Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu

   Posted On :  15.07.2023 03:26 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது

வாழ்வியல்: திருக்குறள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஐந்து

வாழ்வியல்

திருக்குறள்


 

தெரிந்து வினையாடல்

1. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.

பொருள்: செயலாற்றும் திறன் உடையவரையும் செய்யவேண்டிய செயலையும் செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து அச்செயலை நிறைவேற்ற வேண்டும்.

2. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன்கண் விடல்*

பொருள்: இச்செயலை இந்தவகையால் இவர் செய்துமுடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்.

 

செங்கோன்மை

3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.

பொருள்: எதையும் நன்கு ஆராய்ந்து ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.

4. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள்: உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும்.

 

வெருவந்த செய்யாமை

5. தக்காங்கு நாடித் தலைசெல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

பொருள்: ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.

 

6. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

பொருள்: நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.

 

சொல்வன்மை

7. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.*

பொருள்: கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.

8. சொல்லுக சொல்லைப் பிறிதுஒர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து.*

பொருள்: நாம் சொல்லும் சொல்லை வேறு சொல்லால் வெல்ல இயலாதவாறு சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசவேண்டும்.

 

அவையறிதல்

9. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகைஅறிந்த தூய்மை யவர்.

பொருள்: சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.

10. கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து.

பொருள்: சொற்களை ஆராயும் அறிஞர்நிறைந்த அவையில் பேசும்போதுதான் பலநூல்களைக் கற்றவரின் கல்வி பெருமையடையும்.

Tags : Chapter 5 | 8th Tamil இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu : Valviyal: Thirukkural Chapter 5 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : வாழ்வியல்: திருக்குறள் - இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது