Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | அரசமைப்பின் பொருள், பணிகள் மற்றும் முக்கியத்துவம்

இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - அரசமைப்பின் பொருள், பணிகள் மற்றும் முக்கியத்துவம் | 12th Political Science : Chapter 1 : Constitution of India

   Posted On :  31.03.2022 10:03 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு

அரசமைப்பின் பொருள், பணிகள் மற்றும் முக்கியத்துவம்

காலனி ஆட்சிக்காலத்தில் உருவான நமது தேசியத்தன்மை அரசியல் விடுதலைக்காக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளின் (பிற்காலத்தில் மாநிலங்களின்) ஒருங்கிணைப்பு, அரசமைப்புமையமாதல் (சட்டமாதல்) மற்றும் மக்களாட்சிமயம் ஆகியவற்றுக்காகவும் போராடி வந்துள்ளது.

இந்திய அரசமைப்பு


கற்றலின் நோக்கங்கள்

* இந்திய அரசமைப்பின் பொருள், இயல்பு, முக்கியத்துவம் ஆகிய பொருண்மைகள் குறித்து இந்த அலகு விவரிக்கின்றது.

* இந்திய அரசமைப்பு தத்துவத்தின் உள்ளார்ந்த நோக்கங்களை இந்த அலகு வழங்குகிறது. 

* இந்த அலகில் இந்திய அரசமைப்பு உருவாக்கத்தின் மேன்மைகளை முதன்மைபடுத்துகிறது.

* அரசமைப்பை உருவாக்கியவர்களுக்கு அரசமைப்பில் சேர்ப்பதற்கும் உந்துதலாகவும் இருந்த மூல ஆதாரங்களை அடையாளப்படுத்துகிறது.

* இந்திய அரசமைப்பின் சிறப்புக்கூறுகளை இந்த அலகு விளக்குகிறது. 

* இந்த அலகில் இந்தியாவில் செயல்படுகின்ற முறையிலான மக்களாட்சியினை தெளிவுபடுத்துகிறது.





அரசமைப்பின் பொருள், பணிகள் மற்றும் முக்கியத்துவம்


காலனி ஆட்சிக்காலத்தில் உருவான நமது தேசியத்தன்மை அரசியல் விடுதலைக்காக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளின் (பிற்காலத்தில் மாநிலங்களின்) ஒருங்கிணைப்பு, அரசமைப்புமையமாதல் (சட்டமாதல்) மற்றும் மக்களாட்சிமயம் ஆகியவற்றுக்காகவும் போராடி வந்துள்ளது.

இந்தியா ஒரு பண்பாட்டு வேற்றுமை கொண்ட நாடு என்ற போதிலும் இந்தியர்கள் அனைவரும் பல வகைகளில் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சார்ந்தும் ஒத்துழைப்புடனும் உள்ளனர். இந்த நாட்டின் மக்கள் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ சில குறிப்பிட்ட அடிப்படை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டிருப்பது அவசியமாகிறது. இத்தகைய விதிகள், ஒழுங்குமுறைகள் இல்லையென்றால் மக்களாட்சி நிலைத்திருக்காது. அந்நிலையில் மக்களின் நிலை பாதுகாப்பற்றதாக இருக்கும். காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியா ஆங்கிலேய அரசால் பிறப்பிக்கப்பட்ட சாசனங்கள் (Charters), ஆட்சிக்குழு சட்டங்கள் (council Acts), காலனியாட்சிக்கால இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India act) ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆளப்பட்டது. புதிதாக எழுச்சிபெற்ற இந்தியாவின் இயக்கங்களும் அதன் தலைவர்களும் ஒரு வரையறுக்கப்பட்ட எழுதப்பட்ட புதிய அரசமைப்பின் அடிப்படையில் புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்பதை விரும்பினர். மைய (மத்திய) சட்டமன்றம் அரசமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. மாநிலங்களின் (அரசுகளின்) ஒன்றியமாக, பல பிரிவுகளுக்கும் ஒருமைப்பாட்டினையும் ஒருங்கிணைப்பையும் வழங்கும் கூட்டாட்சியை உருவாக்கும் வகையில் புதிய அரசமைப்பை முன்மொழிய வேண்டியிருந்தது.


செயல்பாடு

சிந்திக்கவும், இணைக்கவும், பகிரவும் 

தலைப்பு : அரசமைப்பு நாட்டின் அடிப்படைச் சட்டம்' -என்று அழைக்கப்படுகிறது. 

இந்த கருத்து குறித்து இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் சிந்தித்து தங்களது சக மாணவர், இணை மாணவர் உடன் பகிரும் படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வகுப்பறையில் ஏதேனும் இரண்டு, மூன்று மாணவர்களிடம் இது குறித்து ஆசிரியர் கேள்விகள் எழுப்பலாம்.

ஒரு அரசமைப்பின் மிக முக்கியச் செயல்பாடு என்பது அந்த அரசின் குடிமக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கக்கூடிய அடிப்படை விதிகளை வழங்குவதுதான். ஒரு அரசு அமைக்கப்பட்டு, அது ஆட்சி செய்வதற்குத் தேவையான விதிகளைக் கொண்டதே அரசமைப்பு ஆகும். ஒரு அரசின் பல பாகங்களுக்குத் தேவையான ஒதுக்கீடுகளை அரசமைப்பு வரையறுக்கிறது. இந்திய பன்மைத்துவத்துக்கு மாநிலங்களின் ஒன்றியமே தேவையானதாகும். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஒரு மக்களாட்சி வடிவிலான அரசினையே விரும்பின. இதன்படி நாடாளுமன்றமே நமது அரசின் கொள்கைகளையும் சட்டங்களையும் முடிவு செய்கிறது.

ஒரு சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்றவும் ஒரு சமுதாயத்துக்கான வரையறைகளை உருவாக்கவும் அரசாங்கத்திற்கு அரசமைப்பு அதிகாரம் வழங்குகிறது. இந்திய அரசமைப்பின் நான்காவது பாகம் இந்திய சமூகத்தில் பரவலாக நிலவும் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் சட்டங்களை அரசு உருவாக்கும் வகையில் விதிகளைக் கொண்டுள்ளது. ஒரு நாட்டின் மக்களின் அடிப்படை அடையாளங்களை அரசமைப்பு வெளிப்படுத்துகிறது. தனது குடிமக்களால் ஒருபோதும் மீறப்படாத சில குறிப்பிட்ட அடிப்படைச் சட்டங்களை ஒரு அரசமைப்பு முன்மொழிகிறது. ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களையும் ஒரு அரசமைப்பு பாதுகாக்கிறது. ஒரு நாட்டின் மத்திய அரசுக்கும் அந்நாட்டின் மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவினையும், பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான உறவினையும் கொண்ட ஒரு சட்டகத்தினையும் அது உருவாக்குகிறது. உலகின் அரசமைப்புகளில் பெரும்பான்மையானவை எழுதப்பட்ட ஆவணங்களாகக் காணப்படுகின்றன; அவை பல பிரிவுகள், பட்டியல்களைக் கொண்டுள்ளன. இங்கிலாந்து அரசில் காணப்படுவது போன்று அரசமைப்பை ஒரே ஆவணமாகக் கொண்டிராத சில அரசுகளும் உள்ளன. இங்கிலாந்து அரசானது ஏராளமான வழக்கங்கள், உடன்பாடுகள் மற்றும் வரலாற்று முன்னுதாரணங்கள் ஆகியனவற்றின் தொகுப்பாக பல அங்கங்களைக் கொண்ட அரசமைப்பினைக் கொண்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா

மதச்சார்பு அரசு


மதச்சார்பின்மை கோட்பாட்டினை பின்பற்றாத அரசு மதச்சார்பு  அரசு எனப்படும். மத சார்பு அரசு என்பது ஒரு மதத்தினை அரசு மதமாகக் கொண்டிருக்கும். அந்த அரசின் உயர் பதவிகள் அனைத்தும் அரசு மதத்தை பின்பற்றுவோருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும். மதச்சார்பு அரசு உதாரணங்கள் - பாகிஸ்தான், வாடிகன் நகரம் போன்றவை ஆகும்.


உருவாக்கம்

ஓர் அரசமைப்பு எவ்வாறு நடைமுறைக்கு வந்தது, அதை யார் உருவாக்கியது, அதன் அதிகார அமைப்புகள் என்ன என்பன போன்ற தகவல்கள் அரசமைப்பு உருவாக்கம்' என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்க அரசமைப்பானது அங்கு தேசிய இயக்கம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது. இந்திய அரசமைப்பானது மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வமான அரசமைப்பாகும் விடுதலையின் போது நாட்டில் இருந்த மக்கள் பிரிவுகளில் பெரும்பான்மையோரின் ஒருமித்த கருத்தை இந்திய அரசமைப்பு பிரதிபலிக்கிறது. அரசமைப்பை பொதுவாக்கெடுப்புக்கு விட்டு அங்கீகாரம் பெறும் நிகழ்வுகள் சில நாடுகளில் உள்ளது.


பொதுவாக்கெடுப்பு

சட்டமன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு மாறாக ஒன்று அல்லது பல கேள்விகளின் தொகுப்பின் மீது வாக்காளர்களின் ஒப்புதல்பெற நேரடி வாக்கெடுப்பு நடத்துவது பொதுவாக்கெடுப்பு ஆகும். பொதுவாக்கெடுப்பு முறை ஒரு சட்டப்பூர்வ ஏற்பாடகவும், தனிநபருக்கும், பொதுமக்களுக்கும் அளிக்கும் அங்கீகாரமாகவும், ஒப்புதலாகவும் பார்க்கப்படுகிறது.

இந்திய அரசமைப்பு திருத்தங்களில் ஒன்றிற்குக்கூட இதுவரை பொதுவாக்கெடுப்பு விடப்பட்டதில்லை. இந்திய மக்களாட்சி முறையில் இது ஒரு பின்னடைவாகும் இதன் பொருத்தப்பாட்டினை அறிய சுவிட்சர்லாந்து நாட்டின் பொது வாக்கெடுப்புமுறையை அறிந்துகொள்வது பயனுள்ளதாக அமையும்.


ஓர் அரசமைப்பின் அம்சங்கள்

ஒரு சிறந்த அரசமைப்பு என்பது சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் எதிர்பார்ப்புகளுக்கும் இடமளிப்பதாக இருக்க வேண்டும். மதம், சாதி, மொழி அடிப்படையில் பாகுபாடு கொண்ட அரசமைப்புகள் நாட்டின் அனைவராலும் ஏற்கப்படாமல் போகலாம். அரசமைப்பின் அடிப்படைச் சட்டவிதிகளே அதன் தன்மையை வெளிப்படுத்துகின்றன. தன் குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரத்தினையும், சமத்துவத்தினையும் பாதுகாக்கும் எந்த அரசமைப்பும் வெற்றிகரமானதாகும்.


இந்தியாவில் மதச்சார்பின்மை

இந்திய அரசமைப்பின் 42வது திருத்தச்சட்டம், அரசமைப்பின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள ‘இறையாண்மை கொண்ட குடியரசு' என்பதை 'இறையாண்மை , சமதர்மம், மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு' என்றும் 'நாட்டின் ஒற்றுமை' என்ற சொற்றொடரை 'நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு' என்றும் முந்நாள் பிரதமர் இந்திராகாந்தி 1976இல் தேசிய அவசரநிலைக் காலத்தில் இந்த 42-வது திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

ஒரு தனிநபர் அல்லது ஒற்றை நிறுவனத்திடம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டால் தவறாகப் பயன்படுத்தப்பட வழியேற்படும் என்பதால் ஒரு சிறந்த அரசமைப்பில் அதிகாரங்கள் தனி நபரிடமோ ஒற்றை நிறுவனத்திடமோ குவிக்கப்படுவதில்லை. இதனையொட்டி பல அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் பிரித்து வழங்கப்பட்டு சமநிலைப்படுத்தும் முறை பின்பற்றப்படுகிறது.

இந்திய அரசமைப்பு அதிகாரங்களை சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை போன்ற நிறுவனங்கள் இடையே கிடைமட்டமாக பகிர்ந்து வழங்குகிறது. இந்திய அரசமைப்பு அதிக இறுக்கமான தன்மையைக் கொண்டதில்லை; அதிக நெகிழ்வுத் தன்மையும் கொண்டதில்லை; அதன் மாறாத அடிப்படை அமைப்பு மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் இது வெளிப்படுகிறது. சிறப்பாக எழுதி வடிவமைக்கப்பட்ட ஒரு அரசமைப்பு என்பது அதன் உட்கருவைத் தக்கவைத்துக்கொண்டு மாறும் சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளத்தக்கதாகும். நமது அரசமைப்பு நெருக்கடிமிக்க தருணங்களிலும் செயல்படுவதை அரசமைப்பை உருவாக்கிய மேதைகள் உறுதிசெய்துள்ளனர்.


அரசமைப்பின் தயாரிப்புப் பணிகள்

  அரசமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்கள் அரசமைப்பினை எழுதினர். அரசமைப்பு நிர்ணயச் சபையின் முதல் கூட்டம் 9 டிசம்பர் 1946 அன்று கூடியது. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மீதமுள்ள இந்தியாவுக்கான அரசமைப்பு நிர்ணயச் சபை 14 ஆகஸ்ட் 1947 அன்று மீண்டும் கூடியது. அன்றைய மாகாணச் சட்டமன்றங்களின் உறுப்பினர்களே அரசமைப்பு நிர்ணயச் சபை உறுப்பினர்களை மறைமுக வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்தனர்.

கேபினட் மிஷன் என அழைக்கப்பட்ட பிரிட்டானிய அமைச்சரவைக் குழு முன்மொழிந்த அடிப்படையில் அரசமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்கள் வரிசை அமைந்தது.


(புகைப்பட விளக்கம்: இந்திய அரசமைப்பு நிர்ணயசபையின் வரைவு குழு உறுப்பினர்கள், பிப்ரவரி, 1948: அமர்ந்திருப்போர் - இடமிருந்து: என். மாதவ ராவ், சையத் முஹமது சாதுல்லா , டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், சர் அல்லாடி கிருஷ்ணசாமி, சர் பி. என். ராவ், நிற்போர், இடமிருந்து: எஸ். என். முகர்ஜி, ஜூகல் கிஷோர் கண்ணா , கேவல் கிருஷ்ணா .)

அன்றைய மாகாணங்கள், சுதேச அரசுகள், அல்லது அரசுகளின் குழுக்களில் இருந்து அதன் மக்கள்தொகைக்கு ஏற்றபடி பத்து லட்சத்துக்கு ஒருவர் எனும் விகிதத்தில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இதன்படி, மாகாணங்களில் இருந்து 292 உறுப்பினர்களும் சுதேச அரசுகளிடம் இருந்து 93 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் இந்து, முஸ்லிம், சீக்கியர் ஆகிய சமுதாயங்களின் மக்கள்தொகை விகுதத்திற்கேற்ப இடம் ஒதுக்கப்பட்டது.


இந்த உறுப்பினர்கள் அந்தந்த மாகாணத்துக்கு மாற்றத்தக்க வாக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையின்படி ஒற்றை மாற்று வாக்கு அடிப்படையிலான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுதேச அரசுகள் தங்கள் பகுதியிலிருந்து உறுப்பினர்களை மக்கள் தொகை விகிதத்துக்கேற்ப தாங்களே தேர்வுசெய்துகொள்ளும் முறையை உருவாக்க அனுமதிக்கப்பட்டது.


அரசமைப்பு நிர்ணயசபை உருவாக்கம்

284 உறுப்பினர்கள் 26.11.1949 அன்று அரசமைப்பினை ஏற்று கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர்.


அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 அன்று 11 மணி அளவில் புதுதில்லி, அரசமைப்பு அரங்கில் கூடியது. அன்றைய கூட்டத்தின் முதல் கூட்டப்பொருள்: "தற்காலிகத் தலைவர் தேர்வு ஆகும். ஆச்சார்ய ஜே. பி. கிருபாளினி (ஐக்கிய மாகாணம் : பொது) அவர்கள் டாக்டர் சச்சிதானந்த சின்ஹாவை தற்காலிகத் தலைவராகத் தலைமையேற்று நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.

அரசமைப்புற்கு ஒப்புதல் தருவதற்காக சபை 24.01.1950 அன்று கூடிய கூட்டத்திற்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார்.

9 டிசம்பர் 1946 முதல் 24 ஜனவரி, 1950 வரை அரசமைப்பு நிர்ணயச்சபையின் விவாதங்களின் தொகுப்பு 12 தொகுதிகளைக் கொண்டதாகும்.


Tags : Constitution of India | Political Science இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 1 : Constitution of India : Meaning, Functions and Significance of the Constitution Constitution of India | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு : அரசமைப்பின் பொருள், பணிகள் மற்றும் முக்கியத்துவம் - இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு