Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பாக்டீரியங்களின் வாழ்வியல் செயல்கள்

சுவாசித்தல், ஊட்ட முறை - பாக்டீரியங்களின் வாழ்வியல் செயல்கள் | 11th Botany : Chapter 1 : Living World

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்

பாக்டீரியங்களின் வாழ்வியல் செயல்கள்

பாக்டீரியங்களில் இரண்டு வகையான சுவாசித்தல் நிகழ்வுகள் காணப்படுகிறது. (1) காற்று சுவாசித்தல் (2) காற்றுணா சுவாசித்தல்

பாக்டீரியங்களின் வாழ்வியல் செயல்கள்

சுவாசித்தல்

பாக்டீரியங்களில் இரண்டு வகையான சுவாசித்தல் நிகழ்வுகள் காணப்படுகிறது. (1) காற்று சுவாசித்தல் (2) காற்றுணா சுவாசித்தல்

1. காற்று சுவாசித்தல் (Aerobic respiration)

இவ்வகை பாக்டீரியங்களுக்கு இறுதி எலக்ட்ரான் ஏற்பியாக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இவை காற்றுணா (ஆக்ஸிஜன் இல்லாத) சூழ்நிலைகளில் வளர்வதில்லை. எடுத்துக்காட்டு: ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

நிலைமாறா காற்று சுவாசிகள் (Obligate aerobes)

சுவாச நிகழ்ச்சிக்கு கட்டாயம் ஆக்ஸிஜன் பயன்படுத்திக் கொள்ளும் பாக்டீரியங்கள் நிலைமாறா காற்று சுவாசிகள் என அறியப்படுகிறன. எடுத்துக்காட்டு: மைக்ரோகாக்கஸ்.

2. காற்றுணா சுவாசித்தல் (Anaerobic respiration)

இவ்வகை பாக்டீரியங்களின் வளர்ச்சிக்கும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் ஆக்ஸிஜன் தேவைப்படுவதில்லை. ஆனால் நொதித்தல் வினைகளின் மூலம் ஆற்றலைப் பெறுகின்றன. எடுத்துக்காட்டு: கிளாஸ்ட்ரிடியம்.

நிலைமாறும் காற்றுணா உயிரிகள் (Facultative anaerobes)

இவ்வகை பாக்டீரியங்கள் ஆக்ஸிஜனை இறுதி எலக்ட்ரான் ஏற்பியாகப்பயன்படுத்தி ஆக்ஸிஜனேற்ற முறையிலோ, காற்றுணாமல் நடைபெறும் நொதித்தல் வினையின் மூலமாகவோ ஆற்றலைப் பெற்று வளர்கின்றன. ஈகோலை போன்ற நிலைமாறும் காற்றுணாச் சுவாசிகள் அடிவயிற்றில் ஏற்படும் சீழ்க்கட்டிகள் போன்ற தொற்றுதலுக்கு உள்ளாகும் பகுதிகளில் தங்கி, மிக விரைவாக அங்கு கிடைக்கக்கூடிய ஆக்ஸிஜன் முழுவதையும் பயன்படுத்திய பின் காற்றுணா வளர்சிதை மாற்றத்திற்கு மாறி, காற்றில்லா சூழ்நிலையை உருவாக்குகிறது அங்கு காற்றுணா சுவாச பாக்டீரியங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி நோய் உண்டாகிறது. எடுத்துக்காட்டு: ஈ. கோலை, சால்மோனெல்லா சிற்றினங்கள்.

கேப்னோஃபிலிக் பாக்டீரியங்கள்

இவை CO2 வைப் பயன்படுத்தி வளரும் பாக்டீரியங்கள் ஆகும். எடுத்துக்காட்டு: கேம்பைலோபாக்டர்.

ஊட்ட முறை

ஊட்டமுறையின் அடிப்படையில் பாக்டீரியங்கள் இரண்டு வகைப்படும். அவையானவை : (I) தற்சார்பு ஊட்டமுறை பாக்டீரியங்கள் (II) சார்பூட்ட முறை பாக்டீரியங்கள்.

I) தற்சார்பு ஊட்ட முறை பாக்டீரியங்கள்

சில பாக்டீரியங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்கின்றன. இவை தற்சார்பு ஊட்ட முறை பாக்டீரியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை பாக்டீரியங்கள் கீழ்க்கண்ட துணைபிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

அ. தற்சார்பு ஒளிஊட்ட பாக்டீரியங்கள் (Photoautotrophic bacteria)

இவ்வகை பாக்டீரியங்கள் சூரிய ஒளி ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு உணவை உற்பத்தி செய்கின்றன. இவை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன. 

1) கனிம ஒளிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள் (Photolithotrophic bacteria)

இவ்வகையில் கனிமப்பொருட்கள் ஹைட்ரஜன் கொடுநர்களாகச் செயல்படுகின்றன.

i) பசும் கந்தக பாக்டீரியங்கள் (Green Sulphur Bacteria)

இவ்வகையில் ஹைட்ரஜன் சல்ஃபைடு (H,S) ஹைட்ரஜன் கொடுநர்களாகச் செயல்படுகிறது. இதில் பாக்டீரியவிரிடின் எனும் நிறமி காணப்படும். எடுத்துக்காட்டு: குளோரோபியம். 

ii) இளஞ்சிவப்பு கந்தக பாக்டீரியங்கள் (Purple Sulphur Bacteria)

இவ்வகை பாக்டீரியங்களில் தயோசல்ஃபேட் ஹைட்ரஜன் கொடுநர்களாகச் செயல்படுகிறது. இதில் பாக்டீரியகுளோரோஃபில் எனும் நிறமி காணப்படும். மேலும் பச்சைய நிறமிகளைக் கொண்டகுளோரோசோம்களும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: குரோமேஷியம்.

2) கரிம ஒளிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள் (Photoorganotrophic bacteria)

இப்பிரிவைச் சார்ந்த பாக்டீரியங்கள் கரிம அமிலம் அல்லது ஆல்கஹாலை ஹைட்ரஜன் கொடுநர்களாகப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டு : இளஞ்சிவப்பு கந்தகம் சாரா பாக்டீரியங்கள் - ரோடோஸ்பைரில்லம்.

ஆ) வேதி தற்சார்பு பாக்டீரியங்கள் (Chemoautotrophic bacteria)

இவ்வகை பாக்டீரியங்களில் ஒளிச்சேர்க்கை நிறமிகள் இல்லாததால் இவை ஒளி ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள இயலாது. அதற்குப் பதிலாக இவை கனிம அல்லது கரிமப் பொருட்களிலிருந்து தமக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றன. இவை மேலும் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

1. கனிம வேதிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள்

(Chemolithotrophic bacteria)

இவற்றில் கனிமப் பொருட்கள் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. 

எடுத்துக்காட்டு

i) கந்தக பாக்டீரியங்கள் – தயோபேசில்லஸ் தயோ ஆக்சிடன்ஸ்

ii) இரும்பு பாக்டீரியங்கள் - ஃபெர்ரோபேசில்லஸ் ஃபெர்ரோ ஆக்சிடன்ஸ்

iii) ஹைட்ரஜன் பாக்டீரியங்கள் - ஹைட்ரோஜீனோமோனாஸ்

iv) நைட்ரஜனாக்க பாக்டீரியங்கள் - நைட்ரோசோமோனாஸ், நைட்ரோபாக்டர் 

2. கரிம வேதிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள் (Chemoorganotrophic bacteria)

இவ்வகையில் கரிமக் கூட்டுப்பொருட்கள் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டு

i) மீத்தேன் பாக்டீரியங்கள் - மெத்தனோகாக்கஸ்

ii) அசிட்டிக் அமில பாக்டீரியங்கள் - அசிட்டோபாக்டர்

iii) லாக்டிக் அமில பாக்டீரியங்கள் - லாக்டோபேசில்லஸ் 

II) சார்பூட்ட முறை பாக்டீரியங்கள் (Heterotrophic bacteria)

இவை ஒட்டுண்ணிகளாகவும் (மைக்கோபாக்டீரியம்), சாற்றுண்ணிகளாகவும் (பேசில்லஸ் மைக்காய்டஸ்), ஒருங்குயிரிகளாகவும் (லெகூம் வகை பயிர்களின் வேர் முடிச்சுகளில் காணப்படும் ரைசோபியம்) வாழ்கின்றன. 


Tags : Respiration, Nutrition சுவாசித்தல், ஊட்ட முறை.
11th Botany : Chapter 1 : Living World : Life processes in Bacteria Respiration, Nutrition in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம் : பாக்டீரியங்களின் வாழ்வியல் செயல்கள் - சுவாசித்தல், ஊட்ட முறை : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்