மனித நலனில் நுண்ணுயிரிகள் - தொழிற்கூடங்களின் உற்பத்திப் பொருட்களில் நுண்ணுயிரிகள் | 12th Zoology : Chapter 9 : Microbes in Human Welfare
தொழிற்கூடங்களின் உற்பத்திப் பொருட்களில் நுண்ணுயிரிகள்
மனிதர்கள் பயன்படுத்தும் எண்ணற்ற மதிப்புமிக்க பொருட்களை உருவாக்க நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகின்றன. பானங்கள், உயிர் எதிர்ப்பொருட்கள், கரிம அமிலங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், உயிரி எரிபொருள், ஒற்றை செல் புரதம், நொதிகள், ஸ்டீராய்டுகள், தடுப்பூசிகள், மருந்துகள், போன்றவை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய பெரிய நொதிகலன்கள் (Fermentors) தேவைப்படுகின்றன. தேவையான அளவு காற்றை உட்செலுத்தும் வசதி, வெப்பம் மற்றும் அமில காரத்தன்மை (pH) அளவுகளை நிர்வகிக்கும் அமைப்பு மேலும், அளவுக்கு அதிகமாக நிரம்பி வழியும் நுண்ணுயிர் கழிவுப்பொருளை வெளியேற்றும் வசதி ஆகியவற்றை உடைய மூடிய உயிர்வினைக்கலனே இந்நொதிகலனாகும்.
உயிர் எதிர்ப்பொருள் என்பவை நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப்பொருட்கள் ஆகும். இது குறைந்த செறிவில், நோயை உண்டாக்கும் பிற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கவோ அல்லது கொல்லவோ செய்யும். உயிர் எதிர்ப்பொருள் என்பது "உயிரிக்கு எதிரானவை" என பொருள்படும். இவை, பிளேக், மூளைப்படல அழற்சி, தொண்டை அடைப்பான், சிபிலிஸ் (கிரந்தி), தொழு நோய், காச நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன. ஸ்ட்ரெப்டோமைசின் என்ற உயிர் எதிர்ப்பொருளை செல்மேன் வேக்ஸ்மேன் (Selmall Vaksman) என்பவர் கண்ட றிந்தார். அது மட்டுமின்றி 1943 ஆம் ஆண்டில் உயிர் எதிர்பொருள் என்ற சொல்லையும் முதலில் அவர் பயன்படுத்தினார்.
i) நுண்ணுயிர் பகைமை (Antibiosis): நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகளை கொல்வது உயிர் எதிர்ப்பொருளின் பண்பாகும்.
ii) பலதரப்பட்ட நோய்களை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாக்களை எதிர்த்து பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருள்கள் (Broad spectrum antibiotics) செயல்படுகின்றன.
ii) குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருள்கள் (Narrow spectrum antibiotics) குறிப்பிட்ட நோய்களை தோற்றுவிக்கும் பாக்டீரீயக் குழுக்களை மட்டுமே எதிர்த்து செயல்படுகின்றன.
படம் 9.1 பெனிசிலின் கண்டுபிடித்தல் (அலெக்ஸாண்டர் ஃபிளமிங்)
உங்களுக்குத் தெரியுமா?
பெனிசிலின் மருந்தை பயன்படுத்துவதில் உள்ள பெரிய இடர் மீஉணர்மை (Hypersensitivity) ஆகும். இதனால் குமட்டல், வாந்தி, அரிப்புகள், மூச்சுத்திணறல் மற்றும் இறுதியில் இரத்த நாள அழிவுகள் போன்றவை ஏற்படுகின்றன. ஒவ்வாமையை பரிசோதனை செய்வதற்காக மருத்துவர் நோயாளியின் முன் கையில் சிறிய ஊசியால் சிறிதளவு வீரியம் குறைந்த மருந்தை செலுத்துவார். நோயாளிக்கு மருந்து ஒத்துக்கொள்ளவில்லையெனில் மருந்து செலுத்திய இடத்தில் சிவந்து அரிப்பு ஏற்படும். நோயாளிக்கு மருந்து செலுத்துவதற்கு முன் முக்கியமாக செய்து கொள்ள வேண்டிய சோதனை இதுவாகும்.
அலெக்ஸாண்டர் ஃபிளமிங் (Alexander Fleming) ஸ்டெபைலோகாக்கை (Staphylo cocci) பாக்டீரியா பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த போது சரியாக சுத்தம் செய்யப்படாத கண்ணாடி தட்டு ஒன்றில் பச்சை பூஞ்சை வளர்ந்திருப்பதையும் அதனைச் சுற்றி ஸ்டெபைலோகாக்கை வளரமுடியவில்லை என்பதையும் கண்டார். அதற்கு காரணம் அந்த பூஞ்சையிலிருந்து உற்பத்தியான வேதிப்பொருள் என்பதையும் அவர் அறிந்தார். 1926 ல் அந்த வேதிப்பொருளுக்கு பெனிசிலின் என்று அவர் பெயரிட்டார் (படம் 9.1). இதுவே அவர் கண்டுபிடித்த முதல் உயிர் எதிர்ப் பொருளாகும். பெனிசிலியம் நொட்டேட்டம் (Penicillium notatum) மற்றும் பெனிசிலியம் கிரைசோஜீனம் (Penicillium chrysogenim) என்ற பூஞ்சைகள் பெனிசிலினை உற்பத்தி செய்கின்றன. பாக்டீரியாக்கொல்லியாக செயல்பட்டு பாக்டீரியாவின் செல்சுவர் உற்பத்தியைத் தடுக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு எர்னஸ்ட் செயின் (Earnest Chain) மற்றும் ஹோவார்டு ப்ளோரி (Howare Florey) ஆகியோர் பெனிசிலின் மருந்தை மேம்படுத்தி, அதை மேலும் வீரியமுடைய உயிர் எதிர்ப்பொருளாக மாற்றினர். ஆகையால், இம்மருந்து "மருந்துகளின் ராணி" (Queen of Drugs) என்று அழைக்கப்படுகிறது. இந்த மருந்து இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த வீரர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. பெனிசிலின் மருந்து கண்டுபிடிப்பிற்காக ஃபிளமிங், செயின் மற்றும் ப்ளோரி ஆகிய மூவருக்கும் 1945 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
டெட்ராசைக்கிளின் (Tetracycline) என்பது பரந்த செயலாற்றலுள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் (Bacteriostatic) உயிர் எதிர்ப்பொருள் ஆகும். இது நுண்ணுயிரிகளின் புரத உற்பத்தியை ஸ்ட்ரெப்டோமைசஸ் ஆரியோபேசியன்ஸ் (Streptomyces aureofaciens) என்ற பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட குளோர்டெட்ராசைக்ளின் என்பது தான் டெட்ரா சைக்ளின் வகையைச் சேர்ந்த முதல் உயிர் எதிர்ப்பொருள் மருந்தாகும். ஸ்ரெப்டோமைசிஸ் கிரைஸ்ஸியஸ் (Streptomyces griseus) என்ற ஆக்டினோமைசெட்ஸ் வகையைச் சேர்ந்த பாக்டீரியாவில் இருந்து ஸ்ட்ரெப்டோமைசின் என்ற பரந்த செயலாற்றலுள்ள (Broad Spectrum) உயிர் எதிர்ப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து பொதுவாக கிராம் பாசிட்டிவ் மற்றும் கிராம் நெகட்டிவ் பாக்டீரியாக்களை குறிப்பாக மைக்கோபாக்டீரியம் டியுபர்குளோசிஸ்ஸை (Mycobacterium tuberculosis) அழிக்கின்றது. எரித்ரோமைசின், குளோரோமைசிடின், கிரைஸ்ஸியோஃபல்வின், நியோமைசின், கெனாமைசின், பாசிட்ராசின் மற்றும் இது போன்ற பல உயிர் எதிர்ப்பொருட்கள் நுண்ணுயிரிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.
உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன் (Antibiotic Resistance)
பாக்டீரியாவை கொல்வதற்கோ (அ) அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கோ உருவாக்கப்பட்ட உயிர் எதிர்ப்பொருளை வலிமை இழக்க செய்யும் திறனை பாக்டீரியா பெறும் போது உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன் நிகழ்கிறது. இது பொது சுகாதாரத்திற்கான தீவிர அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். உயிர் எதிர்ப்பொருட்களின் தவறான பயன்பாடு மற்றும் அளவுக்கு அதிகமான பயன்பாடு ஆகியவை உயிர் எதிர்பொருள் எதிர்ப்புத்திறனை முடுக்கிவிடுகிறது. மேலும் இது மோசமான தொற்றுத்தடுப்பு கட்டுப்பாடு மூலமும் நிகழ்கிறது. அங்கீகரிக்கப்பட்ட உடல் நல வல்லுனரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உயிர் எதிர்ப்பொருளை பயன்படுத்த வேண்டும். உயிர் எதிர்ப் பொருளுக்கான எதிர்ப்புத் தன்மையை பாக்டீரியா பெற்றுவிட்டால், உயிர் எதிர்ப்பொருளால் பாக்டீரியாவை எதிர்த்து செயல்படமுடிவதில்லை. எனவே பாக்டீரியா தன்னை பெருக்கிக் கொள்கின்றன.
பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்ப்பொருட்களை விட குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்ப்பொருட்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏனெனில், அவை திறம்பட மற்றும் துல்லியமாக குறிப்பிட்ட நுண்ணுயிரிகளை குறிவைத்து (அ) இலக்கு வைத்து தாக்குவதோடு அந்நுண்ணுயிரிகளில் எதிர்ப்புத்திறன் உருவாகும் வாய்ப்பையும் குறைக்கிறது. இன்றைய நிலையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு உயிர் எதிர்ப்பொருட்களுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற பாக்டீரியத் திரிபுகளை ‘சூப்பர் பக்' (Super bug) என்ற சொல்லால் அழைப்பர்.
பழங்காலந்தொட்டே நுண்ணுயிரிகள், முக்கியமாக ஈஸ்ட்டுகள், மதுபானங்களான ஒயின், பீர், விஸ்கி, பிராந்தி மற்றும் ரம் உற்பத்தியில் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் ஒயின்கள் என்பவை பழமையான ஆல்கஹால் மதுபான வகையாகும். ஈஸ்ட்டுகளை பயன்படுத்தி பழசாற்றினை நொதிக்க வைப்பதன் மூலம் இப்பானங்கள்
தயாரிக்கப்படுகின்றன. நொதித்தலின் உயிர் வேதியியல் செயல்முறைகள் மற்றும் அதன் நடைமுறை பயன்களை பற்றி படிக்கும் பன்முறை அறிவியல் சைமாலஜி (Zymology) எனப்படும்.
உங்களுக்குத் தெரியுமா?
பாஸ்டியர் விளைவு (Pasteur effect) என்பது நொதித்தல் நிகழ்வின் மீது ஆக்சிஜன் ஏற்படுத்தும் தடையின் விளைவாகும்.
சக்காரோமைசெஸ் செரிவிசியே (Saccharomyces cererisiae), பொதுவாக புரூயரின் ஈஸ்ட் (Brever's Yeast) என அழைக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி மால்ட் அல்லது மாவு நிறைந்த தானியங்கள் மற்றும் பழரசம் போன்றவற்றை நொதிக்கச் செய்து பல்வேறு மதுபான வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒயின் மற்றும் பீர் ஆகியன காய்ச்சி வடித்தல் இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் விஸ்கி, பிராந்தி மற்றும் ரம் ஆகியன நொதித்தல் மற்றும் காய்ச்சி வடித்தல் முறையில் தயாரிக்கப்படுகின்றன.
திராட்சை ரசத்தை நொதிக்கச் செய்வதன் மூலம் ஒயின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒயின் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் முறைகளை பற்றிய அறிவியலுக்கு ஈனாலாஜி (Oenology) என்று பெயர்.திராட்சை ரசம் பல்வேறு வகையான சக்காரோமைசஸ் செரிவிசியே மூலம் நொதிக்கப்பட்டு ஆல்கஹாலாக மாற்றப்படுகிறது.
சிவப்பு ஒயின் மற்றும் வெள்ளை ஒயின் என இரண்டு வகை ஒயின்கள் உள்ளன. சிவப்பு ஒயின்களுக்கு கருந்திராட்சை பயன்படுத்தப்படுகிறது. சில சமயம் அதன் தோல் மற்றும் தண்டுகளும் சேர்த்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. இதற்கு மாறாக வெள்ளை ஒயின்கள் வெள்ளை (அ) கருந்திராட்சையின் பழச்சாற்றிலிருந்து மட்டும் தயாரிக்கப்படுகிறது தோல் மற்றும் தண்டுகள் இதில் சேர்க்கப்படுவதில்லை.
சக்காரோமைசெஸ் கார்ல்பெர்ஜென்சிஸ் (Saccharomyces car/sbergensis) (அ) சக்காரோமைசஸ் செரிவிசியே ஆகியவை முளைக்கட்டிய பார்லி மால்ட் தானியங்களை பீராக மாற்றுகிறது. சக்காரோமைசெஸ் செரிவிசியே மூலம் நொதிக்க வைக்கப்பட்ட கரும்பு அல்லது கரும்புச் சர்க்கரை அல்லது கரும்பு சாற்றிலிருந்து நேரடியாக ரம் உற்பத்தி செய்யப்படுகிறது. விஸ்கி என்பது ஒரு வகையான காய்ச்சி வடிகட்டிய மதுபானமாகும். இது சக்காரோமைசஸ் செரிவிசியே மூலம் நொதிக்க வைக்கப்பட்ட தானிய கூழ் மூலம் உருவாக்கப்படுகிறது.
பதநீர் என்பது தென்னிந்தியாவின் ஒரு சில பகுதிகளில் பாரம்பரியமாக பனை மற்றும் தென்னம் பாளையின் சாற்றிலிருந்து நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் பானம் ஆகும். பொதுவாக, இப்பானமானது தென்னை மரத்தின் வெடிக்காத பாளையைத் தட்டுவதன் மூலம் பெறப்படுகிறது. இது ஒரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். பனைமர பதநீரை காய்ச்சி பனங்கருப்பட்டி அல்லது பனைவெல்லம் தயாரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட பதநீர் அசைவற்ற சூழலில் சில மணி நேரங்கள் இருக்கும் பொழுது அதில் இயற்கையாக உள்ள ஈஸ்டானது நொதித்தல் வினையில் ஈடுபடுவதால் கள் (Toddy) என்ற மதுபானம் உருவாகிறது. இதில் 4% ஆல்கஹால் உள்ளது. 24 மணிநேரத்திற்கு பிறகு கள், அருந்தக்கூடிய தன்மையை இழக்கிறது. ஆனால் இது (புளிக்காடி) வினிகர் உற்பத்திக்குப் பயன்படுகிறது.
எத்தனால் (C2H2OH) உற்பத்தியில் சக்காரோமைசெஸ் செரிவிசியே பெரும்பங்கு வகிக்கிறது. எதில் ஆல்கஹால் தொழிற்சாலை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுவதோடு, எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே எத்தனால் "தொழில் துறை ஆல்கஹால்" என குறிப்பிடப்படுகிறது. சைமோமோனாஸ் மோபிலிஸ் (Zymomonas mobilis) மற்றும் சர்சினா வென்ட்ரிகுலி (Sarcina ventriculi) போன்ற பாக்டீரியாக்களும் எத்தனால் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகின்றன.
தொழில்துறை ஆல்கஹாலின் வணிகரீதியான உற்பத்திக்கு முக்கிய தளப்பொருளாக சர்க்கரை ஆலைக்கழிவு (Molasses) சோளம், உருளைகிழங்கு மற்றும் மரக்கழிவுகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
எத்தனால் உற்பத்தியில் முதலில் தளப்பொருள் அரைக்கப்படுகிறது. பிறகு ஆஸ்பர்ஜில்லஸிடமிருந்து பெற்ற நீர்த்த அமைலேஸ் நொதி சேர்க்கப்படுகிறது. இது ஸ்டார்ச்சை சிதைத்து நொதிக்கக்கூடிய சர்க்கரையாக மாற்றுகிறது. இதனுடன் ஈஸ்ட் சேர்க்கப்பட்டு சர்க்கரையானது எத்தனாலாக மாற்றப்படுகிறது. இது 96% அடர்வு கொண்ட எத்தனாலாக காய்ச்சி வடிக்கப்படுகிறது. இன்று பொதுவாக பயன்பாட்டில் உள்ள உயிரிய எரிபொருட்கள், எத்தனால் மற்றும் பயோ டீசல் ஆகியனவாகும்.
இவையே உயிரிய எரிபொருள் தொழில் நுட்பத்தின் முதல் தலைமுறை பிரதிநிதிகளாகும். எரிபொருளாக எத்தனால் பெரும்பாலும் எரிபொருளாக பயன்படுகிறது. முக்கியமாக, உயிரிய எரிபொருளாக, கேசோலைனுடன் (Gasoline) சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 10 ஆம் நாள் உலக உயிரிய எரிபொருள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. மரபு சார்ந்த புதுப்பிக்க இயலாத புதை படிவ எரிபொருட்களுக்கு மாற்றாக, புதுப்பிக்கக்கூடிய உயிரிய எரிபொருளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாள் உயிர் எரிபொருள் துறையில் அரசு எடுக்கும் பல்வேறு முயற்சிகளை முன்னிலைப்படுத்துகிறது.
தாவர எண்ணைய், கொழுப்பு (அ) உயவுகளிம்புகளில் (Greases) இருந்து பயோடீசல் (Biodiesel) என்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. டீசல் எஞ்சின்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயோடீசலைப் பயன்படுத்தலாம். பெட்ரோலியம் சார்ந்த டீசல் எரிபொருளை ஒப்பிடும் போது தூய பயோடீசல் ஒரு நச்சற்ற, உயிரிய சிதைவிற்கு உள்ளாகக் கூடிய குறைந்த அளவு காற்று மாசுபடுத்திகளைக் கொண்ட எரிபொருளாகும். இந்திய அரசாங்கம் டிசம்பர் 2009-ல் உயிரிய எரிபொருள் குறித்த தேசிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது காட்டாமணக்கு (Jatropha curcas) என்ற எண்ணைய் வித்து பயோடீசல் உற்பத்திக்கு மிக சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது. புங்கன் (Pongamia) என்னும் சிற்றினமும் பயோடீசல் உற்பத்திக்கு ஏற்றது எனக் கருதப்படுகிறது.
நுண்ணுயிரிகள், வணிக மற்றும் தொழில்துறை ரீதியான ஆல்கஹால் உற்பத்திக்கு மட்டுமின்றி கரிம அமிலங்கள் மற்றும் நொதிகளின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகின்றன. சிட்ரிக் அமிலம் தயாரிக்க ஆஸ்பர்ஜில்லஸ் நைஜர் (Aspergillus miger), அசிடிக் அமிலம் தயாரிக்க அசிட்டோபாக்டர் அசிட்டை (Acetobacter aceti), ஃபியுமரிக் அமிலம் தயாரிக்க ரைசோபஸ் ஒரைசே (Rhizopus oryzae), பியூட்ரிக் அமிலம் தயாரிக்க கிளாஸ்டிரிடியம் பியூட்டைரிக்கம் (Clostridium butyricum) மற்றும் லாக்டிக் அமிலம் தயாரிக்க லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
வணிக ரீதியிலான நொதிகளின் உற்பத்திக்கு ஈஸ்ட் (சக்காரோமைசெஸ் செரிவிசியே) மற்றும் பாக்டீரியாக்கள் பயன்படுகின்றன. துணிகளில் படிந்த எண்ணைய் கறைகளை நீக்க லைபேஸ் நொதி சலவைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
பெக்டினேஸ், புரோட்டியேஸ் மற்றும் செல்லுலேஸ் போன்ற நொதிகள் புட்டியில் அடைக்கப்பட்ட சாறுகளை தெளிவடைய செய்ய பயன்படுத்தப்படுகின்றன. பாலாடைக்கட்டி தயாரிப்பில் ரென்னட் போன்ற நொதிகள் பாலை கெட்டியான தயிராக மாற்றுவதற்குப் பயன்படுகிறது. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் ஸ்ட்ரெப்டோகைனேஸ் என்னும் நொதியும் மரபியல் மாற்றம் செய்யப்பட்ட ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியங்களும் இதயத்தசை நலிவுறல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக்குழாய்களிலுள்ள இரத்தக்கட்டிகளைக் கரைக்கும் 'கட்டி சிதைப்பானாக' (Clot Buster) செயல்படுகின்றன.
டிரைக்கோடெர்மா பாலிஸ்போரம் (Trichoderma polysporum) என்ற பூஞ்சையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நோய் தடுப்பாற்றல் ஒடுக்கியான சைக்ளோஸ்போரின் A, உறுப்பு மாற்றம் செய்யப்பயன்படுகிறது. மேலும் இது அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. மோனாஸ்கஸ் பர்பூரியஸ் (Monascus purpureus) என்ற ஈஸ்ட் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஸ்டேட்டின்கள் (Statins), இரத்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயன்படுத்தப்படுகின்றன. இது கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் நொதியை போட்டி வினைமூலம் தடை செய்கிறது. எ. கோலை மற்றும் சக்காரோமைசெஸ் செரிவிசியே ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மறுசேர்க்கை மனித இன்சுலின், மனிதர்களின் மருத்துவ சிகிச்சைக்குப் பெரிதும் பயன்படுகிறது.