அலகு - III
பாடம் - 8
கழிவு நீக்கம்
பாட உள்ளடக்கம்
8.1 கழிவு நீக்க முறைகள்
8.2 மனிதனின் கழிவு நீக்க மண்டலம்
8.3 மனிதனில் சிறுநீர் உருவாகும் முறை
8.4 சிறுநீரகத்தின் பணிகளை நெறிப்படுத்துதல்
8.5 சிறுநீர் வெளியேற்றம்
8.6 கழிவு நீக்கத்தில் பிற உறுப்புகளின் பங்கு
8.7 கழிவு நீக்க மண்டலக் குறைபாடுகள்
8.8 இரத்த ஊடுபகுப்பு
கடல் பறவைகள் கடல் நீரைக் குடிப்பதில் சிக்கல் ஏதுமில்லை.
கற்றலின் நோக்கம்:
• விலங்குகளின் பல்வேறு கழிவு நீக்க முறைகளைப் புரிந்து கொள்ளுதல்
• மனித கழிவு நீக்க மண்டலத்தின் அமைப்பைக் கற்றல்
• நெஃப்ரானின் அமைப்பு, சிறுநீர் உருவாகும்முறை -கிளாமருலார் வடிகட்டல், மீள உறிஞ்சுதல் மற்றும் சிறுநீரகநுண் குழல்களின் சுரப்பு, ஆகியவற்றைப் புரிந்துணர்தல்.
• நெஃப்ரான் உள்ளிட்ட சிறுநீரகத்திற்கு இரத்தம் செல்லுதல் பற்றி பார்வை வழி அறிதல்.
• சிறுநீரகம் தொடர்பான நோய்களை அறிதல்.
சுமார் 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க நிலை விலங்குகள் தோன்றின. அவ்வாறு தோன்றியவைகள் முற்கால ஸ்பாஞ்சுகள் போன்ற (துளையுடலிகள்) கடல் நீரில் வாழும் உயிரிகள் ஆகும். அவற்றின் ஒவ்வொரு செல்லும் கடல் நீரால் சூழ்ந்திருப்பினும் அவைகள் செல்லினுள் உள்ள அயனிகளின் கூட்டமைப்பை கடல்நீரிலிருந்து வேறுபடுத்தி பராமரிக்கின்றன. பரிணாமத்தின் விளைவாக, திசு அடுக்குகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. இதன் தொடர்ச்சியாக சிறப்படைந்த புறத்திசு படலங்கள் உருவாயின. இப்படலங்கள் செல்வெளிச்சூழலுக்கும் செல்உள் திரவத்திற்கும் இடையே ஒரு தடையை ஏற்படுத்தின. இதனால் செல்வெளித்திரவம் உருவாகத் தொடங்கியது. முதுகுநாணிகளின் பரிணாமத்தின் போது, ஊடுகலப்பு ஒழுங்குபாடு மற்றும் அயனிகள் நெறிப்படுத்துதல் ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. உவர் நீர், நன்னீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரிகளின் பல்வகைத் தன்மைக்கு அவற்றின் செல்வெளி திரவத்தின் உட்பொருட்களைக் கட்டுப்படுத்தும் திறனே காரணமாகும். நிலத்தை நோக்கி வந்த உயிரிகள் எளிதில் உலர்ந்து விடக்கூடிய அபாயத்துடனும் அவற்றின் வளர்ச்சிதை மாற்ற கழிவுகளை நேரடியாக நீரில் வெளியேற்ற இயலாத நிலையிலும் இருந்தன. எனவே, நிலவாழ் உயிரிகளில் நைட்ரஜன் கழிவுப்பொருட்களை வெளியேற்ற மாற்று வழி அவசியமானது. அயனிகள் மற்றும் நீர்ச்சமநிலையைக் கட்டுப்படுத்த பெரும்பாலான உயிரிகள் சிறுநீரகத்தையே சார்ந்துள்ளன. சில விலங்குகளில், உடலின் புறத்திசு அமைப்புகளான செவுள்கள், தோல் மற்றும் உணவுப்பாதையின் கோழைப்படலம் ஆகியவை இணைந்து ஊடுகலப்பு ஒழுங்குபாடு, அயனிகள் கட்டுப்பாடு மற்றும் நைட்ரஜன் கழிவு வெளியேற்றம் ஆகிய மூன்று சமநிலை பேணும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துகின்றன. திசுக்களில் உள்ள ஊடுகலப்பு அழுத்தத்தை, கட்டுப்படுத்துவதே ஊடுகலப்பு ஒழுங்குபாடு ஆகும். உயிரிய சவ்வுகளின் வழியாக நீரைக் கடத்துவதற்கான உந்து சக்தியாக திசுக்களில் உள்ள ஊடுகலப்பு அழுத்தம் செயல்படுகிறது. உடல் திரவத்திலுள்ள அயனிகளின் அளவுகளைக் கட்டுபடுத்துவதே அயனிகள் கட்டுப்பாடு ஆகும். புரதப்பொருள் வளர்சிதை மாற்றமடைவதன் விளைவாக உற்பத்தியாகும் நச்சுத்தன்மை கொண்ட நைட்ரஜன் கழிவுப் பொருள் கழிவு நீக்கம் மூலம் வெளியேற்றப்படுகிறது. நைட்ரஜன் கழிவுப் பொருளான அம்மோனியா மற்றும் அதன் மாற்றுகளான யூரியா, யூரிக் அமிலம் ஆகியவை வெளியேற்றப்படுதலும் அயனிகள் மற்றும் ஊடுகலப்பு சமநிலையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய செயல்பாடுகள் ஆகும்.
நன்னீர்வாழ் முதுகெலும்பிகள் அதிக உப்புடனும், கடல்வாழ் முதுகெலும்பிகள் குறைவான உப்புடனும் தங்களின் உடல் திரவங்களை நிர்வகிக்கின்றன. தரைவாழ் விலங்குகள் சுற்றுப்புறத்தில் உள்ளதை விட அதிக நீரை தன் உடலில் பெற்றுள்ள காரணத்தால் நீராவியாதல் மூலம் நீரை இழக்கும் தன்மையுடையன. கடல்வாழ் மெல்லுடலிகளும், சுறாக்களும் சுற்றுச்சூழலில் உள்ளதற்கேற்ப தங்கள் உடலின் ஊடுகலப்பு அடர்த்தியை மாற்றிக் கொள்வன ஆகும். எனவே அவை ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் (Osmoconformers) என்றழைக்கப்படுகின்றன. புறச்சூழலின் தன்மை எப்படி இருந்தாலும் தங்கள் உடலின் ஊடுகலப்பு அடர்த்தியை மாற்றாமல் நிலையான அளவுடன் வைத்திருக்கும் (எ.கா. நீர்நாய் (Otter)) உயிரிகள் ஊடுகலப்பு ஒழுங்கமைவான்கள் (Osmoregulators) என்று அழைக்கப்படுகின்றன.
சூழலிலுள்ள உப்பின் அளவு மாற்றங்களை சகித்துக் கொள்ளும் அளவின் அடிப்படையில் உயிரிகள் ஸ்டீனோஹேலைன் (Stenohaline) மற்றும் யூரிஹேலைன் (Euryhaline) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சூழலில் உள்ள உப்பின் அளவில் ஏற்படும் சிறு ஏற்ற இறக்கங்களை மட்டுமே சகித்துக்கொள்பவை ஸ்டீனோஹேலைன் விலங்குகள் எனப்படுகின்றன (எ.கா. தங்கமீன்). அதே சூழலில் உப்பின் அளவில் ஏற்படும் பெரிய அளவு ஏற்ற இறக்கங்களை சகித்துக்கொள்பவை யூரிஹேலைன் விலங்குகள் எனப்படும் (எ.கா. ஆர்டிமியா, சால்மன் மற்றும் திலேப்பியா மீன்).
அம்மோனியா,யூரியா மற்றும் யூரிக் அமிலம் ஆகியவையே பெரும்பான்மை நைட்ரஜன் கழிவுப் பொருட்களாகும். கடல் வாழ் எலும்பு மீன்களில் உள்ள ட்ரைமீதைல் அமைன் ஆக்ஸைடு (TMO), சிலந்தியின் குவானைன் ஆகியவையும், ஹிப்புரிக் அமிலம், அல்லன்டோனின், அல்லன்டாயிக் அமிலம், ஆர்னிதுரிக் அமிலம், கிரியாட்டினின், கிரியாட்டின், பியுரின்கள், பைரிமிடின்கள் மற்றும் டெரின்கள் ஆகியவையும் புரத புரத வளர்சிதை மாற்றத்தின் பிற கழிவுப் பொருட்களாகும்.