உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நோய்கள் | 7th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும்

நோய்கள்

சாதாரணமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு நபருக்கு இயலாமை அல்லது அசாதாரண நிலையை ஏற்படுத்தி அதன்மூலம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஒரு உடல் ரீதியான மாற்றமே நோய் ஆகும்.

நோய்கள்

சாதாரணமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு நபருக்கு இயலாமை அல்லது அசாதாரண நிலையை ஏற்படுத்தி அதன்மூலம் ஆரோக்கியத்தைப்  பாதிக்கும் ஒரு உடல் ரீதியான மாற்றமே நோய் ஆகும். ஒரு நபருக்கு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு.

• நோய் உருவாக்கும் நுண்கிருமிகளின் மூலம் ஏற்படும் நோய்த் தொற்று. 

• சமச்சீர் உணவு உட்கொள்ளாதது.

• தவறான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள். 

• ஒன்று அல்லது பல உடல் பாகங்கள் அல்லது உறுப்புகளின் செயலிழப்பு.

நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அவற்றை இரண்டு பிரிவுகளின் கீழ் காணலாம். அவை தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் ஆகும்.


1. தொற்று நோய்கள்

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் நோய்கள் தொற்று நோய்கள் எனப்படும். ஆரோக்கியமான நபர்கள் தொற்று நோய்கள் உள்ளவர்களிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும். அசுத்தமான காற்று, நீர், உணவு அல்லது வெக்டார்கள் என்று அழைக்கப்படும் நோய்கடத்திகளான பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் மூலமாகவும் தொற்றுநோய்கள் பரவுகின்றன.

அ. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்

காசநோய், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் தொற்று நோய்களாகும். இவை, காற்று, நீர் மற்றும் பிற உயிரிகள் மூலம் பரவுகின்றன.


1. காசநோய் 

காசநோய் எனப்படும் டி.பி. மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது, காற்றின் மூலமும், துப்புதல், நோயுற்றவருடன் தொடர்பு மற்றும் அவர்களுடன் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை மூலமும் பிறருக்குப் பரவுகிறது. காய்ச்சல், எடை இழப்பு, தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.


தடுப்பு மற்றும் சிகிச்சை

*  BCG தடுப்பூசி போடுதல். 

* நோயாளிக்கு சிறப்புக் கவனம் செலுத்துதல். 

* DOT போன்ற மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளல்.


2. காலரா

இது விப்ரியோ காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோயாகும். இது அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவக்கூடியது. வயிற்றுப்போக்கு, தசை வலி மற்றும் வாந்தி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.




தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் 

* சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவுதல் போன்ற சிறந்த சுகாதாரச் செயல்கள். 

* தெருக்களில் விற்கப்படும் மூடப்படாத உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்தல். 

* கொதித்து ஆற வைத்த குடிநீரைப் பருகுதல். 

* காலராவிற்கு எதிராகத் தடுப்பூசி போடுதல்.


3. டைபாய்டு

சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியா மூலம் இது உருவாகிறது. அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் இது பரவுகிறது. பசியின்மை , தீவிர தலைவலி, அடிவயிற்றில் புண் அல்லது தடிப்புகள் மற்றும் தீவிர காய்ச்சல் ஆகியவை (104°F வரை) காய்ச்சல் இந்நோயின் அறிகுறிகளாகும்.


தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் 

*  கொதிக்கவைத்து ஆற வைத்த குடிநீரைப் பருகுதல். 

* முறையாக கழிவுநீரை அகற்றுதல் 

* தடுப்பூசி போடுதல் 



ஆ. வைரஸ் மூலம் தோன்றும் நோய்கள்

பல வகையான வைரஸ்களால் தோன்றும் தொற்றுநோய்களே வைரஸ் நோய்களாகும். மஞ்சள் காமாலை, சின்னம்மை மற்றும் ரேபிஸ் போன்றவை வைரஸ்களால் ஏற்படும் சில நோய்களாகும்.


மஞ்சள் காமாலை (ஹெபாடிட்டிஸ்)

மஞ்சள் காமாலை என்பது ஹெபாடிட்டிஸ் வைரஸ் - A, B, C, D, E ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்தான மற்றும் இறப்பு ஏற்படுத்தக் கூடிய நோயாகும். அசுத்தமான நீர், பாதிக்கப்பட்டவருக்குப் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தைப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றின் மூலமாக இந்நோய் பரவுகிறது. பசியின்மை (அனோரெக்ஸியா), வாந்தி, சிறுநீர் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் தோன்றுதல் போன்றவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.


தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் 

* கொதித்து ஆற வைத்த குடிநீரைப் பருகுதல். 

* முறையாக கைகளைச் சுத்தம் செய்தல்.


தட்டம்மை

தட்டம்மை நோய் வாரிசெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. இது வாரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸால் ஏற்படும் தீவிரமான தொற்றுநோய் ஆகும். இந்த நோய் காற்றின் மூலமும், பாதிக்கப்பட்ட நபர் மூலமாகவும் எளிதில் பரவுகிறது. உடல் முழுவதும் தடிப்புகள் தோன்றுதல், காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.


தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் 

* சின்னம்மையைத் தடுப்பதற்கான சிறந்த வழி சின்னம்மை (வேரிசெல்லா) தடுப்பூசி போடுவதாகும். 

* நோயாளிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.


ரேபிஸ் (வெறிநாய்க் கடி)

வெறிநாய்க் கடி இறப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாயகரமான நோயாகும். நோய்த் தொற்றுடைய நாய், முயல், குரங்கு , பூனை ஆகியவை கடிப்பதன் மூலமாக இது பரவுகிறது. நாய்களின் உமிழ்நீரில் உள்ள வைரஸ்கள் நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைகின்றன. ஹைட்ரோபோபியா (நீரைக் கண்டு பயம்), இரண்டு முதல் பன்னிரண்டு வாரங்களாக காய்ச்சல் மற்றும் நடத்தையில் மாற்றம் ஆகியவை ரேபிஸ் நோயின் அறிகுறிகளாகும்.


செயல்பாடு 4

அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்குச் சென்று, 0 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் தடுப்பூசியைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும். அருகில் உள்ள மருத்துவமனையில் ஒரு மருத்துவர் அல்லது சுகாதார ஊழியரைச் சந்தித்து கீழ்க்காண்பவை பற்றி கேட்கவும். 

•  அங்குள்ள தடுப்பூசிகளின் வகைகள். 

• அவற்றைப் பயன்படுத்துவதால் நோய்களைக் கட்டுப்படுத்த முடியுமா? 

• தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டிய வயது.


தடுப்பு மற்றும் சிகிச்சை

* ஆரம்பக் கட்டங்களில் ரேபிஸைக் கண்டுபிடிப்பது கடினம். 

*  ஒரு விலங்கு கடித்த பின், பொதுவாக இரண்டு முதல் பன்னிரண்டு வாரங்களில் நோய்க்கான அறிகுறிகள் தோன்றலாம். சில சமயங்களில் அறிகுறிகள் தோன்ற இரண்டு வருடங்கள் கூட ஆகலாம். 

* அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னர் சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோயைத் தடுக்க முடியும்.


தடுப்பூசி

ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக தடுப்பாற்றலை உருவாக்கி, அந்த நோய்க்கு எதிராகப் போராடுவதற்கு நம் உடலைத் தயார் செய்தலே தடுப்பூசி போடுதலின் நோக்கமாகும். தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க குழந்தைப் பருவத்திலேயே தடுப்பூசி (BCG, போலியோ, MMR) கொடுக்கப்படுகிறது.


தொற்றா நோய்கள்

தொற்றா நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதில்லை . அவை பிற காரணிகளால் ஏற்படுகின்றன. எனவே, எந்த நோய்கள் தொற்றக்கூடியவை, எவை தொற்றக்கூடியவை அல்ல என்பதை நாம் அறிய வேண்டியது அவசியமாகும்.


நமது உடலைப் பாதிக்கக்கூடிய கிருமிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற உயிரிகளால் இவை ஏற்படுவதில்லை. நுண்ணுயிர் எதிர்பொருள்கள் அல்லது கிருமிகளுக்கு எதிராகப் போராடும் மருந்துகள் தொற்றா நோய்களைக் குணப்படுத்த உதவுவதில்லை. தொற்றா நோய்கள் சில கீழே விளக்கப்பட்டுள்ளன.


அ. உடல் பாகங்களில் தேய்மானம் ஏற்படுதல்

வாத நோய், மாரடைப்பு, வலிப்பு, பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, கண்புரை மற்றும் புற்றுநோய். 


ஆ. தீங்கு விளைவிக்கக்கூடிய வெளிப்புறக் காரணிகள் உடலில் நுழைதல்

ஒவ்வாமைகள், ஆஸ்துமா, நஞ்சுகள், பாம்பு கடித்தல், புகைத்தலால் ஏற்படும் இருமல், வயிற்றுப் புண், மது அருந்துதல்.


இ. உடலில் நுண்ணூட்டத் தனிமங்கள் குறைவுபடுதல்

இரத்த சோகை, பெலாக்ரா, மாலைக்கண் நோய் மற்றும் சீரோப்தால்மியா, முன் கழுத்துக் கழலை நோய் மற்றும் ஹைப்போ தைராய்டிசம்.


ஈ. ஊட்டச்சத்தின்மை

ஒரு நபர் நன்கு வளரவும், கடினமாக உழைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் சத்துள்ள உணவு தேவை. பல பொதுவான நோய்கள் ஊட்டச்சத்தின்மை காரணமாக ஏற்படுகின்றன.


லுகோடெர்மா என்பது தோலின்  சில பகுதி அல்லது மொத்தப் பகுதியில் நிறமி (மெலனின் நிறமி) இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும். இந்த நிலை அனைத்து வயது, பாலினம் மற்றும் இனத்தைச் சார்ந்தவர்களையும் பாதிக்கிறது. இதற்கு எவ்விதச் சிகிச்சையும் இல்லை . இது தொடுதல், உணவைப் பகிர்தல் மற்றும் ஒன்றாக உட்கார்வதன் மூலம் பரவுவதில்லை.


குழந்தைகளின் தனிப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகள்

இரத்த சோகை

இரத்த சோகை இரும்புச்சத்து குறைவான உணவுகளை உண்பதால் ஏற்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு சில உணவுகளைக் கொடுப்பதாலும் இது ஏற்படுகிறது. தீவிர இரத்த சோகையினால் இளம் குழந்தைகளுக்கு கொக்கிப்புழுத் தொற்று, நாள்பட்ட வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக்கடுப்பு போன்றவை ஏற்படலாம். சமீப நாட்களில் பள்ளி செல்லும் பிள்ளைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பள்ளி மாணவிகளுக்கும் வாரந்தோறும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்குகிறது.


இரத்த சோகையின் முக்கிய அறிகுறிகள் 

* வெளிர் அல்லது எளிதில் புலப்படுகிற தோல், வெளிறிய கண்ணிமையின் உள்பரப்பு, வெளிறிய விரல் நகம், வெளிறிய ஈறுகள், பலவீனம் மற்றும் சோர்வு. 

* இரத்த சோகை தீவிரமடையும் போது, முகம் மற்றும் கால்கள் வீங்கியிருக்கும். இதயத் துடிப்பு விரைவாக இருக்கும். மேலும், மூச்சுத் திணறலும் காணப்படும். 

* மண் சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, பொதுவாக இரத்த சோகை இருக்கும்.


சிகிச்சை மற்றும் தடுப்புமுறை.

இரும்புச்சத்து கொண்ட உணவுகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளுதல் மூலம் இரத்த சோகையைத் தடுக்கலாம்.

உணவு

முருங்கைக் கீரை, பேரீச்சம் பழம், கல்லீரல் (ஆடு, கோழி), கீரைகள், பீன்ஸ், பட்டாணி, பருப்புகள் மற்றும் பச்சை வாழைப்பழம். 

மாத்திரைகள் 

மீன் எண்ணெய் மாத்திரைகள், இரும்பு சல்பேட்

இரும்புச் சத்தை மாத்திரை வடிவில் வாய் வழியாக உட்கொள்ளலாம். ஊசிகளாக எடுப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.


Tags : Health and Hygiene | Term 1 Unit 6 | 7th Science உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 6 : Health and Hygiene : Diseases Health and Hygiene | Term 1 Unit 6 | 7th Science in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும் : நோய்கள் - உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும்