பருவம் 3 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ் - பயணம் | 2nd Tamil : Term 3 Chapter 5 : Payanam

   Posted On :  27.06.2022 02:24 am

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : பயணம்

பயணம்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : பயணம்

பயணம்

குட்டிப்பையன் சிட்டி குளிக்கப் போனான். குழாயைத் திறந்தான். தண்ணீர் குபு...குபுவென வந்தது.


'குளிக்கப் போறேன் நான்

குளிக்கப் போறேன்

அழுக்குப்போக நல்லா

குளிக்கப் போறேன்

எனப் பாட்டுப் பாடியபடி வழலைக் கட்டியைக் குழைத்தான்.

குமிழி வந்தேன்

வண்ணக்குமிழி வந்தேன்

சிட்டியின் கைகளில்

குமிழி வந்தேன்சிட்டியின் கையிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. திடுக்கிட்டுத் தன் கையைப் பார்த்தான். கை, கால்கள் முளைத்த வண்ணக்குமிழி ஒன்று அவன் கையில் இருந்தது. சிட்டியைப் பார்த்துக் குதூகலமாகச் சிரித்தது. அதனைத் தொட்டுப் பார்க்க ஆர்வத்துடன் விரலை நீட்டினான். "ஆ! நீ தொட்டால் நான் உடைந்து விடுவேனே", என்றது குமிழி. சிட்டி சிரித்தபடி தலையை ஆட்டினான்.

மெல்ல, தன் முகத்தைத் தேய்த்தான். குமிழி, சிட்டியின் நெற்றியில் நடந்தபடி,

'நடந்து வந்தேன் – நான்

நடந்து வந்தேன்

சிட்டியின் நெற்றியில்

நடந்து வந்தேன்’

என்று பாடியது.பாடலைக் கேட்டுப் புன்னகைத்தான் சிட்டி. மீண்டும் தேய்க்கத் தொடங்கினான்.'சறுக்கி வந்தேன் - நான்

சறுக்கி வந்தேன் 

சிட்டியின் மூக்கின் மேல்

சறுக்கி வந்தேன்

என்று பாடியபடி சறுக்கியது குமிழி. சிட்டி அதன் குறும்பைக் கண்டு மகிழ்ந்தான். தன் காதுகளைத் தேய்க்கத் தொடங்கினான். குமிழி, காதுகளில் வளைந்தபடி,

'வளைந்து வந்தேன்- நான்

வளைந்து வந்தேன்

சிட்டியின் காதுகளில்

வளைந்து வந்தேன்’ என்று பாடியது.


"ஏய்! காதுகளில் இவ்வளவு சத்தமாய்ப் பாடாதே", செல்லமாய் அதட்டினான் சிட்டி. 'ஓ! சரி, நண்பனே! புன்னகையுடன் தலையாட்டியது குமிழி.

தன் தோள்களைத் தேய்த்தான் சிட்டி. குமிழி, சரசரவென்று வழுக்கியபடி,

‘வழுக்கி வந்தேன் - நான்

வழுக்கி வந்தேன்

சிட்டியின் தோள்களில்

வழுக்கி வந்தேன்'

என்று பாடியது.

 

கலகலவெனச் சிரித்தபடி சிட்டி வயிற்றின்மீது தேய்த்தான். கடகடவென உருண்ட குமிழி,

'உருண்டு வந்தேன் - நான்

உருண்டு வந்தேன்

சிட்டியின் வயிற்றின்மேல்

உருண்டு வந்தேன்'

என்று பாடியது.


ஓரக்கண்ணால் பார்த்தபடி தன் கால்களைத் தேய்த்தான் சிட்டி. அவன் குட்டிக் கால்களில் குடுகுடுவென் ஓடிவந்த குமிழி,

ஓடி வந்தேன் - நான்

ஓடி வந்தேன்

சிட்டியின் கால்களில்

ஓடி வந்தேன்'

என்று பாடியது.

தேய்த்து முடித்ததும் தண்ணீரைத் தன்மீது ஊற்றினான் சிட்டி.


அப்போது குமிழி,

'பயணம் வந்தேன் - நான்

பயணம் வந்தேன்

தலைமுதல் கால்வரை

பயணம் வந்தேன்’ - சிட்டியின்

தலைமுதல் கால்வரை

பயணம் வந்தேன்'

என்று பாடியபடியே

சிட்டிக்குக் கையசைத்தது. "நாளையும் நீ வரவேண்டும்" என்று அன்புக் கட்டளையிட்டுக் கையசைத்தான், சிட்டி.

Tags : Term 3 Chapter 5 | 2nd Tamil பருவம் 3 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ்.
2nd Tamil : Term 3 Chapter 5 : Payanam : Payanam Term 3 Chapter 5 | 2nd Tamil in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : பயணம் : பயணம் - பருவம் 3 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : பயணம்