Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பிராட்டஸ்டன்ட் சீர்திருத்தமும் கத்தோலிக்க எதிர் சீர்திருத்த இயக்கமும்

நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு - பிராட்டஸ்டன்ட் சீர்திருத்தமும் கத்தோலிக்க எதிர் சீர்திருத்த இயக்கமும் | 12th History : Chapter 10 : Modern World: The Age of Reason

   Posted On :  12.07.2022 06:23 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

பிராட்டஸ்டன்ட் சீர்திருத்தமும் கத்தோலிக்க எதிர் சீர்திருத்த இயக்கமும்

இடைக்கால ஐரோப்பாவில் மக்களில் பெரும்பான்மையான கிறித்தவர்கள் கடவுளின் ஆற்றலில் நம்பிக்கை வைத்தார்கள்.

பிராட்டஸ்டன்ட் சீர்திருத்தமும் கத்தோலிக்க எதிர் சீர்திருத்த இயக்கமும்

இடைக்கால ஐரோப்பாவில் மக்களில் பெரும்பான்மையான கிறித்தவர்கள் கடவுளின் ஆற்றலில் நம்பிக்கை வைத்தார்கள். கடவுள் நம்பிக்கை உடைய கத்தோலிக்கர்கள் தேவாலயங்கள் தங்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு ஊடகமாக செயல்படுவதை ஏற்றார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை பொதுமக்களுக்கு தேவாலயங்கள் தான் முக்கிய மையப்புள்ளியாக விளங்கியது. காலப்போக்கில் தேவாலயங்கள் வைத்திருந்த அதிகாரம் பன்மடங்காகப் பெருகியது. எனினும் ஐரோப்பாவின் மன்னர்களும் மக்களும் தேவாலயங்களின் கை ஓங்கி வருவதை உணர ஆரம்பித்தனர். போப்பாண்டவரின் அதிகாரத்துக்கு மதித்து நடக்காத, பின்பற்றாத ஒரு சில போக்குகளும் அவ்வப்போது இருந்தன. இந்த புதிய மாற்றத்தை வன்முறையால் கையாள வேண்டிய விசாரணைப் போக்கை தேவாலயம் உருவாக்கியது. தேவாலயங்களின் செயல்பாடுகளைக் கேள்விகேட்ட மக்களை இந்த விசாரணை அமைப்பு சமயவிரோதப்போக்கில் ஈடுபடுபவர்கள் மற்றும் பெண்களை சூனியக்காரிகள் என்று அடையாளப்படுத்தியது.


தேவாலயத்தின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக கிளர்ச்சி ஏற்படுத்தியவர்கள் பிராட்டஸ்டன்ட் (எதிர்ப்பாளர்கள்) என்றழைக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்களின் கொள்கைகளை எதிர்த்து கிளம்பியதால் அப்படி அழைக்கப்பட்டனர். இந்த இயக்கமே கிறித்தவ சீர்திருத்த இயக்கம் என்றானது. ஊழல் மற்றும் தேவாலயங்களின் எதேச்சதிகாரப் போக்குக்கு எதிரான பிரபலமான கிளர்ச்சியாகும். விசுவாசமான ரோமானிய தேவாலய ஆதரவாளர்கள் தேவாலயத்துக்குள் நடந்த சீர்கேடுகளைக் களைய சீர்திருத்தங்களை உள்ளிருந்தபடியே நடத்தினார்கள். இந்த சீர்திருத்த இயக்கம் 'எதிர் சீர்திருத்த இயக்கம்' என்று அழைக்கப்பட்டது. இது போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக உறுதியாக களம் கண்டது.

 

சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள்

தேவாலய நிர்வாகத்தினரின் ஊழல்

பாவமன்னிப்பு வழங்கும் முறைக்கு பணம் பெற்றது (ஒருவரின் பாவத்தை மன்னித்து அவருக்கு புனிதத்தை வழங்கும் போப்பாண்டவரின் பாவமன்னிப்புக்கு பணம் பெற்றது), வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது, தேவாலயப் பணிகளை பணத்துக்கு விற்பது ஆகியன தாக்குதலுக்கு உள்ளானது. போப்பாண்டவரிடம் பாவமன்னிப்பைப் பெற ஏழைகள் பணம் கொடுக்க நேரிட்டதால் அவர்கள் பணமின்றி தவித்தார்கள். ஆறாம் அலெக்ஸாண்டர், இரண்டாம் ஜூலியஸ், பத்தாம் லியோ ஆகிய சில போப்பாண்டவர்கள் இது போன்ற நடைமுறைகளால் ஆட்சியாளர்களிடம் சண்டையிட்டனர். போப் பத்தாம் லியோவுக்கு பணம் கொடுத்து மெயின்ஸின் ஆல்பர்ட் என்பவர் ஆர்ச்பிஷபாக பதவியேற்ற சம்பவமும் நடந்தது. போப்பாண்டவர் இந்தப் பணத்தை வசூலித்ததாகக் கூறப்பட்டதோடு அதில் பாதிப்பணம் செயின்ட் பீட்டர் பேராலயத்தைக் கட்ட பயன்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டது.

மெடிசி குடும்பம் போன்ற மிகப்பெரிய வர்த்தகக் குடும்பங்களின் உறுப்பினர்கள் தங்கள் சொத்தைப் பெருக்கவும் தங்களுக்கு முறைதவறிப் பிறந்த மகன்களுக்கு அந்தச் சொத்தை வழங்கவும் போப்பாண்டவர்களாக மாறினார்கள். பிஷப் பதவிகளில் அனுபவம் இல்லாத இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர். பல்வேறு தேவாலயங்களில் இருந்து வருமானம் பெற்ற பாதிரிமார்கள் அவற்றில் எந்த தேவாலயத்துக்கும் சென்றதில்லை. விவசாயிகள் இந்த தேவாலயத்தை அடக்கி ஆளும் நிலப்பிரபுவாகப் பார்த்தனர். பல இளவரசர்கள் தங்கள் பேராசை மிகுந்த கண்களை தேவாலயங்களின் பரந்துபட்ட சொத்துக்களின் மீது வைத்தனர்.

கிறித்தவ சீர்திருத்த இயக்கத்தின் பின் இருந்தவர்கள்

கிறித்தவ சீர்திருத்த இயக்கம் சில முன்னோடிகளைக் கொண்டிருந்தது. எராஸ்மஸ், தேவாலய வழக்கங்கள் மற்றும் போதனைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். மடமையின் புகழ்ச்சி (The Praise of Folly, 1511) என்ற அவரது சிறந்த படைப்பு கிறித்தவ துறவிகள் மற்றும் இறையியல் போதகர்களையும் கேலி செய்தது. ஜான் வைகிளிஃப் மற்றும் ஜான் ஹஸ் ஆகியோர் அவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் சீர்திருத்தத்துக்காக உழைத்தவர்களாவர். கடவுளின் செய்தியை லத்தீன் மொழியில் போதனை செய்யாமல் மக்களின் மொழியில் போதித்தனர். ஜான் வைகிளிஃப் என்ற ஆங்கிலேய பாதிரியார் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் மொழிபெயர்ப்பாளர் என்பதால் பிரபலமடைந்தார். அவர் தனது வாழ்நாளில் ரோமானிய தேவாலயத்தின் கோபத்தில் இருந்து தப்பிப் பிழைத்தார். ஆனால் 1415ஆம் ஆண்டு அவர் மறைந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடலைத் தோண்டி எடுத்து அவரது எலும்புகளை எரியூட்டுமாறு கிறித்தவ திருச்சபை ஆணையிட்டது. 


இந்த ஆணை சிரத்தையுடன் பின்பற்றப்பட்டது. வைகிளிஃபின் எலும்புகள் எரியூட்டப்பட்டாலும் அவரது கருத்துகளை ஒடுக்க முடியவில்லை . இந்த சம்பவம் குறித்த தகவல் பொஹிமியாவுக்கு பரவியது; ஜான் ஹஸ் இதனால் ஊக்கம் பெற்றார். பிரேக் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த ஹஸ், தனது கருத்துக்களுக்காக, தேவாலய நடவடிக்கைகளில் இருந்து போப்பாண்டவரால் ஒதுக்கி வைக்கப்பட்டார். அவர் தனது நகரில் பிரபலமாக இருந்ததால் பிரச்சனையின்றி தப்பித்தார். பேரரசர் அவர்களால் பாதுகாப்பாக தேவாலய சபைக் கூட்டம் நடந்துகொண்டிருத்த சுவிட்சர்லாந்தின் கான்டன்ட்டுக்கு அழைக்கப்பட்டார். ஹஸ் அங்கு சென்றார். தனது தவறை ஒப்புக்கொள்ளுமாறு அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. அவர் மறுத்த நிலையில், அவரது பாதுகாப்புக்கு அவர்கள் உத்தரவாதம் தந்த நிலையிலும் உயிருடன் எரிக்கப்பட்டார்.

கிறித்தவ சீர்திருத்த இயக்கத்தை மூன்று சீர்திருத்தவாதிகள் மூன்று வெவ்வேறு இடங்களில் பிரபலப்படுத்தினார்கள். விட்டன்பெர்கில் மார்ட்டின் லூதர், சூரிச்சில் உல்ரிச் ஸ்விங்ளி மற்றும் ஜெனீவாவில் ஜான் கால்வின் ஆகியோர் அந்த மூவராவர்.

 

மார்ட்டின் லூதர் (1483-1546)

கிறித்தவப் பாதிரியாரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு எதிராக ஜெர்மனியில் கிளர்ச்சியில் ஈடுபட்டார். ரோமுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு அவர் தேவாலயத்தின் ஊழல் மற்றும் ஆடம்பரம் குறித்து வருந்தினார். 95 குறிப்புகள் என்ற தலைப்பில் ரோமானிய தேவாலயத்திற்கு எதிராக அவர் 95 புகார்களை எழுதினார். அந்த புகார்களை விட்டன்பெர்கில் உள்ள தேவாலயத்தின் கதவில் ஆணி அடித்து தொங்கவிட்டார். தேவாலய சீர்திருத்தத்துக்காக அவர் சில ஆலோசனைகளை வழங்கினார். இந்த கருத்துகள் பரவுவதற்கு அச்சகத்தின் பணி மகத்தானதாக இருந்தது. பைபிள் மட்டுமே உன்னதமானது; போப்பாண்டவரோ அல்லது பிஷப்புகளோ இல்லை என்று அவர் வாதிட்டார். ஞானஸ்நானம் வழங்குவது மற்றும் புனித சமய சடங்கு ஆகிய இரண்டு மட்டுமே பைபிளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. கடவுளின் மீது இருக்கும் ஒருவரது நம்பிக்கையைப் பொறுத்து தான் இரட்சிப்பை அடையமுடியும் என்று அவர் கூறினார். இவ்வாறாக பிராட்டஸ்டன்ட் கிளர்ச்சி துவங்கியது. லூதர் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். லூதரன் பிராட்டஸ்டன்ட்கள் சில விதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர். அவர்கள் போப்பாண்டவரின் அதிகாரத்தை ஏற்கவில்லை. அவர்கள் தங்களுக்கு என்று தேவாலயங்களை நிறுவினார்கள்,நிர்வாக அமைப்புகளை உருவாக்கினார்கள், பைபிளின் உன்னதம் பற்றி மட்டுமே நம்பினார்கள். பாதிரியார்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.


வோர்ம்ஸ் சபையில் கலந்துகொள்ளுமாறு லூதருக்கு அழைப்புவிடுத்த போப்பாண்டவர் அவருடன் அமைதிப் பேச்சுகளில் ஈடுபட முயன்றார். அந்தப் பேச்சுகள் தோல்விகண்டன. இந்த வோர்ம்ஸ் சபையில் லூதரின் புத்தகங்கள் அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன. புனித ரோமானிய அரசாங்கத்தின் சட்டத்துக்குப் புறம்பானவர் என்று பேரரசரால் அறிவிக்கப்பட்டார். மார்ட்டின் லூதரின் முற்போக்கான கருத்துக்கள் பலரை ஈர்த்தன. அவர்களில் ஒருவர் தான் வகுப்புகள் அற்ற சமூகத்துக்காகப் போராடிய தாமஸ் முன்ட்சர் ஆவார். இதனை அடுத்து ஜெர்மனியின் பல பகுதிகளில் விவசாயகிளர்ச்சி இயக்கங்கள் தோன்றின. எனினும் இந்த சண்டையில் நிலப்பிரபுக்களை ஆதரித்த மார்ட்டின் லூதர் விவசாயிகளின் இயக்கத்தை கைவிட்டார். பிராட்டஸ்டன்ட்கள் பிரபலம் அடைந்த நிலையில் ஜெர்மனியில் உள்நாட்டுப்போர் நிகழ்ந்தது. அந்தப்போரின் இறுதியில் வடஜெர்மனி பிராட்டஸ்டன்ட் நாடாக மாறியது. அதே நேரத்தில் தெற்குஜெர்மனி கத்தோலிக்க நாடாகத் தொடர்ந்தது.

 

ஸ்விங்கிளி (1484-1531)

சுவிட்சர்லாந்தில் உல்ரிச் ஸ்விங்கிளி என்பவர் இதே போன்ற இயக்கத்தை ஆரம்பித்தார். நெதர்லாந்து மனிதநேய ஆர்வலர் எராஸ்மஸ் என்பவரால் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார் இவர் லூதரின் சில கருத்துக்களை ஏற்கவில்லை ரொட்டியிலும் திராட்சை ரசத்திலும் கடவுள் இல்லை ; நம்புபவரின் இதயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்வாழ்வதாக ஸ்விங்கிளி நம்பினார். அவர் கத்தோலிக்க தேவாலய நிர்வாகத்துக்கு எதிராக சீர்திருத்தக் கருத்துக்களை கோடிட்டுக்காட்டும் 67 சீர்திருத்தக் கட்டுரைகளை எழுதினார். துறவிகள் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதை எதிர்த்த அவர் மடாலயங்கள் கட்டுவது, நோன்பிருப்பது, புனித யாத்திரை மேற்கொள்வது ஆகியவற்றையும் கடுமையாக எதிர்த்தார். பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை வலுவாக்க லூதரையும் ஸ்விங்கிளியையும் ஒன்றாக இணைப்பது குறித்த முயற்சிகள் தோல்வி கண்டன.

இயேசு நாதரின் புனித இறுதி விருந்தை ஒத்த புனிதச் சமயச் சடங்கை கத்தோலிக்கர்கள் தங்கள் தேவாலயங்களில் பின்பற்றினார்கள். இயேசு கிறிஸ்து மேற்கொண்ட தியாகங்களை நினைவுகூரும் வகையில் இந்தச் சடங்கில் கத்தோலிக்க கிறித்தவர்கள் பங்கேற்றனர். ரொட்டியும் திராட்சை ரசமும் இயேசுவின் சதையும் இரத்தமும் என்று அவர்கள் நம்பி ஏற்றுக்கொள்கின்றனர்.

 

ஜான் கால்வின் (1509-1564)

பிராட்டஸ்டன்ட் இயக்கத்தின் பிற்கால தலைவர்களில் ஒருவர் ஜான் கால்வின் ஆவார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிராட்டஸ்டன்ட் ஆன அவர் தேவாலய நிர்வாகத்தின் நடவடிக்கைகளை எதிர்த்தார். போப்பாண்டவரை ' எதிர்த்ததற்காக அவர் கிறித்தவ விரோத நடவடிக்கைகளுக்காக அவர் சபைக் கூட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் குடியேறினார். கிறித்தவ சமய நிறுவனங்கள் (Institutes of the Christian Religion) 6T60TM 2015 லத்தீன்மொழிப் புத்தகம் அவரது கருத்துகளை உள்ளடக்கியது. கால்வின் ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர். குறிப்பிட்ட காலத்துக்கு அவர் ஜெனீவா நகரையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பைபிள் போதனைகளின் அடிப்படையிலான ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தைப் படைக்க அவர் பெரிதும் முயன்றார். கால்வீனியம் என்ற சமயப்பிரிவு அவரது வாழ்நாளிலேயே பிரபலம் அடைந்தது. ஐரோப்பாவின் இதர பகுதிகளுக்கு பரவிய நிலையில் பிரான்ஸில் ஹுயுக்நோக்கள் ஆகவும், இங்கிலாந்தில் பியூரிட்டன்கள் ஆகவும் ஸ்காட்லாந்தில் பிரஸ்பைட்டீரியன்கள் ஆகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.


 

ஆங்கிலேய சீர்த்திருத்தம்

இங்கிலாந்தில் சீர்த்திருத்த நடவடிக்கைகள் தத்துவ அறிஞர்களால் தொடங்கப்படாமல் மன்னராலேயே தொடங்கப்பட்டது. எட்டாம் ஹென்றி என்பவர் தேவாலய நிர்வாகத்தில் இருந்து அரசை பிரித்தார். ஆரம்பகாலங்களில் நம்பிக்கைமிகு கத்தோலிக்கராக இருந்த அவர் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக பிராட்டஸ்டன்ட்களை ஆதரித்தார் (ஆன்பொலின் என்ற வேறொரு பெண்ணை மறுமணம் செய்வதற்காக அராகன் அரசியும் அவரது மனைவியுமான கேதரின் என்பவரை விவாகரத்து செய்தார்). 1534இல் மேலாதிக்கச் சட்டம் (உன்னத சட்டம்) என்ற சட்டத்தை அவர் இயற்றி ரோம் உடனான இங்கிலாந்தின் தொடர்பை துண்டித்தார். ஆங்கிலிகன் தேவாலயத்தை நிறுவிய அவர் மடாலயங்கள் மற்றும் அனைத்து கிறித்தவ நிறுவனங்களுக்குச் சொந்தமான தேவாலய சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இந்த பிராட்டஸ்டன்ட் இயக்கம் பியூரிட்டன் இயக்கம் என்ற பெயரில் இங்கிலாந்தின் பல பகுதிகள் மற்றும் அதன் காலனிகளுக்கும் பரவியது.

 

சீர்திருத்த இயக்கத்தின் விளைவுகள்

அ) ஐரோப்பிய நாடுகளில் பிரிவுகள்: தேவாலய நிர்வாகத்தில் ஏற்பட்ட பிளவு அந்த நாட்டின் சமய வழிபாடுகளில் பிரிவுகளை ஏற்படுத்தியது. வடஜெர்மனி லூதரன் சபையாகவும் தென்ஜெர்மனி கத்தோலிக்கத்தை தொடர்வதையும் கொண்டன. இங்கிலாந்து பிராட்டஸ்டன்ட் ஆகவும் ஸ்காட்லாந்தும் அயர்லாந்து மக்களும் தீவிர கத்தோலிக்க ஆதரவாளர்களாக மாறினர்.

ஆ)கல்வியறிவு: சீர்திருத்த இயக்கத்தின் பல்வேறு சமய போதனைகளை அச்சிட அச்சகம் உதவியது. மேலும் பொதுமக்கள் படிப்பறிவு பெற்றனர். பைபிளை படித்து புரிந்துகொள்ள மக்களுக்கு ஊக்கம் தரப்பட்டது. உள்ளூர் மொழியை போதனைகளுக்கு பயன்படுத்தியதும் பைபிளை வேறு வட்டார மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ததும் சாதாரண மக்களைச் சென்றடைவதற்கான புதிய வழிகளைக் காட்டின.

இ)பெண்களின்நிலை:

தேவாலயங்களில் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிராட்டஸ்டன்ட் பாதிரியார்கள் திருமணம் செய்துகொண்டனர். இதனால் வீட்டிலும் தேவாலயங்களிலும் பெண்களின் நிலை வலுப்பெற்றது. பைபிளை படிக்குமாறு ஊக்கப்படுத்தப்பட்ட பெண்கள் பிராட்டஸ்டன்ட் வழிமுறையில் குழந்தைகளை வளர்க்கவும் ஊக்கம் பெற்றனர். இதனால் பெண்களின் கல்வியறிவு மேம்பட்டது.

ஈ)அரசர்களின் அதிகாரம்: எட்டாம் ஹென்றி போன்ற சில அரசர்களுக்கு, தேவாலயம் மற்றும் அரசு இரண்டுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த இந்த சீர்திருத்த இயக்கம் அதிக அதிகாரங்களை வழங்கியது.

உ)காலனிகளுக்கானபோட்டி: கத்தோலிக்கர்களும் பிராட்டஸ்டன்ட்களும் உலகின் இதர பகுதிகளில் வாழும் மக்களை தத்தமது பிரிவுகளுக்கு மாற்றம் செய்ய விரும்பினார்கள். தென் அமெரிக்காவில் ஸ்பானிய வெற்றியை அடுத்து ஜெசூட் துறவிகள் (கத்தோலிக்க சமயத்தை பரப்ப உருவான ரோமன் கத்தோலிக்கர்களின் புதிய பிரிவு) பியூரிட்டன்கள், கத்தோலிக்கர்கள், ஆங்கிலிகன்கள் ஆகியோர் தத்தமது தேவாலயங்களை வடஅமெரிக்காவின் 13 ஆங்கிலேய காலனிகளில் அமைத்தனர். 

ஊ)கிறித்தவ சமயத்தின் பரவல்: காலனிகளில் தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் கடற்பயணிகளை உலகின் பல பகுதிகளுக்கு கிறித்தவ இயக்கத் தொண்டர்கள் என்ற போர்வையில் அனுப்பியது. முதலில் கிறித்தவத் தொண்டு, பிறகு துப்பாக்கிப்படகு அதனை அடுத்து நிலத்தை ஆக்கிரமிப்பு என்ற வரிசையில் அடுத்தடுத்த தலைமுறையினர் கத்தோலிக்கர்களின் சீர்திருத்த தடுப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

 

கத்தோலிக்க எதிர் சீர்திருத்தம்

இயேசு சங்கம்

பிராட்டஸ்டன்ட் இயக்கத்தின் வளர்ச்சியை கத்தோலிக்க சமயம் எச்சரிக்கை உணர்வு மற்றும் கவலையோடு கவனித்தது. மார்ட்டின் லூதர் பிரபலம் அடைந்த வேளையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இக்னேஷியஸ்லயோலா என்பவர் பாரிஸ் (பிரான்ஸ்) என்ற இடத்தில் புதிய தேவாலய முறைமையை 1534 ஆகஸ்டு 15இல் ஏற்படுத்தினார். பிரம்மச்சர்யம், வறுமை, கீழ்ப்படிதல் ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகிய உறுதிமொழிகளைக் கடைபிடிக்க அவரும் அவரது ஆறு பல்கலைக்கழக மாணவர்களும் உறுதியேற்றனர்.

அவரின் மாணாக்கர்களில் ஒருவரான பிரான்சிஸ் சேவியர் இந்தியா மற்றும் ஜப்பானுக்கான கிறித்தவ மிஷனரி தொண்டராக பின்னாளில் மாறினார். ரோமானிய தேவாலயத்திற்கும் போப்பாண்டவருக்கும் உண்மையாக தொண்டாற்ற சிறந்த மக்களை உருவாக்கப் பயிற்சி வழங்கவே இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. மக்களுக்கு கத்தோலிக்க சமயத்தைப் பயிற்றுவிக்க கல்வியை ஒரு சாதனமாக இந்த அமைப்பு பயன்படுத்தியது. கத்தோலிக்க சமயத்தை மேம்படுத்துவதற்காக அவர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களை அமைத்தனர். இயேசு சங்கம் தேவாலயத்துக்கு உண்மையான சிறந்த தொண்டர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றது. ஐரோப்பாவில் தேவாலயங்களின் தரத்தை உயர்த்த ஜெசூட்கள் என்று அழைக்கப்பட்ட இந்த பாதிரிமார்கள் உதவினார்கள்.


பிராட்டஸ்டன்ட் கிளர்ச்சியால் ஏற்பட்ட அச்சுறுத்தலை அடுத்து ரோமானிய தேவாலய நிர்வாகம் பின்பற்றிய நடவடிக்கைகளில் பெரும்பாலானவை தேவாலய நிர்வாகத்தின் தவறான வழிமுறைகளைக் களைதல், போப்பாண்டவரின் அதிகாரத்தை உறுதி செய்வது மற்றும் ஏழு திருவருட்சாதனங்கள் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவது (ஞானஸ்நானம், உறுதிபூசுதல், திருவிருந்து, பாவமன்னிப்பு , நோயில் பூசுதல், குருத்துவ துறவறம், திருமணம் ) ஆகியனவாகும். எதிர் சீர்திருத்த இயக்கம் என்று இந்த இயக்கம் அழைக்கப்பட்டது. இதன் மூன்று முக்கிய நிகழ்வுகள் என்று குறிப்பிடவேண்டுமெனில், டிரென்ட் சபை, சமயவிசாரணை நீதிமன்றம் மற்றும் கத்தோலிக்க சமயத்தை பிரபலப்படுத்த புதிய சமயப்பள்ளிகளை நிறுவுவது என்பனவாகும்.

டிரென்ட் சபை (1545-1563)


போப் மூன்றாம் பால் கத்தோலிக்க தேவாலய நிர்வாகத்தைச் சீர்திருத்த கார்டினல்கள் என்ற சமயத்தலைவர்களை நியமித்தார். டிரென்ட் சபை 18 ஆண்டுகளில் மூன்று முறை சந்தித்து பைபிள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. தேவாலய போதனைகள் மற்றும் இரட்சிப்பை அடைவதற்கான ஏழு திருஅருட்சாதனங்களை பின்பற்றுவது குறித்தும் நம்பிக்கை வெளியிட்டது. போப்பாண்டவரின் வானளாவிய அதிகாரத்தை உறுதி செய்வது, பாதிரிமார்களின் பிரம்மச்சர்யம் ஆகியன நிலைநிறுத்தப்பட்டன. தேவாலய பணிகளை விற்பது, வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது, பிஷப்கள் தங்களின் கீழுள்ள தேவாலய அமைப்புக்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற குறைகளை இந்த சபை களைந்தது. திரு அருட்சாதனங்களில் சொல்லப்பட்டுள்ள அறிவுறுத்தல் பற்றிய கல்வியறிவு பற்றியும் டிரென்ட் சபை வலியுறுத்தியது. அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்து மற்றும் மேரியின் உருவ வழிபாட்டையும் சபை ஆதரித்தது. இந்த டிரென்ட் சபையால் கத்தோலிக்க சமயம் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்டது.

சமயவிசாரணை நீதிமன்றம் (Inquisition)

நீதி விசாரணைக்கான சிறப்பு தேவாலய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு சமயவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தண்டனை பெற்றனர். சாட்டையடி தொடங்கி உயிருடன் எரிப்பது வரையான உத்திகளைக் கையாண்டு சமயவிரோதிகளை தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வைப்பது மற்றும் சமயவிரோதப் போக்கை கைவிடவைப்பது போன்றவை முக்கியமான வழிமுறைகளாகும். இது பிராட்டஸ்டன்ட்களை எதிர்கொள்ள ரோமானிய நீதி விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சூனியக்காரிகளை பிடித்து அழிப்பது பொது வழக்கமாக இருந்தது. விவாகரத்தான அல்லது தனித்து வாழும் பெண்கள் சூனியக்காரிகள் என அழைக்கப்பட்டதோடு அவர்களால் தான் பயிர் சாகுபடி இல்லை அல்லது நோய்கள் பரவின என்பன போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய பெண்கள் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஐரோப்பாவில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு எதிராக நீதி விசாரணை நடந்ததாகவும் அவர்களில் 60 ஆயிரம் பேர் விசாரணையின் முடிவில் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

எதிர் சீர்திருத்த நடவடிக்கையின் விளைவுகள்

எதிர் சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக, ஐரோப்பா சமய அடிப்படையில் பிரிக்கப்பட்டது. நாடுகளுக்குள்ளும், பல எண்ணிக்கையில் சமய நம்பிக்கை உடைய நாடுகளுடனும் போர்கள் மூண்டன. முப்பதாண்டுப் போரானது 1618 முதல் 1648ஆம் ஆண்டு வரை புனித ரோமானிய பேரரசின் பல்வேறு மாகாணங்களில் நடைபெற்றது இந்தப் பிரிவினைக்கு ஓர் உதாரணமாகும். பிராட்டஸ்டன்டுகளின் தேவாலயங்கள் கடுமையானவை; கத்தோலிக்க தேவாலயங்கள் மிகவும் அலங்காரமானவை. இரண்டு சமயக் குழுக்களும் தங்கள் சமய கருத்துக்கள் மற்றும் எண்ண ங்களைப் பரப்பும் ஒரு சாதனமாக கல்வியைப் பயன்படுத்தின.

Tags : Modern World: The Age of Reason | History நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு.
12th History : Chapter 10 : Modern World: The Age of Reason : Protestant Reformation and Catholic Counter Reformation Modern World: The Age of Reason | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் : பிராட்டஸ்டன்ட் சீர்திருத்தமும் கத்தோலிக்க எதிர் சீர்திருத்த இயக்கமும் - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்