Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும்

பருவம் 3 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் | 6th Social Science : Civics : Term 3 Unit 2 : Local Bodies - Rural and Urban

   Posted On :  31.08.2023 07:54 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 2 : உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும்

உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும்

கற்றல் நோக்கங்கள் • ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மற்றும் பணிகளை அறிதல். • கிராம சபையைப் பற்றியும் கிராமசபை கூட்டத்தின் நோக்கத்தையும் அறிந்துகொள்ளல். • பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்களைப் புரிந்து கொள்ளல். • உள்ளாட்சியில் பெண்களின் பங்கை அறிதல். • உள்ளாட்சி தேர்தலைப் பற்றி அறிந்து அடுத்து வரும் தேர்தலை உற்றுநோக்கல்.

அலகு 2

உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும்


.

கற்றல் நோக்கங்கள்

• ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மற்றும் பணிகளை அறிதல்.

• கிராம சபையைப் பற்றியும் கிராமசபை கூட்டத்தின் நோக்கத்தையும் அறிந்துகொள்ளல்.

• பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்களைப் புரிந்து கொள்ளல்.

• உள்ளாட்சியில் பெண்களின் பங்கை அறிதல்.

• உள்ளாட்சி தேர்தலைப் பற்றி அறிந்து அடுத்து வரும் தேர்தலை உற்றுநோக்கல்.


நந்தினி ஆறாம் வகுப்பு படிப்பவள் அவள் வீட்டில் ஒரு வழக்கம் இருந்தது. தினமும் நாளிதழில் வரும் தலைப்புச் செய்திகளை அவள் சத்தம்போட்டு வாசித்துக்காட்டவேண்டும். அவளது அப்பா நம்புராஜனும் அம்மா மணிமேகலையும் அமர்ந்து கேட்பார்கள். இவள் ஏதாவது சந்தேகம் கேட்டால் அதற்கு விளக்கம் கொடுப்பார்கள். சில சமயம் அக்கம்பக்கத்து வீட்டு சிறுவர்களும் சேர்ந்துகொள்வார்கள். நாளிதழில் வரும் செய்தியை ஆளுக்கொன்றாய் பிரித்துக்கொண்டு படிப்பார்கள். அன்றும் அப்படித்தான், சனிக்கிழமையானதால்.. ஜான்சன், மாறன், அன்வர் என எல்லோரும் நந்தினியின் வீட்டில் குழுமி விட்டனர். நந்தினி, முதலில் நாளிதழில் இருந்து ஒரு செய்தியை வாசித்தாள்.

“ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தியின் தலைப்பைப் படிக்கும் முன்னரே அவளுக்குச் சந்தேகம் வந்தது.

"அப்பா, மாநகராட்சின்னா என்னப்பா?"

“பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், அதிக வருவாயும் இருக்குற ஊர்களை மாநகராட்சியாக தமிழ்நாடு அரசு அறிவிக்கும். இப்படித்தான் இப்போ இந்தப்

 ட்டியலில் ஆவடியும் சேர்ந்துள்ளது." என்றார் நந்தினியின் அப்பா, நம்புராஜன்.

"அப்படின்னா! இங்கே ஏற்கனவே வேற மாநகராட்சிகள் இருக்கா?"

“ஆமாம். ஏற்கனவே 14 மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. தற்போது இந்தப் பட்டியலில் ஆவடியும் சேர்ந்துள்ளது" என்றார்

நம்புராஜன்.

1. சென்னை

2. மதுரை

3.கோயம்புத்தூர்

4. திருச்சி

5. சேலம்

6. திருநெல்வேலி

7. ஈரோடு

8.தூத்துக்குடி

9.திருப்பூர்

10.வேலூர்

11. திண்டுக்கல்

12 தஞ்சாவூர்

13.நாகர்கோவில்

14.ஒசூர்

15. ஆவடி


உங்களுக்குத் தெரியுமா?

1688ல் உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிதான் இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பாகும்.


"அப்ப, நம்ம ஊரு..?" என்று கேட்டான் மாறன்.

"நம்ம ஊரு.. ஊராட்சியில வரும்டா..?"

"ஊராட்சின்னா..?"

"தமிழ்நாட்டுல கிராமமும் இருக்கு. நகரமும் இருக்கு இல்லையா?

"ஆமாப்பா..

"கிராமங்களின் நகரங்களின் தேவைகளும், தேவைகளும் மாறுபடும் அல்லவா? அப்படி இருக்கும் பகுதிகளில் மக்களின் தேவைகளைச் சரியாகப் பூர்த்தி செய்வதற்காக சில அமைப்புகளை நமது அரசமைப்பு உருவாக்கி இருக்கு.

அதன்படி, நகர்ப்புறத்தை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்றும் கிராமப்புறத்தை ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்றும் பிரித்து வைத்திருக்காங்க. இவை உள்ளாட்சி அமைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.'

"ஓ! இவ்வளவு இருக்கா..?"

“ஆமா இருக்கு. சொல்லுகிறேன் கேட்டுக்குங்க; மாநகராட்சிப் பற்றி சொன்னேன் இல்லையா..?"

"ஆமாப்பா"

"தமிழ்நாட்டில மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடன், வருவாய் அதிகம் இருக்கும் ஊர்களை நகராட்சி என்று பிரித்துள்ளனர்.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி வாலாஜாபேட்டை நகராட்சி ஆகும்.

“அப்புறம் மாமா, பேரூர் ஆட்சின்னு என்னமோ சொன்னீங்களே?"

"அது பேரூர் ஆட்சி இல்லை. பேரூராட்சி. அப்படீன்னா.. நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊர். சுமார் 10 ஆயிரம் பேர் வாழக்கூடிய ஊராக இருந்தால் அதுதான் பேரூராட்சி. இதுல ஒரு சிறப்பு இருக்கு.. என்னன்னு யாராச்சும் சொல்லுங்க பார்ப்போம்" என்ற நம்புராஜன் எல்லோரின் முகத்தையும் பார்த்தார். அவர்களும் அவரையே பார்த்தபடி இருந்தனர். யாருக்கும் அக்கேள்விக்கான பதில் தெரியவில்லை.

"சரி! நானே சொல்கிறேன்.

இந்தியாவிலேயே முதல் முறையாக பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது"

“ஆஹா!. 'என்றனர் எல்லோரும்.

மாநகராட்சிக்கு இந்திய ஆட்சிப்பணி (இஆ.ப) அதிகாரி ஒருவர் ஆணையராக இருப்பார். நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள். பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் (EO) ஆவார்.

"ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம்னு சொன்னீங்களே அப்படின்னா..

"கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு கிராம ஊராட்சி ஆகும். கிராம ஊராட்சி மக்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகிறது. கிராமங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. இதன் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்

ஊராட்சி மன்றத் தலைவர்

பகுதி உறுப்பினர்கள்

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்


ஊராட்சி ஒன்றியம்

பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அல்லவா? கவுன்சிலர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர். துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார், வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) இதன் நிர்வாக அலுவலர் ஆவார்.

ஊராட்சி ஒன்றிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

உங்களுக்குக் தெரியுமா?

நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் தான் உள்ளன.

 

மாவட்ட ஊராட்சி

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் (District Panchayat ward) பிரிக்கப்படுகின்றது. பகுதி உறுப்பினர்களைக் கிராம ஊராட்சி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் செய்கின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகள் தேந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. தொகுதிகள், பகுதிகள் (wards) என் அழைக்கப்படுகின்றன. பகுதி உறுப்பினர்களை மக்கள் நேரடித் தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.

அவ்வாறே மாநகராட்சித் தலைவரும் (மேயர்), நகராட்சித் தலைவரும் நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநகராட்சித் துணைத்தலைவரும், நகராட்சித் துணைத் தலைவரும் அந்தந்தப் பகுதி (ward) உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள்." என்று தனது நீண்ட உரையை முடித்தார் நம்புராஜன்.

"உள்ளாட்சி அமைப்புகளால் நன்மை இருக்கப்போகுது, என்ன மாமா?"

:”நிறைய நன்மைகள் இருக்கே, பொதுமக்களுக்குத் தேவையான பணிகளை அவசியப்பணிகள், விருப்பப்பணிகள்னு பிரிச்சுக்கலாம். இவை உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகின்றன.."

 

கிராம ஊராட்சியின் பணிகள்

அவசியப் பணிகள்

• குடிநீர் வழங்குதல்

•  தெருவிளக்கு அமைத்தல்

•  தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்

• கழிவுநீர் கால்வாய் அமைத்தல்

• ஊர்ச்சாலைகள் அமைத்தல்

• மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.

விருப்பப் பணிகள்

. • பூங்கா அமைத்தல்

• நூலகம் அமைத்தல்

• விளையாட்டு மைதானம் அமைத்தல் இன்னும்பிற

 

மாநகராட்சியின் பணிகள்

• குடிநீர் வசதி

• தெருவிளக்கு அமைத்தல்

• தூய்மைப் பணி

• மருத்துவச் சேவை

•சாலைகள் அமைத்தல்

• மேம்பாலங்கள் அமைத்தல்

• சந்தைகளுக்கான இடவசதி

• கழிவுநீர் கால்வாய்

• திடக்கழிவு மேலாண்மை

• மாநகராட்சிப் பள்ளிகள்

• பூங்காக்கள்

• விளையாட்டு மைதானங்கள்

• பிறப்பு, இறப்பு பதிவு. இன்னும்பிற.,

"அப்ப இந்த வேலைகளை எல்லாம் யார் செய்வாங்க?"

"மன்றக்கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர், அல்லது அதிகாரி அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இப்படி அப்பணிகள் சிறப்பாக நடைபெற பல அடுக்குகளிலும் பணியாற்ற ஊழியர்கள் உண்டு.'

“ஓ… இந்த பணிகளைச் செய்ய நிதி அரசாங்கம் கொடுத்துடுமாப்பா.."

"நேரடியாக அரசும் அளிக்கும். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளும் வரிகளாக வசூல் செய்து கொள்வார்கள்"


கிராம ஊராட்சியின் வருவாய்

• வீட்டுவரி

• தொழில் வரி

• கடைகள் மீதான வரி

• குடிநீர் இணைப்புக்கான கட்டணம்

• நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு

• சொத்துரிமை மாற்றம் - குறிப்பிட்ட பங்கு

• மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு. இன்னும்பிற.

 

மாநகராட்சியின் வருவாய்

• வீட்டு வரி

• குடிநீர் வரி.

• கடைகள் மீதான வரி

• தொழில் வரி

• பொழுதுபோக்கு வரி

• வாகனக் கட்டணம்

•  மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு. இன்னும்பிற.

 

செயல்பாடுகள்

• ஊரக, நகர்ப்புற வருவாய் மற்றும் பணிகளை ஒப்பிடுக.

• உன் வீட்டில் என்னென்ன வரிகள் செலுத்துகிறார்கள் எனக் கேட்டறியவும்?

"சரி, ஊர்மன்றக்கூட்டம்னு சொன்னீங்களே அது எப்படி நடக்கும் மாமா.." என்று கேட்டான் மாறன்.

"சபைக்கூட்டம்னா. மரத்தடியில் சுத்தி  உட்கார்ந்துகொண்டு, பேசுவாங்களே. சினிமாவுல பார்த்திருக்கேன்" என்றான் ஜான்சன்.

"அப்படியில்லை! அது வேற இது வேற ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நிரந்தர அமைப்பு. கிராம சபைக் கூட்டம் சிறிய கிராமங்களிலும் நடைபெறும். கிராம சபையே மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராகும்.


அதுல 18 வயசு நிறைவடைந்து, அந்த ஊராட்சி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவங்க கலந்து கொள்ளலாம். இக்கூட்டம் ஆண்டுக்கு நான்கு முறை கூடும். மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பகுதி (வார்டு) உறுப்பினர்கள் போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுவாங்க. அப்போது மக்கள் தங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரடியாகச் சொல்லலாம்.'

“இக்கூட்டம் எந்தெந்த நாட்களில் கூடும்?" "ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2"

இந்நாட்களைத் தவிர தேவைக்கேற்பவும் அவசர காலங்களிலும் கிராம சபை கூடும். இவை சிறப்பு கிராம சபைக்கூட்டம் எனப்படும்.

செயல்பாடுகள்

கிராமசபைக் கூட்டத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று பார்வையிடச் செய்யலாம்.

'உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பரவலாக்குவது என்ற நோக்கத்திற்காக பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. இப்படியான ஓர் அமைப்பு வேண்டும் என்று இதற்கு இப்பெயர் வைத்தவர் நம்ம மகாத்மா காந்தி"

தேசிய ஊராட்சி தினம் ஏப்ரல் 24.

 

பஞ்சாயத்து ராஜ்-சிறப்பம்சங்கள்

• கிராம சபை அமைத்தல்

• மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு

• இடஒதுக்கீடு

• பஞ்சாயத்து தேர்தல்

• பதவிக்காலம்

• நிதிக் குழு

• கணக்கு மற்றும் தணிக்கை இன்னும் பிற

"ரொம்ப நன்றி மாமா. நாங்கள் நிறைய செய்திகளை இன்று தெரிந்துகொண்டோம்" என்றனர் பிள்ளைகள் கூட்டாக.

"இன்னிக்கு உங்களுக்கு இதைப் பற்றி சொல்ல முடிந்தது எனக்கும் ரொம்ப சந்தோசமாக இருக்கு...சரி...நாளிதழ் வாசிச்சது போதும்.

விளையாடப்போங்க.." என்று எல்லோரையும் அனுப்பி வைத்தார் நம்புராஜன்.

"ஹேய், என்று கத்தியவாறே அவர்களும் ஓடினார்கள்.

அறிக

சிறப்பாகச் செயல்படும் ஊராட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்குகிறது. உன் ஊராட்சி அமைப்பு ஏதேனும் விருதுகளைப் பெற்றுள்ளனவா எனக் கேட்டறிக.

 

உள்ளாட்சியில் பெண்களின் பங்கு

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் 38% இடங்களில் வெற்றி பெற்றனர் என்பது சிறப்பு. 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் 50% இடஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.

செயல்பாடுகள்

• தங்கள் பகுதியில் உள்ள உள்ளாட்சி உறுப்பினர்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும்.

• பெண் உறுப்பினர்களின் பங்கேற்பையும் அனுபவங்களையும் கேட்டு அறிக.

 

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். இதற்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. மாநில தேர்தல் ஆணையம் இதற்கான தேர்தலை நடத்துகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை கோயம்பேட்டில் உள்ளது.


 

பேரிடர் காலங்கள் மற்றும் நோய்த் தொற்று காலங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்ட பணிகள்.


தற்போது தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள்

கிராம ஊராட்சிகள் - 12,524

ஊராட்சி ஒன்றியங்கள் - 388

மாவட்ட ஊராட்சிகள் - 31

பேரூராட்சிகள் - 528

நகராட்சிகள் - 121

மாநகராட்சிகள் - 15

(ஆதாரம்: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம். www.tnsec.tn.nic.in)

சிந்திக்க

• மேற்கண்ட இந்த நிலையானதா? எண்ணிக்கை மாறுபடக்கடியதா? சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மாற்றங்களைக் கேட்டறிக.

• உள்ளாட்சித் தேர்தலின் போது கிராமப்புற வாக்காளர்கள் எத்தனை வாக்குகள் அளிப்பர்? நகர்ப்புற வாக்காளர்கள் எத்தனை வாக்குகள் அளிப்பர்?

 

கலைச்சொற்கள்

பேரூராட்சி - Town Panchayat

நகராட்சி - Municipality

மாநகராட்சி - Corporation

கிராம ஊராட்சி - Village Panchayat

ஊராட்சி ஒன்றியம் - Panchayat Union

மாவட்ட ஊராட்சி - District Panchayat 

 

மீள் பார்வை

* மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட அமைப்பு உள்ளாட்சி அமைப்பு ஆகும்.

* ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியன் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்.

* பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியன நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்.

* கிராம ஊராட்சியில் உள்ள கிராம சபை ஒரு நிரந்தர அமைப்பு ஆகும்.

* பஞ்சாயத்து ராஜ் சட்டம் உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்தியது.

* உள்ளாட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.


இணையச் செயல்பாடு

உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும்


இச்செயல்பாட்டின் மூலம் உள்ளாட்சி பற்றியும் இந்திய அரசின் உள்ளாட்சி அமைப்பு முறை பற்றியும் அறிய முடியும்.

படிநிலைகள்:

படி -1 கொடுக்கப்பட்ட உரலியைப் பயன்படுத்தி செயல்பாட்டு தளத்திற்கு செல்லலாம்.

படி -2 "panchayat Raj" என்ற அமைப்பை சொடுக்கி உள்ளாட்சி விதிமுறைகளை

அறியமுடியும்,

படி -3 "Scheme" என்ற அமைப்பை சொடுக்கி மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை அறியமுடியும்.

படி -4 "map" என்ற அமைப்பை சொடுக்கி தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளை அறிய முடியம்...


உரலி :

https://www.tnrd.gov.in/index.html

*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

தேவையெனில் Adobe Flash யை அனுமதிக்க.

Tags : Term 3 Unit 2 | Civics | 6th Social Science பருவம் 3 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 3 Unit 2 : Local Bodies - Rural and Urban : Local Bodies - Rural and Urban Term 3 Unit 2 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 2 : உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் : உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் - பருவம் 3 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 2 : உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும்