மூன்றாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் | 3rd Social Science : Term 3 Unit 1 : Freedom Fighters of Tamil Nadu
அலகு 1
தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
* தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி அறிந்து கொள்வர்.
* சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பினைப் புரிந்து கொள்வர்.
பாரதியார் போல் வேடம் அணிந்த சிறுமி கையில் சான்றிதழுடன் தன் தாயிடம் வருகிறாள்
மீனா: அம்மா, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று நடைபெற்ற மாறுவேடப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.
அம்மா: மிகவும் நல்லது. மீனா, நான் உன்னைப் பற்றி பெருமைப்படுகிறேன்.
மீனா: நன்றி! அம்மா.
அம்மா: உங்கள் பள்ளியில் சுதந்திர தின விழா எவ்வாறு கொண்டாடப்பட்டது?
நாம் அறிந்து கொள்வோம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரம் அடைந்ததை நினைவுகூரும் (Commemorate) வகையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
மீனா: சுதந்திர தின விழா நன்றாகக் கொண்டாடப்பட்டது. நான் பாரதியார் போல வேடம் அணிந்து அவரைப்பற்றிப் பேசியதற்காக ஆசிரியர்கள் என்னைப் பாராட்டினர்.
அம்மா: நல்லது. நீ பாரதியாராக நடித்ததை நான் பார்க்கவில்லை.
மீனா: கவலைப்பட வேண்டா. உங்களுக்காக, இன்னும் ஒரு முறை நடித்துக்காட்டுகிறேன்.
அம்மா : நிச்சயமாக!
சிந்தனை செய்
நாம் எப்பொழுது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறோம்?
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
மீனா நடித்துக்காட்டுகிறாள்
மீனா: நான்தான் சுப்பிரமணிய பாரதி. நான் ஒரு கவிஞர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர். நான் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் என்ற கிராமத்தில் பிறந்தேன். நான் ஏழு வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன். எனது கவிதைகள் தேசபக்தி, பாலினச் சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றைக்கொண்டவை. நான் ஆசிரியராகப் பணியாற்றினேன். பின்னர், 1904இல் சுதேசமித்ரன் செய்தித்தாளின் உதவி ஆசிரியரானேன். 1919இல் மகாத்மா காந்தியைச் சந்தித்தேன். வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா போன்ற தேசிய தலைவர்கள் பலருடன் பணியாற்றினேன். எனது கவிதைகளான வந்தேமாதரம், அச்சமில்லை , எந்தையும் தாயும், ஜெய பாரதம் போன்றவை சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் சேர மக்களைத் தூண்டின. நன்றி!
அம்மா : அருமை , மீனா. நீ நன்றாகப் பேசினாய். பாரதி, உண்மையில் ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவர் ஆவார். சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய தொண்டை ஒருவரும் மறக்க முடியாது.
மீனா: உண்மை. தமிழகத்தின் மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றியும் இன்று அறிந்து கொண்டேன்.
அம்மா : ஓ! அப்படியா? நீ அறிந்து கொண்டதைக் கூறு.
சுப்பிரமணிய பாரதி
எந்தவொரு பொருளிலும், எந்தவொரு தருணத்திலும் கவிதைகளை இயற்றும் அவரது திறனுக்காக கல்வித்தெய்வமான பாரதி என்ற பட்டம் அவருக்குப் பதினோரு வயதில் எட்டயபுரம் அரசவையால் வழங்கப்பட்டது. (பாரதி - கலை மகள்)
செயல்பாடு
நாம் செய்வோம்.
நமது தேசியக் கொடிக்கு வண்ணம் தீட்டுக.
மீனா: என் நண்பர்களுள் ஒருவர், வ. உ. சிதம்பரனார் போல் உடையணிந்து வந்தார்.
அம்மா: வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார்.
மீனா: ஆம். அவர் தூத்துக்குடியில் பிறந்தார்; வழக்குரைஞராகப் பணியாற்றினார். மேலும், ஒரு நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கினார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
அம்மா: மீனா, வ. உ. சிதம்பரனார் முதல் இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார் என்று உனக்குத் தெரியுமா? அந்நிறுவனம் சுதேசி கப்பல் நிறுவனம் என்று அழைக்கப்பட்டது.
மீனா: ஆம், அம்மா. இதனால் வ. உ. சிதம்பரனார் புகழ் பெற்றார். பெரும்பான்மையான மக்கள் அவரைப் பின்பற்றினர். இதனால், ஆங்கிலேயர்கள் வ. உ. சிதம்பரனாரை சிறையில் அடைத்தனர்.
நாம் அறிந்து கொள்வோம்.
வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் எனப்படும் வ. உ. சிதம்பரனார் ஆங்கிலேய கப்பல்களுக்கு எதிராகச் சுதேசி நீராவி கப்பல் சேவையைத் தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே தொடங்கினார்.
அம்மா: நீ சொல்வது சரிதான். அவர் சிறையில் இருந்தபோதும், இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து போராடினார். அவரது தேசபக்தி இன்றும் பலருக்கு ஊக்கமளிக்கிறது.
மீனா: நன்றாகச் சொன்னீர்கள். மேலும், நான் செண்பகராமன் பற்றி அறிந்து கொண்டேன்.
அம்மா: தனது பள்ளிப் பருவத்தில், அவர், ஆங்கிலேய உயிரியலாளர் சர் வால்டர் ஸ்ட்ரிக்லேண்டு என்பவரைச் சந்தித்தார். அவர் செண்பகராமனை ஆஸ்திரியாவுக்கு அழைத்துச் சென்றார். செண்பகராமன் ஆஸ்திரியாவில் தம் உயர் கல்வியை முடித்தார்.
மீனா: அவர், வெளிநாட்டில் வளர்ந்தவர் என்றாலும், நம் நாட்டின் மீது நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார்.
அம்மா: அது உண்மைதான். செண்பகராமன் சூரிச்சில் முதலாம் உலகப் போர் தொடங்குவதற்குமுன் சர்வதேச இந்திய சார்பு குழுவை நிறுவினார். ஆப்கானிஸ்தானில் போரின்போது செண்பகராமன் தனது புரட்சிகர எண்ணங்களைத் தீவிரப்படுத்தினார். பெர்லினில் இருந்த இந்திய சுதந்திரக் குழுவிலும் சேர்ந்தார்.
மீனா: இன்று பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும் 'ஜெய் ஹிந்த்' என்ற வாசகத்தை அவர்தாம் உருவாக்கினார்.
அம்மா: ஆம்.
செயல்பாடு
நாம் செய்வோம்.
பின்வரும் படத்தில் இடம்பெற்றுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை எழுதுக.
1.வீரபாண்டியன் கட்டபொம்மன் , 2. வேலுநாச்சியார், 3. சுப்பிரமணிய பாரதி, 4. வாஞ்சிநாதன், 5. திருப்பூர் குமரன் 6. வ.உ. சிதம்பரம்பிள்ளை,
7. திரன்சின்னமலை, 8. சுப்பிரமணிய சிவா, 9. மருதுபாண்டியர், 10. புலித்தேவர்
மீனா: பின்னர், நான் சுப்பிரமணிய சிவா பற்றி அறிந்து கொண்டேன்.
அம்மா : அவர் சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமன்று; ஆக்கபூர்வமான எழுத்தாளரும் ஆவார்.
மீனா: ஆம், அம்மா. அவர் திண்டுக்கலில் பிறந்தார், தமிழ்மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அம்மா : சுப்பிரமணிய சிவா ஞானபானு என்ற மாத இதழைத் தொடங்கினார். அவர் இராமானுஜ விஜயம், சங்கரா விஜயம் போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
மீனா: அவர், இளைஞர் பலரைச் சுதந்திர இயக்கத்தில் சேர ஊக்கப்படுத்தினார். இது ஆங்கிலேயர்களைக் கோபப்படுத்தியது. அவர்கள் அவரைச் சிறையில் அடைத்தனர்.
அம்மா : அவர் சிறையில் இருந்தபோதும் கூடச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கு கொண்டிருந்தார்.
மீனா: ஓ! உண்மையாகவா?
நாம் அறிந்து கொள்வோம்.
சுப்பிரமணிய சிவா சுதந்திரப் போராட்டத்திற்காக வ. உ. சிதம்பரனாருடனும் மற்றும் சுப்பிரமணிய பாரதியுடனும் நெருக்கமாகப் பணியாற்றினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தியாகி சுப்பிரமணியா சிவா மாளிகை என்று பெயரிடப்பட்டுள்ளது.
அம்மா : திருப்பூர் குமரன் பற்றி அறிந்துகொண்டாயா?
மீனா: ஓ! அறிந்துகொண்டேன் அம்மா. அவர் திருப்பூரில் பிறந்தார். தம் இளம் வயதில், அவர் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
அம்மா : ஆம், மீனா. அவர் தேசபந்து இளைஞர் சங்கம் என்பதனைத் தொடங்கினார். இது தமிழ்நாட்டின் இளைஞர் பலரைச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது.
மீனா: ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தின் போது, அவர் இந்தியாவின் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடியே இறந்தார். எனவே, அவர் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார்.
அம்மா : சொல்வது சரிதான்.
மீனா: தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி அறிந்த பிறகு, நான் மிகவும் வியப்படைந்தேன்.
அம்மா : ஆம். இந்தியாவின்மீது அவர்கள் கொண்டிருந்த நாட்டுப்பற்றையும் (Patriotism), சுதந்திரத்திற்கான அவர்களின் பங்களிப்பினையும் (Contribution) ஒருபோதும் நம்மால் மறக்க முடியாது.
மீனா: அவர்கள், நம்மைச் சிறந்த குடிமக்களாக இருந்து நம் நாட்டுக்குச் சேவை செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள்.
அம்மா : உண்மைதான்.
நாம் அறிந்து கொள்வோம்.
இலட்சுமி சாகல் இந்திய சுதந்திர இயக்கத்தின் புரட்சியாளராகவும், இந்திய தேசிய இராணுவ அதிகாரியாகவும் இருந்தார். இலட்சுமி சாகல் கேப்டன் இலட்சுமி என்று அழைக்கப்படுகிறார்.
கலைச்சொற்கள்
Commemorate : நினைவுகூருதல்
Contribution : பங்களிப்பு
Patriotism : நாட்டுப்பற்று
மீள்பார்வை
* தமிழ்நாட்டிலிருந்து பலர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
* சுப்பிரமணிய பாரதி, கவிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தார்.
* வ. உ. சிதம்பரனார், 'கப்பலோட்டிய தமிழன்' என்று அழைக்கப்படுகிறார்.
* இன்று பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும் 'ஜெய் ஹிந்த்' என்ற வாசகத்தைச் செண்பகராமன் உருவாக்கினார்.
* திருப்பூர் குமரன், 'கொடிகாத்த குமரன்' என்று அழைக்கப்படுகிறார்.