Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: மழைச்சோறு

இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: மழைச்சோறு | 8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்

கவிதைப்பேழை: மழைச்சோறு

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : கவிதைப்பேழை: மழைச்சோறு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஆறு

கவிதைப்பேழை

மழைச்சோறு


நுழையும்முன்

ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது மழை. மழை பொய்த்துவிட்டால் நீர்நிலைகளும் வற்றிவிடும். நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும். அத்தகைய காலங்களில் மழை வேண்டி மக்கள் வழிபாடு செய்வர். அத்தகைய வழிபாட்டின்போது பாடப்படும் பாடல் ஒன்றை அறிவோம்.


 (மழை பொய்த்ததால் மக்கள் வருந்திப் பாடுகின்றனர்)

வாளியிலே மாக்க ரைச்சு

வாசலெல்லாம் கோலம் போட்டு

கோலம் கரைய வில்லை

கொள்ளை மழை பேயவில்லை

 

பானையிலே மாக்கரைச்சு

பாதையெலாம் கோலம் போட்டு

கோலங் கரையவில்லை

கொள்ளை மழை பேயவில்லை

 

கல்லு இல்லாக் காட்டிலதான்

கடலைச் செடிபோட்டு வச்சோம்

கடலைச் செடிவாட வாட

ஒரு கனத்த மழை பேயவில்லை

 

முள்ளு இல்லாக் காட்டுலதான்

முருங்கைச்செடி நட்டு வச்சோம்

முருங்கைச்செடி வாட வாட ஒரு

முத்துமழை பேயவில்லை

 

கருவேலங் காட்டுலதான்

கனமழையும் இல்லாமே

கருவேலும் பூக்கலையே

கமகமன்னும் மணக்கலையே

 

காட்டுமல்லி வேலியிலே

கனமழையும் இல்லாமே

காட்டு மல்லியும் பூக்கலையே

காததூரம் மணக்கலையே

 

மானத்தை நம்பி நாங்க

மக்களைத் தான் பெற்றெடுத்தோம்

மானம் செய்த பாவமுங்க

மக்கள் பசி தீரலையே

 

கலப்பைப் பிடிக்கும் தம்பி

கைசோர்ந்து நிக்குதம்மா!

ஏற்றம் இறைக்கும் தம்பி

ஏங்கி மனம் தவிக்குதம்மா!

(இவ்வாறு மூன்று அல்லது ஐந்து நாள்கள் பாடி வழிபாடு செய்கின்றனர். அதன் பிறகும் மழை பெய்யாததால் காட்டிற்குச் செல்ல முடிவெடுக்கின்றனர்.)

கண்மணியே பெண்டுகளே

கனத்த மழை பெய்யவில்லை

கதறி அழுது விட்டோம்

கடிமழையும் பெய்ய வில்லை

 

மண்ணு வறண்டும் நம்

மாரியாத்தா இரங்கலையே

வாடிகளா பெண்டுகளே - நாம்

வனவாசம் சென்றிடுவோம்

(இவ்வாறு பாடிக் கொண்டே சோறு வாங்கிய பானை, அகப்பை, பழைய முறம் போன்றவற்றைத் தலையில் வைத்தவாறு ஊரை விட்டு வெளியேற முனைகின்றனர். அப்பொழுது மழை பெய்யத் தொடங்குகிறது.)

பேயுதைய்யா பேயுது

பேய்மழையும் பேயுது

ஊசிபோலக் காலிறங்கி

உலகமெங்கும் பேயுது

 

சிட்டுப் போல மின்னி மின்னி

சீமையெங்கும் பேயுது

சீமை யெங்கும் பேஞ்சமழை

செல்ல மழை பேயுது

தெரிந்து தெளிவோம்

மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில் சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர். கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர்.

 

நூல் வெளி

பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன்.

Tags : Chapter 6 | 8th Tamil இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam : Poem: Mazhai soru Chapter 6 | 8th Tamil in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : கவிதைப்பேழை: மழைச்சோறு - இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்