Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு

ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - வரலாறு - நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு | 12th History : Chapter 9 : Envisioning a New Socio-Economic Order

   Posted On :  09.07.2022 10:37 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 9 : ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு

இந்திய அரசியலமைப்பின்படி வேளாண்மை மாநில அரசுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக நிலச்சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியாக வேண்டும்.

நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு

இந்திய அரசியலமைப்பின்படி வேளாண்மை மாநில அரசுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக நிலச்சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியாக வேண்டும். இவ்வாறு நிலச்சீர்திருத்தத்தின் அடிப்படை வடிவம் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருந்தாலும், சில குறிப்பிட்ட வகைகள் சார்ந்த நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப்படுவதில் மாநிலங்களிடையே ஒரே சீரான தன்மையில்லை.

ஜமீன்தாரிமுறை ஒழிப்பு

நாடு விடுதலை பெறுவதற்கு முன்னரே, ஜமீன்தாரிமுறை ஒழிப்பு இந்திய தேசிய காங்கிரசினுடைய அறிக்கையின் ஒரு பகுதியாக இடம் பெற்றிருந்தது. ஜமீன்தாரி என்றால் என்ன? ஜமீன்தார்கள் என்போர் யார்? ஜமீன்தார் என்பவர் நிலவுடைமையாளர் வகுப்பைச் சேர்ந்தோராவர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நிரந்தர நிலவரித் திட்டத்தின் கீழ் இடைத்தரகர்களாக நியமிக்கப்பட்ட இவர்கள் நிலவரியை அரசுக்குச் செலுத்தி வந்தனர். இவர்கள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து குத்தகை வசூல் செய்து அரசுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு தொகையை நிலவரியாக செலுத்தக் கடமைப்பட்டவர்கள் ஆவர். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தொகைக்கு சட்டபூர்வமான வரம்பு இல்லையென்பதால் ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து அதிக தொகையினை வசூலித்து அவர்களை வறிய நிலைக்கு உள்ளாக்கினர். பொதுமக்கள் கருத்தின்படி, ஜமீன்தார்கள் எனும் இவ்வகுப்பினர் நீதிநெறிமுறையற்றவர்கள், ஆடம்பர பிரியர்கள், பயனற்றவர்கள், சுயமாக சம்பாதிக்காத வருமானத்தில் வாழ்கின்றவர்கள் என்று கருதப்பட்டனர். அவர்களின் உரிமைகளை ஒழிப்பதும் நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத் தருவதும் அரசின் ஒரு முக்கிய குறிக்கோளானது.

ஆங்கிலேயர்களால் மூன்று வகையான வருவாய் வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வங்காளம் மற்றும் வடஇந்தியாவின் பெரும்பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிரந்தர நிலவரித் திட்டத்தின் கீழ், நிலவரியை செலுத்தும் பொறுப்பு ஜமீன்தார்கள் எனப்படும் குத்தகைதாரர்களிடம் விடப்பட்டது. தென்னிந்தியாவில் ரயத்துவாரி (ரயத் என்றால் விவசாயி என்று பொருள்) முறையின் கீழ் விவசாயிகள் நிலவரியை நேரடியாக அரசாங்கத்திடம் செலுத்தினர். மூன்றாவது முறை நாட்டின் ஒரு சில இடங்களில் மட்டும் காணப்பட்ட மகல்வாரி முறை. இதில் நிலவரியைச் செலுத்துவது கிராமத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.

அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இந்தியாவின் பல மாகாணங்கள் ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டங்களை இயற்றின. 1949இல் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், சென்னை , அஸ்ஸாம், பம்பாய் ஆகிய பகுதிகளில் இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. நிரந்தர நிலவரித் திட்டம் முதன் முதலில் அறிமுகமான வங்காளத்தில் 1955இல்தான் இச்சட்டம் இயற்றப்பட்டது. நிலங்கள் ஜமீன்தார்களிடமிருந்து எடுக்கப்பட்டு குத்தகைதாரர்களிடையே விநியோகம் செய்யப்பட்டது. மாநில சட்டமன்றங்கள் ஜமீன்தார்களுக்கு வழங்கப்படவேண்டிய இழப்பீட்டுத் தொகைகளையும் பரிந்துரை செய்தன.

நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த ஜமீன்தார்கள் ஜமீன் ஒழிப்பு சட்டங்களின் அரசியலமைப்பு சட்டபூர்வத் தன்மையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர். இதன் பின்னர் அரசு இரண்டு அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றியது. 1951இல் முதல் திருத்தமும் 1955இல் நான்காவது திருத்தமும் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி ஜமீன்தார்கள் தங்களின் நிலங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது குறித்தோ இழப்பீடு குறித்தோ கேள்வி கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. முடிவில் ஜமீன்தாரிமுறை ஒழிப்பு 1956இல் நிறைவு பெற்றது. இது மிகவும் வெற்றிகரமான நிலச்சீர்திருத்தமாகும். இதன் மூலம் 30 லட்சம் குடியானவர்களும் குத்தகைதாரர்களும் 62 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு உரிமையாளர்களாயினர். ஜமீன்தார்களுக்கு உண்மையாக வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ.16,420 லட்சங்களாகும். இது வழங்கப்பட வேண்டிய மொத்த இழப்பீட்டுத் தொகையில் நான்கில் ஒரு பங்கேயாகும்.

இருந்தபோதிலும் இச்சீர்திருத்தத்தின் மூலம் திட்டமிடப்பட்ட நோக்கங்களில் ஒரு சிறு பகுதியை மட்டுமே எட்ட முடிந்தது. இந்நிலங்கள் தங்களது தனிப்பட்ட விவசாயத்தின் கீழிருந்தன என உரிமை கொண்டாடி ஜமீன்தார்களால் குடியானவர்களை வெளியேற்றிவிட்டு நிலங்களை எடுத்துக்கொள்ள முடிந்தது. இவ்வாறு ஜமீன்தாரி என்னும் அமைப்பு கலைக்கப்பட்டு விட்டாலும் பல நிலவுடைமையாளர்கள் தொடர்ந்து பெருமளவிலான நிலங்களைத் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

குத்தகை சீர்திருத்தம்

இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில் ஏறத்தாழ 50 விழுக்காட்டு நிலங்கள் குத்தகை முறையின் கீழிருந்தன. குத்தகை என்பது குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் விவசாயிகளால் நில உரிமையாளரிடமிருந்து நிலத்தைக் குத்தகைக்குப் பெறும் ஏற்பாட்டைக் குறிப்பதாகும். அனைத்துக் குத்தகைதாரர்களும் நிலமில்லா விவசாயிகள் அல்லர். பல சிறிய நிலவுடைமையாளர்கள் ஏனைய நிலவுடைமையாளர்களால் குத்தகைக்கு விடப்படும் நிலங்களைக் கூடுதலாகப் பெற்று விவசாயம் செய்யவிரும்பினர். சில பணம்படைத்த நிலவுடைமையாளர்களும் கூடுதலாக நிலங்களைக் குத்தகைக்குப் பெற்று விவசாயம் செய்தனர். பொதுவாகக் குத்தகை என்பது பொருளாக, நிலத்தில் விளைந்த விளைச்சலில் குறிப்பிட்ட பங்காகப் பெறப்பட்டது.

பெரும் நிலஉடமையாளர்கள் நிலத்தை குத்தகைதாரர்களுக்கு குத்தகைக்கு விடுவது என்பதை சாதாரணமாக செய்துவந்தனர். வழக்கமாக குத்தகை ஏற்பாடுகள் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தது. நிலத்தின் சொந்தக்காரரால் பெறப்பட்ட குத்தகையானது நிலத்தின் விளைச்சலில் 50 விழுக்காடாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தது. இது மிக அதிகமாகும். குத்தகை ஒரு வழக்கமான நடவடிக்கையாதலால் ஒப்பந்தங்கள் அரிதாகவே பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு நீண்டகாலக் குத்தகைதாரர்கள் அனைவருக்கும் குத்தகை உரிமைகள் ஒருபோதும் மறுக்கப்பட்டதில்லை . எனினும் குத்தகைதாரர்கள் குறுகியகால அவகாசத்தில் தாங்கள் வெளியேற்றப்படலாம் என்பதால் அவர்கள் எப்போதும் ஓரளவு நிச்சயமற்ற நிலைமையிலேயே வாழ்ந்தனர்.

குத்தகை சீர்திருத்தமானது இரண்டு குறிக்கோள்களுடன் மேற்கொள்ளப்பட்டது. நில உடைமையாளரிடமிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பது, மற்றொன்று நிலத்தின் பயன்பாட்டுத்தன்மையை மேம்படுத்துவது, குத்தகைமுறை திறனற்றது எனும் கருத்தின் அடிப்படையில் இரண்டாவது குறிக்கோள் அமைந்தது. நிலத்தை மேம்படுத்துவதற்காக அதில் முதலீடு செய்யவேண்டும் எனும் அக்கறை நில உடைமையாளருக்கு அரிதாகவே ஏற்படும். தங்கள் நிலங்களிலிருந்து வருமானத்தைப் பெறுவதில் மட்டுமே அவர்கள் ஆர்வமாய் இருந்தனர். நிலத்தின் மீது உரிமையில்லாத ஆனால் அதிகக் குத்தகை கொடுத்துக் கொண்டிருக்கும் குத்தகைதாரர்களுக்கும் அவ்வாறான அக்கறையில்லை . நிலத்தில் முதலீடு செய்யும் அளவிற்கு அவர்களிடம் உபரிப் பணமுமில்லை .

குத்தகை சீர்திருத்த சட்டங்கள் மூன்று இலக்குகளைக் குறிவைத்து இயற்றப்பட்டன.

(i) குத்தகையை முறைப்படுத்துவது.

(ii) குத்தகைதாரர்களின் உரிமைகளை பாதுகாப்பது.

(iii) நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றிற்கான உரிமையை குத்தகைதாரர்களுக்கு அளிப்பது.

மாநிலங்களில் குத்தகை முறைப்படுத்தப்பட்டு விளைச்சலில் நான்கில் ஒரு பங்காக இருந்தது, மூன்றில் ஒரு பங்காக மாற்றப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால் இது ஒருபோதும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. வேளாண்துறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை உபரியாக இருக்கையில் நிலம் போதுமானதாக இல்லை. அளிப்பைக் காட்டிலும் தேவையின் அளவு அதிகமாக இருந்த சூழலில் விலைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் பயனேதுமில்லை . மொத்தத்தில் அலுவலகப் பதிவுகள் எதுவுமில்லாமல் மறைமுகமாக குத்தகைத் தொகை உயர்த்தப்பட்டது.

குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் குத்தகை உரிமையை மரபுரிமையாக்குவதற்கும் இயற்றப்பட்ட சட்டங்களும் வெற்றி பெறவில்லை. குத்தகை ஒப்பந்தங்கள் வாய்மொழியாகவே மேற்கொள்ளப்பட்டதோடு ஆவணங்களிலும் பதிவு செய்யப்படவில்லை . ஆகவே எந்த நேரத்திலும் நில உடைமையாளரால் தான் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்திலேயே குத்தகைதாரர் வாழ நேர்ந்தது. குத்தகை சீர்திருத்தச் சட்டங்கள் அறிவிக்கப்பட்டபோது, பெரும்பாலான நிலவுடைமையாளர்கள் நிலங்களைத் திரும்பப் பெற்று சொந்தமாக விவசாயம் செய்வதாகவும் குத்தகைதாரர்கள் தங்கள் நிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களே என்றும் கூறினர். ஓரு முழுமையான நடைமுறைப்படுத்தக்கூடிய நில உச்சவரம்புத் திட்டம் இல்லாத சூழலில் குத்தகை சீர்திருத்தங்கள் பயனற்றுப் போயின.

கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது. நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியைப் பெற்றாலும் குத்தகைதாரரை நிலத்தின் உரிமையாளராக ஆக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கலவையான முடிவுகளைக் கொண்டிருந்தன.

நில உச்சவரம்பு

நில உச்சவரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம் என்பதை குறிப்பிடுகின்றது. இதனை நடைமுறைப்படுத்த 1950களுக்குப் பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் முதன்முறையாக 1961இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1972 வரை ஒரு நில உரிமையாளர் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 1972க்குப் பின்னர் அடிப்படை அலகானது குடும்பம் என மாற்றப்பட்டது. இதனால் நில உரிமையாளர் தனது குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு நிலங்களுக்கு உரிமையுடையவர்கள் என உரிமைகோர முடிந்தது. அந்நிலங்களின் அளவு நில உச்சவரம்பு நிர்ணயம் செய்த நிலத்தின் அளவைவிட மிகக் குறைவாகவே இருந்தது.

நிலத்தின் தரம் ஒரேமாதிரியாக இல்லாததால் நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் நிலங்களின் அளவை நிர்ணயம் செய்வது சிக்கல்கள் நிறைந்த பணியாக இருந்தது. நீர்ப்பாசன நிலங்கள், மானாவரி நிலங்கள், ஒருபோக நிலங்கள் மற்றும் இருபோக நிலங்கள் ஆகியனவற்றை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதே சமயத்தில் இச்சட்டத்தில் சிலவகையான நிலங்களுக்கு விதிவிலக்கும் அளிக்கப்படிருந்தன. அவையாவன, பழத்தோட்டங்கள், தோட்டங்கள் (காய்கறிகள், பூக்கள் விளையும் நிலங்கள்), மேய்ச்சல் நிலங்கள், அறக்கொடை, சமயம் சார்ந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள், கரும்பு பயிரிடப்படும் பெருந்தோட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய இந்த சீர்திருத்தம் நில உச்சவரம்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட சில விதிவிலக்குகளை சிலர் பயன்படுத்திய விதம் குறித்தும் நில ஆவணங்கள் திருத்தம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.

இறுதியில் 65 லட்சம் ஹெக்டேர் நிலம் மட்டுமே உபரி நிலமாக கையகப்படுத்தப்பட்டது. இந்நிலம் 55 லட்சம் குத்தகைதாரர்களுக்கு தலா ஒரு ஹெக்டேருக்கு சற்றே கூடுதலான நிலம் விநியோகம் செய்யப்பெற்றது.

வினோபா பாவே தனது பூமிதான இயக்கத்தின் (Boodhan Movement) மூலம் பெரும் நிலவுடைமையாளர்கள் தங்களிடம் உபரியாக உள்ள நிலங்களைத் தாங்களாவே முன்வந்து வழங்க இணங்க வைத்த முயற்சிகள் மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது.


ஒட்டுமொத்த மதிப்பீடு

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் நிலச்சீர்திருத்தச் சட்டம் மிகப்பெரும் வெற்றியைப் பெறவில்லை . பொருளாதாரரீதியாக, நில உரிமையையும்பாதுகாப்பையும் பெற்ற வேளாண் குடிமக்களின் கீழ் வேளாண்துறை செழித்தோங்கும் என்ற கனவு கனவாகவே இருந்தது. மேலும் உணரத்தக்க அளவில் செயல்திறனில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அண்மைக்காலங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால் வேளாண்மை முன்னேறியுள்ளதால் அதிகம் திறமை வாய்ந்த நிலச் சந்தை ஒன்று செயல்படுவதாகத் தெரிகிறது. அது நீண்டகால வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும்.

சமூகநீதி என்ற பரிமாணத்தில், நிலப் பிரபுத்துவ முறையான ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் நற்பயனை அளித்துள்ளது. நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் விவசாயிகளை, தங்கள் உரிமைகள் குறித்த அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்றியதோடு அவர்களை அதிகாரம் மிக்கவர்களாகவும் மாற்றியுள்ளது.

Tags : Envisioning a New Socio-Economic Order | History ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - வரலாறு.
12th History : Chapter 9 : Envisioning a New Socio-Economic Order : Land Reforms and Rural Reconstruction Envisioning a New Socio-Economic Order | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 9 : ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் : நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு - ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 9 : ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்