தாவரவியல் - லைக்கென்கள், வகைப்பாடு - பூஞ்சை | 11th Botany : Chapter 1 : Living World
லைக்கென்கள்
(Lichens)
பாசிகள் மற்றம் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி
அமைப்பிற்கு லைக்கென்கள் என்று பெயர். இதில் பாசி உறுப்பினர் பாசி உயிரி அல்லது ஒளி
உயிரி என்றும், பூஞ்சை உறுப்பினர் பூஞ்சை உயிரி என்றும் அழைக்கப்படுகின்றன. பாசி உயிரி
பூஞ்சைக்கு ஊட்டத்தைத் தருகிறது. பூஞ்சை உயிரி பாசிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன்
உடலத்தைத் தளப்பொருள் மீது நிலைப்படுத்த ரைசினே என்ற அமைப்பை ஏற்படுத்த உதவுகின்றது.
பாலிலா இனப்பெருக்கம் துண்டாதல், சொரீடியங்கள் (Soredia), ஐசிடியங்கள் மூலம் நடைபெறுகின்றன. பாசி உயிரி உறக்க நகராவித்துகள்,
ஹார்மோகோனியங்கள், நகராவித்துகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. பூஞ்சை உயிரி பாலினப்பெருக்கத்தில்
ஈடுபட்டு ஆஸ்கோ கனி உடலங்களை உருவாக்குகின்றன.
வகைப்பாடு
• லைக்கென்களில் காணப்படும் வாழிடத்தின் அடிப்படையில்
கீழ்க்காணும் வகைகள் உள்ளன. கார்ட்டிகோலஸ்
(மரப்பட்டை மீது காணப்படுபவை), லிக்னிகோலஸ்
(கட்டை மீது வாழ்பவை), சாக்ஸிகோலஸ் (பாறை மீது வாழ்பவை) டெர்ரிகோலஸ் (நிலத்தில் வாழ்பவை), கடலில் வாழ்பவை (கடலில் உள்ள சிலிக்கா
பாறை மீது வாழ்பவை), நன்னீர் வகை (நன்னீரில் உள்ள சிலிக்கா பாறை மீது வாழ்பவை) என்பன
ஆகும்.
• உடலப் புற அமைப்பின் அடிப்படையில் இவை லெப்ரோஸ் (வரையறுக்கப்பட்ட பூஞ்சை அடுக்கு
காணப்படுவதில்லை), கிரஸ்டோஸ் (ஓடு போன்ற
அமைப்பு), ஃபோலியோஸ் (இலை ஒத்த வகை), புருட்டிகோஸ்
(கிளைத்த புதர் போன்ற தொங்கும் அமைப்பு ) (படம் 1.25) என வகைப்படுத்தப்படுகின்றன.
• லைக்கென் உடலத்தில் பாசிசெல்கள் பரவலின் அடிப்படையில்
ஹோமியோமிரஸ் (பாசி செல்கள் லைக்கென் உடலத்தில்
சீராகப் பரவியிருத்தல்), ஹெட்டிரோமிரஸ்
(வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல்) என வேறுபட்டுள்ளன.
• லைக்கென் உடலத்தில் உள்ள பூஞ்சை உயிரி ஆஸ்கோமைசீட்ஸ்
வகுப்பைச் சார்ந்தவையாக இருப்பின் ஆஸ்கோலைக்கென்
என்றும், அவை பசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை எனில் பசிடியோலைக்கென் என்றும் அறியப்படுகின்றன.
• லைக்கென்கள் பாறைகள் மீது படிந்து வாழும்பொழுது ஆக்சாலிக்
அமிலம் போன்ற கரிம அமிலங்களைச் சுரப்பதால் பாறைகளின் தளம் அரிக்கப்பட்டு மண் உருவாக
உதவுகிறது. ஆகையால் இவை சீரோசீர் எனும் வறள் நிலத் தாவர வழிமுறை வளர்ச்சியில் முன்னோடி
உயிரினங்களாகத் திகழ்கின்றன.
• லைக்கென்களில் இருந்து பெறப்படும் அஸ்னிக் அமிலம்
உயிர் எதிர்ப்பொருள் தன்மையைப் பெற்றுள்ளது. லைக்கென்கள் காற்று மாசுக்காரணியை (குறிப்பாகக்
கந்தக டைஆக்ஸைடு) எளிதில் உணரக்கூடியவை என்பதால், இவை மாசு சுட்டிக்காட்டிகளாக கருதப்படுகின்றன
சோதனைக்கூடங்களில் அமில கார குறியீடாகப் பயன்படுத்தப்படும் லிட்மஸ் காகிதத்திற்குத்
தேவையான சாயம் ரோசெல்லா மாண்டாக்னே என்ற லைக்கெனிலிருந்துப் பெறப்படுகிறது. கிளாடோனியா ரான்ஜிஃபெரினா (ரெயின்டீர் மாஸ்) துருவப் பிரதேசத்தில் வாழும்
விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.