கருத்துசார் நிலவரைபடம் - புள்ளியிடுதல் முறை | 12th Geography : Chapter 11 : Thematic Mapping
புள்ளியிடுதல் முறை
நிலவரைபடத்தில் அறுதி எண்களைக் காட்ட புள்ளியிடுதல் முறை ஏற்ற முறையாகும். ஒவ்வொரு புள்ளிக்கும் எண் மதிப்பீடு கொடுக்கப்படுகிறது. காரணிகளின் பரவலுக்கு ஏற்ப புள்ளிகள் காட்டப்படுகின்றன. இம்முறை தெளிவான காட்சித் தோற்றத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் புவிக்காரணிகளின் உண்மையானப் பரவலை தெரிந்துகொள்ளவும் உதவுகிறது. மேலும் இது புவியியல் காரணிகளுக்கு இடையேயான தொடர்புகளைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
புள்ளியிடுதல் முறையின் பயன்கள்
நிர்வாகப் பிரிவுகள் வாரியாக அறுதிப் புள்ளிவிவரங்கள் கிடைக்கும் போது மக்கள் தொகை, கால்நடை, பயிரிடப்பட்ட நிலப் பகுதிகள், பொருட்களின் உற்பத்தி போன்றவற்றின் பரவலைக் காட்டப் புள்ளியிடுதல் முறை பயன்படுகிறது.
புள்ளிகள் வட்ட வடிவமாகவும் ஒரே அளவுடையதாகவும் இருக்க வேண்டும். அவை சிறிய அளவிலும் ஆனால் நேர்த்தியாகவும் இருக்கவேண்டும். புள்ளியிடுதல் முறையில் சுமார் 1 முதல் 1.5 மி.மீட்டர் விட்டமுடைய புள்ளிகள் வரையப்படுகின்றன. இந்த அளவில் காட்டப்படும் புள்ளிகள் பயனுள்ளதாக காணப்படுகின்றன. புள்ளிகளுக்கு கொடுக்கப்படும் எண் மதிப்பு கவனமாக தீர்மானிக்கப்பட வேண்டும். அதில் மிக அதிக மற்றும் மிகக் குறைந்த எண் மதிப்புகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நிலவரைபடத்தில் புள்ளிகளைக் காட்டும் போது புவியியல் கூறுகளை கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனென்றால் ஓரிடத்தின் புவியியல் கூறுகள் பற்றிய அறிவு மிக அவசியமானதாகும். மணற்பாங்கான பாறைப் பகுதிகள் மற்றும் வனப்பகுதிகள் இயற்கையாகவே வேளாண்மை மற்றும் குடியிருப்புகளுக்கு ஏற்றதாக இருப்பதில்லை . சதுப்பு நிலப்பகுதிகள், ஏரிகள், மற்றும் ஆற்றுப்படுகைகள் காணப்படும் இடங்களில் புள்ளிகளைக் குறிக்கக்கூடாது. உற்பத்தி இல்லாத இடங்களை எதிர்மறை நிலங்கள் என்கிறோம். இப்பகுதிகளை முதலில் கண்டறிந்து பென்சிலால் மெல்லியதாக வண்ணமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தேவையற்றப் பகுதிகளில் புள்ளிகளைக் காட்டுவதைத் தவிர்க்கலாம். நிலவரைபடத்தில் புள்ளிகள் வைத்து முடித்த பிறகு தேவையற்றப் பகுதிகளில் பென்சிலால் வண்ணமிட்டிருப்பதை நீக்கிவிடலாம்.
நிர்வாகப் பிரிவுகளின் எல்லைளைக் காட்டும் புற வரி நிலவரைபடம் தேவை. சிறிய அளவில் உள்ள நிர்வாகப் பிரிவுகளை எடுத்துகொள்ளவும். ஒரு பகுதியின் தலப்படம், நீர்ப்பாசன நிலவரைபடம், நிலத்தோற்ற நிலவரைபடம், மண் மற்றும் மழைப் பரவல் நிலவரைபடம் போன்றைவயும் புள்ளியிடுதல் முறைக்கு பயன்படுத்தப்படுகிறது.
• புள்ளியிடுதல் நிலவரைபடம் உருவாக்கும் நிலப்பகுதிக்கான அடிப்படை நிலவரைபடத்தை பெறவேண்டும்.
• பெறப்பட்ட தரவினை புள்ளியாகக் காட்ட புள்ளிக்கு இணையான எண் மதிப்பை முடிவு செய்யவேண்டும் (முழு எண்ணாக இருக்கவேண்டும்).
• புள்ளியின் வடிவம் மற்றும் அளவை பொருத்தமானதாக நிர்ணயிக்க வேண்டும். பொதுவாக, மிகச் சிறியப் புள்ளிகள் அதிக அளவில் சிதறிக் காணப்படுவதுடன் மட்டுமல்லாமல் துல்லியமாகவும் இருப்பதில்லை.
• படிநிலை இரண்டில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு நிர்வாகப் பகுதிகளிலும் சரியான எண்ணிக்கையிலான புள்ளிகளைக் குறிக்கவேண்டும்.
அட்டவணை 11.1 இல் கொடுக்கப்பட்டுள்ள மக்கள்தொகை தரவுகைளக் கொண்டு புள்ளியிடுதல் நிலவரைபடத்தை வரைக.