பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: நால்வகைச் சொற்கள் | 6th Tamil : Term 3 Chapter 1 : Puthumaikal seium desamithu
இயல் ஒன்று
கற்கண்டு
நால்வகைச் சொற்கள்
தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
(எ.கா.)
ஈ, பூ,
மை, கல்,
கடல், தங்கம்.
இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
பெயர்ச்சொல்
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
(எ.கா.)
பாரதி,பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.
வினைச்சொல்
வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
(எ.கா.)
வா,போ,
எழுது, விளையாடு
இடைச்சொல்
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.
( எ.கா ) உம் - தந்தையும் தாயும்
மற்று - மற்றொருவர்
ஐ - திருக்குறளை
உரிச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்.
(எ.கா.)
மா - மாநகரம்
சால - சாலச்சிறந்தது