வரலாறு - ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் | 12th History : Chapter 9 : Envisioning a New Socio-Economic Order
கற்றலின் நோக்கங்கள்
கீழ்க்காண்பனவற்றை புரிந்து கொள்ளுதல்
• சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் பொருளாதார
நிலை
• இந்தியா ஒரு சமதர்ம, மக்களாட்சி நாடாதல்
மற்றும் அதன் முக்கியத்துவம்
• வேளாண்மை, கிராமப்பொருளாதாரம் ஆகியவற்றை
மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
அ) நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் அவற்றின்
விளைவுகள் குறித்த மதிப்பீடு ஆ) பசுமைப்புரட்சியின் மூலம் தொழில் நுட்ப வளர்ச்சி
இ) ஊரக வளர்ச்சித் திட்டங்கள்
ஈ) ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்கள்
• தொழில்துறை வளர்ச்சி
அ) கனரகத் தொழில்களில் முதலீடு செய்வதற்கான
உத்தி மற்றும் அடிப்படைக் கோட்பாடுகள்
ஆ) தொழில்களை முறைபடுத்தும் கொள்கைகள்,
சட்டங்கள் வாயிலாக தனியார் தொழில்களையும், நுகர்வையும் கட்டுப்படுத்துவதில் அரசு மற்றும்
அரசாங்கத்தின் பங்கு
இ) பொதுத்துறையின் பங்கு
ஈ) தாராளமயமாக்கலும் அதற்குப் பிந்தைய
நிலையும்
• இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்கள்
• கல்வி - எழுத்தறிவில் ஏற்பட்ட முன்னேற்றமும்
பள்ளிக் கல்வியின் விரிவாக்கமும்
• அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - நாட்டில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி
அறிமுகம்
1947இல் இந்தியா விடுதலையடைந்தபோது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுவற்றதாகவும் பல பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. வறுமையின் அளவு மிக அதிகமாக இருந்தது. மக்கள் தொகையில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்ந்ததோடு தங்கள் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் வேளாண்மையைச் சார்ந்திருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது கைவினைத் தொழில்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியதால் திறமைமிக்க கைவினைஞர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதன் விளைவாக வேளாண் துறையில் மக்கள் நெருக்கடி அதிகமானதோடு, வேளாண்மையிலிருந்து பெறப்படும் தனிநபரின் தலாவருமானமும் குறைந்தது. நில உடைமையாளர்கள் மற்றும் பயிரிடுவோர் அல்லது விவசாயிகளுக்குமிடையே நிலவிய நிலப்பிரபுத்துவ பிணைப்பு வேளாண்மையின் இயல்பாக இருந்தது. இவ்விவசாயிகள் நிலவுடைமை வர்க்கத்தாரால் சுரண்டப்பட்டனர்.
விடுதலைக்கு முந்தைய பதிற்றாண்டுகளில் தொழில்துறை வளர்ச்சியடைந்திருந்தது. ஆனால் அது மிக குறைவானதாகவே இருந்தது. டாட்டா இரும்பு எஃகுத் தொழிற்சாலை மட்டுமே நன்கறியப்பட்ட கனரக தொழிற்சாலையாகும். இதுதவிர பருத்தி நூல் நூற்றல், நெய்தல், வேதிப்பொருட்கள், காகிதம், சர்க்கரை, சணல், சிமெண்ட் ஆகியவை முக்கிய உற்பத்திப் பொருட்களாக இருந்தன. இத்தொழில்களுக்குத் தேவையான இயந்திரங்களைப் பொறியியல் துறை தயாரித்துக் கொடுத்தது. இருந்தபோதிலும் இத்துறை சிறியதாக இருந்ததோடு வேளாண்துறையில் தேவைக்கு அதிகமாக இருந்த தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பை வழங்கும் வலுவையும் பெற்றிருக்கவில்லை. உண்மையில் 1950இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் துறையின் பங்கு 13 விழுக்காடுகளாகவே இருந்தது. நுகர்வுக்கான உற்பத்திப் பொருட்களில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்டன. இந்தியாவில் இருந்த அந்நிய நாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் சந்தைப்படுத்துதல், விற்பனை ஆகியவற்றில் மட்டுமே ஈடுபட்டதேயன்றி உற்பத்தியில் ஈடுபடவில்லை .
இவ்வாறாக புதிய இந்திய அரசு பொருளாதாரத்தை வளர்த்தல், வேளாண்துறை நிலைமைகளை மேம்படுத்துதல், உற்பத்தித் துறையை விரிவாக்கம் செய்தல், வேலைவாய்ப்புகளைப் பெருக்குதல், வறுமையைக் குறைத்தல் போன்ற மாபெரும் கடமைகளை எதிர்கொண்டது.
பொருளாதார வளர்ச்சியைப் பல வழிகளில் அடையலாம். சுதந்திரமான செயல்பாட்டு முறையைப் பின்பற்றுவது ஒரு முறையாகும்; அதுவே முதலாளித்துவப் பாதையாகும். மற்றொன்று சமதர்மப் பாதையைப் பின்பற்றுவதாகும். இந்தியா இரண்டாவது பாதையைத் தேர்வுசெய்தது. முந்தைய பாடத்தில் கூறியவாறு, இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இந்தியா ஒரு இறையாண்மை உடைய, சமதர்ம, மக்களாட்சி குடியரசு என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமதர்ம பாணியிலான வளர்ச்சியின் நோக்கங்கள் : ஏற்றதாழ்வுகளைக் குறைப்பது, சுரண்டலை ஒழிப்பது, செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதைத் தடுப்பது ஆகியனவாகும். சமூகநீதியானது அனைத்து குடிமக்களும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சமவாய்ப்பைப் பெறுவதாகும். இது முக்கியமாக வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் அரசின் செயல்திறன்மிக்க பங்கேற்பை இன்றியமையாததாக ஆக்குகிறது.
வேளாண்மையில் சமூக மற்றும் பொருளாதார நீதியானது விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் நிலச் சீர்திருத்தச் செயல்பாடுகள் மூலம் அடையப்படுதல் வேண்டும். தொழில் துறையில் அரசு பொதுத்துறையின் கீழ் முக்கியத் தொழில்களை உருவாக்குவதில் செயல்திறன் மிக்க பங்கை வகிக்கும். ஐந்தாண்டு திட்டங்களின் கீழ், இவையனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான திட்டமிடல் மூலமே சாதிக்க வேண்டும். இச்செயல் திட்டங்கள் சோவியத் ஒன்றியத்தின் விரைவான பொருளாதார வளர்ச்சி அனுபவங்களிலிருந்து பெறப்பட்டன. விரைவான வளர்ச்சியில் சோவியத் ஒன்றியம் பெற்ற வெற்றியை கண்டு நேரு வியந்தார், ஆகவே இச்செயல்பாட்டுத் திட்டத்தின், அடித்தளமாக இருந்த கருத்தியல் நேருவின் சமதர்மம் எனக் குறிப்பிடப்படுகிறது.
சுதந்திரம் பெற்றபோது இந்தியாவில் வேளாண்மையானது பல பிரச்சனைகளால் சூழப்பெற்றிருந்தது. பொதுவாக உற்பத்தி குறைவானதாக இருந்தது. மொத்த உணவு தானிய உற்பத்தி நாட்டுமக்கள் அனைவருக்கும் உணவளிக்கப் போதுமானதாக இல்லை. இதனால் அதிக அளவிலான உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டியதிருந்தது. மொத்த மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையைச் சார்ந்திருந்தனர். இந்நிலை தானாகவே தனிநபரின் வருமானத்தை மிகவும் குறைந்த நிலைக்குக் கொண்டு சென்றது. இத்தகைய சூழல் மறைமுக வேலையின்மை " என அழைக்கப்படுகிறது. அதாவது மக்களில் பலர் வேறு தொழில்களுக்கு மாறி சென்றுவிட்டாலும் மொத்த உற்பத்தி அளவு மாறாமல் இருப்பதோடு வேளாண் பணிகளைத் தொடர்ந்து செய்ய உபரியாக உள்ள பணியாளர்கள் உண்மையில் தேவையில்லை. ஆகவே அவர்கள் நடைமுறையில் வேலையற்றவர்களே. கிராமப்புற மக்களிடையே வறுமையின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதோடு அவர்களில் பெரும்பாலானோர் வட்டிக்குக் கடன் கொடுப்போரிடம் பெருமளவு கடன் பட்டிருந்தனர்.
வேளாண்மையின் பின்தங்கிய நிலையை இரு காரணிகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம். ஒன்று நிறுவன அடிப்படையிலானது, மற்றொன்று தொழில்நுட்பம் சார்ந்தது. நிறுவனம் சார்ந்த காரணிகள் என்பது, நிலவுடைமை வர்க்கத்தை சேர்ந்தோருக்கும் விவசாயத் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தோருக்குமிடையே நிலவிய சமூக பொருளாதார உறவுகளைக் குறிப்பதாகும். தொழில்நுட்பக் காரணிகள் என்பது சிறந்த விதைகள், மேம்படுத்தப்பட்ட வேளாண்மை முறைகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல், டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றோடு தொடர்புடையனவாகும். முதலில் நிறுவனம் சார்ந்த குறைகளைக் களைவது என முடிவெடுத்த அரசு, வேளாண் நிலைமைகளை மேம்படுத்துவதற்காக நிலச்சீர்திருத்தத் திட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்நடவடிக்கைகள் குறித்து அரசு சில அடிப்படை அனுமானங்களைக் கொண்டிருந்தது. அவை: சமூக ரீதியாக ஒரு நியாயமான முறை உருவாக்கப்படும். அதன் பயனாக விவசாயிகள் வலிமை பெறுவதோடு நிலங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.