பொருளாதரத்தில் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கோட்பாடுகள் - விளைவுத் தேவை | 12th Economics : Chapter 3 : Theories of Employment and Income
விளைவுத் தேவை (Effective Demand)
வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸ் கோட்பாட்டின் ஆரம்பப் புள்ளியே "விளைவுத் தேவை" கருத்தாகும். விளைவுத்தேவை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மீது உண்மையிலேயே செலவு செய்கிற பணத்தின் அளவு ஆகும். தொழில் முயல்வோர்கள், வட்டி, வாடகை, கூலி மற்றும் இலாபம் போன்றவற்றை பணமாகவே கொடுப்பார்கள்; எனவே விளைவுத் தேவை தேசிய வருவாய்க்குச் சமமாக இருக்கும்.
மொத்த விளைவுத் தேவை (Aggregate effective demand) அதிகரிக்கும் போது வேலை வாய்ப்பின் அளவிலும் ஏற்றம் வரும். மொத்த விளைவுத் தேவை குறையும் போது வேலையின்மை சிக்கல் தோன்றும். ஆகவே நாட்டின் மொத்த வேலை வாய்ப்பு, தொகு தேவையின் உதவியுடன் தீர்மானிக்கப்படுகிறது.
கீன்ஸின் வேலைவாய்ப்பு கோட்பாட்டின்படி, பொருட்கள் மற்றும் பணிகளின் நுகர்வு மற்றும் மூலதனத்திற்காக செலவு செய்யப்பட்ட பணமே விளைவுத் தேவை ஆகும். எனவே மொத்தச் செலவு, தேசிய உற்பத்திக்கும், தேசிய வருவாய்க்கும் சமமாக இருக்கும். ஒரு நாட்டில் உற்பத்திக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு விளைவு தேவையின் அளவைப் பொறுத்து அமைகிறது. விளைவுத் தேவையின் அளவு தொகு அளிப்பையும் தொகு தேவையையும் சார்ந்து உள்ளது.
ED = Y = C + I = வெளியீடு = வேலைவாய்ப்பு
“விளைவுத் தேவை” ஒரு பொருளதாரத்தின் வேலைநிலையை நிர்ணயிக்கிறது. விளைவுத் தேவை அதிகரிக்கும் போது, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மாறாக, விளைவுத்தேவை குறைந்தால் வேலைவாய்ப்பும் குறையும். நுகர்வு மற்றும் முதலீட்டுச் செலவு ஆகிய இரண்டு காரணிகளும் விளைவுத் தேவையின் அளவை நிர்ணயிக்கின்றன. தொகுத் தேவையில், நுகர்வுச் சார்பை மக்களின் வருமானமும் இறுதி நிலை நுகர்வு விருப்பமும் (Marginal Propensity to Consume: MPC) நிர்ணியிக்கின்றன. கீன்ஸின் கூற்றுப்படி, வருமானம் கூடினால் நுகர்வும் கூடும். ஆனால் வருமானம் கூடுகின்ற அதே விகிதத்தில் நுகர்வு விகிதம் அதிகரிக்காது.
முதலீட்டு அளவை, வட்டிவீதம் மற்றும் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்க திறன் (Marginal Efficiency of Capital:MEC) ஆகிய இருகாரணிகளும் நிர்ணயிக்கின்றன. வட்டி வீதமானது, பண அளிப்பு மற்றும் பணத்தின் ரொக்க இருப்பு விருப்பம் ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது. ரொக்க இருப்பு விருப்பத்திற்கு கீன்ஸ் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். ரொக்க இருப்பு விருப்பம் மூன்று நோக்கங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. அவை: பேரநோக்கம், முன்னெச்சரிக்கை நோக்கம் மற்றும் ஊக நோக்கம் ஆகும். மூலதன சொத்திலிருந்து கிடைக்கின்ற வருமானம் மற்றும் மூலதனத்தின் அளிப்பு விலை ஆகிய இரண்டு காரணிகளையும் MEC சார்ந்து உள்ளது.
1. தொகு தேவைச் சார்பு (Aggregate Demand Function: ADF)
கீன்ஸ் கோட்பாட்டின் படி, ஒரு பொருளாதாரத்தின் தொகு தேவை தான் உற்பத்தியை நிர்ணயிக்கிறது. உழைப்பாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பதால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று தொழில் முனைவோர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதுவே மொத்த தேவை. அதாவது, வேறுபட்ட வேலை நிலையில் உற்பத்தி செய்ததை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் அல்லது எதிர்பார்க்கும் வருவாய் எனலாம்.
தொகுத் தேவை கீழ்க்காணும் நான்கு பகுதிகளைக் கொண்டது.
1. நுகர்வுத் தேவை
2. முதலீட்டுத் தேவை
3. அரசுச் செலவு
4. நிகர ஏற்றுமதி-இறக்குமதி (Export - Import)
விரும்புகிற அல்லது திட்டமிடுகிற தேவை (செலவு) என்பது குடும்பங்கள், நிறுவனங்கள், அரசு மற்றும் வெளிநாட்டிலிருந்து வாங்குவோர் (ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே உள்ள வித்தியாசம்) ஆகியோர் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதற்காக செய்கின்ற செலவு தொகையாகும். விரும்புகிற செலவு என்பது மொத்தச் செலவு (தேவை) என்றும் அழைக்கப்படுகிறது. இதனை கீழ்கண்ட வாய்ப்பாட்டின் மூலம் குறிப்பிடலாம்.
AD = C + I + G + (X - M)
கீழ்கண்ட வரைபடம் 3.1. தொகுத் தேவைக்கும், வேலைவாய்ப்புக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது.
வேலைவாய்ப்பு அதிகரித்தல் மற்றும் குறைதல் ஆகியவற்றிற்கு ஏற்ப மொத்த தேவை கூடும் அல்லது குறையும். வரைபடத்தில் முதலில் மொத்த தேவை வளைகோடு அதிகரிக்கும் விகிதத்தில் அதிகரிக்கின்றது. பின்பு இவ்வளைகோடு குறையும் விகிதத்தில் அதிகரிக்கிறது அதாவது வேலைவாய்ப்பு அதிகரித்தால் வருமானம் அதிகரிக்கும். ஆனால் வருமானம் அதிகரித்த வீதத்தில் பொருளாதாரத்தில் செலவு அதிகரிப்பது இல்லை. மாறாக, குறைந்த விகிதத்தில் அதிகரிக்கிறது என்பதை வரைபடம் விளக்குகிறது.
2. தொகு அளிப்புச் சார்ப்பு (Aggregate Supply Function: ASF)
தொகு அளிப்புச் சார்பு என்பது அதிகரிக்கும் வேலைவாய்ப்பை குறிப்பிடுகிறது. ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் தொகு மதிப்பே தொகு அளிப்பு எனப்படும். எனவே தொகு அளிப்பு என்பது தேசிய உற்பத்தியின் மதிப்பு அல்லது தேசிய வருமானத்திற்குச் சமமாக இருக்கும். தொகு அளிப்புச் சார்பு வேலைவாய்ப்பு அளவோடு சேர்ந்து அதிகரிக்கும்.
தொகு அளிப்பு என்பது தேவையான உற்பத்தியை நாட்டில் அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்படும் தேவையான உழைப்பாளர்கள் எண்ணிக்கை மற்றும் பிற பொருட்கள் பயன்படுத்துவதை குறிக்கும். உற்பத்திக்காக முதலாளிகள், உழைப்பாளர்கள் இடு பொருட்கள் போன்ற பலவற்றை விலைகொடுத்து வேலைக்கு அமர்த்துவார்கள். ஆகவே உற்பத்தியில் செலவும் அடங்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில், நிறுவனத்தின் உற்பத்திச் செலவைவிட, சரக்குகளை விற்பதால் கிடைக்கும் வருவாய் அதிகமாக இருந்தால், நிறுவனங்கள், மேலும் அதிகமான உழைப்பாளர்களையும் மற்ற இடுபொருள்களையும் வாங்குவதற்கு முனைவார்கள்.
தொகு அளிப்பு விலை என்பது ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்பையும் இடுபொருட்களையும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்ற பிறகு கிடைக்கும், ‘எதிர்பார்க்கப்படும் (வருமானம்) மொத்த தொகை’ ஆகும். இங்கு "விலை" என்பது விற்பனையால் கிடைத்த வருவாயை குறிப்பிடுகிறது.
தொகு அளிப்பின் கூறுகள்:
தொகு அளிப்பில் கீழ்கண்ட நான்கு பகுதிகள் உள்ளன.
1. மொத்த (விரும்பப்படுகிற) நுகர்வுச் செலவு (C)
2. மொத்த (விரும்பப்படுகிற) தனியார் சேமிப்பு (S)
3. நிகர வரி வசூல் (T). அரசுபெற்ற மொத்த வரிவருமானத்தில் இருந்து மாற்றுச் செலுத்தல்கள் (Transfer Payments), ஓய்வூதியம், மானியம், அரசு செலுத்தவேண்டிய வட்டி ஆகியவற்றைக் கழித்த பிறகு கிடைக்கும் தொகையாகும். மற்றும்
4. தனிநபர் (விரும்பப்படுகிற) வெளிநாட்டவர்க்கு (உறவினர் மற்றும் நண்பர்கள்) கொடுக்கின்ற மாற்று செலுத்துதல்கள்மற்றும் உதவித்தொகை. இது Rf (வெளிநாட்டிற்கு வழங்கிய நிவாரண தொகை) என குறிக்கப்படுகிறது.
மொத்த அளிப்பு = C + S + T + Rf
ஆக, ஒரு பொருளதாரத்தில் உருவாக்கப்பட்ட மொத்த வருமானம்.
கீழ்கண்ட வரைபடம், தொகு அளிப்பை கோட்டை விளக்குகிறது. வரைபடத்தில், நிலையான பணக்கூலி மற்றும் மாறும் கூலி நிலவும் என்ற எடுகோளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு அளிப்புக் கோடுகள் வரையப்பட்டுள்ளன.
மொத்த அளிப்பு வளைகோடு
வரைபடம் வேலைவாய்ப்புக்கும், எதிர்பார்க்கும் வருமானத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட Z நேர்கோடு என்பது பணக்கூலி மாறாமல் இருக்கும் போது உள்ள நிலையையும் மற்றொன்று (Z1) வேலைவாய்ப்பைப் பொறுத்து பணக்கூலி மாறும்போது உள்ள நிலையையும் விளக்குகின்றன. Z கோடு நேர்கோடாகவும், Z1 கோடு குறிப்பிட்ட நிலைக்கு பிறகு வளைகோடாகவும் இருக்கிறது ONf அளவில் பொருளாதாரம் முழுவேலை நிலையை அடைகிறது. அதற்குப் பின்பு உழைப்பினை அதிகப்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்த இயலாது. எனவே, Nf க்குப் பின்னர், தொகு அளிப்புக்கோடு செங்குத்தாக, நெகிழ்வற்றதாக உள்ளது.
தொகு அளிப்பு கோட்டின் சாய்வு (Slope) என்பது வேலைவாய்ப்புக்கும் உற்பத்தித் திறனுக்கும் இடையே உள்ள தொடர்பைப் சார்ந்து அமைந்துள்ளது. மூலதன இருப்பு மாறாமல் இருக்கும்போது அதிக உழைப்பாளர்களை பணியிலமர்த்துவதால் குறைந்துசெல் இறுதிநிலை விளைவு செயல்படுகிறது. பொதுவாக தொகு அளிப்பு வளைகோடு Zf போன்று இருக்கும். ஆகவே விலைக்கும் கூலிக்கும் உள்ள தொடர்பை சார்ந்துதான் தொகு அளிப்பு இருக்கும். பொருளின் விலை அதிகமாக இருந்து கூலிகுறைவாக இருந்தால், உற்பத்தியாளர்கள் கூடுதாலாக உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவார்கள். மாறாக பொருட்களின் விலை குறைவாக இருந்து கூலி அதிகமானால், முதலீடு குறையும். இதனால் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனும் குறையும். எனவே பொருளாதார நடவடிக்கையை தீர்மானிக்கும் காரணிகளில் தொகு அளிப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது.
3. ADF மற்றும் ASF - ன் சமநிலை (Equilibrium between ADF and ASF)
கீன்ஸின் வேலைவாய்ப்பு கோட்பாட்டில், ADF மற்றும் ASF சமநிலையை விளக்க, குடும்பங்கள் மற்றும் வியாபாரம் ஆகிய இரு துறைகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நுகர்வு செலவு தொடர்பான முடிவுகளை குடும்பங்களும், முதலீடு தொடர்பான முடிவுகளை வியாபார நிறுவனங்களும் எடுக்கின்றன. மேலும் நுகர்வுச் சார்பு நேர்கோடு ஆகவும், முதலீடு தன்னிச்சையானது (Autonomous) எனவும் கீன்ஸின் கோட்பாடு அனுமானிக்கிறது.
கீன்ஸின் கோட்பாட்டில் வருமான சமநிலையை நிர்ணயிக்க இரு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை:
1. தொகுத் தேவை மற்றும் தொகு அளிப்பு அணுகுமுறை
2. சேமிப்பு மற்றும் முதலீடு அணுகுமுறை
இந்த அத்தியாயத்தில் மொத்த தேவை மற்றும் மொத்த அளிப்பு அணுகுமுறை மட்டும் விளக்கப்பட்டுள்ளது.
வரைபடம் 3.3.- ல் விளைவு தேவை கருத்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தொகுத் தேவை மற்றும் தொகு அளிப்பு 'E' என்ற புள்ளியில் சமநிலை அடைகிறது. இப்புள்ளியில் வேலை வாய்ப்பு No ஆக இருக்கும். ON1 அளவு வேலைவாய்ப்பில், தொகு அளிப்பு N1R1 ஆக இருக்கும். ஆனால் M1N1 அளவு உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களால் முடியும். எதிர்பார்க்கும் இலாபத்தை அடைய வேண்டிய உற்பத்தியின் அளவு M1 R1 ஆகும். இந்த இலாப நிலையில் முதலாளி அதிக உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவர். சமநிலை 'E' என்ற புள்ளியை அடைந்தபிறகு உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவர். ஏனெனில் No நிலைக்கு பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்தால் தொகுத் தேவை, தொகு அளிப்பைவிட குறைவாக இருக்கும். எனவே முதலாளித்துவ பொருளாதாரம் அல்லது திறந்த வெளிசந்தை பொருளாதாரத்தில் (கீன்ஸ் கோட்பாட்டின்படி) உற்பத்தி சமநிலையை தீர்மானிப்பத்தில் தொகுத் தேவை கருத்து அதிக முக்கியத்துவம் வகிக்கிறது.
கீன்ஸின் வேலைவாய்ப்பு கோட்பாட்டின் மைய கருத்து என்னவெனில், சமநிலை வேலைவாய்ப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம் முழுவேலை நிலையில் இருக்க வேண்டும் என்பதில்லை. வரைபடத்தில் No மற்றும் Nf க்கும் இடையே உள்ள வித்தியாசம் வேலையின்மையை காட்டுகிறது. ஆகவே வேலை சமநிலையை விளக்குவதில் விளைவுத்தேவை கருத்துமுக்கியப்பங்கு வகிக்கிறது.