அறிமுகம் - மின்காந்த அலைகள் | 12th Physics : UNIT 5 : Electromagnetic Waves
அலகு 5
மின்காந்த அலைகள்
"ஓர்
அறிவியல் சகாப்தம் முடிவுற்று, அடுத்த அறிவியல் சகாப்தம் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்லில்
இருந்து தொடங்குகிறது"
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கற்றலின் நோக்கங்கள்
இந்த
அலகில் மாணவர்கள் அறிந்து கொள்வது
• இடப்பெயர்ச்சி மின்னோட்டம்
• ஆம்பியரின் சுற்றுவிதியில் மேக்ஸ்வெல்லின்
திருத்தம்
• மேக்ஸ்வெல் சமன்பாடுகளின் தொகை நுண் கணித
வடிவம்
• மின்காந்த அலைகள் உருவாக்கம் மற்றும் அவற்றின்
பண்புகள் - ஹெர்ட்ஸ் ஆய்வு
• மின்காந்த அலைகளின் மூலங்கள்
• மின்காந்த நிறமாலை
நம்மைச் சுற்றியுள்ள உலகை ஒளியின் வழியே நாம்
கண்டு மகிழ்கிறோம். சூரியனிடமிருந்து கிடைக்கும் ஒளி என்பது நமக்கு கிடைக்கும் ஆற்றலின்
ஒரு முக்கியமான மூலமாகும். இவ்வாற்றல் இல்லையெனில் மனித உயிர்கள் இக்கோளில்வாழ முடியாது.
அணுவிலிருந்து பிரபஞ்சம் வரை உள்ள பல்வேறு பொருட்களின் அமைப்பு மற்றும் பண்புகளை நாம்
புரிந்து கொள்ள ஒளியின் பங்களிப்பு மகத்தானதாகும். ஒளி இல்லையென்றால் நம் கண்களால்
பொருட்களைப் பார்க்க முடியாது. இத்தகைய சிறப்புமிக்கது ஒளியாகும். ஒளி என்றால் என்ன?
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பல்வேறு அறிஞர்களை உறங்கவிடாமல் செய்தது இந்த மாபெரும்
புதிர். தொடக்கத்தில் பெரும்பாலான அறிவியலாளர்கள் ஒளியியல் மற்றும் மின்காந்தவியல்
இரண்டும் இயற்பியலின் இருவேறு பிரிவுகள் என நம்பியிருந்தனர். ஆனால் ஒளி பற்றிய புரிதலுக்கு
புது பரிணாமம் கொடுத்த பெருமை ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்லையே சாரும். அவரின் கருத்தியல்
கோட்பாட்டின்படி ஒளி ஒரு மின்காந்த அலையாகும். அது வெற்றிடத்தில் 3x108
ms-1 என்ற திசைவேகத்தில் செல்லும். காமா கதிரிலிருந்து ரேடியோ அலைவரை பரவியுள்ள
மின்காந்த நிறமாலையின் ஒரு சிறுபகுதியே கண்ணுறு ஒளி என பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
அலகு 4 இல் நேரத்தைப் பொறுத்து மாற்றமடையும்
காந்தப்புலம், மின்புலத்தை உருவாக்கும் என பயின்றோம் (பாரடேயின்மின்காந்தத் தூண்டல்
விதிகள்). இயற்கையானது சமச்சீர் (symmetry) பெற்றிருக்கும் என மேக்ஸ்வெல் உறுதியாக
நம்பிக்கைக் கொண்டு பின்வரும் கேள்வியை முன்வைத்தார். அதாவது நேரத்தைப்பொறுத்து மாற்றமடையும்
காந்தப்புலம் மின்புலத்தை உருவாக்கும்போது, ஏன் நேரத்தைப்பொறுத்து மாற்றமடையும் மின்புலம்
காந்தப்புலத்தை உருவாக்காது?"
உண்மையில் இவ்வாறு இருப்பதை பின்னர் அவர் மெய்ப்பித்தார்.
இது மேக்ஸ்வெல்லின் தூண்டல் விதி என்று சில நேரங்களில் அழைக்கப்படும். மேக்ஸ்வெல் முன்மொழிந்த
கருத்தை, 1888 இல் எச். ஹெர்ட்ஸ் ஆய்வு மூலமாக நிரூபித்தார். இது நவீன தொழில் நுட்பக்
கண்டுபிடிப்புகளான, முக்கியமாக கம்பியில்லா தொலைத் தொடர்பு, லேசர் (Light
Amplification by Stimulated Emission of Radiation),
ரேடார் (RADAR (Radio Detection And Ranging) தொழில்நுட்பம் மற்றும் பல கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், நமது அன்றாட
வாழ்க்கையில் கைப்பேசியின் தாக்கம் மிகவும் அதிகம் (படம் 5.2 (அ)) வில் காட்டப்பட்டுள்ளது).
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை விரைவாகவும், பயனுள்ள வகையிலும் அனுப்புவதற்கு
இது ஒரு சிறந்த வழிமுறையாகும். ஒளி ஓர் மின்காந்த அலை என்ற தத்துவத்தின் அடிப்படையில்
இது வேலை செய்கிறது. படம் 5.2 (ஆ) வில் காட்டியுள்ளவாறு, X - கதிர்கள் நம் உடலில் எலும்புமுறிவு
ஏற்பட்டுள்ள இடத்தினை கண்டுபிடிக்க பயன்படுகிறது. உணவு சமைப்பதற்கு மைக்ரோ அலை சமையற்கலன்
(Microwave oven) பயன்படுகிறது. மைக்ரோ அலையும் ஒரு மின்காந்த அலையாகும். பொறியியல்,
மருத்துவம் (லேசர் அறுவைசிகிச்சை), பாதுகாப்புத்துறை (ரேடார் சைகைகள்) போன்றவை மற்றும்
அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் மின்காந்த அலைகளின் பயன்பாடு எண்ணிலடங்காததாகும்.
இந்த அலகில் மின்காந்த அலைகள் பற்றிய சில அடிப்படைக் கருத்துக்களை நாம் கற்க உள்ளோம்.