காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 9 : Envisioning a New Socio-Economic Order
பாடச் சுருக்கம்
• இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் பொருளாதார
ரீதியில் வளர்ச்சி பெறாத நாடகவே இருந்தது. அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் நாட்டை ஒரு
சமதர்ம மக்களாட்சி நாடாக வளர்த்தெடுக்க முடிவு செய்தனர். எனவே சமூக நீதியை உறுதிப்படுத்துவதே
அரசாங்கத்தின் முக்கியமான முன்னுரிமை வழங்கவேண்டிய பணியாயிற்று.
• வேளாண்துறையின் நிலையை முன்னேற்றுவதற்கு
நடவடிக்கைகள் எடுப்பது அரசின் முன்னுரிமை தரப்பட வேண்டிய முதல் பணிகளில் ஒன்றாயிற்று.
ஜமீன்தாரிமுறை ஒழிப்பு, குத்தகை சீர்திருத்தம், நில உச்சவரம்பு அமலாக்கம் ஆகியவை மூலம்
நிறுவன ரீதியிலான பலவீனங்களை அகற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவை ஓரளவு வெற்றி பெற்றாலும் உண்மையிலேயே வேளாண்துறை நிலைமைகளை முன்னேற்றிவிடவில்லை.
• 1960களில் கடுமையான உணவுதானியப் பற்றாக்குறை
ஏற்பட்டது. இதனால் அரசாங்கம் வேளாண்மையை வளர்ப்பதற்காகத் தொழில்நுட்ப மாற்றுப்பாதைக்கு
மாறியது. இதனால் அதிக விளைச்சலைத் தரும் வீரிய வித்துக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
நீர்ப்பாசனம், ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் ஆகியவற்றில் முதலீடுகள் செய்யப்பட்டன.
இம்முயற்சிகள் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் சுற்றுச்சூழலின்
மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
• ஏழ்மையில் வாழும் மக்களின் விகிதம், குறிப்பாகக்
கிராமப் புறங்களில் குறையவில்லை . கிராமப்புற வறுமையைக் கையாள்வதில் ஒருங்கிணைந்த ஊரக
வளர்ச்சித் திட்டம் (IRDP) ஒரு கூட்டு முயற்சியாக இருந்தது. கிராமப்புற வறுமையின் அளவு
குறையவில்லை , மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும்
நபர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை.
• கிராமப்புறக் குடும்பங்களுக்கு சட்டபூர்வமாக
வேலையைக் கேட்டுப்பெறும் உரிமையைக் கொடுத்த மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதிச்
சட்டம் தற்போது வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மிகப்பெரிய திட்டமாகும்.
• பிரதமர் நேரு ஒரு சமதர்ம சமூகத்தை உருவாக்குவதில்
உறுதியாக இருந்தார். கனரக இயந்திரத் தொழிற்சாலைகளில் முதலீடு செய்வதன் மூலம் தொழில்
வளர்ச்சியை அரசு வழி நடத்தும் என அறிவித்தார். மேலும் வளர்ச்சி குறித்த நீண்ட கால நோக்கங்களை
உறுதிப் படுத்தவும் தனியார் தொழில் நிறுவனங்களின் முதலாளிகளின் சுரண்டலைத் தடுக்கும்
பொருட்டும் அரசு தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் என அறிவித்தார்.
• அதிகமாக முதலீடு தேவைப்படும் எஃகு , கனரகப்
பொறியியல் இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நாட்டின்
பல பகுதிகளில் நிறுவப்பெற்றன. இச்செயல்திட்டம் இந்தியாவை தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்த
பொருளாதாரம் எனும் நிலைக்கு முன்னோக்கித் தள்ளியது. இருந்தபோதும் பல்வகைப் பொருள் உற்பத்தி
சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுத்துறையின் அதீத விரிவாக்கம் பெரும் நஷ்டங்களுக்கு
இட்டுச் சென்றது. இந்நிலை முடிவில் அரசைப் பொருளாதாரத்தை தாராளமயமாக்கச் செய்ததோடு,
உரிமங்கள் வழங்கும் முறைகளையும், கட்டுப்பாடுகளையும் கைவிடச் செய்ததோடு பொருளாதாரத்தை
வழிநடத்த சுதந்திரச் சந்தை சக்திகளை அனுமதிக்கச் செய்தது.
• ஐந்தாண்டு திட்டங்களை வடிவமைக்கத் திட்டக்குழு
உருவாக்கப்பட்டது. அது நாட்டின் மூலவளங்களை மதிப்பீடு செய்து, பொருளாதாரத்தின் ஒட்டு
மொத்த வளர்ச்சிக்கும் பொருளாதாரத்தின் துணை துறைகளின் வளர்ச்சிக்குமான இலக்குகளை நிர்ணயித்தது.
எழுத்தறிவிலும், நாட்டில் பள்ளிகளும் கல்லூரிகளும் நிறுவப்படுவதிலும் கணிசமான முன்னேற்றம்
ஏற்பட்டது.
• அறிவியல் ஆய்வு நிறுவனங்களின் (அடிப்படை
மற்றும் பயன்பாடு) எண்ணிக்கை போற்றுதலுக்குரிய வண்ணம் அதிகரித்துள்ளது. இதுபோன்று பல்வேறு
பொறியியல் பிரிவுகள் சார்ந்த கல்வியை வழங்குவதற்காக நாட்டின் பல பகுதிகளில் தொழில்நுட்ப
நிறுவனங்கள் நிறுவப் பெற்றுள்ளன. இவைகளுக்கும் மேலாக தனியார் பொறியியல் கல்லூரிகளின்
எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது.