முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - உடல் நலமும் சுகாதாரமும் | 7th Science : Term 1 Unit 6 : Health and Hygiene
அலகு 6
உடல் நலமும் சுகாதாரமும்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன:
* உடலைப் பாதுகாக்கும் வழிமுறைகளை விவரித்தல்.
* பல், கண், முடி ஆகியவற்றைப் பராமரிக்கும் முறைகளை அறிந்துகொள்ளல் மற்றும் சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுதல்.
* தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பற்றி புரிந்துகொள்ளல்.
* சில பொதுவான நோய்கள் மற்றும் அவற்றைக் குணப்படுத்தும் வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்ளல்.
* முதலுதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி அறிந்துகொள்ளல்.
அறிமுகம்
நீங்கள் எப்பொழுதாவது உடல்நலக் குறைவு காரணமாக பள்ளிக்குப் போகாமலிருந்தது உண்டா? உடல் நலமின்மையின் போது நமக்கு என்ன நிகழ்கிறது? சில நேரங்களில், எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளாமல் நமது உடல்நிலை சரியாகி விடுகிறது. சில நேரங்களில் நாம் மருத்துவரை அணுகி ஆலோசித்த பின் மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அது ஏன்?
நோய்களைத் தடுக்கவும், அவற்றிற்கு முறையான சிகிச்சையளிப்பதற்கும் நோய்கள் மற்றும் அவற்றிற்கான காரணத்தைப் பற்றி அறிவது அவசியமாகும். இப்பாடம் நோய்க்கான பல்வேறு காரணங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும். இப்பாடத்தில், உடல் நலம் மற்றும் சுகாதாரம், உடல் நலம் பேணுதல், நோய்கள், குழந்தைகளில் காணப்படும் நோய்கள் மற்றும் பாதுகாப்பு பற்றிக் காண இருக்கிறோம்.
சுகாதாரம்
உடல் நலமே உண்மையில் சிறந்த செல்வம் ஆகும். உங்கள் உடல் நலமாக இருந்தால், நல்ல மனதுடன் நீங்கள் நல்ல அறிவையும், அத்துடன் செல்வத்தையும் பெறலாம். உடல் நலம் என்பது, நோய்கள், மன அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகள் இல்லாத நல்ல மனநிலை மற்றும் உடல்நிலையைக் குறிக்கிறது. சுருக்கமாகக் கூறினால், உடல் நலம் என்பது ஒரு நபரின் உடல், உணர்ச்சி மற்றும் உளவியல் நல்வாழ்வைக் குறிக்கிறது. நல்ல உடல் நலத்தைப் பேணுவதற்கு, சிறந்த சுகாதாரத்தைப் பின்பற்றுவதோடு, சத்து நிறைந்த உணவை உண்பது, உடற்பயிற்சி செய்வது, ஓய்வெடுப்பது மற்றும் நன்கு உறங்குவது போன்றவை அவசியமாகும்.
சுகாதாரம் என்பது நோய்களைத் தடுப்பதற்காகவும், நல்ல ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தூய்மையைப் பேணுதல், பாதுகாப்பான குடிநீர் பருகுதல் மற்றும் சரியான முறையில் கழிவுகளை அகற்றுதல் போன்ற சிறந்த செயல்கள் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறிப்பதாகும். இது நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் திடமான மனநிலையை மேம்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் குறிக்கிறது.
தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பராமரிப்பதே தூய்மை எனப்படும். சுருக்கமாகக் கூறினால், நல்ல உடல் நலத்தைப் பேணுவதற்காக சுத்தமாக இருக்கும் நிலையை இது குறிக்கிறது. நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, தினமும் குளித்தல், ஆடைகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளல் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்தல் போன்றவை அவசியம்.
தனிநபர் சுகாதாரம்
தனிநபர் சுகாதாரம் என்பது ஒருவர் மேம்பட்ட உடல் நலனை அடைவதற்காக, தனது உடல் தேவை மற்றும் உள்ளத் தேவைகளை சமநிலையில் வைத்துக் கொள்வதுடன் தொடர்புடையது என்று வரையறுக்கப்படுகிறது. இது, உடல் நலத்தின் ஒரு பிரிவாகும்.
சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவான தொற்று நோய்களாகும். இவை பாக்டீரியாவால் மட்டுமல்லாமல் வைரஸ் மூலமாகவும் தோன்றுகின்றன. உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் இருக்கும் பொழுது, தொடர்ந்து நாசியில் ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, சில சமயங்களில் உடல் வெப்பநிலை அதிகரிப்பு அல்லது மூட்டுகளில் வலி ஆகியவை ஏற்படலாம். சில நேரங்களில் லேசான வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.
சளியினால் பாதிக்கப்பட்ட உனது நண்பன் அல்லது உன்னுடன் படிக்கும் மாணவன் உனக்கு முன்பாக தும்மினாலோ அல்லது இருமினாலோ என்ன நிகழும்? அவ்வாறு தும்மும்போது, மூக்கிலிருந்து ஒருசில சுரப்புக்கள் வெளியேறும். நாசியிலிருந்து இருந்து வெளியேறும் சளியில் பாக்டீரியா அல்லது வைரஸ் காணப்படலாம். நோயாளி நாசியைத் தொட்டபின் வேறு பொருளையோ அல்லது வேறு நபரையோ தொடும்போது வைரஸ் பிறருக்குப் பரவுகிறது. நோயாளி தும்மும்போது அல்லது இருமும்போது வெளியேறும் துளிகளில் வைரஸ் இருந்தால், அந்த வைரஸ் காற்றில் பரவுகிறது. எனவே சளி மற்றும் காய்ச்சல் உடையவர்கள் எவ்விதத்திலும் மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் இருப்பதற்காக கைக்குட்டையைப் பயன்படுத்தி நாசியைச் சிந்துவதும், கைகளை அடிக்கடி கழுவுவதும் அவசியமாகும்.
செயல்பாடு 1
கொடுக்கப்பட்ட அட்டவணையில் உங்கள் தினசரிச் செயல்களைப் பட்டியலிடுங்கள்.
நீங்கள் தன் சுத்தத்தைப் பேணுகிறீர்களா?
நீங்கள் சிறந்த உடல் தகுதியுடன் இருப்பதற்கு இச்செயல்கள் எவ்வாறு உதவும்?
சமூக சுகாதாரம்
ஒரு சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களால் உருவாகிறது. அச்சமூகத்தில் வாழும் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்பினால், அவர்கள் அடிப்படையான சமூக சுகாதாரத்தைக் கட்டாயம் பராமரிக்க வேண்டும். பின்வரும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் அடிப்படையான சமூக சுகாதாரத்தைப் பராமரிக்கலாம்.
* நாம் வாழும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
* வடிகால்கள் (சாக்கடை) சரியான முறையில் மூடப்பட்டிருக்க வேண்டும்.
* வீடுகளில் பயன்படுத்தப்பட்டபின், கழிவுநீரை திறந்த குழாய்களிலோ அல்லது திறந்தவெளியிலோ வெளியேற்றக்கூடாது.
* வீட்டுக் குப்பைகளை அரசு வழங்கியுள்ள குப்பைத்தொட்டிகளில் (பச்சை மற்றும் நீலம்) தனித்தனியாகப் பிரித்து (மக்கும் மற்றும் மக்கா குப்பை) முறையாகவும் பாதுகாப்பாகவும் அகற்ற வேண்டும்.
டெங்கு காய்ச்சலானது DEN - 1, 2 வைரஸால் (இது பிளேவி வைரஸ் வகையைச் சார்ந்தது) தோற்றுவிக்கப்பட்டு ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களினால் பரவுகிறது. இது இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இந்தக் கொசுக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து அதிகபட்சமாக 50-100 மீட்டர் சுற்றளவில் பரவக்கூடியவை.
செயல்பாடு 2
படத்தைக் கவனித்து, அவற்றைச் சரிசெய்யும் செயல்களை எழுது.
1. அனைத்து குப்பைகளையும் குப்பைத் தொட்டியில் மட்டுமே போடவேண்டும் .
2. குப்பைத் தொட்டியில் மூடி இருக்க வேண்டும் அதை சரியாக மூடி வைக்க வேண்டும் .
3. வடிகால் மூடப்பட வேண்டும் தெருவில் ஓட கூடாது .
4. வீட்டுக் கழிவுகளை மக்கும் மற்றும் மக்காதவை எனப் பிரிக்க வேண்டும் .
5. அவை சம்பந்தப்பட்ட கொள்கலன்களில் கைவிடப்பட வேண்டும் .
6. உணவுப் பொருட்களை சரியாக மூடி வைக்க வேண்டும் ஈக்களால் அசுத்தமான எதையும் நாம் சாப்பிட கூடாது.