Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்தியாவில் நாடாளுமன்ற மக்களாட்சி

இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - இந்தியாவில் நாடாளுமன்ற மக்களாட்சி | 12th Political Science : Chapter 1 : Constitution of India

   Posted On :  31.03.2022 10:34 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களாட்சி

உறுப்பு 79இன் கீழ் இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் குடியரசுத்தலைவர் மற்றும் ஈரவைகளைக் கொண்டது ஆகும். ஈரவைகள் மாநிலங்களவை, மக்களவை என்று அறிவோம்.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களாட்சி

உறுப்பு 79இன் கீழ் இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் குடியரசுத்தலைவர் மற்றும் ஈரவைகளைக் கொண்டது ஆகும். ஈரவைகள் மாநிலங்களவை, மக்களவை என்று அறிவோம். ஒரு கூட்டாட்சியில் நாடாளுமன்றம் ஈரவை கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் இதனை ஏற்கப்படுகிறது; மேலவை என்று அழைக்கப்படும் மாநிலங்களவை மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் கீழவை என்று அழைக்கப்படும் மக்களவை மக்கள் பிரதிநிதித்துவமும் கொண்டவையாகும். ஈரவைகளும் தன் இயல்பில் செயல்பட்டு மாநிலங்களின் ஒற்றுமை, ஒன்றிய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்துப் பராமரிக்கின்றன.

செயல்பாடு

நாடாளுமன்ற முறை அரசு, குடியரசுத்தலைவர் முறை அரசு ஆகியவற்றிற்கு மேலும் சில உதாரணங்களை கூறவும்.

நாடாளுமன்ற முறை அரசு

இந்தியா

குடியரசுத்தலைவர் முறை அரசு

அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்



முக்கிய விவாதம்

2014 ஆகஸ்ட் 1: தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழை பயன்படுத்துதல்.

தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற ஆரோக்கியமான விவாதங்கள்


இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் உருவான மதராஸ் மாகாண முதல் சட்டமன்றத்தில் (1952-1957). இராஜாஜி அரசு கொண்டுவந்த அடிப்படைக் கல்வி திட்டம் விமர்சிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளுடன் ஆளும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியினர் உட்பட இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். இத்திட்டம் சாதி அடிப்படையிலான படிநிலை மேலாதிக்கத்தை மீண்டும் கொண்டு வரும் என்று விமர்சித்தனர். பின்னர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற காமராஜர் அமைச்சரவையில் 1954 அரசின் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அதேசமயம், இராஜாஜி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்கும் நிலச் சட்டங்கள் தொடரப்பட்டன.

"சென்னை மாகாண தலைவர் சி.இராஜாஜி தனது முதல் நிதி நிலை அறிக்கையை 1937இல் மதராஸ் சட்டமன்றம், செனட் அவை, மதராஸ் பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் தாக்கல் செய்தார்".

1967இல் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது. சி.என். அண்ணாதுரை முதல்வராக பதவி ஏற்றார். அவரது ஆட்சியில் இந்து திருமணச் சட்டம் திருத்தப்பட்டு 'சுயமரியாதை திருமணங்கள்' அதாவது மத சடங்குகள் இல்லாமல் மேற்கொள்ளப்படும் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டன. அவருக்கு அடுத்து பதவி ஏற்று, ஐந்து தடவைகள் முதல் அமைச்சராக பதவி வகித்த மு.கருணாநிதி பல சட்டங்களையும் எண்ணற்ற தீர்மானங்களையும் கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்த கடைசி சட்டமுன்வரைவு பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்குள் முஸ்லீம்களுக்கும் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்குவதுடன் பட்டியல் இனங்களுக்கும் மற்றும் பழங்குடியினருக்குமான ஒதுக்கீட்டின் கீழ் அருந்தியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குகிறது.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றகழகத்தின் எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையிலான பத்து ஆண்டுக்கால ஆட்சியில் (1977-1987) வருவாய் நிர்வாக துறையில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக, வாரிசு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான "கர்ணம்" பதவிக்கு முடிவு கட்டினார். மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தினார்.

1992 நவம்பரில் உச்ச நீதிமன்றம் மண்டல் ஆணையம் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில், பிற்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டினை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் கூட்டப்பட்டு 69 சதவீதம் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது.


உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம்

தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. 189 உறுப்பினர்கள் பொது தொகுதிகளிலிருந்தும் 45 உறுப்பினர்கள் தனித் தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

சட்டமன்றத்தில் முதல் கூட்டத் தொடர் முதல் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து (1952). 3.5.1952 அன்று தொடங்கியது.

  அரசமைப்பு உறுப்பு 333இன் கீழ் ஆங்கிலோ- இந்திய பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். 

16.05.2016 அன்று தமிழக சட்டமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடந்ததையொட்டி 15-வது தமிழக சட்டமன்றம் 21.05.2016 அன்று அமைக்கப்பட்டது.


உங்களுக்குத் தெரியுமா?

பொதுக் கணக்கு குழு

மக்களவை -உறுப்பினர்களிலிருந்து ஒருவர் பொது கணக்குக் குழுத்தலைவராக மக்களவைத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இதில் 1967-1968ஆம் ஆண்டில் முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரே பொதுக் கணக்குக் குழுத்தலைவராக மக்களவைத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு மக்களவைத் தலைவர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு நாடாளுமன்றக் குழுவாகவே கருதப்படுகிறது. 1950 ஜனவரி முதல் 2018 ஏப்ரல் வரை இக்குழு 1596 அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா

அரசமைப்புத் திருத்தச்சட்ட முன்வரைவு

அரசமைப்பில் உள்ள ஒரு விதியில் திருத்தம் கோரும் சட்ட முன்வரைவுகள் அரசமைப்புத் திருத்தச்சட்டம் முன்வரைவு என்று அழைக்கப்படுகிறது. உறுப்பு 368 (2) ன் கீழ் வரும் அனைத்து விதிகளும் இதில் அடங்கும். இந்த சட்ட முன்வரைவினை நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் கொண்டு வரலாம்.


உறுப்பு 370

அரசமைப்பு உறுப்பு 370 என்பது ஜம்மு - காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு தன்னாட்சி தகுதி வழங்குவது ஆகும். இந்திய அரசு 5 ஆகஸ்டு 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியை ரத்துசெய்தது


சங்கரலிங்கனார் காந்திய வாதியும் இந்திய விடுதலைக்காக போராடிய தமிழ் வீரரும் ஆவார். 1895இல் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி வள்ளியம்மாளுக்கு மகனாக பிறந்தார். 1917இல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். இராஜாஜியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற சங்கரலிங்கனார் 1930இல் காந்தியுடன் தண்டி உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கு பெற்றார். மதராஸ் மாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களைப் பிரித்து, சென்னையை தலைநகராக கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமலு 1952இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.


இதைத் தொடர்ந்து பெயர் மாற்றும் பிரச்சனை எழுந்தது. இதைத் தொடர்ந்து 1956இல் மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கினார். பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 ஜுலை 27 அன்று விருதுநகரில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் 75 நாட்களைக் கடந்தது சங்கரலிங்கனார் உடல் நலிவுற்றதால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும் படி சி.என். அண்ணாதுரை, ம.பொ.சிவஞானம், ஜீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தும் அவர் ஏற்கவில்லை . 1956 அக்டோபர் 13 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தின் 76ஆம் நாள் சங்கரலிங்கனார் உயிர் நீத்தார்.

உங்களுக்குத் தெரியுமா?

முக்கிய கூட்டு கூட்டங்கள்

வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1959-6 மற்றும் 9 மே 1961

பயங்கரவாத தடுப்புச் சட்டம்-2002 மார்ச்


உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாடு

மதராஸ் மாகாணத்தை தமிழகம் என பெயர் மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 20.07.1956 முதல் 10.10.1956 வரை 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.

மதராஸ் மாநில பெயர்மாற்றச் சட்டம் 14 ஜனவரி 1969 ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

காந்திய வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தவர்.


தேர்வுக்குழு 

தேர்வுக்குழுவில் குறைந்த எண்ணிக்கையில் உறுப்பினர்களை குறிப்பிட்ட காரணத்திற்காக நியமிக்கப்பட்டிருப்பர். இந்த தேர்வுக்குழு முறை வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற மக்களாட்சி முறையிலிருந்து பிறந்தது ஆகும். மாநிலங்களவை விதிகள் மற்றும் நடைமுறையின் உறுப்பு 125இன் கீழ் எந்தவொரு குறிப்பிட்ட சட்ட முன்வரைவையும் தேர்வுக்குழுவுக்கு அனுப்பும்படி எந்த ஒரு உறுப்பினரும் தீர்மானம் கொண்டு வர முடியும். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்த சட்ட முன்வரைவு தேர்வு குழுவின் பரிசீலினைக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு தீர்மானம் கொண்டு வருவதற்கு தேர்வுக் குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குறைந்தபட்ச உறுப்பினர்களாக (Quorum - கோரம்) அவையில் இருப்பது அவசியம். இவ்வாறு முன்மொழியப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வெற்றி - தோல்வி இன்றி முடிந்தால் அவைக்குத் தலைமை ஏற்பவரின் முடிவே இறுதி முடிவாகும். சட்ட முன்வரைவில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு அம்சம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் எனில் அதற்கென ஒரு துணைக் குழுவை தேர்வுக்குழு அமைத்துக்கொள்ளலாம். இந்த செயல்முறையில் ஏதேனும் கேள்விகள் எழுந்தால் அதனை மாநிலங்களவைத் தலைவர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவரது முடிவே இறுதியானது.

ஒரு சட்ட முன்வரைவு ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டு மற்றொரு அவையால் நிராகரிக்கப்படும் போதும் அல்லது ஏதேனும் ஒரு ஆட்சேபனை எழுப்பப்படும் போது அல்லது ஆறு வாரத்திற்கும் அதிகமாக இழுபறி நிலை நீடிக்கும் போதும் குடியரசுத்தலைவர் ஈரவைகளின் கூட்டுக் கூட்டத்தை கூட்டித் தீர்வு காணலாம். அந்த முன்வரைவு அமர்ந்துள்ள ஈரவைகளின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றால் அந்த முன்வரைவு நிறைவேற்றப்படும். ஆனால் பண முன்வரைவு அல்லது அரசியல் அரசமைப்புத் திருத்தச் சட்டம் ஆகியவற்றின் போது இதுபோன்று கூட்டு கூட்டத்தினை கூட்டி சட்டமாக்க இந்திய அரசமைப்பு அனுமதிக்கவில்லை .


Tags : Constitution of India | Political Science இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 1 : Constitution of India : Parliamentary Democracy in India Constitution of India | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு : இந்தியாவில் நாடாளுமன்ற மக்களாட்சி - இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு