பீனியல் சுரப்பி (Pineal Gland)
மனிதனில், எபிபைசிஸ் செரிப்ரை (Epiphysis cerebri) அல்லது கொனேரியம் (Conarium) என்றழைக்கப்படும் பீனியல் சுரப்பி, மூளையின் மூன்றாவது வென்ட்ரிகிளின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது பாரன்கைமா மற்றும் இடையீட்டுச் செல்களால் ஆனது. இது மெலடோனின் (Melatonin) மற்றும் அதன் முன்னோடியாகிய செரடோனின் (Serotonin) எனும் ஹார்மோனைச் சுரக்கின்றது. மெலடோனின் உறக்கத்தையும், செரடோனின் விழிப்பையும் ஏற்படுத்துவதன் மூலம் நாள்சார் ஒழுங்கமைவு (Circadian rhythm) இயக்கத்தினைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கியப்பங்கு வகிக்கின்றது.
இதனால், நம் உடலில் தூக்க விழிப்பு சுழற்சி முறையாக நடைபெறுகின்றது. மேலும், இன உறுப்புகளின் பால் முதிர்ச்சி கால அளவை நெறிப்படுத்துதல், உடலின் வளர்சிதை மாற்றம், நிறமியாக்கம், மாதவிடாய் சுழற்சி மற்றும் தடைகாப்பு செயல்கள் ஆகியவற்றிலும் மெலடோனின் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.