ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நிறப்பிரிகை | 8th Science : Chapter 3 : Light
நிறப்பிரிகை
செயல்பாடு 7
மேசையின்மீது
ஒருமுப்பட்டகத்தினையும் அதனருகில் ஒரு வெள்ளைத் திரையையும் வைக்கவும். டார்ச் விளக்கிலிருந்து
வரும் ஒளியை முப்பட்டம் வழியேப் பாயச் செய்யவும். இப்போது நீங்கள் காண்டது என்ன? வெள்ளை
ஒளியானது ஊதா, கருநீலம் (indigo), நீலம், பச்சை, மஞ்சள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு என
ஏழு வண்ணங்களாக (VIBGYOR) நிறப்பிரிகை அடைவதை உங்களால் காணமுடியும். இப்போது மற்றொரு
முப்பட்டகத்தை படத்தில் காட்டியவாறு முதல் முப்பட்டகத்திற்கும் திரைக்கும் இடையில்
தலைகீழாக வைக்கவும். தற்போது திரையில் நீங்கள் காண்பது என்ன? இரண்டாவது முப்பட்டகத்திலிருந்து
வரும் ஒளியானது வெண்மை நிறத்தில் இருப்பதை. நீங்கள் காணலாம்.
மேற்கண்ட செயல்பாட்டில் முதல் ஒளியை முப்பட்டகமானது வெண்மை நிற
ஏழு வண்ணங்களாக நிறப்பிரிகை அடையச் செய்வதையும், இரண்டாவது முப்பட்டகமானது அவற்றை ஒன்றிணைத்து
மீண்டும் வெண்மை நிற ஒளியை உருவாக்குவதையும் காணலாம். வெண்மை நிற ஒளியானது ஏழு வண்ணங்களைக்
கொண்டுள்ளது என்பது இதன்முலம் தெளிவாகிறது. நியூட்டன் வட்டுச் சோதனையை நீங்கள் ஏழாம்
வகுப்பில் பயின்றுள்ளீர்கள் அல்லவா? அதனை நினைவு கூற முடிகிறதா?
ஒளி ஊடுருவும் ஊடகத்தின் வழியே வெண்மை நிற ஒளியானது செல்லும்போது
அது ஏழு வண்ணங்களாகப் (அலைநீளம்) பிரிகை அடைகிறது. இதனையே நிறப்பிரிகை' என்றழைக்கிறோம்.
நிறப்பிரிகை ஏன் ஏற்படுகிறது? வெண்மைநிற ஒளியில் உள்ள வெவ்வேறு
வண்ணங்கள் வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்டுள்ளன. மேலும், அவை வெவ்வேறு ஊடகத்தில் வெவ்வேறு
திசைவேகத்தில் செல்லக்கூடியவை. ஓர் ஊடகத்தின் ஒளிவிலகலானது அந்த ஊடகத்தில் ஒளியின்
திசைவேகத்தைச் சார்ந்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு வண்ண ஒளியும் வெவ்வேறு
திசைவேகத்தைக் கொண்டுள்ளதால், வெவ்வேறு வண்ண ஒளிக்கதிர்கள் முப்பட்டகத்திற்குள் வெவ்வேறு
திசைகளில் விலகலடைந்து பிரிகை அடைகின்றன. மேலும், ஒளிவிலகல் ஒளியின் அலைநீளத்திற்கு
எதிர்த் தகவில் இருக்கும்.
வெள்ளொளிக்
கதிரின் நிறப்பிரிகைக்கு வானவில் தோற்றம் ஓர் எடுத்துக்காட்டாகும். சூரியன் இருக்கும்
திசைக்கு எதிர்த்திசையில் வானவில்லைக் காணமுடியும். மழைக்குப் பிறகு எண்ணற்ற நீர்த்
துளிகள் காற்றில் மிதந்து கொண்டிருக்கும். இவற்றின் வழியே ஒளி செல்லும்போது அது ஏழு
வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது. வெள்ளொளியின் நிறப்பிரிகையானது அதிக அளவு மழைத் துளிகளில்
நிகழ்வதால் இறுதியில் வானவில் உருவாகிறது.
எனவே, அதிக அலைநீளத்தைக் கொண்டுள்ள சிவப்பு நிற ஒளிக் கதிரானது
குறைந்த விலகலையும், குறைந்த அலைநீளத்தை கொண்டுள்ள ஊதா நிறக் கதிர் அதிக அளவு விலகலையும்
கொண்டுள்ளது.