இந்தியாவில் நிர்வாக அமைப்பு | அரசியல் அறிவியல் - அமைச்சகம், துறைகள், வாரியங்கள் மற்றும் ஆணையங்கள் | 12th Political Science : Chapter 6 : Administrative Machinery in India
அமைச்சகம், துறைகள், வாரியங்கள் மற்றும் ஆணையங்கள்
ஒன்றிய அரசு அமைச்சகம் / துறைகள்
ஒன்றிய தலைமை செயலகம் என்பது இந்தியாவிற்கான கொள்கைகள் உருவாக்கும் முக்கிய அமைப்பாகும். மத்திய தலைமை செயலகம் என்பது பல அமைச்சகங்களையும் துறைகளையும் உள்ளடக்கியது ஆகும். இவையனைத்தும் அவற்றின் செயல்பாடுகள் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் அமைச்சகம் மூன்று அடுக்குகளை கொண்டது.
1. அரசியல் தலைமை
அமைச்சகத்தின் அரசியல் தலைமை என்பவர் கேபினட் அமைச்சராகவோ, துணை அமைச்சராகவோ இருக்கலாம். சில நேரங்களில் தனிப் பொறுப்பு கொண்ட துணை அமைச்சராகவும் இருப்பர்.
2. செயலகம் (Secretariat)
இதன் தலைவர் செயலாளராக இருப்பார் இவர் குடிமைப் பணி சார்ந்த அதிகாரியாவார். செயலாளருக்கு உதவி புரிய இணைச் செயலர், கீழ் நிலைச் செயலர், துணைச் செயலர் போன்றோர் இருப்பர்.
3. நிர்வாக அமைப்பு (Directorate)
இதன் தலைவர் இயக்குநர், தலைமை இயக்குநர், தலைமை ஆய்வாளர் (ஐ.ஜி) ஆணையர் மற்றும் தலைமை கட்டுப்பாட்டாளர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவர்.
ஒவ்வொரு அமைச்சகமும் பல துறைகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு துறையும் பல தொகுதியாக பிரிக்கப்படும். தொகுதி பகுதிகளாக பிரிக்கப்படும் பகுதிகள் கிளைகளாக பிரிக்கப்படும், கிளைகள் பிரிவுகளாக பிரிக்கப்படும்.
துறை (செயலாளர்)
தொகுதி (இணைச் செயலாளர்)
பகுதி (துணைச் செயலாளர்)
கிளை (கீழ்நிலைச் செயலாளர்)
பிரிவு (பிரிவு அலுவலர்)
இந்திய அரசு அலுவல் விதிகள் 1961-இன்படி, அமைச்சகமும் துறைகளும் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மத்திய தலைமைச் செயலகம்
மத்திய ஆட்சியின் அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளின் ஒட்டுமொத்த தொகுப்பே மத்திய தலைமைச் செயலகம் என்று அழைக்கப்படுகிறது. அரசமைப்பின் உறுப்பு 77 இன்படி குடியரசுத்தலைவர் பல்வேறு அமைச்சகத்திற்கு பணியை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளார்.
மத்திய தலைமைச் செயலகத்தின் பணிகள்
1. அமைச்சர்களின் கொள்கையாக்கம் மற்றும் நாடாளுமன்றச் செயல்பாடுகளில் உதவி புரிதல்
2. சட்டங்கள் வரைதல், விதிகள் மற்றும் கொள்கைகளின் செயல் முறைகள்
3. திட்டமிடல், திட்ட உருவாக்கம்
4. அமைச்சகத்தின் செலவினங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை சார்ந்த பணிகள்
5. கொள்கைகள் மற்றும் திட்டங்கள் நடை முறைப்படுத்துவதை மேற்பார்வையிடுதல் கட்டுப்படுத்துதல்.
6. அமைச்சகம் மற்றும் துறை பணியாளரின் பணிகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல்.
7. அமைச்சகத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிடல் மற்றும் மாநில நிர்வாகத்துடன் தொடர்பில் இருத்தல்.
பணிகள்
அமைச்சரவைச் செயலகம் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதன் நிர்வாகத் தலைவர் அமைச்சரவை செயலாளர் (Cabinet Secretary) ஆவார், அவரே இந்தியக் குடிமைப் பணி அலுவலர்களின் தலைவராக கருதப்படுகிறார். இந்திய அரசு (அலுவல்கள் ஒதுக்கீடு) 1961 சட்டப் படி அமைச்சரவைச் செயலகத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:
தலைமைச் செயலகம் அரசு கொள்கை முடிவுஎடுப்பதில் அமைச்சகத்திற்கிடையேயான ஒருங்கிணைப்பு ஏற்படுத்துதல், அமைச்சகங்கள் / துறைகள் இடையே காணப்படும் வேறுபாடுகளைக் களைதல், செயலக நிலைக் குழுக்கள் தற்காலிகக் குழுக்கள் மூலம் ஒருமித்த கருத்து உருவாக்குதல் ஆகிய வழிகளில் அமைச்சரவைச் செயலகம் அரசுக்கு உதவுகிறது. நாடு பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கும் காலங்களில் மேலாண்மை செய்தல், அத்தகைய காலங்களில் பல்வேறு அமைச்சரகங்களை ஒருங்கிணைத்தல்.
அமைச்சரவை செயலகத்தின் மூன்று முக்கிய பிரிவுகள்:
❖ குடிமைப் பிரிவு
❖ இராணுவப் பிரிவு
❖ நுண்ணறிவுப் பிரிவு
குடிமைப் பிரிவு
இப்பிரிவே மத்திய அமைச்சரவைக்கு ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்குகின்றன.
இராணுவப் பிரிவு
இப்பிரிவு அமைச்சரவையின் இராணுவக் குழு செயலக உதவிகளை வழங்குகின்றது.
நுண்ணறிவுப் பிரிவு
இப்பிரிவு அமைச்சரவையின் கூட்டுப் புலனாய்வுக் குழு சார்ந்த செயல்பாடுகளை கையாளுகின்றது.
பிற அமைப்புகள்
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (RAIV), பாதுகாப்பு இயக்குநர், சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG), கூட்டு நுண்ண றிவுக் குழு இயக்குநர், பொதுமக்கள் குறைகள் டி.ஜி.பி (1998), தேசிய ஆணையம், இராசயன ஆயுத ஒப்பந்தங்கள்.
அமைச்சரவைச் செயலகம், அமைச்சரவை மற்றும் அமைச்சரவைக் குழுக்களுக்கு கீழ்காணும் உதவிகளை நல்குகிறது.
❖ பிரதமரின் ஆணைப்படி, அமைச்சரவை மற்றும் அமைச்சரவைக் குழுக்களின் திட்டங்களை ஒருங்கிணைத்தல்.
❖ கூட்ட நிரல்களை முடிவு செய்து சுற்றுக்கு அனுப்புதல்.
❖ கூட்டப்பொருள் தொடர்பான கோப்புகளை தயார் செய்து சுற்றுக்கு அனுப்புதல்.
❖ பிரதமரின் ஒப்புதலுக்குப்பின் கூட்ட விவாதங்களைத் தொகுத்து அனுப்புதல்.
❖ அமைச்சரவை மற்றும் அதன் குழுக்கள் எடுத்த முடிவுகள் நடைமுறைப் படுத்துவதை மேற்பார்வையிடுதல். அமைச்சரவைக் கூட்ட ஆவணங்களை அமைச்சரவைச் செயலகப் பாதுகாப்பில் பராமரித்தல்.
அமைச்சரவைச் செயலாளர்
இந்தியாவில் அமைச்சரவைச் செயலாளர் அலுவலகப் பதவியானது 1950-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் அமைச்சரவை செயலாளர் என்.ஆர். பிள்ளை ஆவார். அமைச்சரவை செயலரே அமைச்சரவை செயலகத்தின் தலைவர் ஆவார். இந்திய குடிமைப் பணிகளில் அமைச்சரவை செயலர் பதவியே உயரியது. இதனால் குடிமைப் பணி அலுவலர்கள் மத்தியில் இவரே முதன்மையானவர்.
பிரதமர் அலுவலகம் என்பது அவரின் கீழ் பணிபுரியும் பல்வேறு அலுவலர்களை உள்ளடக்கியது. 1977 ஆம் ஆண்டு வரை பிரதமர் அலுவலகம் பிரதமரின் செயலகம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மொரார்ஜி தேசாய் காலத்தில் பிரதமர் அலுவலகம் என்று மாற்றப்பட்டது.
பிரதமர் அலுவலகம் பிரதமருக்கு செயலக ரீதியான உதவிகளை வழங்குகின்றது. இதன் தலைவர் பிரதமரின் முதன்மைச் செயலர் ஆவார். பிரதமர் அலுவலகம் ஊழல் எதிர்ப்பு பிரிவு மற்றும் பொதுமக்கள் குறை கேட்டல் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியது. இவ்வலுவலகம் பிரதமர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குடிமைப் பணி அலுவலர்கள் துணையுடன் அரசை ஒருங்கிணைக்கின்றது. மேலும், பிரதமர் பிரதம் அலுவலக உதவியுடன் தான் அனைத்து அமைச்சகங்கள், ஆளுநர்கள் மற்றும் மாநிலங்களுடன் ஆலுவல்பூர்வ தொடர்பில் இருக்கிறார்.
மத்திய அரசு - உயர்மட்ட நிர்வாகம்
❖ குடியரசுத்தலைவர்
❖ துணைக் குடியரசுத்தலைவர்
❖ அமைச்சரவைச் செயலகம்
❖ இந்தியத் தேர்தல் ஆணையம்
❖ ஒன்றிய அரசுப் பணியாளர் - தேர்வாணையம்
❖ தேசிய மனித உரிமைகள் ஆணையம்
❖ இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி)
❖ இந்தியக் கணக்கு தணிக்கை துறை
❖ நிதி ஆயோக்
❖ தேசிய மகளிர் ஆணையம்
❖ தேசிய பழங்குடி மக்கள் ஆணையம்
❖ பதினைந்தாவது நிதி ஆணையம்
❖ சிறுபான்மையோர் தேசிய ஆணையம்
❖ காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் - மேம்பாட்டு ஆணையம்
❖ முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆணையம்