Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | வேதிவினைகளின் விளைவுகள்

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | அலகு 10 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வேதிவினைகளின் விளைவுகள் | 8th Science : Chapter 10 : Changes Around Us

   Posted On :  28.07.2023 10:52 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

வேதிவினைகளின் விளைவுகள்

ஒவ்வொரு வேதி வினையும் நிகழ்வதற்கு குறிப்பிட்ட சூழ்நிலை தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். வேதிவினைகள் நிகழும்போது வெப்பம், ஒளி, ஒலி, அழுத்தம் போன்றவை உருவாவதோடு வேறுசில விளைவுகளும் ஏற்படுகின்றன.

வேதிவினைகளின் விளைவுகள்

ஒவ்வொரு வேதி வினையும் நிகழ்வதற்கு குறிப்பிட்ட சூழ்நிலை தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். வேதிவினைகள் நிகழும்போது வெப்பம், ஒளி, ஒலி, அழுத்தம் போன்றவை உருவாவதோடு வேறுசில விளைவுகளும் ஏற்படுகின்றன.

 

1. உயிரியல் விளைவுகள்


அ. உணவு, காய்கறிகள் கெட்டுப்போதல்

மனிதன் உண்பதற்குத் தகுதியில்லாத அளவிற்கு, உணவுப்பொருளில் ஏற்படும் மாற்றமே உணவு கெட்டுப்போதல் எனப்படும். என்சைம் என்ற உயிரி வினைவேகமாற்றி மூலம் நடைபெறும் வேதிவினை காரணமாக துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்பட்டு உணவின் தரம் குறைகின்றது.

உதாரணம்

• .முட்டைகள் அழுகும்பொழுது ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதால்  துர்நாற்றம் வீசுகிறது.

• .காய்கறிகள், பழங்கள் நுண்ணுயிரிகளால் கெட்டுப்போகின்றன.

 

ஆ. மீன், இறைச்சி துர்நாற்றமடித்தல்

மீன்களும், இறைச்சியும் அதிக அளவில் பலபடிநிறைவுறா கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவை காற்று அல்லது ஒளியுடன் ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்பட்டு துர்நாற்றத்தை வெளிவிடுகின்றன. இந்நிகழ்வு துர்நாற்றமடித்தல் (ஊசிப்போதல்) எனப்படும்.


 

இ. நறுக்கிய ஆப்பிள்கள் மற்றும் காய்கறிகள் பழுப்பு நிறமாதல்

ஆப்பிள்களும், வேறு சில பழங்களும் நறுக்கி வைத்த பிறகு காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் ஏற்படும் வேதிவினையால் பழுப்பு நிறமடைகின்றன. இந்நிகழ்வு பழுப்பாதல் எனப்படும். ஆப்பிள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் செல்கள் பாலிபீனால் ஆக்சிடேஸ் அல்லது டைரோசினேஸ் என்ற என்சைமைக் கொண்டுள்ளன. இவை ஆக்சிஜனுடன் தொடர்புகொள்ளும்பொழுது பழங்களிலுள்ள பீனாலிக் சேர்மங்களை மெலனின் எனப்படும் பழுப்பு நிறமிகளாக மாறச் செய்கின்றன.


 

2. சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள்


அ. சுற்றுச்சூழல் மாசுபாடு

நம்முடைய சுற்றுச்சூழலானது சுவாசிப்பதற்குக் காற்றையும், குடிப்பதற்கு நீரையும், உணவு உற்பத்தி செய்ய நிலத்தையும் வழங்கியிருக்கிறது. தொழிற்சாலைச் செயல்பாடுகள் மற்றும் வருகி வரும் வாகனங்களால் நம்முடைய சுற்றுச்சூழலானது மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய நிகழ்வு மாசுபடுதல் எனப்படும். மாசுபடுதலை நிகழ்த்தும் பொருள்கள் மாசுபடுத்திகள் எனப்படும். பொதுவாக மாசுபடுதல் மூன்று வகைப்படும். அவை காற்று, நீர் மற்றும் நில மாசுபாடாகும். பெருகிவரும் மனித செயல்பாடுகளால் அதிகளவு வேதிப்பொருள்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டு அவை உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களைப் பாதிப்படையச் செய்கின்றன. வேதிப்பொருள்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன (அட்டவணை 10.1).

.


ஆ. துருப்பிடித்தல்

மழைக்காலங்களில் இரும்பாலான மேசை மற்றும் நாற்காலிகளில் என்ன நடைபெறுகிறது? அவை செம்பழுப்பு நிறமாக மாறுகின்றன அல்லவா? இது ஏன் என்று உனக்குத் தெரியுமா? இரும்பாலான பொருள்கள் நீர் மற்றும் ஆக்சிஜனுடன் தொடர்புகொள்ளும்பொழுது உட்படுகின்றன. இந்நிகழ்வு எனப்படும்.



இ. உலோகப் பொருள்கள் நிறம் மங்குதல்

பளபளப்பான உலோகங்கள் மற்றும் பாத்திரங்கள் அவற்றின் மேற்பரப்பில் நடைபெறும் வேதிவினைகளின் காரணமாக பளபளப்புத் தன்மையை இழக்கின்றன. எடுத்துக்காட்டாக, வெள்ளிப் பொருள்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும்பொழுது கருமை நிறமுடையதாக மாறுகின்றன. அதுபோன்று தாமிரத்தைப் பகுதிப்பொருளாகக் கொண்ட பித்தளைப் பாத்திரங்கள் நீண்ட நாட்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்புகொள்ளும்பொழுது பச்சை நிறப்படலத்தை உருவாக்குகின்றன. ஏனெனில், தாமிரமும் ஈரக்காற்றும் வேதிவினைக்குட்பட்டு காரத்தன்மை வாய்ந்த தாமிர கார்பனேட்டையும் தாமிர ஹைட்ராக்சைடையும் உருவாக்குகின்றன.


 

3. வெப்பம், ஒளி, ஒலி மற்றும் அழுத்தம் உருவாதல்


அ. வெப்பம் உருவாதல்

குளிர்காலத்தில் உனது உடலை சூடாக வைத்திருக்க எப்போதாவது உள்ளங்கைகளைத் தேய்த்திருக்கிறாயா? உன் மிதிவண்டிக்கு காற்றடித்த பின்பு காற்றடிக்கும் பம்பு சூடாக இருப்பதைக் கவனித்திருக்கிறாயா? இதுபோன்று, வேதி வினைகள்கூட வெட்ப ஆற்றலை உருவாக்குகின்றன. இவ்வினைகள் வெப்ப உமிழ்வினைகள் சுட்ட எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சுண்ணாம்புடன் (கால்சியம் ஆக்சைடு) நீரைச் சேர்க்கும்பொழுது அதிகளவு வெப்பம் வெளிப்பட்டு நீற்றுச் சுண்ணாம்பு உருவாகிறது (கால்சியம் ஹைட்ராக்சைடு).

செயல்பாடு 4

இரு உலர்ந்த சோதனைக் குழாய்களை எடுத்துக் கொள்ளவும். ஒன்றில் சல்பியூரிக் அமிலத்தையும் மற்றொன்றில் சோடியம் ஹைட்ராக்சைடையும் எடுத்துக்கொள்ளவும். மெதுவாக கவனமுடன் சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலை சல்பியூரிக் அமிலத்துடன் சேர்க்கவும். சோதனைக் குழாயின் பக்கவாட்டுப் பகுதியை தொட்டுப்பார். என்ன உணர்கிறாய்? இந்த வினையிலிருந்து நீ என்ன முடிவுக்கு வருகிறாய்?


ஆ. ஒளி உருவாதல்

மெழுகுவர்த்தியை ஏற்றும்பொழுது அது எரிந்து ஒளியை உருவாக்குகிறது. சில வேதி வினைகளும் இதுபோன்று உருவாக்குகின்றன. உதாரணமாக, ஒளியை ஒரு மெக்னீசியம் நாடாவின் சிறு துண்டினை நெருப்புச் சுடரில் காட்டும்பொழுது அது எரிந்து கண்ணைக் கூசச்செய்யும் ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது. விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் மத்தாப்புகள் மற்றும் பட்டாசுகளும் பல்வேறு வண்ணங்களில் ஒளியை உமிழ்கின்றன. இந்த நிகழ்வுகள்யாவும் வேதிவினைகளால் நடைபெறுகின்றன.

 

இ. ஒலி உருவாதல்

நாம் பேசும்பொழுது ஒலியை உருவாக்குகிறோம். இரும்பு, காப்பர் போன்ற உலோகங்களைத் தட்டும் பொழுதும் நாம் ஒலியைக் கேட்கிறோம். இதுபோன்று, சில வேதிவினைகளும் ஒலியை உருவாக்குகின்றன. தீபாவளிக் கொண்டாட்டத்தில் வெடிகளைப் பற்ற வைக்கும்போது என்ன நடைபெறுகிறது? வெடிகளில் உள்ள வேதிப்பொருள்கள் வினைபுரிந்து வெடித்து ஒலியை உருவாக்குகின்றன.


செயல்பாடு 5

உலர்ந்த சோதனைக் குழாய் ஒன்றை சிறிதளவு எடுத்துக்கொள். அதில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் சேர். ஒரு சிறிய மெக்னீசிய நாடாத்துண்டு அல்லது ஜிங்க் (துத்தநாகம்) உலோகத்துண்டை அதனுடன் போடு. என்ன காண்கிறாய்? இப்பொழுது ஒரு எரியும் தீக்குச்சியை சோதனைக்குழாயின் வாய் அருகே கொண்டு வா. நீ என்ன கேட்கிறாய்? இச்சோதனையிலிருந்து நீ என்ன அறிகிறாய்?

உன்னால் பாப் என்ற ஒலியைக் கேட்க முடியும். ஜிங்க், மெக்னீசியம் போன்ற சில உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபடும்பொழுது ஹைட்ரஜன் வாயுவை வெளிவிடுகின்றன. ஹைட்ரஜன் வாயு எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதால் அது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து 'பாப்' என்ற ஒலியை உருவாக்குகிறது.

 

ஈ. அழுத்தம் உருவாதல்

முழுவதும் காற்றடைக்கப்பட்ட ஒரு பலூனை அழுத்தினால் அது வெடித்துவிடும். ஏனெனில் அழுத்துவதன் விளைவாக அழுத்தம் அதிகமாகி பலூனில் உள்ளே உள்ள காற்று வெளியேற முயற்சிக்கிறது. இதனால், பலூன் வெடிக்கிறது. இதுபோன்று சில வேதிவினைகள் மூடிய கலனில் நிகழும்பொழுது வாயுக்களை உருவாக்கி அதன் காரணமாக அழுத்தம் அதிகமாகிறது. அவ்வழுத்தம் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகும் பொழுது கலன் வெடிக்கிறது. வெடிகுண்டுகளும், பட்டாசுகளும் இதன் காரணமாகவே வெடிக்கின்றன. இவற்றைப் பற்றவைக்கும்பொழுது வாயுக்கள் உருவாகி அதிக அழுத்தம் ஏற்பட்டு இவை வெடித்துச் சிதறுகின்றன. எனவே, அதிகளவு ஒலி கேட்கிறது.

Tags : Changes Around Us | Chapter 10 | 8th Science நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | அலகு 10 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 10 : Changes Around Us : Effects of Chemical changes Changes Around Us | Chapter 10 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் : வேதிவினைகளின் விளைவுகள் - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | அலகு 10 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்