Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | இலக்கணம்: தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் | 8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu

   Posted On :  15.07.2023 02:36 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது

இலக்கணம்: தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : இலக்கணம்: தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஐந்து

கற்கண்டு

தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்


தொகைநிலை

ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் என்பதை அறிந்தோம். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் என்பதையும் அறிவோம்.

பால் பருகினான். வெண்முத்து.

என்னும் தொடர்களைப் பாருங்கள். இவை பாலைப் பருகினான், வெண்மையான முத்து என்னும் பொருள்களைத் தருகின்றன. முதல் தொடரில் '' என்னும் வேற்றுமை உருபும் அடுத்த தொடரில் 'மை' என்னும் விகுதியும் 'ஆன' என்னும் உருபும் மறைந்து நின்று பொருள் உணர்த்துகின்றன.

இவ்வாறு இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்பர். இத்தொகைநிலைத் தொடர் 1. வேற்றுமைத் தொகை 2. வினைத்தொகை 3. பண்புத்தொகை 4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை 6. அன்மொழித்தொகை என ஆறுவகைப்படும்.

வேற்றுமைத்தொகை

திருக்குறள் படித்தாள்.

இத்தொடர் திருக்குறளைப் படித்தாள் என விரிந்து நின்று பொருள் தருகிறது. இரு சொற்களுக்கும் இடையில் '' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. இவ்வாறு இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.

1. திருவாசகம் படித்தான் -  (ஐ) இரண்டாம் வேற்றுமைத்தொகை

2. தலைவணங்கு - (ஆல்) மூன்றாம் வேற்றுமைத்தொகை

3. சிதம்பரம் சென்றான் -  (கு) நான்காம் வேற்றுமைத்தொகை

4. மலைவீழ் அருவி - (இன்) ஐந்தாம் வேற்றுமைத்தொகை

5. கம்பர் பாடல் - (அது) ஆறாம் வேற்றுமைத்தொகை

6. மலைக்குகை - (கண்) ஏழாம் வேற்றுமைத்தொகை

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

பணப்பை

இது பணத்தைக் கொண்ட பை என விரிந்து பொருள் தருகிறது. பணம், பை என்னும் இரு சொற்களுக்கு இடையில் '' என்னும் வேற்றுமை உருபும் 'கொண்ட' என்னும் சொல்லும் (உருபின் பயன்) மறைந்து வந்துள்ளன.

இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை எனப்படும்.

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

(எ.கா.) பால் குடம் - (பாலைக் கொண்ட குடம்)

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

(எ.கா.) பொற்சிலை - (பொன்னால் ஆகிய சிலை)

நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

(எ.கா) மாட்டுக் கொட்டகை - (மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை)

வினைத்தொகை

ஆடுகொடி, வளர்தமிழ்

இத்தொடர்களில் ஆடு, வளர் என்பவை வினைப்பகுதிகள், இவை முறையே கொடி. தமிழ் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலம் காட்டாத பெயரெச்சங்களாக உள்ளன. அதாவது காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி உள்ளன. மேலும் இவை முறையே ஆடிய கொடி, ஆடுகின்ற கொடி, ஆடும் கொடி எனவும் வளர்ந்த தமிழ், வளர்கின்ற தமிழ், வளரும் தமிழ் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி பொருள் தருகின்றன.

இவ்வாறு காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பர்.

காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை - (நன்னூல் 364}

பண்புத்தொகை

வெண்ணிலவு, கருங்குவளை

இத்தொடர்களில் வெண்மை, கருமை என்னும் பண்புகள் நிலவு குவளை என்னும் பெயர்ச்சொற்களைத் தழுவி நிற்கின்றன. ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வெண்மையான நிலவு, கருமையாகிய குவளை என்னும் பொருள்களைத் தருகின்றன.

இவ்வாறு பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

பனைமரம்

இத்தொடர் பனையாகிய மரம் என விரியும். மரம் என்பது பொதுப்பெயர். பனை என்பது மரங்களுள் ஒன்றனைக் குறிக்கும் சிறப்புப்பெயர். இவ்வாறு சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்.

உவமைத்தொகை

மலர்விழி - இத்தொடர் மலர்போன்ற விழி என்ற பொருள் தருகிறது. மலர் -உவமை, விழி - உவமேயம். இடையில் போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இவ்வாறு உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

உம்மைத்தொகை

இரவுபகல், தாய்தந்தை

இத்தொடர்கள் இரவும் பாலும் தாயும் தந்தையும் என விரிந்து பொருள் தருகின்றன. இதில் சொற்களின் இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது. இவ்வாறு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பர்.

தெரிந்து தெளிவோம்

ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எண்ணும்மை எனப்படும்.

(எ.கா.) இரவும் பகலும், பசுவும் கன்றும்

அன்மொழித்தொகை

பொற்றொடி வந்தாள், (தொடி-வளையல்}

இத்தொடரில் பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும். இத்தொடர் வந்தான் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள் என்னும் பொருள் தருகிறது. இதில் 'ஆல்' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் 'ஆகிய' என்னும் அதன் பயனும் மறைந்து வந்து, வந்தாள் என்னும் சொல்லால் பெண் என்பதையும் குறிப்பதால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.

இவ்வாறு வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்வாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்.

 

தொகாநிலைத் தொடர்

ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அதனைத் தொகாநிலைத் தொடர் என்பர்.

இத்தொகாநிலைத் தொடர் 1. எழுவாய்த் தொடர் 2. விளித்தொடர் 3. வினைமுற்றுத் தொடர் 4. பெயரெச்சத் தொடர் 5. வினையெச்சத் தொடர் 6. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் 7. இடைச்சொல் தொடர் 8. உரிச்சொல் தொடர் 9. அடுக்குத்தொடர் என ஒன்பது வகைப்படும்.

1. எழுவாய்த் தொடர்

(எ.கா.) மல்லிகை மலர்ந்தது. -இதில் 'மல்லிகை' என்னும் எழுவாயைத் தொடர்ந்து 'மலர்ந்தது' என்னும் பயனிலை அமைந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இஃது எழுவாய்த் தொடர் ஆகும்.

2. விளித்தொடர்

(எ.கா.) நண்பா படி. இதில் 'நண்பா' என்னும் விளிப்பெயர் 'படி' என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது விளித்தொடர் ஆகும்.

3. வினைமுற்றுத் தொடர்

(எ.கா.) சென்றனர் வீரர். - இதில் 'சென்றனர்' என்னும் வினைமுற்று 'வீரர்' என்னும் பெயரைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது விளைமுற்றுத் தொடர் ஆகும்.

4. பெயரெச்சத் தொடர்

(எ.கா.) வரைந்த ஓவியம். - இதில் 'வரைந்த' என்னும் எச்சவினை 'ஓவியம்' என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது பெயரெச்சத் தொடர் ஆகும்.

5. வினையெச்சத் தொடர்

(எ.கா.) தேடிப் பார்த்தான். - இதில் 'தேடி' என்னும் வினையெச்சச் சொல் 'பார்த்தான்' என்னும் வினைமுற்றுச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினையெச்சத் தொடர் ஆகும்.

6. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

(எ.கா) கவிதையை எழுதினார். - இதில் '' என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துவதால் இது வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்.

7. இடைச்சொல் தொடர்

(எ.கா.) மற்றுப் பிற (மற்று + பிற) - இதில் 'மற்று' என்னும் இடைச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால் இஃது இடைச்சொல் தொடர் ஆகும்.

8. உரிச்சொல் தொடர்

(எ.கா.) சாலவும் நன்று. - இதில் 'சால' என்னும் உரிச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால் இஃது உரிச்சொல் தொடர் ஆகும்.

9. அடுக்குத்தொடர்

(எ.கா.) நன்று நன்று நன்று - இதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்துள்ளதால் இஃது அடுக்குத்தொடர் ஆகும்.

Tags : Chapter 5 | 8th Tamil இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu : Grammar: Thokainilai thokanilai thodarkal Chapter 5 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : இலக்கணம்: தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் - இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது