங்களைச் சார்ந்திருக்க விரும்பவில்லை . இந்த முயற்சிகள் மூலம் புதிய புவியியல் கண்டுபிடிப்புகளையும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் புதிய உலகம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஐரோப்பியர்கள் அறியவந்தனர்.

 

கடல் ஆய்வுக்கு வழிவகுக்கும் பல காரணிகள்      

(அ) சிலுவைப்போர்களின் போது போர்வீரர்கள் கிழக்கத்திய நாடுகளிலிருந்து பெரும் அளவில் பொருட்களை எடுத்து வந்தனர். மேற்கத்திய நாடுகளில் உணவைப் பதப்படுத்த உதவும் நறுமணப் பொருட்களை கிழக்கத்திய நாடுகளில் இருந்து எடுத்துச் செல்ல ஐரோப்பியர்கள் விரும்பினார்கள். அதுவரைக்கும் இந்தியா மற்றும் மற்ற கீழை நாடுகள் உள்ளிட்ட ஆசிய நாடுகளுடனான கடல்வழி வாணிபத்தை அராபியர்கள் அதுவரை கட்டுப்படுத்தி வந்தனர். ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தாலியர்களுடன் பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. அந்தப் பொருட்களை வாங்கிய இத்தாலியர்கள் அவற்றை ஐரோப்பாவில் வர்த்தகம் செய்தனர். குறிப்பாக போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகளுடன் நேரடியாக வர்த்தகம் செய்ய விரும்பின. அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அவை புதிய கடல்வழித்தடங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஊக்கம் தந்தன. இந்த முடிவான பொருளாதாரக் காரணம் தான் புதிய வர்த்தக வழித்தடங்களை கண்டுபிடிப்பதற்கான உத்வேகத்தைக்

கொடுத்தது.

(ஆ)கிழக்கத்திய நாடுகளில் இருந்து பொருட்களுக்கான தேவை அதிகரித்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் அதிக லாபம் ஈட்டவும் கடல்வழி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும் விரும்பின. எனவே அவர்கள் கடல் வழி ஆய்வில் முதலீடுகளைச் செய்ய விருப்பம் காட்டினர்.

(இ)'முட்டாள்கள் தேர்தலில் போட்டியிடட்டும் சாதித்துக்காட்ட விரும்புபவர்கள் புது இடங்களுக்குச் சென்று ஆராயட்டும்' என்ற அந்தக் காலகட்டத்தின் சிந்தனைக்கு ஏற்ப பணமும் புகழும் கிடைக்க வாய்ப்பாக இருந்த சாதனை முயற்சிக்கு பலர் தூண்டப்பட்டனர்.

(ஈ)சமயத்தை (கிறித்தவ) பரப்பவேண்டும் என்ற ஆர்வம் புதிய நிலப்பரப்புகளை கண்டுபிடிக்க ஊக்கம் தந்தது. ஆரம்ப நாட்களில் இது முதன்மைக் காரணமாக இருக்கவில்லை . அந்தக் காலத்தில் சீர்திருத்த இயக்கங்களின் கருத்துக்களுடன் கடவுளைப் பற்றிய வார்த்தை பரவி முக்கியத்துவம் பெற்றது.

(உ)மறுமலர்ச்சியை அடுத்து தொழில்நுட்ப மேம்பாடு பல துறைகளில் ஏற்பட்டது. அதில் ஒன்றாக வரைபடங்களை (Map) உருவாக்கும் கார்ட்டோகிராபி என்ற துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி (கிறித்து சகாப்தத்தில்) முதல் நூற்றாண்டில் டாலமியின் (Ptolemy) வரைபடம் மீண்டும் வரையப்பட்டது. மறுமலர்ச்சி கால புவியியல் வல்லுநர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை பயன்படுத்தி வரைபடங்களை மாலுமிகள் பயன்படுத்த உருவாக்கினார்.

(ஊ)நீண்டதூர ஆபத்தான கடல் பயணங்களுக்குபுதிய மேம்படுத்தப்பட்ட கப்பல் வடிவமைப்பு பெரிதும் உதவியது. ஆழம் அதிகமில்லாத நீர்ப்பகுதியில் செல்லக்கூடிய இலகுரக காரவெல் கப்பல் கட்டமைப்பும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பாகும்.

(எ)துப்பாக்கிகள் மற்றும் இதர ஆயுதங்களைப் பயன்படுத்தியதனால் கடல்பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.

(ஏ)ஐரோப்பாவில் மாலுமிகளுக்கான திசைகாட்டி கருவி (Mariner's Compass) கண்டுபிடிக்கப்பட்டதால் அமைதியான இரவு மற்றும் ஒளிமயமான நட்சத்திரங்களின் உதவியால் நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் மட்டுமே தாங்கள் பயணிக்கும் திசையை அறிய வேண்டிய நிலைமையில் இனி மாலுமிகள் இல்லை .

 

போர்த்துகலின் முயற்சிகள்

ஐரோப்பாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள போர்த்துகல் நாட்டின் முன்முயற்சிகளால் கானரி, மெடீரா, அசோர் ஆகிய தீவுகளை முதல் ஆய்விலேயே சிறிய நாடான போர்த்துகல் கண்டுபிடித்தது. 1442இல் மாலுமி ஹென்றியால் அனுப்பப்பட்ட மாலுமிகள் ஆப்பிரிக்காவின் கடற்கரைப்பகுதியான கினியாவைச் சென்றடைந்தனர். பின்னர் 1488இல் பார்தோலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனையை சுற்றிவந்தார்.


மாலுமி ஹென்றி என்பவர் போர்த்துகீசிய இளவரசர் ஆவார். அவர் கடலுக்குள் செல்லாத நிலையிலும், கடல்பயணம் குறித்த பள்ளி ஒன்றை போர்த்துகல் நாட்டின் சாக்ரெஸில் தொடங்கினார். வரைபடத்தை உருவாக்குபவர்கள், கப்பல் கட்டுவோர் மற்றும் கருவிகள் உருவாக்குவோர் ஆகியோரை வாடகைக்கு நியமித்து திட்டமிட்ட கடற்பயணங்களை மேற்கொள்ள மாலுமிகளுக்கு அவர் உதவினார்.

 
கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451-1506)

ஜெனோவாவைச் சேர்ந்த இத்தாலியரான கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பானிய ஆட்சியாளர்கள் பெர்டினான்ட் மற்றும் இசபெல்லாவின் ஆதரவைப் பெறுவதற்கு முன் பல கடினமான சூழ்நிலைகளை கடக்க நேரிட்டது. 1492 ஆகஸ்ட் 3இல் கொலம்பஸ் காடிஸ் அருகே உள்ள பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று சிறிய கப்பல்கள் (தி சாண்டா மரியா, தி பிண்ட்டா , தி நினா) 


மூலமாகப் பயணித்தார். 1492ஆம் ஆண்டில் இரண்டு மாதங்கள் மற்றும் ஒன்பது நாட்களுக்கான பயணத்துக்குப் பிறகு இந்தியா என்று அவரால் நம்பப்பட்ட நிலப்பகுதியை அவர் வந்தடைந்தார். ஆனால் உண்மையில் அது அமெரிக்கா எனும் ஒரு புதிய கண்டமாகும். தங்கம், பருத்தி, விந்தையான மிருகங்கள் மற்றும் கிறித்தவ சமயத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட வண்ணம் தீட்டப்பட்ட அகலமான கண்களுடன் இரண்டு இந்தியர்களுடன் ஸ்பெயின் சென்று சேர்ந்தார். தான் கண்டுபிடித்த நிலப்பகுதி இந்தியா என்று அவர் தனது இறுதிக் காலம் வரை நம்பியதால் அவர்கள் இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

 

வாஸ்கோடகாமா

கொலம்பஸ் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வாஸ்கோடகாமா கிழக்குப் பகுதி நோக்கி தனது வரலாற்றுப் பயணத்தைத் (1497) தொடங்கினார். லிஸ்பனில் இருந்து நான்கு கப்பல்களில் பயணம் மேற்கொண்ட அவர் மொசாம்பிக் தீவை சென்றடைந்தார். பின்னர் அவர் மேலும் தெற்கே பயணம் செய்து கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள கப்பட் (கப்பக்கடவு) என்ற கடற்கரையை அடைந்தார். இந்தியாவின் ஒரு பகுதியை அடைந்த அவர் இந்தியாவுடனான நேரடி வர்த்தக வாய்ப்புகளை திறந்துவிட்டார். இந்தப் பயணம் இந்தியாவின் சில பகுதிகளை காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர உதவியது. கோவா அவ்வாறான ஒரு பகுதியாகும்.


போப்பின் ஆணை (1493)  

போர்த்துகல் நாட்டவர்கள் கடல் பயணங்களில் ஈடுபடுவது குறித்து ஸ்பெயின் அரசர்கள் அச்சம் கொண்டனர். போப் ஆறாம் அலெக்ஸாண்டர் என்பவரிடம் அவர்கள் இதற்கு ஒரு தீர்வு காணுமாறு கோரினார்கள். 1493ஆம் ஆண்டு, போப் ஒரு ஆணையை வெளியிட்டார். வெர்டி முனை தீவுகளுக்கு மேற்கே 320 மைல்கள் தொலைவில் கண்டம் விட்டு கண்டம் வடக்கு - தெற்கான ஒரு கோட்டினை வரைய இவ்வாணை வகை செய்தது. அந்தப் பிரகடனம் மேற்கில் செய்யப்படும் எந்தவொரு புதிய கண்டுபிடிப்பும் ஸ்பெயினுக்குச் சொந்தம் என்று கூறியது. போர்த்துக்கள் இந்த திட்டத்தால் மகிழ்ச்சி அடையவில்லை . அடுத்த ஆண்டே (1494) ஸ்பெயினுடன் டார்டெசில்லாஸ் ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டது. பாகுபடுத்தும் வடக்கு - தெற்கு கோடு என்ற கொள்கைத் திட்டத்தை மதித்தாலும் வெர்டி முனை தீவுகளுக்கு மேற்கே 1185 மைல்கள் தொலைவுக்கு தள்ளிப்போட்டது. மேலும் இந்தக் கோட்டுக்கு கிழக்கில் கண்டுபிடிக்கப்படும் அனைத்தும் போர்த்துகல் நாட்டுக்கு சொந்தம் என்று ஏற்றுக்கொண்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1500ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இது போர்த்துகலின் கை ஓங்க வழிவகுத்தது. பெட்ரோ அல்வரெஸ் காப்ரல் பிரேசிலின் கிழக்குக் கடற்கரையோரத்தைச் சென்றடைந்து அதனை போர்த்துகல் நாடு உரிமை கொண்டாட வழிவகுத்தார்.

 
போர்த்துகல் நாட்டு பயணி பெட்ரோ காப்ரல்

1500இல் பெட்ரோ காப்ரல் மேற்கு நோக்கி பயணித்து பிரேசிலை கண்டுபிடித்தார். இந்தத் தீவுக்கு உண்மையான சிலுவையின் தீவு (ஐலாண்ட் ஆஃப் தி ட்ரூ கிராஸ்) என்று பெயரிட்டார். போர்த்துகலின் காலனியாக பிரேசில் மாறியது. எஞ்சிய வரலாறு 11ஆம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.


வாஸ்கோடகாமா சென்ற வழியைப் பின்பற்றி இந்தியாவுக்குப் பயணித்த காப்ரல் கோழிக்கோட்டை சென்றடைந்தார். தொடக்கத்தில் போர்த்துகீசியர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆட்சியாளர் சாமரின் ஒரு கோட்டையைக் கட்டி வர்த்தகம் செய்ய காப்ரலை அனுமதித்தார். எனினும் விரைவில் அராபிய வர்த்தகர்களுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு ஒரு பெரிய வர்த்தகச்சாவடியை அரபு படைகள் தாக்கியதில் பல போர்த்துகீசிய படைவீரர்கள் கொல்லப்பட்டனர். போர்த்துகல் மேற்கொண்ட வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மூலமாக காப்ரல் பதிலடி கொடுத்தார். பத்து அராபிய கப்பல்களை கைப்பற்றிய அவர் அதில் இருந்த மாலுமிகளை சிரச்சேதம் செய்தார். தெற்கில் உள்ள இந்திய துறைமுக நகரான கொச்சினுக்கு (தற்போது கொச்சி) அவர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் வரவேற்கப்பட்டு வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டார். கண்ணனூரில் (தற்போது கண்ணூர்) ஒரு துறைமுகத்தை நிறுவிய பிறகு அவர் 1501 ஜனவரி 16இல் நறுமணப் பொருட்கள் நிரப்பப்பட்ட ஆறு கப்பல்களுடன் போர்த்துகலுக்கு பயணம் மேற்கொண்டார். எனினும் செல்லும் வழியில் இரண்டு கப்பல்கள் வழிதவறிப்போயின. இறுதியாக காப்ரல் 1501ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நான்கு கப்பல்களுடன் போர்த்துகல் திரும்பினார்.

 
மெகல்லனின் கப்பல் பயணம்

போர்த்துகீசிய மாலுமியான பெர்டினான்ட் மெகல்லன் உலகை ஆராய ஸ்பெயின் நாட்டின் ஆதரவைப் பெற்றார். செவில்லேவில் இருந்து மேற்கு நோக்கி 1519ஆம் ஆண்டு ஐந்து கப்பல்களுடன் புறப்பட்டார். தென் அமெரிக்காவின் முனையில் ஒரு நீர்ச்சந்தியை கண்டுபிடித்த அவர் அதற்கு 'மெகல்லன் நீர்ச்சந்தி' என்று பெயரிட்டார். அங்கிருந்து இந்த மாலுமிகள் குழு பெரிய தென் கடலைச் சென்று சேர்ந்தது. இந்தக் கடல் அமைதியாக இருந்ததால் அதற்கு பசிபிக் பெருங்கடல் என்று பெயரிட்டார் (Pacifico என்றால் ஸ்பானிய மொழியில் அமைதியானது என்று பொருள்) இந்தப் பயணத்தின்போது மெகல்லன் தனது இரண்டு கப்பல்களையும், நோய் காரணமாக பல மாலுமிகளையும் இழந்தார். பிலிப்பி தீவில் மெகல்லன் கொல்லப்பட்டார். இறுதியாக விட்டோரியா (விக்டோரியா) என்ற ஒரேயொரு கப்பல் மட்டும் 18 மாலுமிகளுடன் 1522இல் செவில்லேவுக்குத் திரும்பியது. உலகத்தை முதன் முதலாக சுற்றிய கப்பல் என்ற சிறப்பு விட்டோரியா கப்பலுக்குக் கிடைத்தது.


துருக்கியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் மற்றும் ஜெர்மானியர்கள் ஆகியோர் ஆசியாவுக்கான புதிய கடல் வழித்தடங்களின் முக்கியத்துவத்தை அப்போது அறிந்திருக்கவில்லை. அமெரிக்காவை ஐரோப்பியர்கள் கண்டுபிடித்ததன் அரசியல் முக்கியத்துவத்தையும் அவர்கள் அறியவேண்டிய நிலைமையில் இருந்தார்கள். ஸ்பெயினைச் சேர்ந்த போர் வெற்றியாளரான ஹெர்னன் கார்ட்ஸ் என்பவர் ஒரு சில வீரர்களுடன் ஸ்பெயினுக்காக மெக்சிகோ பேரரசைக் கைப்பற்றினார். பனாமாவின் நிலச்சந்தியைக் கடந்த பிஸார்ரோ (1530) தென் அமெரிக்காவில் இன்கா பேரரசினை அழித்து பெரு என்ற மற்றொரு நாட்டைக் கைப்பற்றினார்.

 
இதர முக்கியமான ஐரோப்பிய பயணங்கள்

போர்த்துகீசிய மற்றும் ஸ்பெயின் நாட்டு கடற்பயணம் மேற்கொள்வோரை பின்பற்றி இதர ஐரோப்பிய நாடுகளும் உலகை வலம் வந்து புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிக்க ஆர்வம் கொண்டன உலகத்தின் பல புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக இத்தாலிய கடற்பயணியான ஜான் கேபட் என்பவரை இங்கிலாந்து நியமித்தது. அவர் தனது பயணத்தின் போதே கனடாவை கண்டுபிடித்து அதனை ஆங்கிலேயக் காலனியாக மாற்றினார். மற்றொரு இத்தாலியரான ஜியோவனி டா வெர்ராசானோ பிரான்ஸ் நாட்டுக்காக நிலப்பகுதிகளை ஆராய்ந்தார். கிழக்கு கனடாவில் பிரான்ஸ் நாட்டுக்காக மாகாணங்களை இணைத்தார். ஹென்றி ஹட்சன் என்ற ஆங்கிலேய கடற்பயணி வட அமெரிக்காவில் இருந்து பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு பாதை காண முயன்றார். அவர் தனது முயற்சியில் தோல்வி அடைந்தாலும் அவர் அந்தப் பகுதியை ஆராய்ந்தார். அது தற்போது ஹட்சன் நதி என்ற பெயர் தாங்கி இருக்கிறது.

ஸ்பானிய ஆயுதங்களால் ஏற்பட்ட பேரழிவின் தாக்கம் : அஸ்டெக்குகள் போதுமான எண்ணிக்கையில் வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் எஃகு கத்திகளைக் கொண்டிருந்தாலும் ஒரேயொரு ஸ்பானிய வீரர் டஜன் கணக்கில் ஏன் நூற்றுக்கணக்கான எதிரிப்படை வீரர்களைக் கொல்லமுடியும். அவர்கள் திடீரென, குத்திக் கிழித்துக் கொன்றனர் ஐரோப்பிய ஆயுதங்களின் மோசமான விளைவு குறித்து ஒரு உள்நாட்டு வரலாற்றாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார். மேலும் "மற்றவர்கள் ஒரே வீச்சில் சிரச்சேதம் செய்யப்பட்டனர். இதர வீரர்கள் கொலைக்களத்தில் இருந்து ஓடித்தப்பிக்க முயன்றனர். அவர்களின் குடல் அவர்களில் இருந்து கீழே விழுந்து கால்களைச் சுற்றிக்கொண்டது." சிறிய அம்மை பரவியதால் அஸ்டெக் வலு குறைந்து காணப்பட்டது. இதன் மூலம் கார்டெசுக்கு மறுபடியும் குழுக்களை ஒன்று சேர்க்க நேரம் கிடைத்தது. இதனால் இறுதி வெற்றியும் பெற்றனர்.

இங்கிலாந்திலிருந்து போட்டி அதிகமானதை அடுத்து ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஸ்பெயின் எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையிலும் கலிபோர்னியா பகுதியை பிரான்சிஸ் டிரேக் என்பவர் ஆங்கிலேயருக்காக இணைத்தார். இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. 1588இல் ஸ்பெயினின் அரசர் இரண்டாம் பிலிப் ஸ்பெயின் நாட்டு கப்பல் படையை 130 கப்பல்கள் மற்றும் 31,000 படைவீரர்களுடன் இங்கிலாந்து மீது போர் தொடுக்க அனுப்பினார். எனினும் ஆங்கிலேயர்கள் எளிதாக கையாளக்கூடிய தங்கள் படைகளின் நடவடிக்கையால் ஸ்பெயின் நாட்டுப் படையை (Spanish Armada) வீழ்த்தினார்கள். நவீன உலகில் ஒரு வலுவான சக்தியாக பிரிட்டிஷார் உருவெடுக்க இது காரணமாக அமைந்தது.

Tags : Modern World: The Age of Reason | History நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு.
12th History : Chapter 10 : Modern World: The Age of Reason : Discovery of New Sea Routes to the East Modern World: The Age of Reason | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் : கிழக்குப் பகுதிகளுக்கான புதிய கடல்வழித்தடங்களை கண்டுபிடித்தல் - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்