உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - இரத்தச் செல்களை அடையாளம் காணுதல் | 10th Science : Bio-Zoology Practicals
இரத்தச் செல்களை அடையாளம் காணுதல்
கொடுக்கப்பட்ட இரத்தச் செல்களை (இரத்தச் சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள்) அடையாளம் கண்டு தெளிவான படம் வரைந்து பாகங்களைக் குறித்து குறிப்புகளை எழுதுதல்.
நிலைப்படுத்தப்பட்ட இரத்தச் செல்களின் நழுவம்.
அ) கொடுக்கப்பட்டுள்ள நழுவம் இரத்தச் சிவப்பணு எனக் கண்டறியப்பட்டது.
1. இரத்தச் சிவப்பணுக்கள் தட்டை வடிவ, இருபக்கம் உட்குழிந்த அமைப்புடையவை.
2. இவை எரித்ரோசைட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
3. பாலூட்டியின் முதிர்ந்த இரத்தச் சிவப்பணுக்களில் உட்கரு காணப்படுவதில்லை.
4. ஹீமோகுளோபின் எனும் சுவாச நிறமி இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தை அளிக்கிறது.
5. இது நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு ஆக்சிஜனையும், திசுக்களிலிலிருந்து நுரையீரலுக்கு கார்பன் டை ஆக்சைடையும் கடத்துகிறது.
ஆ) கொடுக்கப்பட்டுள்ள நழுவம் இரத்த வெள்ளையணுக்கள் எனக் கண்டறியப்பட்டது.
1. இரத்த வெள்ளையணுக்கள் நிறமற்றவை மற்றும் உட்கரு கொண்டவை.
2. இவை லியூக்கோசைட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
3. இதில் அமீபாய்டு இயக்கம் காணப்படுகிறது.
4. இவை கிருமிகள் மற்றும் அயல் பொருட்களுக்கு எதிராக செயல்பட்டு, நுண்ணுயிர்த் தொற்று மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
5. இரத்த வெள்ளையணுக்கள் நியூட்ரோஃபில்கள், ஈசினோஃபில்கள், பேசோஃபில்கள், லிம்போசைட்டுகள் மற்றும் மோனோசைட்டுகள் என ஐந்து வகைப்படும்.