கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் | அலகு 3 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - விவசாயிகளின் புரட்சிகள் | 8th Social Science : History : Chapter 3 : Rural Life and Society
விவசாயிகளின்
புரட்சிகள்
இந்தியாவில்
ஆங்கில ஆட்சியானது வேளாண்மை முறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது. புதிய வேளாண்மை
யுக்திகளால் பழைய வேளாண் முறை மறைந்து போனது. ஜமீன்தார்கள் நில உரிமையாளர்களாக மாறினர்.
எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு, விவசாயிகளின் உழைப்பு ஜமீன்தார்களால் சுரண்டப்பட்டது.
மேலும் விவசாயிகளின் வாழ்க்கை முறை மிகவும் துயரமானதாக இருந்தது. தாங்கள் எல்லையில்லா
அளவில் சுரண்டப்படுவதை உணர்ந்த விவசாயிகள், இந்த சுரண்டலில் இருந்து பாதுகாத்து கொள்ள
19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் எதிராக
பல புரட்சி இயக்கங்களிலும், கலகங்களிலும் ஈடுபட்டனர்.
சந்தால் கலகம் (1855-56)
1855-56இல் விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது
கலகம் சந்தால் கலகமாகும். பீகாரில் உள்ள ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில்
சந்தால் மக்கள் வேளாண்மை செய்து வந்தனர். சந்தால்களின் அறியாமையை சாதகமாக பயன்படுத்திக்
கொண்ட, நகர்ப்புற நிலக்கிழார்கள் மற்றும் வட்டிக்குப் பணம் தருவோர் சந்தால்களின் நிலங்களை
அபகரித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இது அவர்களிடையே கசப்பான உணர்வை ஏற்படுத்தி 1855இல்
ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச் சென்றது. இதனைத் தொடர்ந்து, சந்தால்கள் தங்களை அன்னிய
நாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளிலிருந்து விடுவித்து கொள்வது மட்டுமில்லாமல் தங்களுக்கென்று
ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொள்ள, சித்து மற்றும் கங்கு என்ற இரண்டு சந்தால் சகோதரர்களின்
தலைமையின் கீழ் 10,000 வீரர்கள் ஒன்று கூடினர். இக்கூட்டத்தினரின் புரட்சி ஒரு மாதத்திற்குள்
வலிமையான சக்தியினை பெற்றது. ஐரோப்பிய பண்ணையாளர்கள், ஆங்கிலேய அலுவலர்கள், இரயில்வே
பொறியாளர்கள், ஜமீன்தார்கள் மற்றும் வட்டிக்குப் பணம் கொடுப்போர் ஆகிய அனைவரும் புரட்சியாளர்களால்
தாக்கப்பட்டனர். புரட்சியானது பிப்ரவரி 1856 வரை தொடர்ந்தது. புரட்சியின் தலைவர்கள்
கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கலகமானது கடுமையாக அடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து
சந்தால்கள் வசித்த பகுதிகளை சந்தால் பர்கானா என அரசு அறிவித்தது. அதன்படி சந்தால்களின்
நிலங்களும், அடையாளமும் ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டன.
இண்டிகோ கலகம் (அவுரி புரட்சி,1859-60)
வங்காள
அவுரி சாகுபடியாளர்களின் வேலை நிறுத்தம் அதிகளவில் பரவி தீவிர விவசாய பரட்சியாக மாறியது.
ஐரோப்பிய இண்டிகோ தோட்டக்காரர்கள், விவசாயிகளுக்கு மிகவும் தீமை தரும் வகையில் இண்டிகோவை
வளர்ப்பதற்கு குத்தகை விவசாயிகளை கட்டாயப்படுத்தினர். மேலும் குத்தகை விவசாயிகள், தாங்கள்
விளைவிக்கும் அவுரியை தங்களுக்கு குறைந்த விலைக்கு விற்கும்படியும், குத்தகை முன்பணத்தை
பின்னாளில் அவர்களுக்கு பயன்படும் வகையில் முன்கூட்டியே பெற்று கொள்ளும்படியும் வற்புறுத்தப்பட்டனர்.
மேலும், ஆள் கடத்தல், கொள்ளையடித்தல், கசையடி கொடுத்தல், எரித்தல் போன்ற சம்பவங்களும்
நடந்தன. செப்டம்பர் 1859இல் திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு சரண் பிஸ்வாஸ் ஆகியோரால்
நாதியாமாவட்டத்தில் நடைபெற்ற கலகங்கள் ஐரோப்பிய பண்ணையாளர்களின் கடுமையான அடக்குமுறைகளால்
கைவிடப்பட்டன. அதன் பின்னர் ஐரோப்பிய தொழிற்சாலைகள் எரிக்கப்பட்டு, கலகமானது வேறு இடங்களுக்கு
பரவியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அரசு 1860இல் ஒரு அவுரி ஆணையத்தை அமைத்தது.
அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி 1862 சட்டம் பாகம் ஆறினை (VI) (Part of the Act of
1862) உருவாக்கியது. ஐரோப்பிய பண்ணையாளர்களின் அடக்கு முறைக்கு பயந்து வங்காளத்தின்
அவுரி விவசாயிகள் பீகார் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் குடியேறினர். இந்து தேசபக்தன்
என்ற செய்தித்தாள் சாகுபடியாளர்களின் துயரங்களை பலமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
அதேபோல, தீனபந்து மித்ரா என்பவர், வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை மக்கள்
மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவர நீல் தர்பன் (Nil Darpan) என்ற ஒரு நாடகத்தை
எழுதினார்.
பாப்னா கலகம் (1873-76)
பாப்னா
விவசாய எழுச்சி என்பது விவசாயிகளால் நடத்தப்பட்ட, ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிரான
இயக்கமாகும். இக்கலகம் வங்காளத்தின் பாப்னாவில் உள்ள யூசுப்சாகி பர்கானாவில் கேசப்
சந்திரா ராய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஜமீன்தார்கள், விவசாயிகளிடமிருந்து, சட்டத்திற்கு
புறம்பான முறையில், வற்புறுத்தி வரி வசூலித்தல், அதிகப்படியான வாரம் (வரி) வசூலித்தல்,
மற்ற பிற வரிகளையும் வழக்கமாக வசூல் செய்தனர். விவசாயிகள் வாடகை செலுத்தவில்லை என்ற
போலி காரணங்களை கூறி அடிக்கடி நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நாளடைவில்
ஜமீன்தார்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருங்கூட்டமாகக் கூடி கிராமங்கள் தோறும்
சென்று ஜமீன்தார்களின் அச்சுறுத்தல்களை எடுத்துக்கூறி மற்ற விவசாயிகளும் தங்களுடன்
இணையும்படி செய்தனர். போராட்ட செலவினங்களை கட்டுப்படுத்த விவசாயிகளிடமிருந்து நிதி
திரட்டப்பட்டது. போராட்டம் படிப்படியாக பாப்னா முழுவதும் பரவி, பின்னர் கிழக்கு வங்காளத்தின்
மற்ற மாவட்டங்களுக்கும் பரவியது. அப்பகுதி எங்கும் விவசாய சங்கங்கள் அமைக்கப்பட்டன.
போராட்டத்தின் முதன்மை நோக்கம் சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தது.
ஜமீன்தார்கள்
விவசாயிகளை கட்டாயப்படுத்திய போது மட்டும் மிகச் சிறிய அளவில் வன்முறை நடைபெற்றது.
போராட்டத்தில், ஜமீன்தார்களின் வீடுகளை, கொள்ளையடித்ததாக சில நிகழ்வுகளே இருந்தன. நீதிமன்ற
ஆணைகளை காவல் நிலையங்கள் செயற்படுத்த முயன்ற போது அதனை எதிர்த்து விவசாயிகள், ஒரு சில
தாக்குதல்களை காவல் நிலையங்கள் மீதும் தொடுத்தனர். ஜமீன்தார்களும் ஜமீன்தார்களின் முகவர்களும்
மிகவும் அரிதாகவே கொல்லப்பட்டனர் அல்லது காயப்படுத்தப்பட்டனர். போராட்டத்தின் வாயிலாக
விவசாயிகள் சட்ட விழிப்புணர்வு மற்றும் அவர்களது சட்ட உரிமைகளை மேம்படுத்தினர். மக்களை
ஒருங்கிணைத்து சங்கங்களை உருவாக்கி அமைதியான முறையில் எதிர்க்கும் ஆற்றலையும், வலிமையையும்,
விழிப்புணர்வையும் வளர்த்துக் கொண்டனர்.
தக்காண கலகம் (1875)
1875ஆம்
ஆண்டு பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஒரு கலகத்தில் ஈடுபட்டனர். அது தக்காண கலகம்
என்றழைக்கப்பட்டது. அப்பகுதி விவசாயிகள், ஆரம்பத்தில் தொடர்ந்து தங்கள் நிலங்களை அபகரித்துக்
கொண்டிருந்த உள்ளூர் வட்டிக்காரர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் புரட்சி செய்தனர்.
பூனா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில், ஒரு வட்டிக்காரரின் சொத்துக்களை கைப்பற்றி, அவரை
கிராமத்திலிருந்து வெளியேற்றிய பொழுது புரட்சி தொடங்கியது. மேலும் இப்புரட்சி படிப்படியாக
33 கிராமங்களுக்குப் பரவியது. விவசாயிகள் மார்வாரி சகுகாரர்களின் சொத்துக்களை கொள்ளையடித்தனர்.
சகுகாரர்கள், காவலர்களின் உதவியை நாடியபோது போராட்டம் வன்முறையாக மாறியது. இராணுவம்
வரவழைக்கப்பட்டு அப்புரட்சி கட்டுப்படுத்தப்பட்டது. இப்புரட்சியின் விளைவாக தக்காண
விவசாயிகள் மீட்பு சட்டம்" நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் விவசாயிகளின் குறைகள்
களையப்பட்டது.
பஞ்சாப் விவசாயிகள் இயக்கம்
(1890-1900)
நகர்ப்புற
வட்டிக்காரர்களிடம் கடனைப் பெற்று, கடனை திருப்பி செலுத்தத் தவறிய விவசாயிகள், தங்கள்
நிலத்தின் மீது வட்டிக்கடைக்காரர்கள் மேற்கொண்ட ஒடுக்கு முறைகளை விரைந்து தடுக்கும்
பொருட்டு பஞ்சாப் விவசாயிகள் புரட்சியில் ஈடுபட்டனர். ஆங்கிலேய அரசு இப்பகுதியில் எந்த
ஒரு புரட்சி நடைபெறுவதையும் விரும்பவில்லை , ஏனெனில் அப்பகுதியில் இருந்துதான் ஆங்கிலேய
இராணுவத்திற்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பஞ்சாப் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக
1900இல் பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் நிறைவேற்றப்பட்டு சோதனை முறையில் செயற்படுத்தப்பட்டது.
பஞ்சாபில் இச்சட்டம் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இச்சட்டத்தின் படி, பஞ்சாப் மக்கள் விவசாயிகள், சட்ட அங்கீகாரம் பெற்ற விவசாயிகள்,
வட்டிக்கடைக்காரர்கள் உட்பட இதர மக்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். முதல்
பிரிவு மக்களிடமிருந்து மற்ற இரண்டு பிரிவு மக்களுக்கும் நிலத்தை விற்பது மற்றும் அடமானம்
வைப்பது மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சம்பரான் சத்தியாகிரகம்
(1917-18)
பீகார்
மாநிலத்தில் உள்ள சம்பரான் என்ற இடத்தில் ஐரோப்பிய பண்ணையாளர்கள் சட்டத்திற்குப் புறம்பான
மற்றும் மனிதத் தன்மையற்ற முறைகளில், மிகவும் நியாயமற்ற விலைக்கு அவுரி சாகுபடியை செய்தனர்.
சம்பரான் இந்திய விவசாயிகள் (அவுரி சாகுபடியாளர்கள்), தங்களது மொத்த நிலத்தில் 20இல்
பேங்கில் மட்டும் அவுரியை சாகுபடி செய்து, அதனையும் ஐரோப்பிய தோட்டக்காரர்களுக்கு அவர்கள்
நிர்ணயித்த விலைக்கே விற்க சம்பரான் தீன்கதியா என்ற நடைமுறையின் கீழ் பிணைக்கப்பட்டிருந்தார்கள்.
மேலும் அவர்கள் ஐரோப்பிய பண்ணையாளர்களால் சட்டவிரோத பணம் பறிப்பு, மற்றும் அடக்கு முறை
போன்ற நிகழ்வுகளுக்கு ஆளாகினர். இந்த விவசாயிகளின் பிரச்சினையை அறிந்து கொண்ட மகாத்மா
காந்தி அவர்களுக்கு உதவ முன்வந்தார். அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, மகாத்மா காந்தியை
அக்குழுவின் ஓர் உறுப்பினராக சேர்த்துக் கொண்டது. விவசாயிகளின் குறைகள் விசாரிக்கப்பட்டு
இறுதியில், மே, 1918இல் சம்பரான் விவசாயச் சட்டம்" நிறைவேற்றப்பட்டது.
கேடா (கைரா) சத்தியாகிரகம்
(1918)
1918இல்
குஜராத்தின் கேடா மாவட்டத்தில், இடையராத பஞ்சத்தின் காரணமாக விவசாயம் பொய்த்தது. ஆனால்
நிலவரி முழுவதையும் செலுத்த விவசாயிகளை அரசு அறிவுறுத்தியது. இதன் விளைவாக கேடா மாவட்டத்தில்
உள்ளூர் விவசாயிகள் வரிகொடா இயக்கத்தை தொடங்கினர். அவ்வியக்கத்திற்கு காந்தியடிகள்
தலைமை ஏற்றார்.
பஞ்சத்தின்
நிலைகளை அரசுக்கு எடுத்துக்கூறி முழு பலத்துடன் சத்தியாகிரக முறையில் போராடும்படி காந்திஜி
விவசாயிகளை ஆயத்தப்படுத்தினார். மேலும், விவசாயிகள் அச்சமின்றி எல்லா எதிர்ப்புகளையும்
சந்திக்க ஊக்கமளித்தார். அவரது அழைப்புக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவசாயிகளின்
ஆதரவு இருந்தது. மற்றும் அரசாங்கம் விவசாயிகளுடன் ஒரு தீர்வுக்கு வரவேண்டியிருந்தது.
இக்காலக் கட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு
முக்கியமான தலைவராக உருவானார்.
மாப்ளா கிளர்ச்சி (1921)
மாப்ளா
என்று அழைக்கப்பட்ட முஸ்லீம் விவசாயிகள் (கேரளா), இந்து ஜமீன்தார்கள் (ஜென்மிஸ்) மற்றும்
ஆங்கில அரசால் அடக்கப்பட்டு, சுரண்டப்பட்டனர். இதுவே இப்புரட்சிக்கு முதன்மை காரணமாக
இருந்தது.
ஏப்ரல்
1920இல் நடைபெற்ற மலபார் மாவட்ட மாநாட்டின் மூலம் மாப்ளா விவசாயிகள் உத்வேகம் அடைந்தனர்.
அம்மாநாடு குத்தகைதாரர்களுக்கு ஆதரவளித்து, நிலக்கிழார் - குத்தகைதாரர் இடையில் உள்ள
உறவினை ஒழுங்குப்படுத்த சட்டம் இயற்ற கோரியது. ஆகஸ்ட் 1921இல் மாப்ளா விவசாயிகள், ஜமீன்தார்களின்
அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சியின் ஆரம்பத்தில் மாப்ளா
விவசாயிகள் காவல் நிலையங்கள், பொது அலுவலகங்கள், செய்தி தொடர்பு சாதனங்கள், அடக்கு
முறையில் ஈடுபட்ட நிலக்கிழாரின் வீடுகள், வட்டிக்கடைக்காரர்கள் உட்பட அனைவரையும் தாக்கினர்.
1921 டிசம்பர் வாக்கில் அரசு இரக்கமின்றி மாப்ளா கிளர்ச்சியை அடக்கியது. அரசின் அதிகாரப்பூர்வ
மதிப்பீட்டின்படி, அரசு தலையீட்டின் விளைவாக 2337 மாப்ளா கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
1650 பேர் காயமடைந்தனர் மற்றும் 45,000க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.
பர்தோலி சத்தியாகிரகம்
(1929-30)
1928இல்
30 சதவீதம் அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது அதனால், பர்தோலி (குஜராத்) விவசாயிகள்
சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும் விவசாயிகள்,
உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து பிப்ரவரி 12,1928இல் வரிகொடா இயக்கத்தைத்
தொடங்கினர். இதில் பல பெண்களும் கலந்து கொண்டனர்.
1930இல்பர்தோலியில்
வரிசெலுத்தமறுப்பு தெரிவித்த விவசாயிகள் தங்கள் நிலங்களை குறைந்த ஏலத்தில் விற்று இழப்பதற்கு
தயாராக இருந்தாலும், நிலத்தை அரசுக்குத் தர மறுத்துவிட்டனர். ஆனாலும் அரசு அவர்கள்
நிலத்தை கையகப்படுத்தி செய்து ஏலத்தில் விற்றது. இருப்பினும், 1937இல் காங்கிரஸ் ஆட்சிக்கு
வந்தபொழுது விவசாயிகளின் நிலம் அனைத்தும் அவர்களுக்கே திருப்பி தரப்பட்டது.