Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | துணைப்பாடம்: தமிழர் இசைக்கருவிகள்

இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: தமிழர் இசைக்கருவிகள் | 8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu

   Posted On :  15.07.2023 02:15 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது

துணைப்பாடம்: தமிழர் இசைக்கருவிகள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : துணைப்பாடம்: தமிழர் இசைக்கருவிகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஐந்து

விரிவானம்

தமிழர் இசைக்கருவிகள்


நுழையும்முன்

ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது அகராதி. ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது கலைக்களஞ்சியம் ஆகும். இது பல்துறை அறிவை உள்ளடக்கியதாக அல்லது ஒரு குறிப்பிட்ட துறை அறிவை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். கலைக்களஞ்சியத்தில் தகவல்கள் பெரும்பாலும் அகரவரிசையில் தொகுக்கப் பட்டிருக்கும். இசைத்துறை பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றை அறிவோம்.

 

இசை


மக்களின் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி, குரல் வழியாக அல்லது செயற்கைக் கருவி ஒன்றின் வழியாக வெளிப்பட்டது. இது நகை, அழுகை, வீரம் உள்ளிட்ட ஒன்பது சுவைகளை வெளிப்படுத்தக்கூடிய கலையாகப் பிறந்தது. இக்கலையே இசை எனப்பட்டது. குரல்வழி இசை, கருவிவழி இசை என இசையை இரண்டாகப் பிரிப்பர்.

 

இசைக்கருவிகள்

இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக் கருவிகள் ஆகும். காலத் தேவைகள், சமயச்சடங்குகள், திருவிழாக்கள் போன்ற பல நிகழ்வுகளின் பொருட்டு பலவிதமான இசைக்கருவிகள் தோன்றி வளர்ச்சிபெற்றன. இசைக்கருவிகள் குரல்இசைக்கு மட்டும் பயன்படுபவை, நாடகத்திற்கு மட்டும் பயன்படுபவை, இரண்டிற்கும் பயன்படுபவை எனப் பலவாகத் தோன்றிக் கிளைத்தன. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர்.

நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்

பாணன் சூடான் பாடினி அணியாள்

- புறநானூறு

 

இசைக்கருவிகளின் வகைகள்


இசைக்கருவிகள் தோல்கருவி, நரம்புக்கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும்.

1. விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள் எனப்படும். (எ.கா.) முழவு, முரசு

2. நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள் எனப்படும். (எ.கா.) யாழ், வீணை

3. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகள் எனப்படும். (எ.கா.) குழல், சங்கு

4. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும். (எ.கா.) சாலரா, சேகண்டி

 

உடுக்கை


உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு கைப்பறை ஆகும். இதன் உடல் பித்தளையால் ஆனது. வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால் பொருத்தப்பட்டிருக்கும். இரு வாய்களையும் இணைக்கும் கயிறுகள் இடையில் கோக்கப்பட்டிருக்கும். இவற்றின் மீது ஒரு நாடா சுற்றப்பட்டுத் தொங்கும். வலது வாயின் மீதுதான் அடிப்பர். அவ்வப்போது இடையின் மீதுள்ள நாடாவை அமுக்குவர். பெரிய உடுக்கையைத் தவண்டை என்பர். சிறு உடுக்கையைக் குடுகுடுப்பை என்பர். தில்லையில் நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் இதனைக் காணலாம். இறை வழிபாட்டின் போதும் குறிசொல்லும் போதும் இக்கருவி இசைக்கப்படுகிறது.

தண்டுடுக்கை தாளத்தக்கை சாரநடம் பயில்வார்

- சம்பந்தர் தேவாரம்

 

குடமுழா


ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது குடமுழா. ஒரு பெரிய குடத்தின் வடிவில் ஐந்து வட்டவடிவ வாய்களுடன் அமைந்திருக்கும். நடுவில் இருக்கும் வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும். ஒவ்வொரு வாயும் தோலால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும். இதன் காரணமாக இதனைப் பஞ்சமகா சப்தம் என்றும் அழைப்பர். இது கோயில்களில் ஒலிக்கப்படும் இசைக்கருவியாகும். சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகை முழவு ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

குழல்


வகை - காற்றுக்கருவி

காடுகளில் வளரும் மூங்கிலில் வண்டுகள் துளையிடும். அவற்றின் வழியாகக் காற்று வீசும்போது இன்னிசை எழும்பும். இதனைக் கேட்டு மகிழ்ந்த நம் முன்னோர் அமைத்துக் கொண்டவையே குழல்கள். இதனை வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர். குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும். இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும். மூங்கில் மட்டுமன்றிச் சந்தனம்,செங்காவி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

- திருக்குறள்

 

கொம்பு


வகை - காற்றுக்கருவி

மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று. இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்படுகின்றன. இதனை வேடர் வேட்டையின் போது ஊதுவர். கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர், ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன.

 

சங்கு


வகை - காற்றுக்கருவி

இஃது ஓர் இயற்கைக் கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளில் போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்

- திருப்பாவை

 

சாலரா


இது பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கும். அதன் உட்புறம் குவிந்து இருக்கும். இதனை ஒன்றோடு ஒன்று பொருத்தியும் விளிம்பின் மீது தட்டியும் தாளத்தின் தேவைக்கு ஏற்ப இசைப்பர். இதனைப் பாண்டில் எனவும் அழைப்பர். இது கோயில் கூட்டு வழிபாட்டின் போதும் இன்னிசை அரங்குகளிலும் இசைக்கப்படும் இன்றியமையாத இசைக்கருவி ஆகும். இதனை இக்காலத்தில் 'ஜால்ரா' என்பர்.

 

சேகண்டி


வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்தது சேகண்டி, இதனைக் குச்சியாலோ அல்லது இரும்புத் துண்டாலோ அடித்து ஒலி எழுப்புவர்.

இது தேவைக்கு ஏற்பப் பல அளவுகளில் உருவாக்கப்படும். இதனைச் சேமங்கலம் என்றும் அழைப்பர். இதனைக் கோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைப்பர்.

 

திமிலை


பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும். மணற்கடிகார வடிவத்தில் இக்கருவி அமைத்திருக்கும். இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்.

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி

வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி

- பெரியபுராணம்

 

பறை


விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி பறையாகும். பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்கக் கோட்பறையை முழக்கினர். பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது ஆகோட்பறையை முழக்குவர்.

இக்காலத்தில் இது தப்பு என்னும் பெயரில் வழங்கப்படுகிறது. இதனை முழக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது.

 

மத்தளம்


வகை - தோல்கருவி

மத்து என்பது ஓசையின் பெயர். இசைக்கருவிகளுக்கு எல்லாம் தளம் அடிப்படை ஆகும். மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்கிறார் அடியார்க்கு நல்லார்.

மத்தளத்தின் நடுப்பகுதி பெருத்தும் கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும். மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இதன் வாய்ப்பகுதி வளையங்களில் தோல் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இக்கருவி இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகிறது. ஆகவே இதனை முதற்கருவி என்பர். தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என்பர்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்

- நாச்சியார் திருமொழி

 

முரசு


வகை - தோல்கருவி

தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது முரசு ஆகும்.

படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்று மூன்று வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மாக்கண் முரசம் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.

 

முழவு


வகை - தோல்கருவி

ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு. ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவியாகும். இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர். மண்ணமை முழவு எனப் பொருநராற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது.

காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்

- புறநானூறு

 

யாழ்


வகை - நரம்புக்கருவி

வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர். வில்லைப் போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக் கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினார். இதன் அடிப்படையில் உருவான கருவியே யாழ் ஆகும். பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையானவை. யாழின் வகைக்கு ஏற்ப அதில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது. இருபத்தொரு நரம்புகளைக் கொண்டது பேரியாழ், பத்தொன்பது நரம்புகளைக் கொண்டதாக மீன் வடிவில் அமைந்தது மகரயாழ், பதினான்கு நரம்புகளைக் கொண்டது சகோடயாழ். யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது என்பர்.

 

வீணை


யாழ் போன்ற அமைப்பையுடைய நரம்புக்கருவி வீணையாகும். இஃது ஏழு நரம்புகளைக் கொண்டது. இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும் வலக்கை சுண்டுவிரலால் கம்பிகளை மீட்டியும் இசை எழுப்புவர்.

இவ்வாறு நரம்புகள் மூலம் எழுப்பப்படும் இசையை அதன் குடம், தண்டு முதலிய பாகங்கள் பெருக்கி அனுப்புகின்றன. பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Tags : Chapter 5 | 8th Tamil இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu : Supplementary: Tamil isai karuvigal Chapter 5 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : துணைப்பாடம்: தமிழர் இசைக்கருவிகள் - இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது