Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள்
   Posted On :  31.03.2022 10:24 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு

இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள்

இந்திய அரசமைப்புதான் உலகிலேயே நீளமான எழுதப்பட்ட அரசமைப்பாகக் கருதப்படுகிறது.

இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள் 

நீளமான எழுதப்பட்ட அரசமைப்பு: 

இந்திய அரசமைப்புதான் உலகிலேயே நீளமான எழுதப்பட்ட அரசமைப்பாகக் கருதப்படுகிறது. மாநிலங்கள், மத்திய அரசு மற்றும் அவற்றுக்கு இடையிலான உறவுகள் குறித்த பல்வேறு விதிகளை கொண்டுள்ளது. நமது அரசமைப்பை உருவாக்கிய மேதைகள் உலகின் பல அரசமைப்பு மற்றும் பல்வேறு அரசமைப்பின் மூலங்களிலிருந்து நம் அரசமைப்பை உருவாக்கியுள்ளனர். தனிநபர் உரிமைகளை அடிப்படை உரிமைகளாகவும், அரசுக் கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகளாகவும், நிர்வாகச் செயல்முறை விவரங்கள் என விரிவாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.


இறுக்கம், நெகிழ்வுத் தன்மை இரண்டும் கொண்ட தனித்துவம்: 

அதன் அமலாக்கச் செயல்முறைகளின் அடிப்படையில் இறுக்கமும் நெகிழ்வும் கொண்டதாக இந்திய அரசமைப்பு அழைக்கப்படலாம்.

இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு

வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் மக்களே இந்தியாவை ஆள்கிறார்கள். இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட அரசு என்றால் தனது உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களை எந்தவிதமான வெளி நாட்டின் தலையீடு இன்றி நிர்வகிப்பதாகும். இந்திய அரசமைப்பில் சமதர்மம் என்ற சொல் 42-வது திருத்தச்சட்டம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், சமதர்மம், முதலாளித்துவம் ஆகிய பொருளாதாரங்கள் இணைந்த கலப்புப் பொருளாதார முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது இந்தியாவில் அரசு மதம் என ஒன்றில்லை; அனைத்து மதங்களும் சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதாகும். இந்தியக் குடியரசு என்பது இந்தியாவில் முடியரசு மூலமாக அல்லாமல் தேர்தல் மூலமாக அரசின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதாகும்.

நாடாளுமன்ற ஆட்சி முறை

அமைச்சரவை குழு செயல்பாடுகளை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துவதால் நாடாளுமன்ற ஆட்சிமுறை என அழைக்கப்படுகிறது. நாடாளுமன்ற முறை அரசில் நிர்வாகம் நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்டது; நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும்வரை அந்த அரசு நீடிக்கும். 

ஒற்றைக் குடியுரிமை

இந்திய அரசமைப்பு ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது. ஒன்றிய அரசு வழங்கும் குடியுரிமையே அனைத்து மாநிலங்களுக்குமானது.

2015, பிப்ரவரி 27 அன்று மக்களவையில் குடியுரிமை சட்டம் 1955-ல் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது.

பதிவு அல்லது இயல்புரிமை முறையில் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் நபர் குறிப்பிட்ட தகுதிகளை நிறைவுசெய்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்படும். இந்தியாவில் தொடர்ந்து குடியிருந்தாலோ அல்லது அரசுப்பணியில் 12 மாதங்கள் இருந்தாலோ ஒரு நபர் இந்தியக் குடியுரிமைக்கோரி விண்ணப்பிக்க முடியும். ஆனால், அசாதாரண சூழல் நிலவுமானால் இந்தத் தகுதிகளைத் தளர்த்திக்கொள்ளவும் இந்த சட்டம் வழி வகுக்கிறது. 

வயது வந்தோர் வாக்குரிமை

'ஒரு நபர், ஒரு வாக்குரிமை' எனும் கோட்பாட்டின் அடிப்படையில் 18 வயது நிறைவடைந்தோர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெறுகிறார்கள். தேர்தலில் வாக்களிப்பதில் இந்திய குடிமக்கள் இடையே சாதி, மதம், பால், இனம் அல்லது தகுதி அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும் கடைபிடிக்கப்படுவதில்லை .

சுதந்திரமான, ஒருங்கிணைந்த நீதி அமைப்பு

இந்தியாவில் நீதி துறையின் செயல்பாடுகளில் நிர்வாகத் தலையீடோ அல்லது நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தலையீடோ இல்லாமல் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். ஒருங்கிணைந்த இந்திய நீதி அமைப்பில் உச்ச நீதிமன்றத்தின் கீழ் உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள் இயங்குகின்றன.

அடிப்படை உரிமைகள்

ஒவ்வொரு தனிநபரும் குறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதை அடிப்படைக் கொள்கையாக அரசமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அரசமைப்பு, பகுதி III இல், அடிப்படை உரிமைகளுக்கான பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் ஆறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன; அவையாவன: சமத்துவத்துக்கான உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை, சுரண்டப்படுவதற்கு எதிரான உரிமை, மத வழிபாட்டுக்கான உரிமை, மற்றும் கல்வி, பண்பாட்டு உரிமை, அரசமைப்புப்படி நிவாரணம் கோரும் உரிமை. தொடக்கத்தில், சொத்து உரிமை உறுப்பு 31(அ)வின் கீழ் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, சொத்து உரிமையும் அடிப்படை உரிமையாக இருந்தது. 44-வது திருத்தச்சட்டம், 1978 சொத்து உரிமையை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கிவிட்டு, உறுப்பு 300(அ) ஆகச் சேர்த்தது. இதன் மூலம் சொத்து உரிமை சட்ட உரிமையாகக் கருதப்படுகிறது.

இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால் நிலைநாட்டப்படுபவை ஆகும். ஒரு நபர் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கருதுவாரானால் நீதிமன்றத்தினை நாடி நிவாரணம் அடைய முடியும். இதனையொட்டி நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தினை நாடும் உரிமை உறுப்பு 32-இல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கான அரசியல் நீதியை அது உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அடிப்படை உரிமைகள் முழுமையானவை அல்ல. நாட்டின் பாதுகாப்பு தேவையைக் கருத்தில் கொண்டு உகந்த தடைகள் விதிக்கப்படலாம்.

'கல்வி உரிமை'

இந்திய அரசமைப்பின் (82-வது திருத்தம் 2002) இந்திய அரசமைப்பு உறுப்பு 21 அ-வில், 6 முதல் 14 வயதுவரையான அனைத்துச் சிறார்களுக்கும் இலவச, கட்டாயக் கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக இணைத்துள்ளது. இதை அமலாக்கும் வகையில் மாநிலங்கள் விதிகளை வகுத்துக்கொள்ளலாம். சிறார் இலவச கட்டாயக் கல்வி சட்டம், 2009, அரசமைப்பு உறுப்பு 21-அ கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றும் வண்ணம் இயற்றப்பட்டது. 

அரசின் வழிகாட்டு நெறிகள்

அரசாட்சி தொடர்பாக அரசு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிகள் இந்திய அரசமைப்பின் நான்காவது பகுதியில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அரசமைப்பின் தனித்தன்மை வாய்ந்த கூறுகளில் ஒன்று அரசு கொள்கை வழிகாட்டு நெறிகள் என்ற பகுதி ஆகும்.

இதனை இந்தியாவில் சமூக, பொருளாதார நீதியை நிலைநாட்டும் வண்ணம் அரசு அவற்றை அமலாக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிகள் எனலாம்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், இலவச கட்டாய அடிப்படைக் கல்வி, வேலை பார்க்கும் உரிமை ஆகியவற்றுக்கான குறிப்பிடத்தக்க விதிகளை அது கொண்டுள்ளது. இந்திய அரசமைப்பின் பாகம் IV-ன் கீழ் முதுமை, வேலையின்மை , நோய்வாய்படுதல், வாழ்வாதாரத்திற்குத் தேவையான திட்டங்கள், பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு சிறப்பு முன்னுரிமை, வளங்கள் பகிர்வில் உள்ள பாகுபாடுகள் போன்றவற்றிற்கு அரசு உதவிகள் வழங்குவதற்கான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. அரசு கொள்கை வழிகாட்டு நெறிகளில் வழங்கப்பட்டுள்ள விதிகள் நீதிமன்றங்கள் மூலமாக நிலைநாட்டப்பட முடியாது என்றாலும் நாட்டின் அரசாட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. 

அடிப்படைக் கடமைகள்

42-வது திருத்தத்தின் வாயிலாக அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசமைப்பு பகுதி IVஅ உறுப்பு 51அ-வில் வழங்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகள் ஒவ்வொரு இந்தியனும் பின்பற்ற வேண்டிய அறக் கடமைகள் ஆகும்.

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமைகள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளன. 

அ) அரசமைப்பிற்கு கீழ்ப்படிந்து அதன் மாண்புகள், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியனவற்றிற்கு மரியாதை அளிக்க வேண்டும்.

ஆ) நமது நாட்டு விடுதலை போராட்டத்தின் போது பின்பற்றப்பட்ட உன்னதமான மாண்புகளை ஏற்று பின்பற்ற வேண்டும். 

இ) இந்தியாவில் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியனவற்றைப் பாதுகாத்து போற்ற வேண்டும். 

ஈ) தேவையான காலங்களில் அழைப்பு விடுக்கப்படும்போது நாட்டைப் பாதுகாக்கவும் நாட்டுக்கு சேவைபுரியவும் முன்வர வேண்டும். 

உ) மத, மொழி, சாதி வேறுபாடுகளை கடந்து மக்களிடையே ஒருமைப்பாட்டினையும் உலகளாவிய சகோதரத்துவத்தினையும் உருவாக்க வேண்டும்; பெண்களின் மாண்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். 

ஊ) நமது பன்மைத்துவப் பண்பாட்டின் வளமான மரபினை மதித்துப் பாதுகாக்க வேண்டும்.  

எ) வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிரினங்கள் உள்ளிட்ட நமது இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தி அனைத்து உயிரினங்களும் வாழத் தகுந்ததாக பராமரிக்க வேண்டும். 

ஏ) அறிவியல் ஆர்வம், மனிதநேயம், தேடல் நெறி, சீர்த்திருத்தம் ஆகியனவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

ஐ) பொதுச் சொத்துகளை சேதப்படுத்தாமல் மற்றும் பாதுகாக்கவும் வேண்டும்.

ஒ) நமது முயற்சிகள் மற்றும் சாதனைகளை மென்மேலும் உயர்ந்த இலக்குகளை நோக்கி எடுத்துச் சென்று நாட்டினை மென்மேலும் தொடர்ந்து உயர்த்தும் வண்ணம் தனிநபர் மற்றும் கூட்டு செயல்பாடுகளில் சிறப்புத்திறன் பெற்றுத் முன்னேற வேண்டும். 

ஓ) ஆறு வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட சிறார்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை அச்சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் வழங்க வேண்டும். 

கூட்டாட்சி அல்லது ஒற்றையாட்சி

இந்தியா சிதைக்க முடியாத ஒன்றியமும் (மத்திய அரசும்) சிதைக்கத்தக்க மாநிலங்களும் கொண்ட ஆட்சி முறையாகும். அதாவது நெருக்கடிநிலை காலத்தில் ஒற்றை ஆட்சி குணாம்சம் கொண்டது என்பது இதன் பொருளாகும். ஒன்றியம் முழுமையான கூட்டாட்சி என்று கூறமுடியாது. ஆனால், கிட்டத்தட்ட கூட்டாட்சி முறை என்று கூறலாம். வடிவத்தில் கூட்டாட்சி அமைப்பைக் கொண்டிருந்தாலும் இந்திய அரசமைப்பு ஒற்றையாட்சி முறை, கூட்டாட்சி முறை இரண்டையும், நேரம், சூழல் போன்ற தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளத்தக்க ஆட்சிமுறையைக் கொண்டுள்ளது. 

நீதி சீராய்வு சமநிலை நாடாளுமன்ற மேலாதிக்கம்

இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் கண்காணிப்பதிலும் நாடாளுமன்ற நிர்வாகச் செயல்பாடுகளில் தேவைப்பட்டால் தலையிடுவதிலும் நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது இது இந்திய அரசமைப்பின் சிறப்புக்கூறுகளில் ஒன்று ஆகும். நீதி அமைப்பும், நாடாளுமன்றமும் ஒன்றுக் கொன்று சமமான மேலாதிக்க தன்மை கொண்டவை. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் அரசமைப்பின் அடிப்படை தத்துவத்திற்கு முரணாக இருந்தால், அதை செல்லாததாக்கும் அதிகாரம், நீதி சீராய்வு எனப்படும்.

இந்தியக் குடியுரிமை

ஒரு நாட்டின் சட்டப்பூர்வ உறுப்பினர்கள் யார் என்பதை அடையாளம் காண்பது குடியுரிமை ஆகும். குடியுரிமைச் சட்டம், 1955, குடியுரிமை பெறுதல் மற்றும் உறுதிப்படுத்தலை ஒழுங்குபடுத்துகிறது. பிறப்பு, வாரிசு, பதிவு, இயற்கை வயப்படுத்தல் மற்றும் ஒரு பகுதியில் தொடர்ந்து வசித்தல் ஆகிய வழிகளில் குடியுரிமை பெற இந்திய அரசமைப்பு வழிவகை செய்துள்ளது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குடியுரிமையை விலக்கிக்கொள்ளவும் ரத்துசெய்யவும் விதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அயல்நாட்டு குடிமக்கள் பதிவுமுறைகளும், அவர்களுக்குரிய உரிமைகளும் அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ளன.





12th Political Science : Chapter 1 : Constitution of India : Salient Features of Indian Constitution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு : இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு