Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | அருஞ்சொல் விளக்கம் விலங்கியல்
   Posted On :  24.03.2022 11:41 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அருஞ்சொல் விளக்கம்

அருஞ்சொல் விளக்கம் விலங்கியல்

விலங்கியல் - அருஞ்சொல் விளக்கம் - தொழில்நுட்பவார்த்தைகளுக்கான விளக்கம்

அருஞ்சொல் விளக்கம்



NPKஉரங்கள் (Fertilizers)- நைட்ரஜன்(N) , பாஸ்பரஸ் (P) மற்றும் பொட்டாசியத்தை (K) உடைய உரங்கள் 


Taq (டி.என்.ஏ பாலிமரேஸ்) - தெர்மஸ் அக்வாட்டிகஸ் (Thermos aquaticus) எனும் வெப்பம் விரும்பி பாக்டீரியாவிலிருந்து பெறப்படும் வெப்பம் தாங்கு திறனுடைய டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி Taq டி.என்.ஏ பாலிமரேஸ் எனப்படும். இது டி.என்.ஏ உருவாக்கத்திற்கு உதவும். 


ஃபைப்ராய்ட்ஸ் (Fibroids) - கருப்பையின் உட்சுவரிலும் வெளிப்பகுதியிலும் காணப்படும் அசாதாரண கட்டிகள் / வளர்ச்சிகள் 


அசிடோஜெனிசிஸ் (Acidogenesis) - அசிடோஜெனிக் பாக்டீரியாக்கள் மூலம் எளிய கரிமப்பொருட்களை அசிட்டேட், ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாற்றுதல். 


அமைப்பு மரபணுக்கள் (Structural gene) - புரத அமைப்பை குறியீடு செய்யும் மரபணுக்கள் 


அமைவிடம் (Locus) - ஒரு குறிப்பிட்ட பண்பிற்கான மரபணு, ஒரு குறிப்பிட்ட குரோமோசோமில் அமைந்துள்ள இடம். 


ஆன்டோஜெனி (Ontogeny) - கருவளர்ச்சி ஒரு உயிரினத்தின் கருவளர்ச்சி நிலைகள் ஆன்ட்டோஜெனி எனப்படும். 


இடைப்பால் உயிரிகள் (Intersex) - ஆண், பெண் ஆகிய இருபால் பண்புகளையும் ஒருங்கே பெற்ற உயிரி 


இணை ஓங்குத்தன்மை (Co-dominance) - வேறுபட்ட இனச் செல்களைக் கொண்ட உயிரினங்களில் ஓங்கு மற்றும் ஒடுங்கு அல்லீல்கள் இரண்டுமே புறத்தோற்ற பண்புகளை வெளிப்படுத்தும் திறனுடையவை. 


இண்டர்ஃபெரான் (Interferon) - இது ஒரு வைரஸ் எதிர்ப்பு புரதமாகும். இவை வைரஸால் பாதிக்கப்பட்ட ஃபைபிரோபிளாஸ்ட் மற்றும் வெள்ளையணுக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது மேலும் பாதிப்படையாத செல்களையும் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாக்கிறது.


இதய இலயமின்மை (cardiac Arrhythmia)- இயல்பான இதயத்துடிப்பிலிருந்து வேறுபட்டு காணப்படுதல். 


இயல்பு திரிபு (Denaturing) : இரு டி.என்.ஏ. இழைகளுக்கிடையிலான ஹைட்ரஜன் பிணைப்புகளை உடைப்பதன் மூலம் தனித்தனி இழைகளாகப் பிரித்தல். 


இயற்கை கொல்லி செல்கள் (NK cells) - இவை புற்றுநோய் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கின்றன. 


இயோஹிப்பஸ் (Eohippus) - நவீன குதிரைகளின் முன்னோடிகள் 


இரத்தம் உறையாமை (Haemophilia) : இரத்தம் உறையும் திறனில் ஏற்படும் குறைபாட்டு நிலை. இந்நோய் உள்ளவர்களுக்கு சிறிய காயத்தினால் கூட அதிக இரத்த இழப்பு ஏற்படும். 


உடலுள் கருவுறுதல் (Invivo fertilization) - பெண் உயிரியின் உடலுள் இனச்செல்கள் இணைதல் 


உட்வெளிக் கருவுறுதல் (Invitro fertilization) - ஆய்வகத்தில், உடலுக்கும் வெளியே கருவுறச் செய்தல் 


உணர்தடை டி.என்.ஏ (Antisense DNA) - இரண்டு இழைகள் உடைய டி.என்.ஏவின் குறியீடு உடைய இழைக்கு நிரப்புக் கூறாக அமையும் குறியீடற்ற இழை உணர்தடைடி.என்.ஏ எனப்படும். உணர்தடை டி.என்.ஏ கடத்து ஆர்.என்.ஏ உருவாக்கத்திற்கான வார்ப்புருவாக அமையும். 


உயிரிய புவியமைப்பு (Biogeography) - உயிரினங்கள் புவியப் பரவலை பற்றிய அறிவியல் ஆகும். 


உயிரின்றி உயிர் தோன்றல் (Abiogenesis) - உயிரற்ற வேதிப் பொருட்களிலிருந்து உயிரினம் தோன்றுவது உயிரின்றி உயிர் தோன்றல் எனப்படும். 


உளவிய மருந்து (Psychoactive drug) - மூளையின் மீது செயல்பட்டு பயன்படுத்துபவரின் மனம் மற்றும் நடத்தையை பாதிக்கும் வேதிப்பொருள். 


ஊசிஸ்ட் (Oocyst) - பிளாஸ்மோடியத்தின் கூடுடைய கருமுட்டை 


எம்பைசீமா (Emphysema) - நுரையீரல்கள் அளவில் பெரிதாதல் மற்றும் சரிவர செயல்படாத, தீவிர மருத்துவ நிலையினால் ஏற்படும் சுவாசக் குறைபாடு. 


எல்நினோ (El nino) - கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீரில் ஏற்படும் இயல்பற்ற வெப்ப அதிகரிப்பு.


எளிதில் ஆவியாதல் (volatility) - விரைவில் ஆவியாக மாறும் பொருள் அல்லது திரவம் 


என்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) - இயல்பாக கருப்பையின் உட்பகுதியில் காணப்பட வேண்டிய என்டோமெட்ரிய திசு அசாதாரண நிலையில் வெளிப்பகுதியில் காணப்படுதல் 


ஒபரான் (Operon) - ஒரு இயக்கியால் கட்டுப்படுத்தப்படுகிற மரபணுக்களின் குழு 


ஒரு செல் புரதம் (SCP) - இது வளர்க்கப்பட்ட ஒரு செல் உயிரிகளிடமிருந்து பெறப்படும் புரதம் ஆகும். இது ஒரு நல்ல இணை உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. 


ஒவ்வாமை (Allergy) - மிகையுணர்வு வினை பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் 


ஓடும் விலங்கு (Cursorial) - இவ்வகை விலங்குகள் ஓடுவதற்கான தகவமைப்புகளைக்கொண்டுள்ளன. இவை குறைந்த தூரத்தை விரைவாகக் கடக்கும் விலங்குகள் போலல்லாமல் நீண்ட தூரத்தைச் சீரான வேகத்தில் கடக்கும் திறனுடையவை. எனவே சிறுத்தை ஓடும் விலங்காகும்; ஆனால் மரச்சிறுத்தை இவ்வகையில் வராது. 


ஓரிடத்தன்மை (Endemism) - தனித்தன்மை வாய்ந்த உயிரினங்கள், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மிக அதிக அளவில் காணப்படும் நிகழ்வு.


கடத்திகள் (Carrier) - வெளிப்படாத, ஒடுங்கு மரபணுவைக் கொண்ட ஹெட்டிரோசைகஸ் உயிரி 


கண்ணாடியாக்கம் (Vitrification) - பொருட்களை கண்ணாடியாக மாற்றுதல்.


கம்பளி மாம்மூத்துகள் (Wolly mammoths) - உடலில் ரோமங்களால் போர்த்தப்பட்ட, குளிரான பகுதிகளில் வாழ்ந்த கம்பளி யானைகள் மாம்மூத்துகள் ஆகும்.


கருப்பை உள் இடமாற்றம் (Intra - Uterine transfer (IUT)) - 8 கருக்கோளச் செல்களை விட அதிகமான செல்களைக் கொண்ட கருவை, கருப்பையினுள் செலுத்தி, முழுவளர்ச்சி அடைய வைத்தல்


கருப்பையினுள் விந்து கெல்களை உட்செலுத்துதல் (Intra - Uterine insemination (IUI)) - சேகரிக்கப்பட்ட விந்து செல்களை நுண்குழல் மூலம் கலவிக்கால்வாய் வழியாக கருப்பையினுள் செலுத்தப்படுவதாகும்.


கருமுட்டையை அண்ட நாளத்தினுள் செலுத்துதல் (ZIFT) - கருமுட்டை அல்லது 8 செல் நிலை அல்லது அதற்கும் குறைந்த செல்களைக் கொண்ட கருவினை அண்ட நாளத்திற்குள் செலுத்துதல் 


கரைத்தல் (Solubilization) - காற்றற்ற செரிப்பிற்காக, சாணக் கூழ் தயாரிக்கத் தேவையானவற்றை நீரில் கரைத்தல். 


கரைந்துள்ள ஆக்சிஜன் (DO) - நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவு. 


கவிகை (Canopy) - தனித்தனி தாவரங்களின் உச்சிப் பகுதிகளால் உருவாக்கப்பட்ட, தாவர சமுதாயத்தின் மேல்பரப்பு கவிகை எனப்படும்.


கழிவுநீர் (Sewage) - மனிதக் கழிவுகளை உள்ளடக்கிய பல்வேறு திட மற்றும் திரவக் கழிவுகளைக் கொண்ட கழிவு நீர். 


கேலக்ஸி (Galaxy) - குறிப்பிட்ட முறையில் அமைந்துள்ள நட்சத்திரக் கூட்டம். 


கோசர்வேட்டுகள் (Coacervates) - இவை மின்னூட்ட விசைகளால் பிணைக்கப்பட்ட , நுண்ணிய, தானாகவே உருவானகொழுப்பு மூலக்கூறுகளாலான கோள வடிவத் திரள்கள் ஆகும். இவை செல்களுக்கு முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. இவை சவ்வினால் சூழப்பட்ட கூழ்ம நிலையில் உள்ள, சுற்றுச்சூழலிலிருந்து மூலக்கூறுகளை எடுத்துக் கொண்டு வளரும் தொகுப்புகள் ஆகும். ஒப்பாரின் என்பவர் கருத்துப்படி உயிரினங்கள் கோசர்வேட்டுகளிலிருந்து தோன்றியிருக்கக் கூடும். 


கோழைச்சார்ந்த நிணநீரிய திசு (MALT) - பொதுவாக இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்பாகும். பேயர் திட்டுக்கள், டான்சில்கள் 


கோளணுக்கள் (Planetesimals) - இவை அடிப்படை அமைப்பு அலகுகள் ஆகும். மேலும் இவை சிறுகோள்கள் மற்றும் வால் விண்மீன்களுக்கு முன்னோடிகள் ஆகும். 


சிற்றினமாக்கம் (Speciation) - ஏற்கனவே உள்ள சிற்றினத்திலிருந்து புதிய சிற்றினம் உருவாதல் சிற்றினமாக்கம் எனப்படும். 


சுற்றுச் சூழல் சுற்றுலா (Ecotourism) - தனித்தன்மை வாய்ந்த இயற்கை சுற்றுச்சூழ்நிலைகளின் தரத்தையும் அதன் சேவைகளையும் கண்டு மகிழ சுற்றுலா செல்லுதல்.


செல் தன் மடிவு (Apoptosis) - பல செல் உயிரிகளில் காணப்படும் நிரல் சார்ந்த செல் சிதைவு 


சைட்டோலைசிஸ் (Cytolysis) - செல்கள் அழிக்கப்படும் நிகழ்ச்சி சைட்டோலைசிஸ் எனப்படும் 


சைஷாண்ட் (Schizont) - பிளாஸ்மோடியத்தின் டிரோஃபோசோயிட் நிலை அளவில் பெரிதாகி பிளத்தலுக்கு உட்பட்ட நிலை சைஷான்ட் நிலை உருவாகிறது. 


சைஷோகோனி (Schizogony) - பல பிளவு முறையில் ஒரு உயிரியானது பிரிவடைந்து பலசேய் செல்களை உருவாக்கும் முறை. 


டிரோபோசோய்ட் நிலை (Tropozoite stage) - பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியில் இரத்த சிவப்பணுக்களில் உள்ள கிரிப்டோமீரோசோயிட்டுகள் உருண்டை வடிவ டிரோபோசோயிட்டுகளாக மாற்றமடைகின்றன. டென்டிரைட்டிக் 


செல்கள் (Dentritic cells) - எதிர்ப்பொருள் தூண்டியை முன்னிலைப்படுத்தும் இச்செல்கள் நீண்ட படலம் சார்ந்த செயல்களைக் கொண்டுள்ளன. 


டையபிடிசிஸ் (Diapedesis) - காயம் அல்லது நோய்கிருமிகளால் வீக்கம் ஏற்படுகின்ற பகுதியை நோக்கி இரத்த சுற்றோற்ற மண்டலத்தில் இருந்து செல்கள் (வெள்ளையணுக்கள்) வெளியேறுகின்றன. 


டைனோசார்கள் (Dinosaurs) - இவை, மிகப்பெரிய மறைந்துவிட்ட ஊர்வன வகுப்பைச் சேர்ந்த உயிரினங்கள் ஆகும். இவை பறவைகள் போன்றும் பல்லிகள் போன்றும் முக அமைப்பைக் கொண்டவை. இவை மீசோசோயிக் பெருங்காலத்தில் வாழ்ந்தவை ஆகும். இப்பெயரை உருவாக்கியவர் சர் ரிச்சர்டு ஓவன் ஆவார். 


தண்டு வட மரப்பு நோய் (Multiple sclerosis) - இது ஒரு மயலின் உறை சிதைவு நோயாகும். மூளை மற்றும் தண்டுவட நரம்பு செல்களில் உள்ள பாதுகாப்பு மயலின் உறை சிதைக்கப்படுவதால் உண்டாகின்றது. 


தற்கதிர்வீச்சு வரைபட முறை (Auto radiography) : X- கதிர் அல்லது ஒளி வரைபட தகட்டினை பயன்படுத்தி, கதிர் வீச்சுடைய உயிரினங்களைக் கண்டறிதல். 


தன்நிலை காத்தல் (Homeostasis) - உயிரினங்கள் தங்களுடைய உள்நிலை செயல்பாடுகளை நிலைத்ததன்மையுடன் வைத்திருத்தல்.


தாவுதல் (Saltation)-ஒருபடியில் நிகழும் மிகப்பெரிய திடீர் மாற்றம் தாவுதல் எனப்படும். 


தாவும் விலங்குகள் (Saltatorial) - இவை தாவிச் செல்வதற்கான தகவமைப்புகளைப் பெற்ற உயிரினங்கள். இவை நீளமான மற்றும் வலிமையான பின்னங்கால்களையும், நீளம் குறைந்த முன்னங்கால்களையும் உடையன. 


துணைக்கோள் டி.என்.ஏ (Satellite DNA) - யூகேரியோட்டுகளின் குறுகிய மறுதொடரி டி.என்.ஏ வரிசை ஹெட்டிரோகுரோமேட்டினுள் இவை படியெடுக்கப்படுவதில்லை. 


துலக்கி டி.என்.ஏ. (Probe DNA) : இது ஒற்றை இழையினைக் கொண்ட டி.என்.ஏ. மூலக்கூறு ஆகும். இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மரபணுவின் நிரப்பு டி.என்.ஏ. மூலக்கூறு ஆகும். 


தேர்வு (Selection)- ஒருகலப்பு இனக்கூட்டத்திலிருந்து சிறந்த தகவமைப்புகளை உடைய அல்லீல்கள் தேர்ந்தெடுக்கப்படுதல் தேர்வு எனப்படும். 


தொகுதி வரலாறு (Phylogeny) - ஒரு தனி உயிரியின் இன வரலாற்றை மீளக் காட்டுதல். 


தொடக்க டி.என்.ஏ. (Primer DNA) : நியூக்ளிக் அமில உற்பத்தியைத் தொடங்கும் -3OH முடிவை உடைய வார்ப்புரு இழையினை உருவாக்கும் சிறிய ஆலிகோநியூக்ளியோடைடுகள் ஆகும். 


தொப்புள் கொடி (Umbilical cord) - வளர்கருவையும் தாய் சேய் இணைப்புத்திசுவையும் இணைக்கும் தமனிகளும் சிரைகளும் அடங்கிய அமைப்பு 


நியூக்ளியோசோம் (Nucleosome) : இது மறுதொடரி டி.என்.ஏ. ஆகும் (மீண்டும் மீண்டும் காணப்படுதல்). எட்டு ஹிஸ்டோன் மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட 190 கார இணைகளைக் கொண்ட ஒன்றாக மடிந்த டி.என்.ஏ. அமைப்பாகும். 


நிரந்தர உறைபகுதி (Permafrost) - குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக உறைந்த நிலையில் (32°F அல்லது 0 °C) காணப்படும் நிலப்பகுதி நிரந்தர உறைபகுதி எனப்படும். வட தென், துருவங்களில் காணப்படும், உயர் அட்சப் பகுதிகளில் உள்ள உயரமான மலைப்பகுதிகளில் இப்பகுதிகள் அதிகம் காணப்படும். 


நீரோட்ட உணர்வி (Rheorecepton) - மீன்கள் மற்றும் சில இருவாழ்விகளில் நீரோட்டத்தை அறிய உதவும் உணர்வேற்பிகள்.


நோய்தடைக்காப்பு வினை (Immune reactions) - எதிர்ப்பொருள் தூண்டியின் துலங்கலால் எதிர்ப்பொருள் உருவாக்கப்படுகிறது.


படிவு ஆக்சிஜன் தேவை (SOD) - நீர்நிலைகளில் கரிமப் பொருட்களை மட்கச் செய்யும் பொழுது, வெளியேறும் ஆக்சிஜன் அளவு. 


பரவல் (Distribution) - ஒரு குறிப்பிட்ட பரப்பில் வாழும் உயிரினங்கள், அப்பகுதியில் பரவியுள்ள விதம் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் விதம் பரவல் எனப்படும். 


பனிப்பாறையாறுகள் (Glaciers) - மெதுவாக நகரக்கூடிய பெருந்திரளான பனிப்பாறை. 


பாக்டீரியோஃபேஜ் (Bacteriophages)- பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்


பாசிப்பெருக்கம் (Algal bloom) - கழிவுநீரில் உள்ள அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள், மிதவைப் பாசிகளின் மிகைவளர்ச்சியை உண்டாக்குகின்றன.


பாலிபெப்டைடு சங்கிலி (Polypeptide chain) - இவை சிறிய துணை அலகு அல்லது அமினோ அமிலங்களால் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவானவையாகும். இவை புரதங்களின் கட்டுமான பொருளாக விளங்குகின்றன.


பான்ஸ்பெர்மியா (Panspermia) - ஸ்போர் வடிவில் உள்ள உயிரினம். 


பிரிந்து ஒதுங்காமை (Non-disjunction) - செல் பிரிதலின்போது ஒத்த குரோமோசோம்கள் அல்லது சகோதர குரோமடிடுகள் சரிவர பிரியாத நிலை. 


பிறவி நிலை ஆர்.என்.ஏ. (Nascent RNA) : இது உடனடியாக உருவாகும் ஆர்.என்.ஏ. ஆகும். இதில் படியெடுத்தலுக்குப் பின் நடைபெறும் மாறுபாடுகள் எதுவும் காணப்படுவதில்லை .


புறத்தோற்ற நெகிழ்வுத் தன்மை (Phenotypic Plasticity) - ஒரு மரபணு அமைப்பு, வெவ்வேறு சுற்றுச் சூழலுக்கேற்ப, ஒன்றுக்கும் மேற்பட்ட புறத்தோற்றப் பண்புகளை உருவாக்கும் தன்மை புறத்தோற்ற நெகிழ்வுத் தன்மை எனப்படும்.


புற்றுநோய்த் தூண்டிகள் (Carcinogens) - புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள். 


பூப்பெய்துதல் (Puberty) - இனப்பெருக்க முதிர்வு காலம் 


பேரழிவு (Catastrophic) - பேரழிவு ஒரு பொருள் அல்லது நிகழ்வால் திடீரென ஏற்படுதல் 


பேறுகாலத்திற்குப்பின் (Postpartum) - குழந்தை பிறப்பிற்குப் பிந்தைய தாய்மைக் காலம்


போதை மருந்து (Narcotic) - அபின் தாவரத்திலிருந்து (Opium) பெறப்பட்ட , அமைதியான கனவு போன்ற நிலையை உருவாக்கும் சக்தி வாய்ந்த மருந்து. 


போலிக்கால்கள் (Pseudopodia) - அமீபா மற்றும் அமீபா போன்ற செல்களில் தற்காலிமாக உருவாகும் மழுங்கலான புரோட்டோபிளாச நீட்சிகள் 


மண்ணியல் (Geology) - புவியின் தோற்றம் மற்றும் அமைப்பு குறித்து படிக்கும் அறிவியல் பிரிவு மண்ணியல் எனப்படும். 


மரபணு வங்கிகள் (Gene Banks) - தனி உயிரிகள், விதைகள், திசுக்கள் அல்லது இனப்பெருக்க செல்களை இயற்கை வாழிடங்களுக்கு வெளியே பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட நிலையங்கள் 


மரபணுக் குழுமம் (Gene Pool) - ஒரு சிற்றினத்தில் உள்ள அனைத்து மரபணுக்களின் தொகுப்பு மரபணுக் குழுமம் எனப்படும். 


மரபிய நகர்வு (Genetic drift) - மரபணு நிகழ்வெண்ணில் ஏற்படும் மாறுபாடு மரபிய நகர்வு எனப்படும். 


மறுசேர்க்கைக்கு உட்பட்ட செல் / உயிரினம் (Recombinant) - ஒரு செல் அல்லது உயிரினத்தின் மரபு நிரப்புக்கூறு மறுசேர்க்கை நிகழ்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 


மாதவிடாய் துவக்கம் (Menarche)- முதல் மாதவிடாய் தொடங்கும் நிகழ்வு 


மாயத் தோற்றம் (Hallucination) - இல்லாத ஒன்றை பார்ப்பதாகவோ, கேட்பதாகவோ அல்லது ஏதேனும் ஒன்றை உணர்வதாகவோ உணர்தல். 


மாறுபாடுகள் (Variation) - ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், மாறுபாடுகள் எனப்படும். 


மாற்று மரபணு (Transgene) - மரபணு மாற்றப்பட்ட உயிரிகளின் வளர்ச்சிக்குக் காரணமான இலக்கு மரபணு . 


மானிடதோற்றவியல் (Anthropology) - மனித மக்கள் தொகையில் உள்ள உயிரியல் மற்றும் கலாச்சாரப் பண்புகளில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் படிக்கும் பிரிவு மானுடவியல் எனப்படும். இவ்வியலில், உலகின் அனைத்துப் பகுதியிலும் வாழும் மனிதர்களின் உயிரியல் மற்றும் கலாச்சாரப் பண்புகள் ஆய்ந்தறியப்படுகின்றன. 



மாஸ்ட் செல் (Mast cells) - எலும்பு மஜ்ஜையில் இருந்து பெறப்பட்ட செல்லாகும்.


மிகை உணவூட்டம் (Eutrophication)- நிலப்பகுதியிலிருந்து வரும் உரங்களின் காரணமாக ஏரி அல்லது பிற நீர்நிலைகளில் உண்டாகும் அதிகப்படியான ஊட்டச்சத்து அடர்த்தியான தாவர வளர்ச்சியை உண்டாக்குகிறது. 


மீரோசோய்ட் (Merozoite) - இரத்த சிவப்பணுக்கள் அல்லது கல்லீரல் செல்களில் உள்ள பிளாஸ்மோடியத்தின் டிரோபோசோய்ட் நிலை 


முன்னோடி பொருள் (Precursor) - வளர்சிதை மாற்ற வினைபோன்றவற்றில், இன்னொருபொருளுக்கான மூலமாகும். 


மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) : செல்லுக்குள் காணப்படும் மூலக்கூறுகளின் உயிரியல் நிகழ்வுகளை, இயற்பிய, வேதிய பண்புகளின் அடிப்படையில் விளக்கும் உயிரியலின் ஒரு பிரிவு ஆகும். 


மூலக்கூறு மருந்தியல் (Molecular pharming) - மரபியல்பு மாற்றப்பட்ட உயிரினங்களிலிருந்து செயல்திறனுடைய மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்தல். 


மூலச்சிற்றினங்கள் (Keystone species) - ஒரு சூழ்நிலை மண்டலத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சிற்றினத்தில் அழிவு, மற்ற சிற்றினங்களில் உள்ள சராசரியை விட அதிகமான மாற்றத்தை ஏற்படுத்தும். 


மெத்தனோஜெனிசிஸ் (Methanogenesis) - மீத்தேன் உருவாக்கும் பாக்டீரியாக்கள் மூலம் அசிட்டேட், ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை மீத்தேனாக மாற்றுதல். 


மேக்ரோஃபேஜ்(Macrophage)- மோனோசைட்டுகளில் இருந்து பெறப்படுகின்ற மிகப்பெரிய வெள்ளையணு மேக்ரோஃபேஜ் ஆகும். இவை செல் விழுங்குதல் பணியை மேற்கொள்கின்றன.


யூகுரோமேட்டின் (Euchromatin) - அதிக மரபணுக்களைக் கொண்ட குரோமேட்டினின் இறுக்கமான வடிவமாகும். இதில் படியெடுத்தல் அதிகம் நடைபெறும். 


ரீடியா (Redia) - பெரும்பாலான டிரெமட்டோட் வகைப் புழுக்களின் வாழ்க்கை சுழற்சியில் உருவாகும் ஒரு இளவுயிரி


வலு குறைக்கப்பட்ட (Attenuation) - வீரியம் குறைத்தல். 


வளர்கரு (Foetus) - முதுகெலும்பிகளின் கருவளர்ச்சியில் முழு உயிரியின் புலனாகக் கூடிய கூறுகளைக் கொண்ட நிலை 


வளைவாழ் உயிரிகள் (Fossorial) - 'Fosso' என்ற இலத்தீன் மொழிச்சொல் 'வளை தோண்டி' என்ற பொருளைக் குறிக்கும். வளை தோண்டுவதற்கான தகவமைப்புகள் உடைய இவ்வுயிரினங்கள் பெரும்பாலும் பூமிக்கடியில் வாழ்வனவாகும். எ.கா. பேட்ஜர், துன்னெலிகள், கிளாம்கள் மற்றும் மோல் சலமாண்டர்கள். 


வார்ப்புகள் (Mould) - உயிரினத்தைச் சூழ்ந்திருந்த பாறைகளில், முழு உயிரினம் அல்லது ஒரு பகுதி அச்சாக உருவாதல் வார்ப்புகள் எனப்படும். 


விலகல் அறிகுறிகள் (Withdrawl sysmptoms) - ஒருவர் போதை மருந்துகள் பயன்படுத்துவதை நிறுத்திய பின்னர் பெறும் எதிர் விளைவுகள். 


விலங்கின புவியமைப்பு (Zoogeography)- விலங்கினங்களின் புவிப் பரவலை பற்றிய அறிவியல் ஆகும். 


வெப்பச் சிதைவு (Pyrolysis) - பொருட்களை அதிக வெப்பத்தைச் செலுத்தி மக்கச் செய்தல். 


வெற்று செல் (Null cell) - லிம்போசைட்டுகளில் மிக குறைந்த அளவில் வெற்று செல்கள் காணப்படுகின்றன. இவைகளில் B மற்றும் T செல்களில் காணப்படுவது போன்று புறச்சவ்வில் குறியீடுகள் காணப்படுவதில்லை. இயற்கையான கொல்லி செல்கள் இவ்வகையை சார்ந்தவையாகும். 


வேதிய ஆக்சிஜன் தேவை (COD) - நீரில் காணப்படும் கரையக் கூடிய கரிமங்களையும், கரிமத்துகள்களையும் ஆக்ஸிஜனேற்றமடையச் செய்ய தேவைப்படும் ஆக்சிஜன் அளவு. 


ஹீமோசோயின் (Haemozoin)- மலேரியாகாய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய நச்சு நிறமி. 


ஹெட்டிரோகுரோமேட்டின் (Heterochromatin) - ஹெட்டிரேகுரோமேட்டின் என்பது நெருக்கமாக பிணைக்கப்பட்ட அல்லது சுருக்கப்பட்ட டி.என்.ஏ. ஆகும்.


12th Zoology : Glossary : Glossary and Definitions in Zoology in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அருஞ்சொல் விளக்கம் : அருஞ்சொல் விளக்கம் விலங்கியல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அருஞ்சொல் விளக்கம்