Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | புதிய முடியாட்சிகளின் எழுச்சி / தேசிய அரசுகளின் தோற்றம்

நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு - புதிய முடியாட்சிகளின் எழுச்சி / தேசிய அரசுகளின் தோற்றம் | 12th History : Chapter 10 : Modern World: The Age of Reason

   Posted On :  10.07.2022 03:10 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

புதிய முடியாட்சிகளின் எழுச்சி / தேசிய அரசுகளின் தோற்றம்

நிலப்பிரபுத்துவ காலத்தில் மன்னர்கள் எதிரிகளுடனான போரின்போது ஆயுதங்களை வெடிபொருட்களைப் பெறுவது தொடர்பாக நிலப்பிரபுக்களுடன் ஒப்பந்தத்தை எட்டினார்கள்.

புதிய முடியாட்சிகளின் எழுச்சி / தேசிய அரசுகளின் தோற்றம்

நிலப்பிரபுத்துவ காலத்தில் மன்னர்கள் எதிரிகளுடனான போரின்போது ஆயுதங்களை வெடிபொருட்களைப் பெறுவது தொடர்பாக நிலப்பிரபுக்களுடன் ஒப்பந்தத்தை எட்டினார்கள். பதிலுக்கு அவர்களுக்கு அரசர்கள் வீரத்திருமகன் (knighthood) பட்டமும் வரிவசூல் இல்லாத நிலங்களையும் (fief) கொடுத்தார்கள். இத்தகைய பிரபுக்களுக்கு வரிவசூல் அற்ற நிலப்பகுதிகளை அரசர்கள் தங்களுக்கு ஆற்றிய சேவைகளுக்காக வழங்கினார்கள். இந்த உறவு இருதரப்புக்கும் உதவியாக அமைந்தது. மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்த இயக்க காலத்தில் புதிய சக்தி வாய்ந்த மன்னராட்சி அரசுகள் வலிமை பெற்றன. இந்தக்காலத்தில் பிரபுக்கள் - அரசர்கள் இடையே உறவு சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.

 

காரணங்கள்

நிலப்பிரபுத்துவ முறை வீழ்ச்சி

இந்த முறையில் இடைக்கால அரசர்கள் பிரபுக்களின் தயவில் இருந்தார்கள். அரசரின் எதிரிகளுடன் எந்த நேரத்திலும் கைகோர்க்கும் வகையில் பிரபுக்கள் ஆயத்தமாக இருந்தனர். அரச குத்தகை நிலங்கள் மீது அரசர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை . பிரபுக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை வைத்திருந்ததோடு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ராணுவத்தையும் வைத்திருந்தனர். இம்முறையின் கீழ் அரசரின் நிலையும், அதிகாரமும் குறைந்தே காணப்பட்டது.

இடைக்காலத்தில் ஐரோப்பாவைத் தாக்கிய கொள்ளை நோய் பிரபுத்துவ ஆட்சியை அதன் நடைமுறையை வலுவிழக்கச் செய்தது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து பிரபுக்கள் தங்கள் வேலையாட்களை இழந்ததோடு வரிவருமானத்தையும் இழந்தனர். சிலுவைப்போர்களின் போது பெரும் எண்ணிக்கையில் பிரபுக்கள் உயிரிழந்தனர். புதிய மன்னராட்சியை உறுதிப்படுத்துவதில் நிலப்பிரபுத்துவ முறையின் வீழ்ச்சி முக்கியப் பங்காற்றியது.

வெடிமருந்து போன்ற போர்த்தொழில் நுட்பங்களின் பயன்பாடு மாற்றங்களைக் கொண்டுவந்தது. வீரத்திருமகன்களின் போர் உத்திகள் வலுவிழந்தததும் முப்பதாண்டுகாலப் போரின் போது முன்னரங்குக்கு வந்தது. வீரத்திருமகன்களைவிட ஆங்கிலேயர்களின் நீளமான வில்லும் வெடிமருந்தும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.

தேவாலய நிறுவகத்தின் புகழ் மங்குதல்

இடைக்காலத்தில் தேவாலயம் என்பது ஆதிக்கம் மிகுந்த நிறுவனமாக விளங்கியது. தனது கட்டுப்பாட்டின் கீழ் பல நிலப்பகுதிகளை அது கொண்டிருந்தது. மடாலயங்கள், கான்வென்ட் பள்ளிகள், கட்டிடங்கள் ஆகிய தேவாலய நிறுவனங்கள் அதிக அளவில் நிலப்பகுதிகளை கையகப்படுத்தின. இந்த நிலப்பகுதிகள் வரிவிலக்கு பெற்றிருந்தன. தேவாலய நிர்வாகம் தனது ஆளுகையின் கீழ் இருந்த மக்கள் மொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தை டைத் வரியாக செலுத்த வேண்டும் என்று வரி விதித்தது. அரசை விட தேவாலய நிர்வாகம் வளம் கொழித்துக் காணப்பட்டது. தனது பொருளாதார மற்றும் சமய அதிகாரங்களைப் பயன்படுத்தி தேவாலய நிர்வாகம் அரசர்களைவிட அதிக முக்கியத்துவத்தைப் பெற்றது. தேவாலயம் தனக்கென்று தனி நீதித்துறையையும் வைத்திருந்தது.பிஷப்புகள்,பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் போன்ற தேவாலய நிர்வாகிகள் தவறு செய்தால் அவர்களை தண்டிக்க தனி நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டன. அரச நீதிமன்றங்கள் இவர்களை தண்டிக்க முடியாது. இதனால் அரசர்களின் நீதிமன்றங்களுக்கு இருந்த அதிகாரத்தை விட இந்த தனி நீதிமன்றங்கள் அதிகாரம் அதிகம் பெற்றிருந்தன. இது மேலும் அரசர்களின் அதிகாரத்தைக் குறைத்தது. பிரபுக்கள் மற்றும் குடிமக்கள் முன்பாக அரசரை இழிவுபடுத்த அவரை கிறித்தவ சபைக் கூட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கிவைப்பது என்ற சக்தி வாய்ந்த நடவடிக்கையை போப்பாண்டவர் மேற்கொண்டார். தனது கட்டளைகளை மதித்து நடக்காத ஜெர்மனியின் நான்காம் ஹென்றியை கிறித்தவ சபை நடவடிக்கைகளில் இருந்து விலக்கிவைத்து போப் ஏழாம் கிரிகோரி உத்தரவிட்டார். எனவே அரசர்கள் தேவாலய நிர்வாகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எப்போதும் எடுக்கமுடியாத நிலை இருந்தது. ஆனால் கொள்ளை நோய்க்கான காரணங்களை தேவாலயநிர்வாகத்தால் விவரிக்க முடியாமல் போனதையடுத்து அதன் நிலை தாழ்ந்தது. போப்பாண்டவரின் அதிகாரம் குறித்து உயர் நிலையில் இருந்தவர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பினார்கள்.



ஸ்பெயின் தேசிய அரசாக உருவெடுத்தல்

அராபிய அரசர்களின் வழித்தோன்றல்களாகிய முஸ்லிம் மன்னர்களாகிய மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள் இருந்தன. அராகன், காஸ்டைல் என இரண்டு முக்கிய அரசுகள் அங்கிருந்தன. ஸ்பெயின் நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அராகன் அரசர் பெர்டினான்ட், காஸ்டைல் இளவரசி இசபெல்லாவை மணமுடித்தார். மூர்களை விரட்டி அடிக்க ஒன்றிணைந்து போராடிய அவர்கள் ஸ்பெயினை இணைக்கவும் கடினமாக உழைத்தனர். 1479இல் அரசரும் அரசியும் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்தனர். மன்னர், சபையில் இருந்து பிரபுக்களை நீக்கியதன் மூலம் அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். ஸ்பெயின் ஒரு தனி நாடாக உருவெடுத்தது.

ஸ்பெயினை ஒன்றாக இணைத்து ஆட்சி செய்த பெர்டினான்ட் - இசபெல்லா இருவரும் மிக ஆழமான பற்றுகொண்ட கத்தோலிக்கர்கள் ஆவர். மூர்களின் ஆட்சியில் ஸ்பெயினின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்திய யூதர்கள் பெரும் சுதந்திரத்தை அனுபவித்தனர். இப்போது மூர்களும் யூதர்களும் கிறித்தவ சமயத்தை தழுவுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். ஸ்பெயின் நாட்டின் நீதி விசாரணை அமைப்பை அரசர் அமைத்தார். அதன் மூலம் மதம்மாறிய யூதர்களும் மூர்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். சமய நம்பிக்கை அற்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டனர். அரண்மனை தேவாலயத்தை விட அதிகாரம் அதிகம் பெற்றதாக விளங்கியது.

அமெரிக்காவுக்கான கடல்வழிப் பாதையை கொலம்பஸ் கண்டுபிடித்தது, இன்கா மற்றும் அஸ்டெக் அரசுகளை கைப்பற்றியது ஆகியன ஸ்பெயினின் வளம் அதிகரிக்க வழி செய்தது. இதனால் வளம் பெற்ற ஸ்பெயின் ஐரோப்பிய அரசியலில் முக்கியப் பங்காற்றத் தொடங்கியது.

இங்கிலாந்து தேசிய அரசாக உருவெடுத்தல்

அரச சிம்மாசனத்தை அடைய யார்க் குடும்பம் மற்றும் லன்காஸ்டர் குடும்பம் என இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக ரோஜாப்பூக்கள் போர் நடந்தது (அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக்குறிகளை அணிந்தனர், அதனால் இப்பெயர் பெற்றது). இந்த உள்நாட்டுப் போரில் ஹென்றி டியூடர் வெற்றி வாகை சூடி, இங்கிலாந்தில் புதிய அரசராட்சி அமைய வழிவகுத்தார். ஏழாம் ஹென்றி என்று பட்டம் சூட்டிக்கொண்ட அவர் யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் உடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார். இதனால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக உருவெடுத்தது.

தனது ஆட்சிக்கு பிரபுக்களால் ஏற்பட்ட அச்சுறுத்தலை நீக்க ஏழாம் ஹென்றி முடிவு செய்தார். பிரபுக்கள் தங்களுக்கு என தனி முத்திரை, சீருடை, பராமரிப்பு உடைய ராணுவங்களை வைத்திருந்தனர். மன்னரானவுடன் ஹென்றி இந்த வழக்கத்தை ஒழித்தார். வர்த்தக வகுப்பினர் மற்றும் சில சிறுபான்மை பிரபுக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றினார். கிளர்ச்சி செய்யும் பிரபுக்களை அரச சபையின் விசாரணைக்கு உட்படுத்த நட்சத்திர சேம்பர் என்ற சிறப்பு நீதிமன்றத்தை அவர் ஏற்படுத்தினார். பிரபுக்களிடம் இருந்து அரசாங்கம் அபராதப்பணம் வசூலித்ததை அடுத்து அரச வருமானம் அதிகரித்தது. வரி வசூலிக்கும் உரிமையையும் நாடாளுமன்றம் அரசருக்கு வழங்கியது. 1485 முதல் 1509ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த ஏழாம் ஹென்றி அரசாங்கத்தின் மீது முழு கட்டுப்பாட்டையும் பெற்றார்.

பிரபுக்களைப் பின்பற்றுவோருக்கு அடையாளக்குறிகள் மற்றும் சீருடை வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. பிரபுக்களின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நட்சத்திர சேம்பர் என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏழாம் ஹென்றி உருவாக்கினார். நீதிமன்ற நடைமுறைகள் நடந்த வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையின் மேல் சுவரில் நட்சத்திரங்கள் ஓவியமாக தீட்டப்பட்டிருந்ததால் இந்தப் பெயர்.

தனது மூத்த மகளை ஸ்காட்லாந்து இளவரசருக்கு மணம் முடித்த அவர் ஸ்காட்லாந்து உடனான உறவுகளை பலப்படுத்தினார். அவர் தனது மகன் ஸ்பெயினின் இளவரசியை திருமணம் செய்து கொண்டதன் மூலம் ஸ்பெயினுடனும் திருமண உறவைப் பேணி வந்தார்.

பிரான்ஸ் தேசிய அரசாக உருவெடுத்தல்

பிரான்சின் கிழக்கே உள்ள பர்கண்டி என்பது ஒரு சக்தி வாய்ந்த நாடாகும். பெயரளவிற்கே பிரான்ஸ் அரசரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிளர்ச்சிமிகுந்த பகுதியான பர்கண்டியை ஆங்கிலேயர்கள் பிரான்சுக்கு எதிராக ஆக்கிரமித்தனர். பிரான்சின் வளமிக்க மேற்குப்பகுதிகளும் நீண்ட காலத்துக்கு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரான்சை ஆண்ட வாலெசைய்ஸ் மரபு ஆங்கிலேயக் கட்டுப்பாட்டில் இருந்து பிரெஞ்சு பகுதிகளை மீட்கவும் வைத்திருக்கவும் போராடியது. பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கம் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை நீடித்த 100 ஆண்டுகள் போர் நடந்தது. இப்போர் நூறாண்டுப் போர் என்றழைக்கப்படுகிறது. இந்தப் போரில் பிரெஞ்சு அரசர் ஏழாம் சார்லசுக்காக ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வீரதீரமாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார். ஆர்லியன்ஸின் பணிப்பெண் (Maid of Orleans) என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது. எனினும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட அவர், அசரீரி மூலம் வழிகாட்டப்பட்டதாக அவர் கூறியதற்காக நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டார். அவர் சூனியக்காரி என்று கண்டனம் செய்யப்பட்டு 1430இல் உயிருடன் எரிக்கப்பட்டார். (1920ஆம் ஆண்டு அவருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டம் வழங்கியது).


ஜோன் ஆஃப் ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு நூறாண்டுகள் போரைத் தொடர்ந்த பிரெஞ்சு அரசு அதில் வெற்றி பெற்றது. ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டிய பிறகு, ஏழாம் சார்லஸின் மகன் பதினோறாம் லூயி பர்கண்டி திரும்பினார். கிளர்ச்சி மிகுந்த இந்தப் பகுதி இறுதியாக 1483ஆம் ஆண்டு பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பிரான்ஸ் ஒரு வலுவான மத்திய மன்னராட்சி நடைபெறும் அரசாக  உருவெடுத்தது. பதினோறாம் லூயி பிரான்சை வலுப்படுத்தி ஒன்றுபடுத்தினார். முதன்முறையாக பிரான்ஸ் வரலாற்றில் அரசரின் கீழ் பிரபுக்களை சார்ந்திருக்காமல் ஒரு நிரந்தர ராணுவம் உருவாக்கப்பட்டது. அவரது அரச சபையில் பிரபுக்களை விட வழக்குரைஞர்கள் அதிகம் இருந்தனர். இதனால் அரச நடவடிக்கைகளில் பிரபுக்களின் ஆளுமை குறைந்தது.

Tags : Modern World: The Age of Reason | History நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு.
12th History : Chapter 10 : Modern World: The Age of Reason : Rise of New Monarchies/ Nation-States Modern World: The Age of Reason | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் : புதிய முடியாட்சிகளின் எழுச்சி / தேசிய அரசுகளின் தோற்றம் - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்