Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | பாதுகாப்பு மற்றும் முதலுதவி

உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - பாதுகாப்பு மற்றும் முதலுதவி | 7th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

   Posted On :  09.05.2022 06:39 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும்

பாதுகாப்பு மற்றும் முதலுதவி

முதலுதவி என்பது விபத்து மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்கும் முன் வழங்கப்படும் உடனடிச் சிகிச்சையாகும்.

பாதுகாப்பு மற்றும் முதலுதவி

முதலுதவி என்பது விபத்து மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்கும் முன் வழங்கப்படும் உடனடிச் சிகிச்சையாகும். பின்வரும் காரணங்களுக்காக இது மிகவும் அவசியமாகும்.

* இது உயிரைப் பாதுகாக்கிறது. 

* இரத்தக் கசிவைத் தடுத்து நோயாளியின் நிலையை உறுதிப்படுத்துகிறது. 

* வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. 

* ஆரம்பநிலையில் ஒரு அவசர மருத்துவ உதவியை வழங்குகிறது.



1. தீக்காயங்கள்

வெப்பம், வேதிப்பொருள்கள், மின்சாரம், சூரிய ஒளி அல்லது அணுக்கதிர்வீச்சினால் திசுக்கள் சேதமடைவதே தீக்காயம் என்று அழைக்கப்படுகின்றது. பெரும்பாலான தீக்காயங்கள் வெந்து போதல், கட்டிடத் தீ, தீப்பற்றக்கூடிய திரவங்கள் மற்றும் வாயுக்களால் ஏற்படுகின்றன. பாதிப்பின் வீரியத்திற்கு ஏற்ப தீக்காயங்கள் மூன்று வகைப்படும்.


* முதல் நிலை தீக்காயங்கள் தோலின் வெளிப்புற அடுக்கினைப் (மேல்புறத் தோல்) பாதிப்படையச் செய்கின்றன. 

இரண்டாம் நிலை தீக்காயங்கள் மேல்புறத் தோல் மற்றும் அதற்குக் கீழ் உள்ள உட்தோலில் (டெர்மிஸ்) பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

மூன்றாம் நிலை தீக்காயங்கள் தோலின் முழு ஆழத்திற்குத் தோலினை அழித்து அடிப்படைத் திசுக்களையும் சிதைக்கின்றன. இத்தகைய தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் தோல் ஒட்டுதல் (skin grafting) தேவைப்படுகிறது.


தீக்காயங்களுக்கு முதலுதவி

சிறிய தீக்காயங்களைப் பொருத்தவரை, பாதிக்கப்பட்ட பகுதியை குளிர்ந்த நீரில் கழுவி, கிருமிநாசினிக் களிம்பைத் தடவ வேண்டும். கடுமையான தீக்காயங்கள் மூலம், திசுக்களின் ஆழமான அடுக்குகள் அழிக்கப்பட்டு, கொப்பளங்கள் தோன்றியிருந்தால், நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். காயம்பட்ட இடத்தைச் சுற்றிச் சுத்தமான ஒட்டக்கூடிய தன்மையற்ற துணி அல்லது கட்டுத்துணியால் சுற்ற வேண்டும். பெரிய தீக்காயங்களாக இருந்தால் உடனடியாக மருத்துவரின் சிகிச்சையை நாட வேண்டும். தீயணைப்பான்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். 


2. வெட்டுக்காயங்கள் மற்றும் கீறல்கள்

வெட்டுக்காயம் மற்றும் கீறல்கள் ஆகியவை தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பாதிப்புகளாகும். வெட்டுக்காயத்தில், நீளவாக்கில் தோல் கிழிந்து தசைத் திசுக்கள் வரை பாதிப்பு ஏற்படுகிறது.


ஆனால், கீறல், தோலின் மேற்பரப்பை மட்டுமே சேதப்படுத்துகிறது. திசுக்களில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை . வெட்டுகள் மற்றும் கீறல்கள் இரத்தக்கசிவு, தோல் சிவந்து போதல், நோய்த் தொற்று மற்றும் வடுக்களை ஏற்படுத்தலாம்.

வெட்டுக்காயத்திற்கான முதலுதவி

சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியைச் சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவிய பின் ஒரு கிருமிநாசினித் திரவத்தால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, காயம் பட்ட இடத்தில் கிருமிநாசினிக் களிம்பு இட்டு, தொற்றுநோயைத் தடுக்கும் வண்ணம் காயம்பட்ட இடத்தைச் சுற்றி கட்டுத்துணியால் கட்ட வேண்டும். வெட்டு ஆழமாக இருந்தால், ஒரு சுத்தமான பருத்தித் திண்டு (cotton pad) வைத்து அழுத்திப் பிடித்தவாறு, காயமடைந்த நபரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.



தூய்மை மற்றும் பாதுகாப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள்

மற்றவர்களைக் காப்பாற்ற உதவுவது மிகவும் முக்கியமானதாகும். அதே நேரத்தில் எச்.ஐ.வி மற்றும் பிற இரத்தத்தால் பரவும் நோய்களிலிருந்து நீங்கள் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இரத்தம் சிந்தும் ஒருவரைக் காப்பாற்றும் போது கையுறைகள் அல்லது ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பையை உங்கள் கைகளில் அணிந்திருப்பது அவசியம். ஆபத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றுகின்றபோது ஊசிகள் அல்லது பிற கூர்மையான பொருள்களால் காயமடையாதவாறு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


Tags : Health and Hygiene | Term 1 Unit 6 | 7th Science உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 6 : Health and Hygiene : Safety and First Aid Health and Hygiene | Term 1 Unit 6 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும் : பாதுகாப்பு மற்றும் முதலுதவி - உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும்