அடினோஹைபோஃபைசிஸில் சுரக்கும் ஹார்மோன்கள் (Hormones ofAdenohypophysis), நியூரோஹைபோஃபைசிஸ் ஹார்மோன்கள்(Hormones of Neurohypophysis) - பிட்யூட்டரி சுரப்பி அல்லது ஹைபோபைசிஸ் (Pituitary Gland or Hypophysis) | 11th Zoology : Chapter 11 : Chemical Coordination and Integration
பிட்யூட்டரி சுரப்பி அல்லது ஹைபோபைசிஸ் (Pituitary Gland or Hypophysis)
நீள்கோள வடிவ பிட்யூட்டரி சுரப்பி மூளையின் அடிப்பகுதியில் காணப்படும் ஸ்பீனாய்ட் எலும்பில் உள்ள செல்லா டர்சிகா (Sella turcica) என்னும் குழியில் அமைந்துள்ளது. இது இன்ஃபன்டிபுலம் எனும் சிறிய காம்பு போன்ற அமைப்பால் மூளையின் ஹைபோதலாமஸ் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விட்டம் சுமார் ஒரு சென்டிமீட்டரும், எடை சுமார் 0.5 கிராமும் ஆகும். பிட்யூட்டரி இருகதுப்புகளால் ஆனது. முன்கதுப்பு, சுரப்புத் திசுக்களால் ஆன அடினோஹைப்போபைசிஸ் (Adenohypophysis) என்றும், பின்கதுப்பு நரம்புத் திசுவால் ஆன நியூரோஹைபோபைசிஸ் (Neurohypophysis) என்றும் அழைக்கப்படும். கரு வளர்ச்சியின் போது, தொண்டைக்குழி எபிதீலியத்தின் உட்குழிவடைந்த பகுதியான ராத்கேயின்பை (Rathke's pouch) யிலிருந்து முன்கதுப்பும், மூளையின் அடிப்பகுதியில் இருந்து ஹைபோதலாமஸின் வெளிநீட்சியாக பின்கதுப்பும் தோன்றுகின்றன. உள்ளமைப்பியல் அடிப்படையில் முன்கதுப்பு பார்ஸ் இன்டர்மீடியா (Pars intermedia), பார்ஸ் டிஸ்டாலிஸ் (Pars distalis) மற்றும் பார்ஸ் டியூபராலிஸ் (Pars tuberalis) என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. பிட்யூட்டரி பின்கதுப்பு பார்ஸ் நெர்வோசா (Pars nervosa) எனவும் அழைக்கப்படுகிறது.
பிட்யூட்டரியின் முன்கதுப்பு, ஆறு தூண்டும் ஹார்மோன்களைச் சுரக்கின்றது. அவை, வளர்ச்சி ஹார்மோன் (GH), தைராய்டைத் தூண்டும் ஹார்மோன் (TSH), அட்ரினல் கார்டெக்ஸை தூண்டும் ஹார்மோன் (ACTH), ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன் (FSH), லூட்டினைசிங் ஹார்மோன் (LH), மற்றும் லூட்டியோட்ராபிக் ஹார்மோன் (LTH) ஆகும். மேலும், கீழ்நிலை விலங்குகளில் மெலனோசைட்டுகளைத் தூண்டும் ஹார்மோன்கள் எனும் ஹார்மோனும் சுரக்கின்றது. பிட்யூட்டரி சுரப்பியின் பின்கதுப்பு ஹைபோதலாமஸின் நரம்பு சுரப்பு செல்களால் சுரக்கும் வாசோப்ரஸ்ஸின் (Vasopressin) மற்றும் ஆக்ஸிடோசின் (Oxytocin) என்ற இரு ஹார்மோன்களைச் சேமித்துத் தேவையான போது வெளியேற்றுகிறது.
அடினோஹைபோஃபைசிஸில் சுரக்கும் ஹார்மோன்கள் (Hormones ofAdenohypophysis)
i. வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone - GH)
இது சொமட்டோட்ரோபிக் ஹார்மோன் (STH) அல்லது சொமட்டோட்ரோப்பின் (Somatotropin) என்றும் அழைக்கப்படும். இது ஒரு பெப்டைடு ஹார்மோன் ஆகும். வளர்ச்சி ஹார்மோன் அனைத்துத் திசுக்களின் வளர்ச்சியையும், வளர்சிதை மாற்றச் செயல்களையும் மேம்படுத்துகின்றது. இது கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் செல்களில் புரத உற்பத்தி விகிதத்தை உயர்த்துகின்றது. இது குருத்தெலும்பு உருவாக்கம் (Chondrogenesis) மற்றும் எலும்பு உருவாக்கம் (Osteogenesis) ஆகியவற்றை தூண்டுவதுடன் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாதுப்புக்களை உடலில் நிறுத்திக் கொள்ளச் செய்கின்றது. அடிபோஸ் திசுக்களில் உள்ள கொழுப்பு அமிலங்களை விடுவித்துச் செல்களின் ஆற்றல் தேவைக்கான குளுக்கோஸ் பயன்பாட்டு வீதத்தைக் குறைக்கின்றது. இவ்வாறாக, குளுக்கோஸை நம்பியுள்ள மூளை போன்ற திசுக்களுக்காக அதனைச் சேமிக்கின்றது.
ii. தைராய்டைத் தூண்டும் ஹார்மோன் (அ) தைரோட்ரோபின் (Thyroid Stimulating Hormone - TSH or Thyrotropin)
இது ஒரு கிளைக்கோபுரத ஹார்மோன் ஆகும். இது தைராய்டு சுரப்பியைத் தூண்டி டிரை அயோடோதைரோனின் (T3) மற்றும் தைராக்ஸின் (T4) ஆகியவற்றைச் சுரக்கின்றது. TSH சுரப்பு எதிர்மறை பின்னூட்ட முறையில் (Negative feedback mechanism) நெறிப்படுத்தப்படுகிறது. ஹைப்போதலாமஸின் தைரோட்ரோபின் விடுவிப்பு ஹார்மோன் (TRH) தைரோட்ரோபின் சுரப்பைத் தூண்டுகின்றது.இரத்தத்தில் தைராக்ஸின் அளவு உயரும் போது ஹைபோதலாமஸ் மற்றும் பிட்யூட்டரி மீது செயல்பட்டு தைரோட்ரோபின் சுரப்பினை தடைசெய்கின்றது.
iii. அட்ரினோகார்டிகோட்ரோபிக்ஹார்மோன்(Adrenocorticotropic Hormone-ACTH)
இது ஒரு பெப்டைடு ஹார்மோன், இது அட்ரினல் சுரப்பியின் புறணிப் பகுதியைத் தூண்டி குளுக்கோ கார்டிகாய்டுகள் மற்றும் தாதுகலந்த கார்டிகாய்டுகள் உற்பத்தியைத் தூண்டுகின்றது. மெலனோசைட் செல்களில் மெலனின் உற்பத்தி, அடிபோஸ் திசுக்களில் இருந்து கொழுப்பு அமில உற்பத்தி மற்றும் இன்சுலின் உற்பத்தி ஆகியவற்றை இந்த ஹார்மோன் தூண்டுகிறது. ACTHன் உற்பத்தி எதிர்மறை பின்னூட்ட முறையில் நெறிப்படுத்தப்படுகின்றது.
தெரிந்து தெளிவோம்
பிட்யூட்டரி சுரப்பி மண்டையோட்டின் ஸ்பீனாய்டு எலும்பின் குழிவுப் பகுதியில் மூளையின் கீழ் அமைந்துள்ளது. எனவே இது ஹைபோதலாமஸ் செரிப்ரி என்றும் அழைக்கப்படுகின்றது. கீழ் வருவனவற்றை விவாதிக்கவும்.
அ) பிட்யூட்டரிசுரப்பி "நாளமில்லாச் சுரப்பிகளின் அரசன்" எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றது ஏன்?
ஆ) உடற்செயலியல் பணிகளை பராமரிப்பதில் ஒருங்கிணைப்பு அலகாக ஹைபோதலாமஸ் மற்றும் பிட்யூட்டரி ஆகியனவற்றின் பங்கு என்ன?
இ) நீர்ச்சமநிலையைப் பேணுவதில் பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பு எவ்வாறு உதவுகின்றது?
குறிப்பு
வாசோப்ரஸ்ஸினும் ஆக்ஸிடோசினும் ஒன்பது அமினோ அமிலங்களால் ஆனவை. ஒரே மாதிரியான அமினோ அமிலங்களைக் கொண்ட இவை இரு அமினோ அமிலங்களில் மட்டும் மாற்றமடைந்துள்ளன. எனினும் முற்றிலும் மாறுபட்ட உடற்செயலியல் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
வாசோப்ரஸ்ஸின் அமினோ அமில வரிசை:
சிஸ்டீன்-டைரோசின் – ஃபினைல் - அலானைன்-குளுட்டமைன் –அஸ்பார்ஜின் – சிஸ்டீன்-புரோலின் – ஆர்ஜினைன்-கிளைசீன்
ஆக்ஸிடோசின் அமினோ அமில வரிசை:
சிஸ்டீன் – டைரோசின்-ஐசோலியூசின் – குளுட்டமைன்-அஸ்பார்ஜின் சிஸ்டீன் – புரோலின் – லியூசின்-கிளைசீன்
iv. ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன் (Follicle Stimulating Hormone-FSH)
கிளைக்கோபுரத ஹார்மோனான FSH இன உறுப்புகளான அண்டகம் மற்றும் விந்தகத்தின் பணிகளை நெறிப்படுத்துகின்றது. ஆண்களில் FSH, ஆண்ட்ரோஜனுடன் இணைந்து விந்தணுவாக்கத்தின்போது விந்து நுண்குழலிலுள்ள வளர்ச்சி எபிதீலியத்தின் (Germinal epithelium) மீது செயல்பட்டு விந்தணு உற்பத்தி (Spermatogenesis) மற்றும் வெளியேற்றத்தைத் தூண்டுகின்றது. பெண்களில் FSH, அண்டகத்தின் மீது செயல்பட்டு கிராஃபியன் ஃபாலிக்கிளை வளர்ப்பதுடன் முதிர்ச்சியடையவும் தூண்டுகிறது.
v. லூட்டினைசிங் ஹார்மோன் (Luteinizing Hormone -LH)
கிளைக்கோபுரத ஹார்மோனான LH, இடையீட்டுச் செல்களைத் தூண்டும் ஹார்மோன் (ICSH) என்றும் அழைக்கப்படுகின்றது. ஆண்களில் ICSH விந்தகத்தின் இடையீட்டு செல்களின் மீது செயல்பட்டு ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் (Testosterone) உற்பத்தியைத் தூண்டுகிறது. பெண்களில் LH, FSH உடன் இணைந்து ஃபாலிக்கிள் செல்களை முதிர்ச்சி அடையச் செய்கின்றது. அண்டம் விடுபடுதல் (Ovulation), கார்பஸ் லூட்டியத்தை பராமரித்தல் மற்றும் அண்டக ஹார்மோன்களின் (Ovarian hormones) உற்பத்தியை உற்பத்தியை மேம்படுத்தி வெளியேற்றுதல் போன்ற பணிகளை LH தனித்து மேற்கொள்கின்றது.
FSH மற்றும் LH ஆகியவற்றைச் சேர்த்து இனப்பெருக்க ஹார்மோன்கள் (Gonadotropins) என்பர். இவ்விரண்டு ஹார்மோன்களும் குழந்தைப் பருவத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. பூப்பெய்துதலுக்கு சற்று முந்தைய காலத்தில்தான் இவற்றின் சுரப்பு தொடங்குகிறது.
vi. லூட்டியோட்ரோபிக் ஹார்மோன்/ லூட்டியோட்ரோபின் (Luteo Tropic Hormone-LTH)
புரத ஹார்மோனான லூட்டியோட்ரோபின், லாக்டோஜெனிக் ஹார்மோன், புரோலாக்டின், மம்மோட்ரோபின் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றது. இந்த ஹார்மோன் பெண்களில், குழந்தை பிறப்புக்குப்பின் பால் உற்பத்தியைத் தூண்டுகின்றது. பாலூட்டும் தாய்மார்களுக்கு LTH அதிகரிப்பதால் LH சுரப்பு மற்றும் அண்ட அணு வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. இது பெண்களின் அண்டகத்தில் கார்ப்பஸ் லூட்டிய வளர்ச்சியைத் தூண்டுவதால் லூட்டியோட்ரோபிக் ஹார்மோன் எனப்படுகின்றது.
நியூரோஹைபோஃபைசிஸ் ஹார்மோன்கள்(Hormones of Neurohypophysis)
ஹைபோதலாமஸின் நரம்பு சுரப்பு செல்களால் சுரக்கப்பட்டு கீழ்வரும் இரு ஹார்மோன்களும் நியூரோஹைபோஃபைசிஸில் சேமிக்கப்படுகின்றன.
i) வாஸோப்ரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரடிக் ஹார்மோன் (Vasopressin or Antidiuretic Hormone-ADH)
பெப்டைடு ஹார்மோனான ADH, நெஃப்ரான்களின் சேய்மை சுருள் நுண்குழல் பகுதியில் நீர் மற்றும் மின்பகு பொருட்கள் (Electrolytes) மீள உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது. இதனால், சிறுநீர் மூலமான நீரிழப்பு குறைகிறது. எனவே இதற்கு ஆன்டிடையூரடிக் ஹார்மோன் (சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன்) என்றும் பெயர். இந்த ஹார்மோனின் மிகை உற்பத்தி, இரத்தக் குழல்களைச் சுருங்கச் செய்து இரத்த அழுத்தத்தை உயர்த்துகின்றது. இதன் குறை சுரப்பால் டையபடிஸ் இன்சிபிடஸ் (Diabetes insipidus) எனும் மிகை சிறுநீர் உற்பத்தி நிலை ஏற்படும்.
ii). ஆக்ஸிடோசின் (Oxytocin)
இந்தப் பெப்டைடு ஹார்மோன் குழந்தை பிறப்பின்போது கருப்பை மென்தசைகளை தீவிரமாகச் சுருங்கச் செய்வதுடன், பால்சு ரப்பிகளில் பால் வெளியேற்றத்தைத் தூண்டுகிறது. ஆக்ஸிடோசின் என்பதற்கு துரிதப் பிறப்பு என்பது பொருள்.
உங்களுக்குத்தெரியுமா?
மெலடோனின் இரவில் சுரக்கும். கண்ணின் விழித்திரையில் ஒளி படும். போது மெலடோனின் உற்பத்தி குறைகின்றது.செரடோனின் பகலில் சுரக்கும்.
சர்காடிய சுழற்சி (நாள் சார் ஒழுங்கமைவு இயக்கம்): இயற்கையின் ஒளி மற்றும் இருள் சார்ந்த, 24 மணிநேர உயிரியல் செயல்கள் தொடர்பான சுழற்சி எ.டு,தூக்க-விழிப்பு சுழற்சி, உடல்வெப்ப நிலை, பசி போன்றன.