செல்
நுண்ணுறுப்புக்கள்
யூகேரியோட்டிக் செல் ஒன்றின் உள் சவ்வுத் தொகுப்பு
பிளாஸ்மாச் சவ்வு, உட்கருச் சவ்வு, எண்டோபிளாச வலை, கோல்கை உடலம், லைசோசோம்கள், வாக்குவோல்களின்
சவ்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. உள்சவ்வு தொகுப்பு பிளாஸ்மாச் சவ்வினைப் போலப் பாஸ்போலிப்பிடுகள்,
பொதிந்த புரதங்கள் ஆகியவற்றைப் பெற்றுச் சைட்டோபிளாசத்தினுள் காணப்படுகிறது. யூகேரியோட்டுகளின்
முன்னோடி உயிரிகளின் பிளாஸ்மாச் சவ்வின் உள் மடிப்புகள் மூலம் இந்த உள் சவ்வுத்தொகுப்பு
பரிணமித்துள்ளன.
உள்சவ்வுத் தொகுப்பில் மிகப் பெரிதாகக் கருதப்படுவது
எண்டோபிளாச வலை ஆகும். இதற்கு இப்பெயரிட்டவர் K.R. போர்டர் (1948) என்ற அறிஞர்
ஆவார். எண்டோபிளாசவலை இரட்டைச் சவ்வினால் ஆனது. புற அமைப்பில் கீழ்க்கண்ட அமைப்புக்கூறுகளை
இது பெற்றுள்ளது. (படம் 6.12)
1. சிஸ்டெர்னே
- இது நீள, அகல மற்றும் தட்டையான பை போன்ற அமைப்புகளுடன் இணை கற்றைகளாக அமைந்த சவ்வு
தொகுப்பாகும். இச்சவ்வின் குவியல் லாமெல்லா அமைப்பு போலக் காணப்படுகின்றது. சிஸ்டெர்னே
சவ்வுகளில் இடைவெளி பகுதி திரவம் நிறைந்த பகுதியாக உள்ளது.
2. வெசிக்கிள்கள் – முட்டை வடிவ, சவ்வு சூழ்ந்த உட்குமிழ்கள்
வெசிக்கிள்கள் ஆகும்.
3. டியூபியூல்கள் – இவை ஒழுங்கற்ற கிளைத்த மென்மையான சுவருடைய உள்வெளியைப் பெற்ற அமைப்புகளாகும்.
எண்டோபிளாச வலை, பிளாஸ்மாச் சவ்வு மற்றும் உட்கருச்
சவ்வுடன் தொடர்பு கொண்டுள்ளது. இது செல்லின் சைட்டோ பிளாசத்தினுள் ஒரு வலைப்பின்னலைப்
போன்று அமைந்திருப்பதன் மூல செல்லிற்கு உறுதியைத் தருகின்றது. செல்லின் தேவைக்கேற்ப
இதனுள் உள்ள வேதிச்சூழல், செல்லிற்குத் தேவையான புரதங்களின் மடிப்பு மற்றும் அவற்றின்
பணிக்கேற்ப மாற்றங்கள் நிகழ்த்த உதவுகிறது. தவறான மடிப்பைக் கொண்ட புரதங்களை வெளியேற்றி,
சிதைக்க எண்டோபிளாச வலை உதவுகிறது. இதன் வெளிப்பரப்பில் ரைபோசோம்கள் ஒட்டிக்
காணப்பட்டா ல் அதற்குச் சொரசொரப்பான எண்டோபிளாச வலை (RER) என்றும், ரைபோசோம் அற்று
காணப்பட்டால் அதற்கு வழவழப்பான எண்டோபிளாச வலை (SER) என்றும் அழைக்கப்படுகிறது.
வழவழப்பான எண்டோபிளாச வலை லிப்பிடு உருவாக்க உதவும் இடமாகவும் சொரசொரப்பான
எண்டோபிளாச வலை புரதச் சேர்க்கை நிகழும் இடமாகவும் திகழ்கின்றன. தீமை விளைவிக்கும்
சில வேதி சேர்மங்களையும், லிப்பிடில் கரையும் மருந்துப்
பொருட்களையும், நச்சுநீக்க உதவும் நொதிகளையும் வழவழப்பான
எண்டோபிளாச வலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
காமிலோ கால்ஜி
(1898) என்பவர் உட்கருவிற்கு அருகமைந்த
வலை பின்னல் வடிவிலுள்ள இழைகளைக் கண்டறிந்தார். இந்த உள்வலை அமைப்பு
பின்னர் அவரது பெயராலேயே கோல்கை உடலங்கள்
என்று அழைக்கப்பட்டது. சிறிய வெசிக்கிள்களாகத் தாவரங்களில் காணப்படும் இவை டிக்டியோசோம்கள்
என அழைக்கப்படுகின்றன. கோல்கை உடலமானது தட்டையான
சவ்வு சூழ்ந்த பைகள் போன்ற
அமைப்பாகும். இவை சிஸ்டர்னே, டியூபியூல்கள், வெசிக்கிள்கள்
மற்றும் கோல்கை வாக்குவோல்களை கொண்டுள்ளன. தாவரங்களில் சிஸ்டெர்னே 10-20 எண்களைக்
கொண்ட குவியல்களாகக் காணப்படுகிறது. இந்தக் குவியல்கள் ஒவ்வொன்றும் மெல்லிய
அடுக்காகச் சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது. சிஸ்டெர்னேவின் வெளி விளிம்பு வலைப்பின்னலுடைய
டியூபியூல்கள் மற்றும் வெசிக்கிள்களை கொண்டுள்ளது. டியூபியூல்கள் சிஸ்டெர்னேயை
ஒன்றுடன் ஒன்று இணைக்கின்றன. இவற்றின் விட்டம் 30-50nm விட்டம் ஆகும். வெசிக்கிள்கள்
பெரிய உருண்டையான அல்லது குழிவுபெற்ற பை போன்று காணப்படுகிறது. டியூபியூல்களின்
விளிம்பிலிருந்து சிறு பைகள் போன்று வெசிக்கிள்கள் தோன்றுகின்றன. இவை வழவழப்பாகச் சுரக்கும்
தன்மையுடன் காணப்படுகிறது. கோல்கை வாக்குவோல்களில் சில பெரிய உருண்டையான துகள்கள் நிறைந்த
அல்லது உருவில்லாத பொருட்களைக் கொண்டு காணப்படுகிறது. இவற்றில் சில லைசோசோம் போன்று
பல பணிகளை மேற்கொள்கிறது. செயலாக்கப் புரதங்களை உருவாக்க உதவும் தொடர் நிலைகளைத் தனித்தனியே
நிகழ்த்தக் கோல்கை உடலங்கள் உதவுகின்றது.
சொரசொரப்பான எண்டோபிளாச வலையின் விளிம்பிலிருந்து சிறு
பைகள் போன்ற அமைப்புகள் வெளியே சிறிய வெசிக்கிள்களாக மாறுகின்றன. இவ்வகையான வெசிக்கிள்கள்
இணைந்து கோல்கை உடலம் தோற்றுவிக்கப்படுகின்றன. லிப்பிடுகளில் கிளைகோஸைல் ஏற்றமடையச்
செய்யவும், புரதம் மொழிபெயர்பிற்குப் பின் புரத மூலக்கூறுகளில் மாற்றங்கள் நிகழவும்
கோல்கை உடலங்கள் உதவுகின்றன. (படம் 6.13,6.14)
• கிளைக்கோபுரதங்கள் மற்றும் கிளைக்கோலிப்பிடுகளைத்
தயாரித்தல்
• லிப்பிடுகளைக் கடத்துதல் மற்றும் சேமித்தல்
• லைசோசோம்களை உருவாக்குதல்.
• செரிமான நொதிகளை உருவாகுதல்.
• செல் தட்டு மற்றும் செல் சுவரை உருவாக்குதல்
• தாவரச் செல் சுவர் ஆக்கத்திற்கும், பூச்சிகளில் கியூட்டிகள்
ஆக்கத்திற்கும் உதவும் கார்போஹைட்ரேட்டுகளை சுரக்கிறது.
• சைமோஜென் துகள்களை (நொதிகளின் முன்னோடிகள்) உருவாக்குதல்.
மைட்டோகாண்டிரியத்தை முதன் முதலாகக் A. கோலிக்கர் (1880) கண்டறிந்தார். இவைகளைப் பையோபிளாஸ்டுகள் என்று ஆல்ட்மேன் (1894) பெயரிட்டார். பின்னர் பெண்டா (1897,1898) இவைகளை மைட்டோகாண்டிரியங்கள் என்று பெயரிட்டார். இவை முட்டை, உருண்டை, கோள் வடிவிலோ அல்லது செல்லின் செயல் நிலைக்கேற்ப வடிவத்தை மாற்றிக்கொள்ளும் அமைப்பாகக் காணப்படுகிறது. இது வெளி சவ்வு மற்றும் உள் சவ்வு ஆகிய இரட்டைச் சவ்வினால் ஆனது. வெளி சவ்வானது சிறு மூலக்கூறுகளைத் தன்னுள் செலுத்தும் மென்மையான சவ்வாக உள்ளது. இதில் போரின்கள் என்ற புரதங்கள் காணப்படுகின்றன. இவை கால்வாய் போன்று அமைந்து 1000 டால்டனுக்கும் சிறிதாக உள்ள மூலக்கூறுகளைத் தம்முள் செலுத்தும் தன்மையுடையவை. மைட்டோகாண்டிரியத்தின் உள் சவ்வு, மைட்டோகாண்டிரியத்தை இரண்டு அறைகளாகப் பிரிக்கின்றது. வெளி அறையானது இரண்டு சவ்விற்கு இடையில் காணப்படுகிறது. இதற்கு மைட்டோகாண்டிரிய புற வெளி என்றும் உள் அறை மாட்ரிக்ஸ் என்ற பொருளால் நிரப்பப்பட்டுள்ளது.
உள்சவ்வு உட்புறமாக மடிப்புகளை உருவாக்குகின்றன. இந்த மடிப்பு நீட்சிகளுக்குக் கிரிஸ்டே என்று பெயர். எலக்ட்ரான் கடத்து அமைப்பின் பல நொதிகள் கிரிஸ்டேவில் காணப்படுகிறது. இதன் உள் அறை புரதப் பொருளாலானது. இதற்கு மைட்டோ காண்டிரியல் மாட்ரிக்ஸ் என்று பெயர். உள் உறையின் பரப்பில் காம்பு போன்ற துகள்கள் காணப்படுகின்றன. இவை தொடக்க நிலை துகள்கள் அல்லது பெர்னான்டியா மோரன் துகள்கள், F1 துகள்கள் அல்லது ஆக்ஸிசோம்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு F1 துகளும் வட்டமான தலை, காம்பு மற்றும் அடிப்பகுதி என மூன்றுப் பகுதிகளைப் பெற்றுள்ளது. இவற்றுள் தலைப்பகுதியில் ஆக்சிகரணப் பாஸ்பரிகரணத்திற்குத் தேவையான ATP சின்தேஸ் என்ற நொதி காணப்படுகிறது. பல அயனிகள், சிறுமூலக்கூறுகள் ஆகியவற்றை ஊடு கடத்த இயலாத சவ்வாக உள்சவ்வு உள்ளது. ஆக்சிகரணப் பாஸ்பரிகரணத்திற்கு உதவும் புரோட்டான் வாட்டத்தைத் தக்க வைக்க இச்சவ்வு உதவுகிறது. (படம் 6.15)
மைட்டோகாண்டிரியங்களில் புரதம் 73%, லிப்பிடுகள்
25-30% RNA 5-7%, DNA (சிறிதளவு) மற்றும்
நொதிகள் (60 வகைகள்) காணப்படுகிறது. இவை "செல்லின்
ஆற்றல் உலைகள்" என்று அழைக்கப்படுகின்றன. மிகையாற்றலைப் பெற்ற ATP மூலக்கூறுகளை
உருவாக்குவதே இதற்குக் காரணமாகும்.
சக்சீனேட் டிஹைட்ரோஜினேஸ் நொதியைத் தவிரக் கிரப் சுழற்சிக்குத்
தேவையான அனைத்து நொதிகளும் மாட்ரிக்ஸ்கூழ்மத்தில் காணப்படுகிறது. மைட்டோகாண்டிரியங்களில்
வட்ட வடிவமான DNA மற்றும் 70S ரைபோசோம்கள் காணப்படுகின்றன. புதிய மைட்டோகாண்டிரியங்கள்
பிளவுறுதல் முறை மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன மற்றும் இழை இடப்பெயர்வு மாதிரி (Strand displacement model) முறையால் DNA இரட்டிப்பாகிறது. மைட்டோகாண்டிரியா DNA வை பெற்றிருப்பதால் இது ஒரு "பாதி
தற்சார்புடைய செல் நுண்ணுறுப்பாக" கருதப்படுகிறது. இதன் மற்றொரு தனிச்சிறப்பு
என்னவெனில் இது தாய் வழி பாரம்பரியத்தின் மூலம் சேய் செல்களைச் சென்றடைவதேயாகும். மைட்டோகாண்டிரிய
DNA ஒப்பீடுகள் மூலம் மனிதனின் தோற்றத்தைப்
பதிவெடுப்பு செய்யலாம் என்பதும் மற்றொரு சிறப்பாகும். மைட்டோகாண்டிரிய DNA மூலம் தற்காலப் பரிணாமக் கால அளவையும்
கணக்கிட முடியும். ஏனெனில் உட்கரு DNAவை
காட்டிலும் மைட்டோகாண்டிரிய DNA மூலக்கூறு
5-10 மடங்கு வேகமாகத் திடீர் மாற்றத்தை மேற்கொள்வதே இதற்குக் காரணமாகும்.
பிளாடிகாஸ் (Platikas - தோன்றியவை/வார்ப்பு) என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து
பிளாஸ்டிட் என்ற பதம் உருவானது. இதைப் பிளாஸ்டிட் எனப் பெயரிட்டவர் A.F.U.
ஸ்ஷிம்பர் (1885) அவை பெற்றிருக்கும் அமைப்பு, நிறமிகள் மற்றும் பணிகளின் அடிப்படையில்
இவற்றைக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம். கணிகங்கள் பிளவுறுதல் மூலம் பெருக்கம்
அடைகின்றன.
ஸ்ஷிம்பர் என்பவர்
கணிகங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறிக்கொள்ளும் திறனுடையவை எனக் கூறினார்.
பசுந் தாவரத்தின் அதி முக்கிய உள்ளுறுப்பாகப் பசுங்கணிகம்
கருதப்படுகிறது. பசுங்கணிகம் உள் சவ்வு, வெளி சவ்வு என இரட்டைச் சவ்வினால் ஆனது. இவ்விரு
சவ்வுகளுக்கிடையே உள்ள பகுதி பசுங்கணிக சுற்றுவெளி
என அழைக்கப்படுகிறது. உள் சவ்வினால் சூழப்பட்டஉள்வெளியில் ஜெல்லாடினஸ் மேட்ரிக்ஸ்,
லிப்போபுரத திரவம் காணப்படுகின்றன. இப்பகுதிக்கு ஸ்ட்ரோமா என்று பெயர். ஸ்ட்ரோமாவினுள்
தட்டையான பின்னப்பட்ட நிலையில் உள்ள பகுதிக்குத் தைலக்காய்டுகள் என்ற சவ்வு
வட்டில்கள் காணப்படுகின்றன. தைலகாய்டு சவ்வு தைலக்காய்டு உள்வெளியைச் சூழ்ந்துள்ளது.
பல தைலகாய்டுகளின் தொகுப்பு கிரானம் எனப்படுகிறது. இது ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்து நாணய அடுக்கு போல்
காணப்படுகிறது. சூரிய ஒளியின் ஆற்றலை ஈர்த்துக் கிரானங்கள் அதை வேதிய ஆற்றலாக மாற்றுகின்றன.
இந்த வேதிய ஆற்றலைக் கொண்டு ஸ்ட்ரோமா பகுதி கார்போஹைட்ரேட்டுகளைத் தயாரிக்கிறது. தைலகாய்டுகளில்
பச்சைய நிறமி காணப்படுகிறது. பசுங்கணிகங்களில் ஆஸ்மிய ஈர்ப்பு திறன் கொண்ட சிறு
துகள்கள், 70S ரைபோசோம்கள், DNA (வட்ட வடிவம்
மற்றும் ஹிஸ்டோன்கள் அற்றவை) மற்றும் RNA
ஆகியவை காணப்படுகின்றன. ஒளிச்சேர்க்கையில் பங்காற்றும் சுமார் 30புரதங்கள், ஒளி
அமைப்பு I மற்றும் ஒளி அமைப்பு II சைட்டோகுரோம் bf தொகுப்பு, ATP சின்தேஸ் நொதி உருவாக்க, பசுங்கணிகத்தின் ஜீனோம் குறியீடு உதவுகிறது.
Rubisco நொதியின் ஒரு துணை அலகு பசுங்கணிகத்தின்
DNA-வால் குறியீடு செய்யப்படுகிறது. பசுங்கணிகத்தின்
ஸ்ட்ரோமாவில் காணப்படும் முக்கியமான புரதமாக Rubisco
கருதப்படுகிறது. உயிரி உலகின் அதிகம் காணப்படும் புரத மூலக்கூறாக Rubisco உள்ளது. தைலகாய்டுகளில் உள்ள சிறிய,
வட்ட வடிவமான ஒளிச்சேர்க்கை அலகுகளுக்குக் குவான்டசோம்கள்
என்று பெயர். பசுங்கணிகங்களும் “பாதி தற்சார்புடைய செல் நுண்ணுறுப்பாக” உள்ளன. இவைகளும்
மைட்டோகாண்டிரியங்களைப் போலப் பிளவுறுதல் மூலம் பெருக்கமடைகின்றன.(படம் 6.16)
பணிகள்
• ஒளிச்சேர்க்கை
• கிரானாவில் ஒளிச்செயலை (Light
reaction) நிகழ்த்துதல்
• ஒளி சார்ப்பற்ற வினைகளை (Dark
reaction) ஸ்ட்ரோமாவில் நிகழ்த்துதல்
• ஒளி சுவாசத்தில் பங்காற்றுதல்
ரைபோசோம்களை முதலில் கண்டறிந்தவர் ஜார்ஜ்
பாலேடு (1953) ஆவார். இவைகளை செல்லில் மிக அதிகச் செறிவுள்ள துகள்கள் அல்லது
மணிகளாக மின்னணு நுண்ணோக்கியின் மூலம் கண்டறிந்தார். ரைபோசோம்கள் ஒவ்வொன்றும் பெரியதும்,
சிறியதுமான இரு துணை அலகுகளைக் கொண்டுள்ளதாக மின்னணு நுண்ணோக்கி மூலம் கண்டறியப்பட்டது.
இவ்விரு துணை அலகுகளும் ஒட்டியிருப்பது Mg2+ செறிவைப் பொருத்தது. ரைபோசோம்கள் தானாக
நியூக்ளியோலஸ் பகுதியிலிருந்து தான் தோன்றியதாகவும், சுயமாக இரட்டிப்படையும் அமைப்புகளாகவும்
திகழ்கின்றன. ஒவ்வொரு ரைபோசோமும் பெரிய மற்றும் சிறிய அலகுகள் என இரு துணை அலகுகளைக்
கொண்டது. புரதச் சேர்க்கை நிகழும் இலக்குகளாக ரைபோசோம்கள் திகழ்கின்றன. மேலும் இவைகள்
சவ்வு சூழா அமைப்புகளாக உள்ளன. (படம் 6.17)
ரைபோசோம்கள் RNA
மற்றும் புரதத்தால் ஆனது. இதில் RNA
60% மற்றும் புரதம் 40% அடங்கும். புரதச்
சேர்க்கையின் போது பல ரைபோசோம்கள் ஒரு தூதுவ RNA (mRNA)வினால் பிணைக்கப்படுகின்றன.
இதனால் தோன்றும் ஒரு கூட்டு அமைப்பிற்குப் பாலிசோம்கள் அல்லது பாலிரைபோசோம்கள்
என்று பெயர். இந்தப் பாலிசோம்களின் பணியானது புரதச் சேர்க்கையின் போது பல நகல்களைக்
கொண்ட குறிப்பிட்ட பாலி பெப்டைடுகளை உருவாக்குவதாகும். ரைபோசோமின் இரு துணை அலகுகளும்
புரதச்சேர்கை நிகழாத செல்களில் தனி அலகுகளாகவும், புரதச்சேர்க்கை
நிகழும் செல்களில் Mg2+ அயனியால் பிணையுற்ற அலகுகளாகவும் காணப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
ஸ்வெட்பெர்க்
(S) ரைபோசோமின் பருமன் மற்றும் துணை அலகுகளின்
பருமன் ஸ்வெட்பெர்க் அலகால் (சுவீடன் நாட்டைச் சார்ந்த தியோடர் ஸ்வெட்பர்க் 1929-ல்
நோபல் பரிசு பெற்ற வேதியியல் அறிஞர்) குறிக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட ரைபோசோம்களை
அல்ட்ரா சென்ட்ரிஃபியூஜி மூலம் அவற்றின் படிதல் நிலை வேகம் கண்டறியப்படுகிறது. இந்தப்
படிதல் நிலை வேகமே ஸ்வெட்பெர்க் அலகாகக் கொடுக்கப்படுகிறது.
லைசோசோம்களை கிரிஸ்டியன் டி டுவி (1953) கண்டறிந்தார்.
இவை தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நுண்ணுறுப்பு
என்றும் அழைக்கப்படுகிறது. இவை கோளவடிவம் கொண்டு ஒற்றைச் சவ்வால் ஆன அமைப்புகளாக யூகேரியோட்டிக்
செல்களில் காணப்படுகின்றன. கோல்கை உடலத்தின் முனை சிறு பைகளாகப் பிதுக்கப்பட்டு வெளியேறும்
சிறிய வாக்குவோல்கள் லைசோசோம்களாக உருவாகின்றன.
லைசோசோம்களில் காணப்படும் பல நீராற்பகுப்புற செய்யும்
நொதிகள் செல்லினுள் பொருட்களைச் செரிக்க உதவுகிறது. லைசோசோம்களைச் சூழ்ந்துள்ள சவ்வு
இந்த நொதிகளால் லைசோசோம்கள் அழிந்து போவதைத் தவிர்க்கிறது. (படம் 6.18).
• செல்லிற்குள்ளே
செரித்தல் : சைட்டோபிளாசத்தில் காணப்படும் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும்
லிப்பிடுகளைச் செரித்தல்.
• சுய அழிவு
(Autophagy): சில சாதகமற்ற சூழ்நிலையில்
தன்னுடைய செல் நுண்ணுறுப்புகளான மைட்டோகாண்டியங்கள் மற்றும் எண்டோபிளாச வலை போன்றவற்றைச்
செரிக்கச் செய்தல்.
• சுயச் சிதைவு
(Autolysis): நோயுற்ற செல்களைச் சிதைத்துச் செல் அழிவை ஏற்படுத்துதல்.
• முதுமையடைதல்
(Ageing): செல்லின் உட்புறத்தில் காணப்படும் மூலக்கூறுகளைச்
சுயச் சிதைவைச் செய்யும் நொதிகளைப் பெற்றிருத்தல்.
• உள் விழுங்கும்
செயல் (Phagocytosis): பெரிய செல்கள் அல்லது உட்பொருட்களைப் ஃபேகோசைட்டோசிஸ்
உள்விழுங்கி செரித்துப் ஃபேக்கோசோம்-ஐ சைட்டோபிளாசத்தினுள் உருவாக்குகிறது. இந்தப்
ஃபேக்கோசோமானது லைசோசோமுடன் இணைந்து செரித்தலில் பங்குகொள்கிறது.
• புறத்தள்ளல்
(Exocytosis): லைசோசோம்களின் நொதிகள் செல்லிலிருந்து வெளியேற்றப்பட்டுச்
செல்லின் வெளியில் உள்ள மற்ற செல்களைச் சிதைவடைய செய்தல். (படம் 6.19)
அமிலம் ஹைட்ரோலேசிஸ்
நியூக்ளியேஸ், புரோட்டியேசஸ், கிளைக்கோசைடேசஸ், லைப்பேசஸ், பாஸ்படேசஸ், சல்படேசஸ்,
பாஸ்போலிப்பிடேசஸ் pH 7.2
யூகேரியோட்டிக் செல்களில் நொதிகள் பலவற்றைப் பெற்ற
சவ்வுசூழ்ந்த நுண்வெசிக்கிள்கள் நுண் உடலங்கள்
எனப்படுகின்றன. இது ஒற்றைச் சவ்வினைக் கொண்ட செல் நுண்ணுறுப்பாகும். எடுத்துக்காட்டு
பெராக்சி சோம்கள் மற்றும் கிளையாக்சி சோம்கள்.
பெராக்சிசோம்களை செல் நுண்ணுறுப்புகள் என்று கண்டறிந்து
விளக்கியவர் கிரிஸ்டியன் டி டுவி (1967). இது சிறிய வட்ட வடிவ, ஒற்றைச் சவ்வினால்
சூழப்பட்ட அமைப்பாகும். பெராக்சி சோம்கள் ஒளிசுவாசம் மற்றும் கிளைக்கோலேட் வளர்சிதை
மாற்றத்தில் பங்காற்றுகிறது. தாவர இலை செல்களில் பல பெராக்சி சோம்கள் காணப்படுகின்றன.
பாலூட்டிகளின் கல்லீரல், சிறுநீரகம், புரோடோசோவன்கள், ஈஸ்ட் செல்கள் ஆகியவற்றில் இவை
அதிகம் காணப்படுகின்றன. (படம் 6.20)
கிளையாக்ஸிசோம்களைக் கண்டறிந்தவர் ஹாரி பிவேர்ஸ்
(1961). இவை தாவரச் செல்களில் மட்டும் காணப்படும் ஒற்றைச் சவ்வைக் கொண்ட, துணை செல்
நுண்ணுறுப்பாகும். இது கிளையாக்சிலேட் வழித்தடத்திற்குத் தேவையான நொதிகளைக் கொண்டுள்ளது.
முளைக்கும் விதைகளில் காணப்படும். கிளையாக்சி சோம்கள், கொழுப்பு அமிலங்களின் ஆக்சிகரணம்
நிகழ உதவுகின்றன. எடுத்துக்காட்டு: ஆமணக்கு விதைகள்.
12.
ஸ்ஃபீரோசோம்கள்
இவை கோள வடிவம் கொண்டு, ஒற்றைச் சவ்வினால் சூழப்பட்ட
நுண்ணுறுப்புகள் ஆகும். எடுத்துக்காட்டு எண்ணெய் வித்துகளில் உள்ள கருவூண் செல்களில்
கொழுப்புப் பொருளைச் சேமித்தல்.
டியூபியூலின் (Tubulin)
என்ற பொருளால் ஆன மூன்றின் தொகுப்பாக விளங்கும் ஒன்பது புற நுண் இழைகள் இவைகளாகும்.
சென்ட்ரியோலின் மையப்பகுதிக்கு ஹப் என்று
பெயர். இதிலிருந்து ஆரப்போக்கில் விரியும் ஆரைகள் வெளிப்புற மூவிழைகளுடன் இணைந்துள்ளன
(9 + 0 முறை). குறுயிழை அல்லது கசையிழைகள் மற்றும் விலங்கு செல்லில் கதிர்கோல் இழைகள்
தோற்றுவிக்கும் கதிர்கோல் சாதனம் ஆகியவற்றை உருவாக்கும் அடி உடலங்களாகச் சென்ட்ரியோல்கள்
திகழ்கின்றன. இவை சவ்வினால் சூழப்படாத செல் நுண்ணுறுப்புகளாகும். (படம் 6.21)
தாவரச் செல்களில் வாக்குவோல்கள் பெரிதாகவும், டோனோபிளாஸ்ட்டு என்ற ஒற்றைச் சவ்வினால் சூழப்பட்டும் காணப்படுகிறது.
அதன் செல் சாற்றில் சர்க்கரை, அமினோ அமிலங்கள், கனிம உப்புகள், வேதிய கழிவுப் பொருட்கள்
மற்றும் ஆந்தோசையானின் நிறமிகள் கரைந்த நிலையில் காணப்படுகிறது. பீட்ரூட் செல்களின்
வாக்குவோல்களில் ஆந்தோசையானின் நிறமி அதிகம் உள்ளது. டானின் பொருட்கள் செல்லில் சேகரம்
அடைய இவை உதவுகின்றன. சவ்வூடு பரவல் மூலம் நீர் செல்லைச் சென்றடைய வாக்குவோல்கள் உதவுகின்றன.
பிளாஸ்மாச் சவ்வு சிதைவடைந்த செல்களை நீரில் இடும்போது அவற்றுள் சவ்வூடு பரவல் மூலம்
நீர் உட்செல்வதை ஒழுங்குப்படுத்த இவை உதவுகின்றன. தாவர வாக்குவோல்களின் முக்கியப் பணியானது
நீரின் அழுத்தமான விறைப்பு அழுத்தத்தை
நிலைநாட்டச் செய்வதாகும். இச்செயல் தாவர வடிவுருவத்தைக் கட்டமைக்க உதவுகிறது. இவ்வாறு
பொருட்களைச் சேமிக்கும் மற்றும் ஒதுக்கம் அடையும் இலக்குகளாக வாக்குவோல்கள் திகழ்கின்றன.
எடுத்துக்காட்டு: செல்லில் உள்ள பெரும்பலான சுக்ரோஸ் சேர்மங்கள் தாவர வாக்குவோல்களில்
சேமிப்புப் பொருளாகக் காணப்படுகிறது.
i. கரும்பு மற்றும் பீட்ரூட் தாவரங்களில் சர்க்கரையைச் சேமித்தல்.
ii. ஆப்பிள் கனிகளில் மாலிக் அமிலத்தைச் சேமித்தல்.
iii. சிட்ரஸ் கனிகளின் செல்களில் அமிலங்களைச் சேமித்தல்.
iv. ஆன்டிரைனம் மலர்களின் அல்லி இதழ்களில் ப்ளேவோனாய்டு நிறமியான சையனிடின் 3 ருட்டினோசைட்டுகளை சேமித்தல்.