புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் - மனித நலனில் நுண்ணுயிரிகள் : வினா விடை | 12th Zoology : Chapter 9 : Microbes in Human Welfare
மதிப்பீடு
புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கீழ்க்கண்டவற்றுள் எந்த நுண்ணுயிரி, தொழிற்சாலைகளில் சிட்ரிக் அமில உற்பத்திக்கு பயன்படுகின்றது?
அ) லாக்டோபேசில்லஸ் பல்காரிகஸ்
ஆ) பெனிசிலியம் சிற்றினம்
இ) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்
ஈ) ரைசோபஸ் நைக்ரிகன்ஸ்
விடை : இ) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்
2. கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை அவற்றால் உருவாக்கப்படும் பொருட்களுடன் சரியாக பொருந்தியுள்ளது?
அ) அசட்டோபாக்டர் அசெட்டி - உயிர் எதிர்ப்பொருள்
ஆ) மெத்தனோபாக்டீரியம் - லாக்டிக் அமிலம்
இ) பெனிசிலியம் நொடேட்டம் - அசிட்டிக் அமிலம்
ஈ) சக்டாரோமைசெஸ் செரிவிசியே - எத்தனால்
விடை : ஈ) சக்காரோமைசெஸ் செரிவிசியே - எத்தனால்
3. வடிசாலைகளில் எத்தனால் உற்பத்திக்கு பயன்படும் பொதுவான தளப்பொருள்
அ) சோயா மாவு
ஆ) நிலக்கடலை
இ) கரும்பாலைக் கழிவுகள்
ஈ) சோள உணவு
விடை : இ) கரும்பாலைக் கழிவுகள்
4. பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாவிலிருந்து பெறப்படும் கிரைடாக்சின் என்ற நச்சு எதற்கு எதிராக செயல்படுகிறது?
அ) கொசுக்கள்
ஆ) ஈக்கள்
இ) நெமட்டோடுகள் (நாற்புழுக்கள்)
ஈ) காய்ப் புழுக்கள்
விடை : ஈ) காய்ப் புழுக்கள்
5. சைக்ளோஸ்போரின் - A என்ற நோய்த்தடுப்பாற்றல் ஒடுக்கு மருந்து எதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது?
அ) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்
ஆ) மனாஸ்கஸ் பர்பூரியஸ்
இ) பெனிசிலியம் நொடேட்டம்
ஈ) டிரைகோடெர்மா பாலிஸ்போரம்
விடை : ஈ) டிரைகோடெர்மா பாலிஸ்போரம்
6. கீழ்கண்டவற்றுள் எந்த பாக்டீரியா பெருமளவில் உயிரிய-தீங்குயிர் கொல்லியாக பயன்படுகின்றது?
அ) பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
ஆ) பேசில்லஸ் சப்டிலிஸ்
இ) லாக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ்
ஈ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லாக்டிஸ்
விடை : அ) பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
7. கீழ்க்கண்டவற்றுள் எது நைட்ரஜன் நிலைப்படுத்துதலில் பங்கேற்பதில்லை?
அ) சூடோமோனாஸ்
ஆ) அசோட்டோபாக்டர்
இ) அனபீனா
ஈ) நாஸ்டாக்
விடை : அ) சூடோமோனாஸ்
8. கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு.
அ) ஆல்கஹாலிக் நொதித்தல்
ஆ) லாக்டேட் நொதித்தல்
இ) விலங்குகளில் நடைபெறும் காற்றுச் சுவாசம்
ஈ) தாவரங்களில் நடைபெறும் காற்றுச் சுவாசம்
விடை : ஆ) லாக்டேட் நொதித்தல்
9. கழிவு நீரை உயிரிய சுத்திகரிப்பு செய்வதன் நோக்கம்.
அ) உயிரிய ஆக்சிஜன் தேவையை குறைத்தல்
ஆ) உயிரிய ஆக்சிஜன் தேவையை அதிகரித்தல்
இ) படிவாதலை குறைத்தல்
ஈ) படிவாதலை அதிகரித்தல்
விடை : அ) உயிரிய ஆக்சிஜன் தேவையை குறைத்தல்
10. காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள்
அ) மீத்தேன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு
ஆ) ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன் மற்றும் சல்பர் டை ஆக்சைடு
இ) ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் மற்றும் மீத்தேன்
ஈ) மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு
விடை : ஈ) மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு
11. பால் எவ்வாறு தயிராக மாற்றப்படுகிறது? தயிர் உருவாகும் முறையினை விளக்குக.
* பாலில் வளரும் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தை செரித்து கேசின் எனும் தயிராக மாற்றுகிறது.
* தூய பாலில் உறை (அ) மூல நுண்ணுயிரிகள் சேர்க்கப்பட்டு சிறிதளவு தயிரில் மில்லியன் கணக்கில் லேக்டோபேசில்லை இன பாக்டீரியாக்கள் உள்ளன.
* அனுகூலமான வெப்பநிலையில் (≤40°C) இவை எண்ணிக்கையில் பெருகி பாலை தயிராக மாற்றுகிறது.
* பாலை விட தயிரில் அதிக சத்தான கரிம அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
12. நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் உயிரிய செயல் திறனுள்ள மூலக்கூறுகள் இரண்டினையும், - அவற்றின் பயன்களையும் கூறு.
நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் செயல் திறனுள்ள மூலக்கூறுகள் (Bio active molecule).
1. ஸ்ட்ரெப்டோகைனேஸ்
2. சைக்ளோஸ்போரின் A
1. ஸ்ட்ரெப்டோகைனேஸ் :
* இது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படுகிறது.
* ஸ்ட்ரெப்டோகைனேஸ் நொதியும் மரபியல் மாற்றம் செய்யப்பட்ட ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியங்களும் இதயத் தசை நலிவுறல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தக்கட்டிகளைக் கரைக்கும் "கட்டி சிதைப்பானாகச் செயல்படுகின்றன."
2. சைக்ளோஸ்போரின் A :
* டிரைக்கோடெர்மா பாலிஸ்போரம் என்ற பூஞ்சையிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
* இது ஒரு நோய் தடுப்பாற்றல் ஒடுக்கியாக உறுப்பு மாற்றம் செய்யும் போது பயன்படுகிறது.
* மேலும் இது அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது.
13. உயிரிய ஆக்சிஜன் தேவை (BOD) என்றால் என்ன?
* ஒரு லிட்டர் நீரிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் - பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவே "உயிரிய ஆக்சிஜன் தேவை" எனப்படும்.
* கழிவுநீரில் உயிரிய ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க கழிவு நீரின் மாசுபடுத்தும் தன்மையும் அதிகரிக்கிறது.
14. மரபு மாற்றப்பட்ட பயிர்களில் கிரை ஜீன்களின் (cry genes) பங்கினை விவரி.
* பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்பது மண்ணில் வாழும் பாக்டீரியம் ஆகும்.
* இது "கிரை டாக்சின்" என்ற நச்சினை பெற்றிருப்பதால் உயிரியத் தீங்குயிர் கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது.
* இந்த நச்சினை தோற்றுவிக்கும் குறிப்பிட்ட ஜீனை பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுத்து மரபு பொறியியலின் துணையோடு தாவரத்திற்குள் செலுத்தி பூச்சி எதிர்ப்புத் திறன் கொண்ட தாவரத்தினை எ.கா Bt - பருத்தியை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
* ஸ்போர்கள் உற்பத்தியின் போது டெல்டா என்டோடாக்சின் என்ற படிக புரதத்தினை, பாக்டீரியா உருவாக்குகிறது. இது "கிரை ஜீன்" மூலம் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
* குறிப்பிட்ட வரிசைப் பூச்சிகளான லெபிடாப்டீரா, டிப்டீரா, கோலியாப்டீரா மற்றும் ஹைமனாப்டீரா பூச்சியினங்களுக்கு எதிராக டெல்டா எண்டோடாக்சின் வினைபுரிய வல்லது.
* இவ்வகைப் பூச்சிகள் இந்த நச்சுகளை உட்கொள்ளும் போது காரத் தன்மையுள்ள செரிமான மண்டலம் கரையாத படிகப் புரதத்தினை கரையும் புரதமாக மாற்றுகிறது.
* இந்த நச்சு குடல் செல்லுக்குள் புகுந்து குடலியக்கத்தைச் செயலிழக்கச் செய்கிறது.
* 'இதனால் பூச்சிகள் உண்ணுவதை நிறுத்தி பட்டினியால் இறக்கின்றன.
15. இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகள் :
* கரிமப் பொருட்களைப் பயன்படுத்தி மண்ணின் தரம் பாதுகாத்தல் மற்றும் உயிரிய செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
* மண்வாழ் உயிரிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு ஊட்டச் சத்துக்களை மறைமுகமாக அளித்தல்.
* பயறு வகை தாவரங்களைப் பயன்படுத்தி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துதல்.
* பயிர் சுழற்சி, உயிரியப் பல்வகைத் தன்மை, இயற்கையான கொன்றுண்ணிகள், இயற்கை உரங்கள் மற்றும் பொருத்தமான வேதிய, வெப்ப மற்றும் உயிரிய தலையீடுகள் போன்ற முறைகளால் களை மற்றும் தீங்குயிரிகள் கட்டுப்படுத்துதல்.
16. உயிர் உரங்களாக நுண்ணுயிரிகளின் பங்கினை நியாயப்படுத்துக.
* உயிரிய உரங்கள் என்பது மண்ணின் ஊட்டச்சத்து தரத்தை வளப்படுத்தக் கூடிய உயிருள்ள நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
* இவை பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் போதுமான அளவு கரிமப் பொருட்களை வழங்கி மண்ணின் அமைப்பு முறை, கட்டமைப்பு, நீர் சேமிப்புத் திறன், நேர்மின் அயனி பரிமாற்றத் திறன் மற்றும் கார அமிலத் தன்மை (pH) போன்ற இயற்பிய வேதிய பண்புகளை அதிகரிக்கச் செய்கின்றன.
* உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்கள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் சயனோபாக்டீரியா ஆகும்.
பாக்டீரியா :
* ரைசோபியம் இணைந்து வாழக்கூடிய நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியா ஆகும்.
* இந்த பாக்டீரியா பயறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் தொற்றி வளிமண்டல நைட்ரஜனை கரிம வடிவில் நிலைப்படுத்துகின்றன.
* அசோஸ்பைரில்லம் மற்றும் அசோட்டோபாக்டர் போன்றவை தனித்து வாழும் பாக்டீரியாக்கள்.
* இவை வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் நைட்ரஜன் அளவை அதிகப்படுத்துகின்றன.
மைக்கோரைசா : பூஞ்சைகளும் தாவரங்களின் வேர்களும் இணைந்து வாழும் அமைப்பு ஆகும்.
* இணை வாழ் உயிரியான பூஞ்சை மண்ணிலிருந்து பாஸ்பரசை உறிஞ்சி தாவரங்களுக்கு அளிக்கின்றது.
* மேலும் இந்த தாவரங்கள் வேரிலுள்ள நோயூக்கிகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறன், உப்புத் தன்மை மற்றும் வறட்சி தாங்கு திறன், தாவர வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்ற பிற நன்மைகளையும் பெறுகின்றன.
* எடுத்துக்காட்டாக, குளோமஸ் என்ற பேரினத்தின் பல உறுப்பு இனங்கள் இத்தகைய மைக்கோரைசாவை ஏற்படுத்துகின்றன.
சயனோ பாக்டீரியா (அ) நீலப் பசும்பாசிகள் :
* இவை தனித்து வாழ்ந்து நைட்ரஜனை நிலைப்படுத்தும் புரோகேரியாடிக் உயிரிகள் ஆகும். எ.கா: ஆசில்லடோரியா, நாஸ்டாக், அனபீனா, டோலிபோத்ரிக்ஸ்.
* இங்கு இவை பெருக்கமடைந்து மூலக்கூறு நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.
* இவை இண்டோல் - 3 - அசிட்டிக் அமிலம், இண்டோல் - 3 - பியூட்டைரிக் அமிலம், நாப்தலீன் அசிட்டிக் அமிலம், அமினோ அமிலங்கள், புரதங்கள், வைட்டமின்கள் போன்ற தாவர வளர்ச்சி மற்றும் உற்பத்தியை தூண்டும் பொருட்களை சுரக்கின்றன.
இவ்வாறு உயிரிய உரங்கள் பொதுவாக இயற்கை வேளாண்மை முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையான வழிகளில் தாவரங்களை பயிர் செய்தல் மற்றும் விலங்குகளை வளர்த்தல் இயற்கை வேளாண்மை ஆகும்.
17. கீழ்கண்டவற்றிக்கு குறிப்பெழுதுக.
அ) புரூயரின் ஈஸ்ட்
ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ்
இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன்கள்
அ) புரூயரின் ஈஸ்ட் :
* சக்காரோமைசெஸ் செரிவிசியே பொதுவாக "புரூயரின் ஈஸ்ட்" என அழைக்கப்படுகிறது.
* இதைப் பயன்படுத்தி மால்ட் (அ) மாவு நிறைந்த தானியங்கள் மற்றும் பழரசம் போன்றவற்றை நொதிக்கச் செய்து பல்வேறு மதுபான வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
* ஒயின் மற்றும் பீர் ஆகியன காய்ச்சி வடித்தல் இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன.
* விஸ்கி, பிராந்வி மற்றும் ரம் ஆகியன நொதித்தல் மற்றும் காய்ச்சி வடித்தல் முறையில் தயாரிக்கப்படுகின்றன.
* திராட்சை ரசம் பல்வேறு வகையான சக்காரோமைசஸ் செரிவிசியே மூலம் நொதிக்கப்பட்டு ஆல்கஹாலாக மாற்றப்படுகிறது.
* மேலும் இது முளைகட்டிய பார்லி மால்ட் தானியங்களை பீராக மாற்றுகின்றது.
ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ் :
* தற்பொழுது PET நெகிழிகளை மறுசுழற்சி செய்யும் பணியில் இது ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
* இந்த பாக்டீரியா PETase மற்றும் MHETase நொதிகளின் துணையுடன் நெகிழிகளை டெரிப்த்தாலிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்காலாக சிதைக்கின்றது.
இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன் :
* கரிம மூலக்கூறுகளை ஆக்சிஜனேற்றம் மற்றும் ஒடுக்க வினைக்கு ஆட்படுத்த பாக்டீரியாக்களை அனுமதிப்பதன் மூலம் நுண்ணுயிரிய எரிபொருள் கலன் இயங்குகிறது.
* பாக்டீரியாக்களை பயன்படுத்தி அதனிடையே தளப்பொருள் இயற்கையாக நடைபெறும் இடைவினைகளை, ஒப்புப் போலியாக்கி மின்சாரம் பெறும் உயிரிய மின் வேதியியல் முறையாகும்.
* பாக்டீரியாக்களின் சுவாசம் ஒரு பெரிய ஆக்சிஜேனற்ற ஒடுக்க வினையாகும்.
* நுண்ணுயிரிய எரிபொருள் கலனில் ஒரு நேர்மின்வாய் மற்றும் ஒரு எதிர்மின்வாய் ஆகியன இருக்கும்.
* இவை எலக்ட்ரான்கள் சுழலும் போது புரோட்டான் பரிமாற்ற சவ்வின் மூலம் பிரிக்கப்படுகிறது.
* நேர்மின்வாய் முனையில் இருக்கும் நுண்ணுயிரிகள் கரிம எரிபொருட்களுடன் ஆக்சிஜேனற்றம் செய்யும் போது புரோட்டான்கள் வெளியேறி எதிர்மின்வாயை அடைகின்றன.
* அதே நேரம் நேர்மின்வாய் வழியாக எலக்ட்ரான்கள் புற சுற்றை அடைந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
18. கிராமப்புற பகுதிகளில் உயிரிய வாயு உற்பத்தி நிலையங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.
1. ஆக்சிஜேனற்ற சூழலில் கரிமப் பொருட்களைச் சிதைவடையச் செய்து பெறப்படும் பலவகை வாயுக்களின் கலவையை உயிர் வாயு (அ) சாண எரிவாயு ஆகும்.
2. விவசாய கழிவுகள், நகராட்சி கழிவுகள், உரங்கள், தாவரப் பொருட்கள், கழிவு நீர், உணவு கழிவுகள் போன்ற மூலப்பொருட்களிலிருந்து உயிரி வாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
3. கிராமப்புற பகுதிகள் கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்படுவதால் சாணம் என்ற கால்நடைக் கழிவு அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது.
4. மீத்தேனை உற்பத்தி செய்யும் பாக்டீரியங்கள் கால்நடைகளின் இரைப்பையிலும் ஆக்ஸிஜேனற்ற கசடுகளிலும் காணப்படுகின்றன.
5. கால்நடை சாணத்தை காற்றற்ற சூழலில் மக்கச் செய்வதன் மூலம் சாண எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
6. இதில் சிறிதளவு ஹைட்ரஜனுடன் கூடிய மீத்தேன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் மற்றும் சிறிய அளவில் வேறு சில வாயுக்களும் உள்ளன.
7. ஒளியூட்டலுக்கும், சமைப்பதற்கும் உயிர் வாயு பயன்படுகிறது.
8. இதிலுள்ள எஞ்சிய நோயூக்கிகள் அற்ற சாண கரைசல் உரமாகப் பயன்படுகிறது.
9. இதனால் கிராமப்புற மக்கள் சமைப்பதற்கு மரக்கட்டைகள் சேகரிக்க வேண்டிய அவசியமில்லை.
10. மேலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மணமற்ற புகையற்ற நீலச்சுடரை தரவல்ல எரிபொருளாக உயிர் வாயு பயன்படுகிறது.
11. பொதுவாக உயிர் வாயு ஒரு மனிதன் ஒரு ஆண்டிற்கு பயன்படுத்தும் 4.5 டன் மரக்கட்டைகள் பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. இதனால் 4 டன் பச்சைவீடு வாயுக்கள் வெளியேறுவதும் தவிர்க்கப்படுவதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) கூறியுள்ளது.
12. கழிவுகளை உயிர் வாயு தயாரிக்க பயன்படுத்துவதால் இயற்கையில் இந்த கழிவுகள் சிதைந்து பச்சை வீடு வாயுவான மீத்தேன் வாயு வெளியேறுவதும் தவிர்க்கப்படுகிறது.
13. இவ்வாறு இயற்கைக் கழிவுகள் உயிர் வாயு தயாரிக்க பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் தூய்மையாக பாதுகாக்கப்படுகிறது.
14. இவ்வாறு உயிர் வாயு வீடுகளில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்க்கப்படுகிறது. காற்று மாசுபாடு தவிர்க்கப்படுகிறது. மக்கள் சுகாதாரமாக வாழ வழி வகுக்கிறது.
19. உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன் எப்பொழுது உருவாகிறது?
* பாக்டீரியாவை கொல்வதற்கோ (அ) அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கோ உருவாக்கப்பட்ட உயிர் எதிர்ப்பொருளை வலிமை இழக்கச் செய்யும் திறனை பாக்டீரியா பெறும் போது "உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத் திறன்" உருவாகிறது.
* இது பொது சுகாதாரத்திற்கு தீவிர அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.
* உயிர் எதிர்ப்பொருட்களின் பயன்பாடு மற்றும் அளவுக்கு அதிகமான பயன்பாடு ஆகியவை உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத் திறனை முடுக்கி விடுகிறது.
* மேலும் இது மோசமான தொற்றுத் தடுப்பு கட்டுப்பாடு மூலமும் நிகழ்கிறது. அங்கீகரிக்கப்பட்ட உடல் நல வல்லுனரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உயிர் எதிர்பொருளை பயன்படுத்த வேண்டும்.
* பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்ப்பொருட்களை விட குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்ப்பொருட்களுக்காக அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
* இவை திறம்பட மற்றும் துல்லியமாக குறிப்பிட்ட நுண்ணுயிரிகளை குறிவைத்து தாக்குவதோடு அந்த நுண்ணுயிரிகளில் எதிர்ப்புத் திறன் உருவாகும் வாய்ப்பையும் குறைக்கிறது.
* எதிர்ப்பொருட்களுக்கு எதிர்ப்புத் திறன் பெற்ற பாக்டீரியத் திரிபுகள் "சூப்பர் பக்" என்று கூறப்படுகிறது.
20. முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் யாவை?
முதல்நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு
1. வடிகட்டுதல் மற்றும் படிய வைத்தல் முறைகள் மூலம் கழிவு நீரிலிருந்து திட, கரிம துகள்கள் மற்றும் கனிம பொருட்களை பிரித்தெடுப்பது முதல்நிலை சுத்திகரிப்பில் அடங்கும்.
2. மிதக்கும் குப்பைகள் தொடர் வடிகட்டல் முறையிலும் மண் மற்றும் சிறு கற்கள் படிய வைத்தல் முறை மூலம் நீக்கப்படுகிறது.
3. உயிரிய ஆக்ஸிஜன் தேவை (BOD) அதிகமாகவே காணப்படும்.
4. முதல்நிலை படியும் தொட்டி, வடிகட்டல் தொட்டி பயன்படுத்தப்படுகிறது.
5. இதில் உயிரிய வாயு உருவாவதில்லை.
6. இது குறுகிய காலத்தில் நடைபெறுகிறது.
இரண்டாம்நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு
1. முதல்நிலையில் உருவான கலங்கல் நீரில் சுவாச நுண்ணுயிரிகள் வளர்ச்சியினால் கரிம பொருட்கள் சிதைக்கப்படுகின்றன.
2. முதல்நிலையில் உருவான கலங்கல் நீரிலுள்ள கரிமப் பொருட்கள் சுவாச நுண்ணுயிரிகள் மற்றும் காற்றற்ற சுவாசம் மேற்கொள்ளும் பாக்டீரியாக்கள் மூலம் அழிக்கப்படுகின்றன.
3. இதில் பெருமளவில் உயிரிய ஆக்ஸிஜன் தேவையை (BOD) குறைக்கின்றது.
4. இங்கு காற்றூட்டல் தொட்டி மற்றும் காற்றில்லா சுவாச கசடு சிதைப்பான் போன்ற தொட்டிகள் பயன்படுகின்றன.
5. கசடிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் செரிமானம் அடையும்போது உயிரிய வாயுவை (மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு) உற்பத்தி செய்கின்றன. ஆற்றல் மூலாதாரமாக பயன்படுகிறது.
6. இது நீண்ட காலம் நடைபெறுகிறது.