பருவம் 1 இயல் 9 | 3 ஆம் வகுப்பு தமிழ் - மாட்டு வண்டியிலே.... | 3rd Tamil : Term 1 Chapter 9 : Maattu vandiyilae
9. மாட்டு வண்டியிலே....
இளமதியும் மணவாளனும் தங்களது தாத்தாவுடன் வார விடுமுறைக்கு அத்தை வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டனர். சலங்கை கட்டிய மாடுகளை வண்டியில் பூட்டினார் தாத்தா. வண்டியின் மீது வைக்கோலைப் பரப்பி மேலே வெள்ளை வேட்டியினை விரித்தார். துள்ளிக் குதித்தபடி ஏறி அமர்ந்தனர் இருபிள்ளைகளும்.
'ஜல் ஜல்' எனச் சத்தமிட்டவாறு வண்டி கிராமத்துச் சாலையில் ஓடத் தொடங்கியது. சாலையின் இருமருங்கிலும் பசுமை போர்த்திய வயல்வெளிகள். தாத்தா மாடுகளை விரட்டியபடி இனிமையாகப் பாடத் தொடங்கினார்.
கழுத்துமணி தாளம் போட
சக்கரமும் சுழன்றோட
உச்சி மண்டையிலே
வெயில் காயுமுன்னே
குண்டு குழிபார்த்து
ஊர் போய்ச் சேர வேணும்
ஊர் போய்ச் சேர வேணும்
வா வா என் செல்லக்கண்ணு…………
புதிர்கள், துணுக்குகளுக்கு விடை எழுதுதல்
பாடினது போதும். ஏதாவது கதை சொல்லுங்க தாத்தா என்றனர் பிள்ளைகள். சொல்லிட்டாப் போச்சி, கதையென்ன புதிர் போடறேனே. சொல்லுங்க பார்க்கலாம்
தாத்தா: மூன்றாம் எழுத்து உடலின் உறுப்பு, முதலும் மூன்றும் நட்புக்கு எதிரி, ஒன்றும் இரண்டும் நிறைய தரும், மூன்றும் சேர்ந்தால் உட்கார உதவும் அது என்ன?
இளமதி: ம்............ யோசித்துவிட்டு, 'தெரியலை’ தாத்தா
தாத்தா: யோசிங்க......... யோசிங்க......... நல்லா யோசிங்க ஓரெழுத்து உறுப்பு எது? இளமதி நீ சொல்லு
இளமதி: 'கை' தாத்தா
தாத்தா: கொஞ்சமாயிருந்தா சில ன்னு சொல்லுவோம் நிறைய இருந்தா என்ன சொல்லுவோம்?
இளமதி: 'பல' தாத்தா ஆங்.........
மணவாளன்: எனக்குப் பதில் கிடைச்சிருச்சி.... ‘பலகை’ – இது சரியா தாத்தா.........
தாத்தா: நல்லது மிகச்சரியான பதில், இப்ப இளமதியைக் கேட்கிறேன்...... ஆறையும் ஐந்தையும் கூட்டினால் பணம் வராது...... ஆனா பழம் வரும் அது என்ன?
இளமதி: சற்று யோசித்து......... ஆங்......... கண்டுபிடிச்சிட்டேன்......... ஆரஞ்சுப்பழம் தானே.........
தாத்தா: சரியா சொல்லிட்டியே, செல்லக்குட்டி
மணவாளன்: சரி தாத்தா......... இப்ப நாங்க கேட்கிறோம்......... நீங்க சொல்லுங்க, பிறக்கும்போது நிறமும் சுவையும் இல்லாத சுந்தரன் ஊருக்கு ஊர் நிறம் மாறிச் சுவை மாறுவான் அவன் யார்?
தாத்தா: இதென்ன பிரமாதம்......... எனக்குத்தான் தெரியுமே.........
இளமதி: பேச்சை மாத்தாதீங்க தாத்தா பதிலைச் சொல்லுங்க. சீக்கிரம்.....
தாத்தா: ம் ம் ம்......... எல்லாரோட தாகத்தையும் தீர்க்கும் தண்ணீர் தானே
மணவாளன்: ஆமா! ஆமா! சரியா சொல்லிட்டிங்களே!
இளமதி: தாத்தா, அத்தை வீடு வந்துவிட்டது.
தாத்தா: சரி, சற்றுப் பொறுங்கள் வண்டியை ஓரமாக நிறுத்துகிறேன். அனைவரும் வண்டியைவிட்டு இறங்கி, ஆவலுடன் வீட்டை நோக்கிச் சென்றனர்.
மொழியோடு விளையாடு
புதிர்களையும் விடைகளையும் எழுதிய அட்டைகளை வகுப்பறையின் நடுவில் வைக்க வேண்டும். மாணவர்களை அழைத்து ஒவ்வொரு மாணவனையும் ஓர் அட்டையை எடுக்கச் சொல்ல வேண்டும். புதிர் அட்டையை வைத்திருக்கும் மாணவனோடு அப்புதிருக்கான விடையை வைத்திருக்கும் மாணவன் இணைந்து நிற்க வேண்டும். அவர்கள் இருவரும் அதற்கான விளக்கத்தை அளிக்கவேண்டும். இருவரும் இச்செயலைச் செய்து முடிக்கும் கால அளவை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த இருவர் இவ்விளையாட்டை விளையாடுவர். எவர் இருவர் குறைவான கால அளவில் இணை சேர்ந்தனரோ அவர்களே வெற்றி பெற்றவராவர். அனைத்து மாணவர்களையும் விளையாட்டில் பங்கு பெறச்செய்ய வேண்டும்.